Showing posts with label நதியாகிய நான். Show all posts
Showing posts with label நதியாகிய நான். Show all posts

Thursday, 12 April 2012

சொல்லெனப்படும் சொல் ..!

குரல்கள் இறைந்து பாயும்
மண்டபத்தில் அமர்ந்திருக்கிறேன்
காண்ணாடி மதில்களில்
வழுக்கித் தோற்கின்றன
உதிர்க்கப்பட்ட சொற்கள்


இன்றைய ஆயிரமாவது சொல்லை
யார் சொல்லியிருக்கக்கூடும்
எந்த மொழியில்?


சிரிப்புக்குள் கரையும் சொற்கள்
காதலில் ஒளியும் சொற்கள்
சலிப்பில் ஒழியும் சொற்கள்
பொய்யில் வெட்கிக்கும் சொற்கள்
சொற்கள்
சொற்கள் மட்டும்

சூடில்லா சூரியன்
நிழலில்லா மரங்கள்
வெளியில்..;
இளவேனிலின் ஈரம்
உடலில்..;
இது/இத்யாதி தவிர்த்து
மனதின் வெப்பியாரத்தை
சொல்லிவிடக்கூடிய ஒரு சொல்
என்னிடமில்லை

சொல்லப்படாத சொற்களில்தான்
உறவுகளின் ஆயுள்
மேலுஞ் சொல்லப்படாத சொற்களே தான்
உறவுகளும்

பின்னே?

உலுக்கி உதறுகிறேன்
என்னை
நேற்றெழுதிய சொல்லில்
ஒன்றில்லை
சொல்லப்படாதவற்றின்
அர்த்தங்களும் நினைவிலில்லை 

@ Seneca College Cafe

Sunday, 19 February 2012

இலையுதிர்காலக் குறிப்புக்கள்..!

1 .

தொன்மைக் கட்டிடங்கள் நிறைந்த
நகருக்குள் நுழைகிறேன்

ஆதி மணத்தை நுகர்ந்தும்
அடையாளந் தெரியாது போன
தொல் குடிகளின் சாட்சியங்களை
தடவிப் பரிசித்துக் கொண்டும்
நிலம் கிண்டும் தீவிரத்தோடு
புகுகிறேன்

சட்ட ஓவியங்களும்
சிலைகளும்
சொல்லிச் சொல்லி ஓயும் கதைகளை
அசைபோட்டவாறு நகர்ந்து
பூங்காவில் சரியும் என் முன்
நீண்டு படுத்திருக்கிறது
தெரு

இலைகள் உதிரும் மரங்களை
முத்தமிட்ட பின்னும்
வேட்கையுற்றுத் திரியும் காற்றின்
கைகளுக்குள் சிக்கித் தவிக்கிறது
இலையுதிர் காலமில்லா நாட்டில்
பிறப்புவிக்கப்பட்ட உடல்

2.

மஞ்சள் இலைகள் நான்கு
சிவப்பு நான்கு
பிறகு மண்ணிறமும்
போனால் போகுது பச்சையும்
நன் நான்கு இலைகள்
வேணும்

பசை கொண்டு இலை ஒட்டி
செய்யப்பட்ட மரத்தை
வரவேற்பறையில் நிறுத்துவேன்

நீங்கள் வருவீர்கள்
என் வீட்டுக்கு
என்ன இது
யார் செய்தது
நல்லா இருக்கு
கூட இலைகள் ஒட்டியிருக்கலாம்

என்னிடம் பதில்கள் இருக்கும்
எப்பவும் போல

பால்கனியின் கண்ணாடிக் கதவுகள்
அறைந்து அறைந்து திரும்பும்
காற்றையும்
அது அள்ளி வந்த
குளிரையும்
கதவின் வழி
பொட்டலங் கட்டிக் கொண்டு வரும்
உங்கள் வருகை

உங்கள் மீளலின் பின்
கூட்டி அள்ளுவதற்கு சரியாக இருக்கும்
இலைகளையும்
குளிர்ப் பொட்டலங்களையும்

அந்தப் பின்னிரவில்
என் கனவுகளில் முளைத்தெழும்
மரங்கள் இலையுதிர்க்கா
காற்றில் குளிர் இருக்காது

கிழிந்த போர்வைக்குள்
மடிந்துறங்கும் என்னை
மொட்டை மாடி நட்சத்திரங்கள் தாலாட்டும்.;

Sunday, 23 October 2011

உனக்கும் எனக்குமிடையே..!

போத்தல் விளக்கை சுற்றி
பறந்து கொண்டிருக்கும்
ஈசல்கள்
செட்டைகள் விழ விழ
முதலில் இருந்தே எண்ண ஆரம்பிப்பேன்

பேசாமப் படி என்றவாறோ
விளக்கை உன் பக்கம் இழுத்தவாறோ
ஆரம்பிப்பாய்
அந்த இரவுக்கானதை

கிடுகின் பின்னல்களூடு
வீழும் மழையின்
சத்தத்தைத் மீறட்டுமென
யாவற்றுக்குமாய் ஆரம்பிப்போம்

ஏழேழு நாப்பதொம்பது
ஏழெட்டு அம்பத்தாறு
உச்சஸ்தாயில் தொடங்கி
ஈரமூறிய
சுவர்களையும்
சாணியில் மெழுகிய தரையையும் உரசி
படர்ந்து நிறைக்கும்
எங்களது குரல்கள்

ஆச்சியின் காசுத்துணி முடிப்பிலிருந்து
புளிப்பு நெல்லி
உப்புத்தூள் மாங்காய்
ஐஸ்பழம் என்று நீண்டு
மீன் பொரியலின் நீள அகலத்தில்
அம்மாவுடன் பொருதுவதில்
மீள ஆரம்பிக்கும்
எனக்கும் உனக்குமான சண்டை

வைரவருக்கு மடை போட்ட பின்
வீடு வரும் பெரிய பாயில்
விட்டம் பார்த்துக் கிடப்போம்

வெள்ளையடித்த சுவர்களில்
தாழ்ந்த திரி வெளிச்சத்தில்
தங்களுருவை விதம் விதமாய்
எழுதியும் கிறுக்கியும் போகும்
கூரைக் கிடுகுக்குள் கிடப்பதாய் நீ சொன்ன
பாம்பும் பூராணும்

நீ
முதல் நாள் "போ" என்று கலைத்த
பேய் பற்றிய கதையை
சொல்லத் தொடங்குவாய்
முகட்டுக்குள் உறங்கும் அதை
இருட்டுக்குள் தேடியவாறு
உன் பக்கத்திலேயே ஒடுங்குவேன்

ஆனாலும் பார்
அம்மாவின் காலுக்காய்
மாறி மாறி உதைபட்டு
பின்னிரவில்
அவளுக்கு அங்காலும் இங்காலுமாய்
உறங்கிவிடும் நமக்கிடையே
அப்போதே விழுந்து கிடந்திருக்க வேண்டும்
நாம் கவனித்தேயிராத
இந்த மௌனம்

- அண்ணாவுக்கு

Wednesday, 19 October 2011

வௌவாலின் குரல் கொண்டு..

இலைகள் உதிர்க்கும் பெருமரங்களின் கீழ்
வெறிச்சோடிக் கிடக்கின்றன தெருக்கள்

உச்சி மோர்ந்து
உயிர் உறைய அணைக்கிறது
குளிர்

சுவர்கள் மோதி
கூரையில் எதிரொலித்து வீழும்
வௌவால் குஞ்சுகளின் குரலாய்
மனச்சுவர்களுக்குள் அடங்குகிறது
எனது குரல்

பதுங்கு குழிக்குள் ஒடுங்கும் தீவிரத்துடன்
அலைபாய்ந்து ஓய்கின்றன
என் கண்கள்

பேரன்பு கொண்டவர்களே
என் மேலான பிரியத்தின் பேரால்
கூறுங்கள்
எனக்கான ஒரு பதிலை

எனக்குச் சற்றும் பொருந்தாத
இந்தக் குளிர் நிலத்தில்
நான் என்னதான் செய்து கொண்டிருக்கிறேன்

Friday, 30 September 2011

எழுத்துருக்கள்..

இசை அல்லாத பாலைவனத்தில் மணல் காற்றை வேற்று வெளிக்குள் சுழற்றிமிகத் தனிமையான மணல் ஒன்றின் விரக்தி நிலையை தீராத நாட்டியமாக இசையின் மாயத்திற்குள் நகரும் குருடர்களின் தனிமைத் தீவானான் பீத்தோவன். குருடரின் ஜீவரசம் பூசிய ஸ்பரிசவெளி இசைப் பாலையில் தவிக்கிறது.. - "பாழி" கோணங்கி

1.
கண் தெரியும் புள்ளிக்கும் அப்பால்
விரிந்து செல்கிறது பார்வைப் புலம்
மோகித்து இடை நடுவில்
விலகி நெளிகின்றன நினைவுகள்
ஆழ உள்ளிறங்கி
அடியில் தேங்குகிறது
மிதமான சூடு
காதலின் பெயரால்
காணிக்கையாக்கப்பட்டிருக்கின்றன
சில அப்பங்களும் சிவப்பு வைனும்
பருகி முடித்த பின்
குழைந்து ஒழுகும் அவளின்
உடலின் துளிகள்
இறைந்து கிடக்கின்றன
வழி நெடுக

2.
கொளுத்தும் வெயிலின் நடுவே
கைக்கெட்டும் தூரமாய் நகர்கிறது
நீர்
சுடுமணல் குறுணிகளை
பெய்து நகர்கிறது
காற்று
வெளியாய் தீர்ந்து
தீயாய் எரிகிறது
மூச்சு
மீளவும் ஒருக்கால்
மிதமாய் ஒடுங்கி
மெல்ல சுடுகிறது
உடல்

3.
அநாசாயமாய் ஒலித்துக் கொண்டும்
பின் புலத்தில்
தீராமல் தேய்ந்தும்
அலைந்து கொண்டிருக்கிறது
பீத்தோவானின்
இன்னும் இசைக்கப்படாத சிம்பொனி;
ஆழ்ந்த இருட்டின்
மையப்புள்ளியை நோக்கி
விசையுடன் இயங்குகிறது
இசை
பார்வைக்குமப்பால் இயங்கும்
வடிவமைக்கப்படா உலகின்பால்
காமுறும் உடலை
கட்டியிழுத்து தோற்கிறது
சூடு
தீரத் தீர தேடித் புகுந்து
பொங்கி மிதக்கிறது
புணர்வின் பின் இடுவதற்காய்
ஏலவே தீர்மானிக்கப்பட்டிருந்த முத்தம்...

பனிக்குள் தளிர்த்தல்..!!

தேடுதல்கள் நிறைந்திராத காலம் அது
விதந்தோதல்கள் அற்ற
உலகந்தான் எனதாயிருந்தது;
அதிகாலை அறை நிறைக்கும்
முகிழ்த்த மல்லிகையும்
கரு புலரிக்குள் சிவந்திருக்கும்
செவ்வரத்தையும்..

நினைவில் மீந்த
பூச்சியங்களிலிருந்து கடன் வாங்குகிறேன்
ஒன்றை; பின் இரண்டை;

மழை..
ஆம்.! நல்ல மழை;
வெண்ணிறச் சிறகுகளை அசைத்து
அதோ, மேலெழுகின்றன
என் கடல் மணலில்
குந்தியிருந்த பறவைகள்;

சிறகுகளைத் தீட்டும் வர்ணத்தை
வானவில்லும்
இளைப்பாறலுக்காய் தேடும் கிளையை
ஒரு மரமும்

அவ்வாறே எதிர்பார்க்கிறேன்..
பனிக்குள் தளிர்க்கப் போகும்
பதியம் வைத்த செவ்வரத்தையையும்..

Friday, 22 July 2011

ஒரே ஒரு தோழிக்கு..!!

புல்வெட்டிகளின் இடுக்குகளூடு
பச்சையம் சாறு மணக்க மணக்க
புழுங்கித் தவிக்கிறது கோடை
பூ உதிர்க்கும் மரங்களினடியில்
மரக்கதிரைகளிலும் மேசைகளிலும்
உதிர்ந்து கிடக்கின்றன
கடைசியாய் நாம் பேசிக் கொண்ட வார்த்தைகள்
சிகரட் புகை; பிடிக்குமா பிடிக்காதா?
உன்னவன் பிடிப்பானா பிடிக்க மாட்டானா?
அபத்தமாய் நீண்டது பேச்சு
தெருவைக் கடந்து பறித்த ரோஜாவும்
பெயரறியாப் பூவும் பொறுக்கி
பூச்சொண்டோன்றை தந்தேன்
என் பேரால்
தண்ணீர் தெளித்து வைத்திருந்தாய்
நாம் மீண்டபின்
உன் நடுங்கும் கைகளால் தடவி
தவறி உடைத்த பின்னும்
விம்பங்களாய் சிதறிக் கிடக்கிறது கண்ணாடி
பதறி அள்ளிய என் கைகளுக்கு
உன் கண்ணொன்றே கொள்ளக் கிடைத்தது;
அதைச் சொல்லி முடிக்க முன்
அவசரப்பட்டு
அந்தப் பூவுக்கு
என் பெயரையா வைத்து மீண்டாய்?

- அவளுக்கே..!!

Wednesday, 6 July 2011

சாணும் முழமும் அடியும்..!!!

மிதந்தெழும் தொன்மத்தின் வன்மப் புணர்ச்சிக்குள்
சிதைந்தொழுகும் என்னை
பெண்ணென்று சொல்லிக்கொள்கிறேன்
ஆக
நீ என்னவனாகிறாய்
கேள்விக்குறியுடன் திரும்பி முழிக்கும் என்னை
உறுத்து நோக்குகிறாய்
அன்பே,
நாளை என்பதற்குத் தேவையான
என் சுதந்திரங்களின் நீளங்களை
அடிகளால், சாண்களால், முழங்களால்
எதனால் அளந்து முடித்தாய்?
அவற்றை நான் எதற்குள் போட்டுக்கொள்ளட்டும்?
கைப்பை, கர்ப்பப்பை நிறைந்து
உடல் வழியும் அவற்றை
இழுத்து மூடுகிறேன்;
தெறித்து விழப்போகும் பொத்தான்களின் வழி
தொங்கிக்கிடக்கிறது
நேற்றைய எழுச்சியில் நீ
மீதம் வைத்த முத்த(ம்)த்தை
நான் யாரிடம் பரிசளிக்கலாம்?
சக மனுசியெனும் மதிப்பில் மயங்கி
முத்தங்களை பறக்கவிடுவதான கனவில்
ஆயாசத்துடன் மூடும் விழிகளில்
தேங்கிக் கிடக்கிறது
நூற்றாண்டுக்கான தூக்கம்;
இன்னும் சூல் கொள்ளாத
என் குழந்தைகளைக் கூப்பிடு
பேசிக் கொள்வோம் என்கிறாய்
சமத்துவம் பற்றி என்கிறாய்
எழுத்துப் பிரதிகளைப் புரட்டி
அடிமை என்ற சொல்லைத் தேடுகிறேன்
அகராதிகளை தின்று ஏப்பமிட்டதில்
புகைப்படத்துக்கான வெளிச்சத்தில் காணமலாகி
தொலை நிலத்தில் கிடக்கிறது
கறுப்பாலான உன் உடலொன்றின் பிரதி
நீ சொல்லத் தொடங்குகிறாய்
"ஆணும் பெண்ணும் சமனெனக் கொள்வதால்"
சரி, நீ சொல்லேன்
இன்றைக்கானதை நான் முழத்தால் அளக்கவா?

Saturday, 4 June 2011

நீயும், இந்த இளவேனிலும்..!!

நிறைந்த நிலவு
வானத்தில்;
குழந்தையின் உள்ளங்கையின் மென்மை
காற்றெங்கும்;
அதிராமல் உதிர்கின்றன
வார்த்தைகள்;

இந்த
இளவேனில் ஏன் நகர்வதாயில்லை..
மழை நனைத்த பூமி
குளிர்ந்து கிடக்கிறது
பார்;
என் மனதைப் போல;

என் சொற்கள் கொண்ட அர்த்தங்களை
நானே அழிக்கிறேன்;
பேசாமல் இருக்கின்றன
உதடுகள்..
எங்கு போயிருந்தாய்
எப்போது
எப்படி
சரி, இப்போது எப்படி இருக்கிறாய்?
பிரிவின் போது கூட நடந்த
நினைவுகள் சொல்கின்றன
பதில்களை;
பொறுமையாக வளர்கிறது
மௌனம்;

எது நடப்பினும்
கிழித்துக் கொண்டு
திரும்பிவிடுகிறது
நட்பு மனதுள்;

இந்த
இளவேனில் ஏன் தானோ நகர்வதாயில்லை;
காரணங்களை நிரப்பமுடிகிறது
நாட்குறிப்பின்
இன்றைக்கான தாளில்..

Thursday, 28 April 2011

மௌனம் கசியும் இரவு..

தேவதையே
மௌனம் கசியும் பார்
இந்த இரவும்

சொருகும் கண்களுடன்
தயங்கிப் பார்க்கும் உன்னை
மோர்ந்து பருகி
திமிறி தோற்கின்றது
மூச்சு

என் கண்ணே
என் உலகின் சூலை
உன் கண்கள்
எத்தனை ஆண்டுகள் சுமக்கும்?

கனவின் தொலையில்
மீட்டப்பட்டுக் கொண்டிருக்கும் வீணையின்
தந்திக் கம்பிகள் மீதேறி
தத்தியும் தாவியும் குதித்தும்
நடை பழகுகிறது காற்று
அந்தி பெய்த
மழையின் ஈரம் பிசைந்து
தயங்கி நகர்கின்றன நொடிகள்
நீ நழுவி ஓடுகிறாய்

இத்தனை நேரமும்
நானல்லவா உன்னை
கர்ப்பம் சுமக்கின்றேன் என்று கொண்டேன்;

தேவ தேவியே
தேவதைகளின் ராணியே
இந்தப் போதில்
ராட்சசிகளை கற்பித்தம் கொள்கிறேன்
கை தேர்ந்த ராட்சசி நீ
அவர்களின் குழந்தைகள்
உன்னைப் போலவும் தானே

ஒளித்து ஓடி
இழுத்து அணைக்கிறேன்
திமிறித் தோற்கிறாய் நீ
இப்போது

என் அன்பே
மெல்லென ஏதாவது சொல்லாய்
மடி நிறைந்து வழியும்
இந்த
பிரியத்தின் பேரால்

மணம் வீசும் கேசமும்
உதடு பதித்த கன்னமும்
அதிராத சுவாசமும்
நிறைய
என் உயிர் நிறைய;
வாளாதிருக்கிறாய்
நீ

என் தளிரே
உயிர் தளர்ந்து
உணர்விழந்து
என்னிலிருந்து நழுவி ஓடி
உன்னுள் வீழ

மெலிதாய் சிரிக்கிறேன்
தூக்கத்திலேயே
நீயும்

மௌனம் கசிய
கடந்து போய்க் கொண்டிருக்கின்றது
இந்த இரவும்

(அக்காவின் மகளுக்கு...)

Wednesday, 26 January 2011

பனியில் விளையும் உடற் பொருக்குகள்..! விற்க; வாங்க..!

வெறுமை அலையும்
மத்தியானத் தெருவொன்றை
அதற்குரிய தனிமையுடன்
தொலைத்துவிட்டிருக்கிறேன் நான்
நீ கண்டாயா என்ன?
தாமரை பூக்கா கொடியொன்றில் மலர்ந்து
நீராடித் திரிந்த
என் உடலின் பிரதியொன்றை
பூமியில் இருந்துமில்லாது போன ஊரின்
எந்தப் பற்றை பதுக்கி வைத்திருக்கும்
எதையாவது சந்தேகிக்கிறாயா நீ?
கிளைத்த தெருவொன்றுக்குள் நுழைந்து
பனிக்குள் உறையும் உடல் மேல்
படிந்தது காயும் பொருக்குகளை
சுரண்டிக்கொண்டிருக்கிறேன்
கழிவுகள் போக எஞ்சும்
இரவு எனப்படுவதை
மூன்று டொலர்களுக்கு விற்கத்
தீர்மானித்திருக்கிறேன்
முத்தங்களுக்கு இதை விட
நல்ல விலை கிடைக்கும்
பனிச் சகதிக்குள் உறையும் என்னுடல்
எந்த நூற்றாண்டின்
எத்தனையாவது கூர்ப்பின் சான்றாகும்?
உனக்குத் தெரியாதென்கிறாயா?
தொலைத்த தெருவும்
தொலைத்த மண்ணும்
எனக்கே தெரியாது போனபின்
தொலைந்து கொண்டிருக்கும்
உயிரின் சாறு
என்ன நிறத்தில் இருந்தால்
எனக்கென்ன?
இரவுகளை ஒரு கோப்பை
கறுப்புக் கோப்பிக்கும்
கனவுகளை சுவையூட்டிகளுக்குமாக
விற்றுவிட்டுப் போகலாம்
என்றிருக்கிறேன் நான்
ஆமாம், இதே பகலைப் போல..!

Thursday, 20 January 2011

பின்னுமாய்...!

ஊடாடி நாள் கொண்டு
ஊடோடி பின்னும்
பிறழ்ந்தோடி நடை பிசகி
தாழ்ந்து
தயை விளைந்து
வாழ்தல் கொஞ்சமாய் - இன்னும்
வாழ்தலின் பொருட்டாயும்
நிற்க

.............

சவம் பொறுக்கி
எரி மூட்டி சுடலை வாழ்ந்து
சாம்பலிடை தணலெரிய
அதையும் பொறுக்கி
எண்ணும் எழுத்தும்
எழுதாத கதை நான்கும்
கடக்க
நின்று பார்த்து
அதை எரித்து
தூசு கொண்டு தடங்கள் கீறி
பின்னும் - ஆசையில்

...............

வீதி வழி நிதானித்து
நின்று தேடி
உலக வழக்கு எனும் பதத்துக்கோர்
அர்த்தம் பார்த்து
வாழ்ந்தேன் என்றும் கொள்
உலகம் உன்னைக் கொள்ளும்
இல்லை பின் கொல்லும்
இதற்கிடையில்
மருவி சிதைந்தோடும்
சுயத்தை
ஒரு கோப்பை
ஒரு துளியில்
குடித்து
பின்னும்
வாழ்தலில் நடந்தால்
நடக்கும்
முன்பொருக்கால்
சுடலையில் நான் எரித்த
எனது சவம்

Monday, 13 December 2010

நானும் இன்னொன்றாய்...!

மதத்த பொழுதுகளில்
திமுறுதலாகிப் பின் அசைகிறது
உள்ளிருப்பு
தியான வெளிகளின் இடையே விரியும்
குறுகலான ஒற்றையடி பாதையொன்றை
அடியொற்றி நடக்கிறேன்
பிறப்பிலேயே பணிக்கப்பட்டதன்படி
அடுத்த அடியிற்கான பிரயத்தனத்தில்
காற்றில் ஆடும் பாதத்தின்
நொடி நிலை தளும்புதலின் பின்
வெடித்துப் பிளம்புகின்றன எரிமலைகள்
எரி கற்களின் மேல்
உட்கார்ந்தபடி
கரைந்து கொண்டிருக்கும் காகங்களை
அவை அறிமுகப்படுத்துகின்றன
கரு முகிற் கூட்டங்கள்
எனக்கானவை
அவை என்னைப் பொழிபவை
எரி கற்களின் மீதே
வீழ்தலிற்கும் நிலப்படுதலுக்குமான பொழுதில்
நான் காகமாகியிருந்தேன்

- நன்றி காலம் இதழ் (மார்கழி, 2010)

Friday, 3 December 2010

இயல்பிருத்தல்..!

என் உணர்ச்சிகளை
அள்ளிக் கொண்டதன் பிற்பாடு
சுழன்றடித்துக் கொண்டிருந்தது
சூறைக் காற்று
அது நேற்றும் என்
மௌனங்களைத் தின்றிருந்தது
அழுகையின் விசும்பல்களை
மூக்குறிஞ்சல்களை
குடித்துக் களிப்பேறி
என்னை அணைத்தபடியே
குறட்டை விட்டது
நான் அன்றிரவும்
அந்தக் கனவைக் கண்டேன்
இயல்பிருப்பதாக அறிவிக்கப்பட்ட தெருவொன்றில்
அலைந்து கொண்டிருந்தார்கள்
விபச்சாரர்கள்
என்னை விற்க முயல்வதை
தடுத்து
மீண்டும் மீண்டும்
தோற்றுக் கொண்டிருந்தேன்
கனவு விழிக்கையில்
குறட்டை நின்றிருந்தது
மௌனமாக இருப்பதற்கு முயன்ற போது
கைகள் இயல்பாக மறைத்தன
உடலை....

(காலம் இதழ்..12/2010)

Sunday, 21 November 2010

அந்தரங்கம்

நிரம்பி வழியும் கோப்பிக் கோப்பையின்
விளிம்பில்
உதடு வைத்து
உறிஞ்சித் தீர்க்கிறது பால்யத்தின் அவா
மாத விலக்கின் கிழமை நெருங்க
கட்டிக் கொண்ட மார்பின் காம்புகள் வழி
குருதி வழிவதை
பாலாய்ப் பருகுகிறது
கத்தி ஓய்ந்த குழந்தை
குப்பைத் தொட்டியின் எச்சிலையின்
ஒரு பருக்கை சோறும்
சில துளி எச்சில்களும்
பச்சையத்தில் படிந்த ரேகைகளும்
அள்ளித் தின்ற அசதியில் களைத்தும்
பின்னிரவில் புணர்ந்ததை
கசங்கிக் கறுப்பாய்
கலவி மணம் வீசும் மல்லிகை
கதை கதையாய் சொல்கிறது
காலையில்
உணர்ச்சிகள் தெறித்து
பீச்சியடித்த சுவரின்
பச்சை வாசனையையும்
வெடித்துக் கிளம்பிய சிரிப்பை
அடக்கிக் களைத்து
மயங்கிக் கிடந்த உடலைத் தழுவி
வியர்வையை அள்ளிக் குடித்தும்
அடர்ந்து வீசும் காற்று
ஓயாது பேசுகிறது
அந்தரங்கம் பற்றி
தன் அறுக்கப்பட்ட நாவால்
உச்சரிக்கவே முடியாத ஒரு மொழியில்

Tuesday, 16 November 2010

பயணம்...!!

பேரூந்தின் யன்னலில்
கோட்டோவியம் கிறுக்கிய மழை
மனதை வரைந்தது
புகை மூட்டத்தில் விரல் எழுதிய எழுத்துக்கள்
கரைந்து ஓரமாய் வழிந்தன
நினைவுகளாய்
தகிக்கும் சூட்டில் கலங்கும் கண்களில்
ஆடியபடி சுழன்றது உலகம்
பிதற்றும் குழந்தையும்
அதி குடிகாரனின் கசிப்பு நாற்றமும் ஒன்றேயாக
விலக்கி அமர்த்திய குளிர் காற்றில்
படிகமாய் உறைகிறது
முன்னைய இரவில்
மூடிய விழிக்குள் அழிந்த
இரத்தம் சொட்டும்
வாளேந்திய கையின்
கனவு
தெருவெங்கும் நகர்ந்த
மொட்டை மரங்களின் பின்
முழந்தாளிட்டு
இருட்டை மோகித்து
கையின் உடலைத் தேடி
காமுறுகிறது மனது
தெருவைக் கரைத்தோடிய வெள்ளத்தில்
உடை விலகலை மறந்து
கலைந்து நீந்தியது உடம்பு
வீட்டு நிறுத்தம் வரை...!!

Tuesday, 26 October 2010

வாழ்தலில்....!

1.

சிறுமியின் நாட்குறிப்பேட்டின்
அந்நிய மொழி பெயர்ப்பில்
தவறவிடப்பட்ட மென்னுணர்வுகள் போல்
விம்மித் திரிகின்றன
நேற்றும், நேற்று முன்தினமும்
சிறு துவாரத்தூடு துரத்தி
அடைத்து சாத்திய பின்னும்
யன்னல் கண்ணாடியில்
மூச்சுக் காற்று எழுதிப்போகிறது
இன்னொரு நாளை
அதைப் போலவே..!!

2.

பரப்பிக் கிடக்கும் உடலின் மேல்
அடித்து வீசுகிறது குளிர் காற்று
குத்திடும் உரோமக் கால்களின்
நொடி சிலிர்ப்பின் பின்
அடித்துத் திருத்தப்படுகிறது
"காதல்"
தெரு கழுவிய மழையின் பின்
மொட்டையாக இருந்தது மரம்
மண்ணிற இலையொன்றின்
கடைசி நொடியின் பின்..!!

3.

பெருந்தெருக்களின்
கறுப்புகளைக் கழுவித் தோற்கும்
மழைத்துளிகள் மேல் வைத்த காதலில்
கொஞ்சம் மீதமிருக்கிறது;
அதை நான் உனக்குத் தருவேன்..
மஞ்சள் மரமொன்று நேற்றையதைவிட
இன்று இன்னும் மஞ்சளாயிருக்கிறது
என்று பிசத்திக் கொண்டிருந்தேன்
நீ கேட்பது போல இருந்தாய்;
எனக்கு அது பிடித்திருந்தது
அதனால் முத்தம் தருவதற்கும் சித்தமாயிருக்கிறேன்
உயிரை சுழற்றி சுற்றி எரியும்
தீயின் கரங்களில் குளிர்காய்கிறேன் இப்போது
என்னை மீட்டெடு;
நான் உன்னைக் காதலிப்பதாகக் கூட சொல்லுவேன்
எனக்கு வார்த்தைகள் எப்போதுமே வார்த்தைகள் தான்
பல வேளைகளில்...!

Wednesday, 13 October 2010

மீள வாசிக்கப்படும் வாசிக்கப்படாத மொழி..!

தூசு படர்ந்து
பரணில் கிடக்கும் வயலினும்
மீட்கப்படாத வீணையும்
தங்களுக்குள் என்ன பேசிக்கொள்ளலாம்
காலங் காலமாய் தம்மேல்
வாசிக்கப்படாத மொழியால்;
ஆனால்
நான் உங்களுடன் பேசிக் கொண்டிருக்கிறேன்
அதே மொழியால்

யன்னலை அடுத்த மரத்தின்
வெளிறிய இலை ஊர்ந்து
மீதிப் பச்சையம் தின்றது
வெள்ளைப் புழு;
தேவதைகளால் சபிக்கப்பட்ட மரங்கள்
உதிர்த்துக் கொண்டிருந்தன
கிறிஸ்துமஸ் மரத்தின் கோட்பாட்டின் படி

முத்தமிடுதலை ஒத்திவைத்துவிட்டு
ஊடிக் கொண்டிருந்தன
என் பெயரறியா - நான்
பெயரறியா இரு பறவைகள்
வானில் மேலுமிரண்டு
குளிர் கால இடம்பெயரலில்
துணை மாறி

தார் வீதியின் வெம்மையை
அமர்த்தி வீசியது
குளிர் காற்று
வெக்கை மணம்
அவற்றின் சிறகில் படிந்தது

தேயிலை படிந்த கோப்பையின் ஓரத்தில்
கசந்து
காய்ந்து கிடந்தன
கடைசி மிடறு துளியும்
கடைசிக் கணமும்

மேலெழுந்தவாரியாய்
நாட்காட்டியைக் கிழித்தது போக
கணங்களை சாப்பிட்டிருந்தேன்
அது போதாது
இன்னும் பசித்தது

உதிர்ந்த தலை முடியை
விரலில் சுற்றி
காற்றைக் கிழித்தேன்
வளிப் படலங்களினிடை
நீள விழுந்தது கோடு
அத்தோடு
மெல்ல மூர்ச்சித்து
நான் நாளை பற்றி சொல்லப் போகிறேன்
இதையே மீண்டும்
ஆனால்
கொஞ்சம் தண்ணீர் வேண்டும்....!!

Friday, 6 August 2010

நினைவு படுத்துங்கள்...நான் தின்னாதிருக்க....!!!

உங்கள் பெயர்களை நினைவுபடுத்த
சொல்லித் தாருங்கள்

இருட்டிய பிறகு வருகிறேன்
அதோ அங்கே வாருங்கள்
எல்லையில்
இடுகாட்டில்
வருவேன்; காத்திருங்கள்

அந்தக் காட்டிடை மரமொன்றின்
பொந்திடை வசிப்பவள் நான்
உங்களை வரவேற்பேன்
தின்னப் பிணம் தருவேன்

ஆம்,
பிணத்திடை பிணங்களோடு
பிணமாய் வாழ்பவள் நான்
பெயரில்லாப் பிணங்கள்
பெயரறியாப் பிணங்கள்
பெயரற்ற பிணங்கள்
இது எனக்கு இலகுவாக இருக்கிறது
இவற்றுடன் உங்கள்
ஊர் எல்லை தாண்ட முடியவில்லை
காவல் சாமிகள்
அந்த சாமிக்கும் காவல்கள்
அதனால் நீங்கள் வாருங்கள்

என் சிசுவொன்றழிந்து
கழியும் குருதியை விட
மாடொன்றின் பிரசவ சீழின்
வெடுக்கு நாற்றத்தை விட
கேவலமாய் மணக்கிறீர்கள்
அதனால் உங்கள் எல்லைக்குள்ளிருந்தே
சொல்லித் தாருங்கள்

உண்மையான இரவின் இருட்டு
உங்களைக் கொல்வது போல்
உங்கள் போலிப் பகல் வெளிச்சம்
பயமுறுத்துகிறது என்னை
இரைச்சலைக் காதலித்து
கலவி செய்து
பெயரற்ற பிள்ளைகளோடு அலைகிறீர்கள்
அவர்கள் நன்றாகப் பிதற்றுகிறார்கள்
கேட்டதை இறுகப் பற்றி
கேட்காததை எதிர்வு கூறி
நீங்கள் கழிப்பதைத் தொடருங்கள்
மறக்காது நினைவுபடுத்துங்கள்
எனக்கு அவர்கள் பெயரும் வேண்டும்

அந்த நெடுநாள் பூட்டிய வீட்டின்
வெம்மைக்குள் குமைந்து
வெம்பி
ஊதி
வெடிக்காதும்
வெடிக்க முடியாதும்
எலும்புகளின் மச்சைகூட கரைந்து
பிதுங்கி வழிகிறது
உங்கள் ஊன்
அது விழுமிடமெல்லாம்
புதுபுதுப் பிணங்கள்
புதிது புதிதாய்
புழுக்களாய் நெளிந்து

அடச் சீ
அர்த்தம் செத்து
அடையாளத்துக்காய் ஒட்டியபடி
உங்கள் உயிர்
பயப்படாதீர்கள்
உங்களை என்னால்
தொடக் கூட முடியாது

அதனால் உங்கள்
பெயர்களை நினைவுபடுத்த சொல்லித் தாருங்கள்
உங்கள் மரண தினத்தன்று
அவை எனக்கு நினைவிருக்கட்டும்
எனக்குப் பசிக்காதிருக்கட்டும்
கூடவே கொலை செய்தல்
அலுக்காதிருக்கட்டும்....!!!!

Sunday, 6 June 2010

ஓர் இரவு...!

கறுப்பின் அடர்த்தியில்
நிறம்மாறிக் கிடக்கிறது
சற்றே முன் மரணித்த
பகலொன்றின் சடலம்!

சுடலை மரங்களின்
அமானுஷ்ய அமைதியில்
அசைய மறந்து
தூங்குகின்றன
இலைகள்;
சலனமற்ற இருளின்
தியானத்திற்குள்
மயங்கிக் கரைகிறது
ஆத்மா..!

அடங்குவதாய் நடிக்கும்
நிலத்தின் பேரெழுசசியை
ஆயுளை மணிக்கணக்கில்
அடகு வைத்தும்
ஊர்ந்தும் தவழ்ந்தும்
ஆட்சிப்படுத்துகிறது
நிசப்தம்;

ஒரு விடுதலைப் போரின்
நியாயமற்ற தீர்வை
அசரீரியில் சொல்லி
நத்தை வேகத்தில்
நகர்கிறது காற்று;

நிலமொட்டப் பறந்து
தன்னிருப்பை
தீனமாய் இசைக்கிறது
ஒரு பறவை;
நாளைக்கான ராகம்
ஒரு நூலிழையில்
பின்னிசைக்க..!