Showing posts with label வாழ்க்கையெனும் சாகரம். Show all posts
Showing posts with label வாழ்க்கையெனும் சாகரம். Show all posts

Tuesday, 9 August 2011

செய்திகள்தான் காண்..!!

சிறுமிகளின் கருப்பைகள் நிறைந்த
புதுமைப்படுத்தப்பட்ட பால்ய பருவத்தை
அறிமுகஞ் செய்து நகர்கின்றது
இந்த வாழ்வு
கூடவே
தந்தையின் குறி பயணித்த
மகள்களின் யோனிகளையும்
பிஞ்சுகளை சுவைத்த
மாமன்மார்களையும்
உறவுகளைத் திரித்தெழுதும்
வன்புணர்வுகளையும்

செய்திகளாகிவிட்டவற்றுக்குள்
நிறைந்து கிடக்கும்
ஒரு மனைவியை
ஒரு காதலியை
ஒரு தோழியை
ஒரு கர்ப்பிணியை
ஒரு மகளை
ஒரு சிசுவை
ஒரு "வயோதிகையை"
சான்று காட்டுகிறது
விலங்கில் இருந்தான
மனிதனின் கூர்ப்பு

எப்படியிருந்தும் அச்சேறி விடுகிறது
இன்னொரு செய்தி

13-06-2007

Sunday, 20 March 2011

காதலில்..

பளிங்குக் கற்களாய் மினுமினுக்கிறது
குளிர்காலத்திற்கான நிலம்
சிறகுகளுக்குள் ஒடுங்கும் தீவிரத்துடன்
வானில் பறப்பதும் விழுவதுமாய் இருக்கின்றன
சிறகுமுளைக்கா குஞ்சுகள்
என் காதலனே;
தூறத் தொடங்கியிருக்கும் அந்திவானத்தில்
மாறாதிருக்கிறது செந்நிறம்
மணக்கும் மண்ணை அள்ளி
வாயில் போட்டுக் கொண்ட பால்யத்தின் நினைவில்
பேசவாரம்பிக்கிறேன்
உனக்குக் கேட்கிறதா என்ன?
பொன்னுச்சி உதிர்க்கும் தெருவொன்றில்
சைக்கிளை உருட்டிக் கொண்டு
மண்ணில் கால் புதைய
நடந்து கொண்டிருந்தோம் என்கிறேன் நான்
ஆம்;கனவில்
நீ நம்புவதாய் இல்லை - தவிரவும்
தரைதொடும் கூந்தலில்
இருந்து உன் காதலைப் பிரித்துப் பார்ப்பது
எனக்கு முடிவதாயும் இல்லை
இருந்தும்
அடிக்கடி சொல்லிக் கொள்கிறேன்
நான் காதலிக்கிறேன் என
எனக்கே எனக்காய்
பூவையும்
மழலையையும்
இரவையும்
தனிமையையும்
இன்னும் பல "உம்"களையும்;

Thursday, 9 December 2010

"தூங்குவது போலும் சாக்காடு"

நீர்த்த பால் திரைவதொப்ப
பகலிலிருந்து பிரிந்த இரவில்
திட்டுத் திட்டாய் விரவிக் கிடக்கிறது
பகல்
பார்வைக்குப் புலப்படா நீள் கால்கள்
ஆழ ஊன்றுகின்றன
அத் தனித்தீவுகளில்
அலைகளற்ற கடலாய்
சூழ்கிறது இருட்டு
பேசாது போன
அடர்ந்த சொற்களை
கூட்டியள்ளி
கவிதை புனைய முயற்சிக்கிறேன்
நிரப்பப்படாமல் கிடக்கிறது தாள்
கனத்த மயானத்தின் அமைதியை
விரல்களை விட்டுத் துலாவிப்பின்
பாதை செய்கிறேன்
எனக்கான செபம்
சவக்காலையில் ஒலிக்க
பரிசுத்த ஆவியின்
பாதி அப்பம்
அடி நாக்கில் இனிக்கிறது
சாம்பல் கோடிட்ட நெற்றியில்
எலும்பொன்றின் தூசு
நாசியில் நிறையும்
மரண வாசனை
ஆஸ்பத்திரியில் அலையும்
அமானுஷ்ய இறுக்கத்தை சொல்கின்றன
என் வாழ் நாளில் ஒரு எறும்பை
கொல்லாது விட்டிருக்கிறேன்
சொர்க்கத்தின் பொருட்டு
என்ன இருந்தும் என்ன
நேற்றைய இரவின் சவப்பெட்டி ஆணி
இறுக்கமாயிருந்திருக்கவில்லை..!!!

Sunday, 7 November 2010

ஆச்சிக் கிழவி..!!!

பரிச்சயப்படாத தெருக்களில்
பெயரறியா மரங்கள்
இலையுதிர்க்கின்றன
இறகொன்று விழுவதையறியா
குளிர் காலப் பறவை
தாழப் பறக்கிறது தலை மேவி
அதன் எச்சத்தை துடைத்த அயர்ச்சியில்
இமைகள் மூடிக் கிடக்கிறேன்
கறுப்புப் பருத்தித் துணிக்குள் உடல் மறைத்து
பெரிய மார்பு ஒளிக்கும்
சூனியக்காரியை இன்னும் காணவில்லை
அவளை முச்சந்தொன்றில் காணாமலாக்கியிருந்தேன்
நடுச்சாம கும்மிருட்டில்
விளக்கின்றி அவள் பின்னே நடந்தபோதும்
பழமொன்றின் சாயலற்ற கறுப்புப் பழத்தை
அவள் தின்ன தந்த போதும்
சாணியின் சாம்பலில்
காய்ச்சல் கழிக்கப் பண்ணியபோதும்
மந்திரக் கோல் கொண்ட பராசக்தியாய்
அவளைச் சொல்லியிருந்தேன்
அவளுக்குப் புரிந்திருக்காது
முந்தானையில் முடிந்து
நிறம் கசிந்து வழியும் மிட்டாய்
எனக்காக காத்திருந்தது
ஆறிய பச்சரிசி கஞ்சியும்
மிச்சமிருந்த வெல்லக்கட்டியும்
தலை மாட்டில் இன்னும் எனக்காக;
அங்கர் மாப் பை சரசரக்க
செல்லாக்காசு என்றறியாமல்
பவித்திரமாய் எடுத்து தந்தபோதும்
வியர்வையும் கஞ்சியும் சவர்க்கார உப்பும்
குழைந்து கசியும் சேலையின் மணத்தை
முகர்ந்து மோகித்து
அவள் பீத்தல் பாய் விரிப்பில்
ஒட்டித் தூங்கியபோதும்
அவளை எங்கே தொலைப்பதென்று
தீர்மானித்திருக்கவில்லை
முள்ளந்தண்டுடைந்த குழந்தையாய்
மலம் காய்ந்து
அதே பாயில் அவளைக் காணும் வரை;
அலறிய தொலைபேசியின் மறுமுனையில்
நீ பேச்சற்று கிடந்தாய்
ஏனோ தோன்றியது
கொலை செய்திருந்திருக்கலாம்;
யாருக்கோ சொல்லி முடித்திருந்தேன் கிழவி
உன்னை அதிகமாய் நேசி(த்த)ப்பதாய்
சரி நீ சொல்லு
என்னை மன்னித்தாயா இல்லையா?

Sunday, 12 September 2010

மஞ்சள் தொடு வானம்...!

மாலை மழையின் துளிகள்
குமிழ்த்திருந்தன
கர்ப்பவதியின் வெட்கத்துடன்
இளஞ்சிவப்பு இலைகள்

அந்திச் சூரியனின் மஞ்சளில்
பள பளத்துக் கொண்டிருந்தது
ஈரத் தெரு

மேப்பிள் மரம்
சிறு மழை பொழிந்தது
கொன்றை நினைவுக்கு வந்தது
மஞ்சள் பூக்கள்
நிறமற்ற மொட்டுக்களாய்
நடந்தேன்

கூதல் காற்றின்
தழுவலில்
விகசித்து சிவந்தது
முகம்

நின்றேன்
கிளைகளூடு கசிந்து பரவியது
ஒரு ஒளிக் கீற்று
வெளித்துக் கொண்டு வந்தது
வானம்
அதன் மஞ்சளை எடுத்துப் பூசுவதாய்
ஒரு கனவு விரிந்தது

மெல்லப் பிரிந்த இதழ்கள்
எதற்காகவோ
புன்னைகைத்துக் கொண்டேயிருந்தன

நான் மீண்டும் நடக்கத் தொடங்கியிருந்தேன்
சொற்ப தூரத்தில்
வானம்....!!

Friday, 11 June 2010

வழுவிய கவிதை

பிரபஞ்சத்தின் தீரா
உயிர்ப்பின் உச்சத்தில்
மீள மீளப்
பிறப்பதென்றானது

மார்கழிப் பனிக்குடத்தை
தாங்கியும் தாங்காதும்
நாணல் படும் அவஸ்தையை
அள்ளிக் கொண்டது மனது

மார்புக்குள் அயரும்
மழலையாய் மாறி
நிம்மதிச் சன்னிதானத்திற்கு
குடிபெயர்ந்தது உயிர்

இயல்பிருத்தலுக்கு முயன்று
தோற்பதும் வெல்வதுமாய்
மயங்கி சாய்கிறது
இன்றைய பொழுது

மண்ணைத் தொட்டு
முத்தமிடும் அவசரத்தில்
வருகையைத் தெரிவிக்காது
துமித்துப் போகிறது முகில்

தனக்கான இலக்கணத்தின் பால்
நிற்காது வழுவி
பிரசவிக்கப்பட்டிருக்கிறது
ஒரு கவிதை
காதலாய்..!

Saturday, 27 March 2010

ஒரே தொழில்

குழைந்த இருட்டு
குதப்பித் துப்பிய வெட்கங்களைத்
தேடத் தொடங்கினாள்
கழற்றி எறிந்த சட்டையுடன்
ஒட்டியபடி கிடந்தது மனது
கட்டில் சட்டத்தில் தொங்கவிட்ட
உணர்ச்சிகள் வரிசைப்பட்டன

மல்லிகைகளால் இவனால்
முழமிடப்பட்டிருந்த முத்தங்கள்
இன்னும் மீதமிருந்தன
கனகாம்பரத்துக்காக அங்கே
அவனால் அளக்கப்படும்
யாருக்குத் தெரியும்
நாளை முத்தச் சுரப்புகள்
சேலையுடன் உரியப்படலாம்

அவளின் உதட்டுச் சாயம் அழித்து
பூவிதழ் தட்டியவனின்
சட்டையின் கட்டங்களிலிருந்து
எம்பிக்கொண்டிருந்தாள்
அவன் மனைவி
அவளின் சாளரத் தாழ்
கயிற்றினால் கட்டப்பட்டிருந்தது

தலையணை தடவி
தாள்கள் எண்ணியவளின்
தேயாத சுவடுகள்
தெருவில் பதிந்தன
அடையாள வேட்கை
அவளை மட்டும் வேசியாக்கியது

விடுதலையாகிய மனைவியுடன்
அதே தொழிலிருந்த
அவனைச் சுட்ட
வார்த்தைகள் தேடுவதை விடுத்து
புணர்தலின் அவசரத்தில்
நிர்வாணப்பட்டிருந்தது
இந்த சமூகம்

Thursday, 11 February 2010

சுதந்திரப்பட்ட ஆறாவது

அவன்
"பைத்தியம்"
அவனது ஆறாவது
சுதந்திரப்பட்டது
அவனது உலகத்தை
ஆறாவதுகள் சிருஷ்டித்தன

நாகரீகம் பேசின
உடைகள்
மொழி பரந்திருந்தது
அர்த்தங்கள் விளங்காததாயும்
அவன் நவீன கவிதைகளை
காற்றில் கிறுக்கினான்
குடித்தான்
மிகுதியை சுவாசித்தான்
ஒற்றைச் செருப்பினடி
ஒதுங்கிக் கிடந்தது
உலகம்

"சாப்பிட்டாயா" வினவ
என் வாசனைகள் தடுத்தன
ஆடை உள்ளுடம்பு
அதனுள் ஒரு உடம்பு
நிரம்பாத பள்ளங்களுடன்
மணக்கத் தொடங்கியிருந்தது
மறுதலிக்கப்பட்ட ஆத்மா
அவனுள் ஒளிர்வதாகப்பட்டது
"பிரம்மை"
அவன் சாக்கடை

ஆலயம் திறந்தது
எனக்காக மட்டும்
யாசித்த அவனுக்கும்
யாசிக்காத நாய்க்கும்
பிச்சை மறுத்து உள்ளேகி
பிச்சை கேட்டு மீண்டு
நானும் அவனும்
ஒரே தெருவில் நின்றோம்

அவனது ஆறாவது
சுதந்திரப்பட்டது
நகைத்தது எனதை
அது சிறையிலிருந்தது

எனக்கும் சிரிப்பு வந்தது
என் இதழ் பிறழ்ந்து
இம்மியாகப் பிரிந்து
யாரும் கவனிக்கவில்லை
என்னிடம் காரணம் இல்லை

பார்த்துக் கொண்டிருந்தார்கள்
அவனை
அதிசயங்கள் அந்நியமாக்கப்படுகின்றன
ஆறாவதுகளின் காரணங்களினால்

அவன் பேசத் தொடங்கியிருந்தான்
காரணமில்லாமல்
நிறைய சிரித்தான்
காரியத்துடன்
என்னைப் பார்த்தும்
இல்லை
அது "பிரம்மை"
அவன் பைத்தியம்

Friday, 5 February 2010

இரு கவிதை ஒரு காதல்

1.
இரு நிழல்கள்
ஒன்று இவள்
சற்றிறங்கிய மேகம்
தூறிக் கொண்டிருந்தது
கூடவே மரமும்
கரைந்து ஒன்றாகி
ஒரு நிழல்
காதல்

2.
சேர நின்றது
மழை
புன்னகைத்தாய்
பூத் தொடுத்தாய்
மௌனமாக்கப்பட்ட இதழ்
மொழிகளற்ற பிரக்ஞை
எட்டக் கிடந்தது
காமம்
தொடக் கடந்தது
காதல்

Monday, 4 January 2010

பெயரில்லாதது

தனிமையில் கரைந்து போன
நிலாவின் ஒளி
ஒழுகிக் கொண்டிருந்தது

நாணல்களுக்குள் பூத்த
பெயரறியாப் பூவில்
பொறித்துப் போனது
தன் பெயரை

அடுத்து விரிந்த மொட்டுக்கள்
அதைக் காதல்
என்று உச்சரித்தன

Friday, 18 December 2009

மறு தாக்கம்

பிரட்டிப்போட்ட கரப்பானின்
பிய்ந்து கொண்டிருக்கும்
இறகுகளுக்குள்ளிருந்து
எட்டிப் பார்க்கிறது மனது

சாத்தியப்பாடுகள் தரும்
நிகழ்தகவுகளின் அன்புகளில்
நெரிந்து வாழப் பழகுகிறது
நசிந்த உயிர்

பெயர் எழுதப்படாத கண்ணீர்
யாருக்குமே இல்லாமல் வழிய
பிணமாகக் கனக்கிறது
மௌனம்

ஆழ் மனதுக்குள் அலையும்
உருவற்ற கருவைத்
துரத்துவதொடு நிற்கிறது
கவிதை

முற்றுப்புள்ளிகளற்றுப் போன
இறுதிக் கவிதையின் முடிவாய்
மிஞ்சி விளைகிறது
காயம்

நிரந்தரமற்ற தூக்கத்தில்
நெருடும் விடியலில்
காற்றில் கீறுகிறது
பாச விரல்
இன்னொரு கரப்பானை
இறுகப் பிடித்தபடி

Thursday, 10 December 2009

தண்ணீர்ப் பாம்புகள்

ஆழ்கிணற்றுக்குள் யாரோ
அள்ளிக் கொட்டிய இருட்டைக்
கிள்ளிப் போடுவது பற்றியும்
துலாவின் வாளி விழ எழும்
பிலாக்கணத்தை நிறுத்துவது குறித்தும்
தண்ணீர்ப் பாம்புகளை விடத்
தவளைகள்தான் கவலைப்பட்டன

படிகளில் குறிக்கப்பட்ட தத்தம்
பரம்பரைப் பெயர்கள் கொண்டே அவை
நீதிமன்றக் கூடுகளில்
அழைக்கப் பட்டிருந்தன

கோப்புகளுக்கும் வாய்தாக்களுக்கும்
நீர்ப்பாம்புகள் தலையைக் காட்டின
அதில் பல பெண்களாக இருந்தன
சில வாற்பேத்தைகளும்

நிலாவின் நிழல் விழுந்த
அரைகுறை இரவொன்றில்
"பாம்புகள் படியேற"
விதிகள் செய்யப்பட்டதாக
தவளைகள் கத்தின
அடுத்த மழையில் செத்தன

பின்வந்த அமாவாசையில்
பிசைந்த இருட்டில் நின்று
பாம்புகள் தீர்ப்பைப் படித்தன
தங்களின் காதுகள்
செவிடாகிப் போனதனால்
காத்திருக்கத் தொடங்கின
வாற்பேத்தைகளுக்காக
இப்போதும்

Thursday, 12 November 2009

இன்னொருகொலை

அந்தகாரத்தில் நடுங்கிக் கிடக்கிறது நரகம்
விநாடியில் விலகுந் தாழியினூடு பரவி
நசுக்கிப் போடுகிறது இவ்வுலக ஒளியை

திமிறிப் பரவுகிறது காமநெடி
திடுக்கிடுவதோடு பழக்கமாகிறது எனக்கு
மூச்சடைக்கிறது என் பூமி

மூச்சிறுகிய போதும் நான் சற்றுமுன்னும்
அதைத்தான் முகர்ந்தேன்
"அவனுடன்" தான் பேசினேன்

என் சந்துகளெல்லாம் இறந்து கிடக்கிறார்கள்
"அவன்கள்
ஏன் நான் நேற்றுக் கொன்ற அவனின் நட்பும்

செத்துக் கிடக்கும் பிணமொன்று
சட்டென்று விழிக்கும் இன்னொரு உலகில்
மௌனத்தில் பழகிய பெண்
அமிழ்வாள், அடங்குவாள், அழிவாள்

அவளுடலின் புழு நெளியக் கிடக்கும்
"பெண்ணியம்"
துடைக்க வரும் இன்னொரு
"பெண்கள் தினம்"

ஏதாவது செய் என்பதல்லால்
இரத்தம் வடிகிறது மனதில்
ருத்திரம் கொதிக்கிறது மூச்சில்

பிணத்தில் வடியும் குருதியில்
குளிர்கிறது என் பூமி
அது தான் கொலை செய்வதென்றானேன்

மீண்டும் நிரம்பும் என் பூமி
"அவன்களின்" காம நெடிகளால்
அதைத்தான் சுவாசிக்க வேண்டும் நான்

இன்னொரு கொலை தானே செய்யலாம்
இந்த மிருகம் விழிக்கக் கூடாது
இன்னொரு உலகில்

Saturday, 7 November 2009

நித்திரை என்பதான பொய்

விஸ்வரூபமெடுக்கும் சில பல
விளக்கமற்ற கனவுகளுக்குள்
தொலைந்தே போனது தூக்கம்

தேடிப் பறந்த மனதோ - தன்னை
மயானங்களின் எல்லையில்
பேய் பிடித்துப் போனதாகத்
தகவல் அனுப்பியது

நித்திரை என்பதான பொய் வெளிகளில்
நின்று புலம்புவதில் கழிந்தன
என் ஒவொரு இரவுகளும்

தூக்கம் தின்னுவதாகச் சுட்டப்பட்ட
நினைவுப் பட்சி
வலிகளின் கல்லறைகளின் இடுக்கில்
உணவிட்டுக் கொண்டிருந்தது
அலகில் வழிந்தது என் மனதின் குருதி
தின்னப் பட்டிருந்தது
அன்றிரவுக்கான தூக்கம்

இன்றைய வலிகளுக்கு
இப்போது தான் கல்லறை செய்தேன்
இன்றிரவும் தூங்க வேண்டும் - ஆனால்
நீள் வெளிகளில் நின்று
அழுவதோடு நிறுத்த வேண்டும்
தூக்கம் ஏற்கனவே சாப்பிடப் பட்டிருக்கும்

Tuesday, 27 October 2009

என் ஒரு நாள்

ஒன்றுமே செய்யாமல் போனதற்காய்
ஓவென்று அழும் நொடிகளால்
நிரம்பிக் கிடக்கிறது
என் அறையின் குப்பைத் தொட்டி

நேற்றயதுகளில் புதைந்த
இன்றயதுகளுக்கான மனதைத்
தேடி தொலைந்தேனென்று
தாம் தூமென்று குதிக்கிறது பாதி நாள்

தவணை சொல்லி மீண்டெழுந்தால்
கழியும் கணங்கள் போக
மீதியில் வாழும் லாவகங்கள்
கைவரவில்லை உனக்கென்று
குற்றம் சுமத்துகிறது மீதி

அப்படியா என்று நான்
கேட்டு அழ முன்னமே
பிறந்துவிடுகிறது
எனக்கான அடுத்த நாள்

இலையுதிர்வது - அது காலம்

உதிரும் இலைகளின் வடுக்களைச் சுமந்து
நெடுமென நிற்கிறது கால மரம்
இறைந்து கிடக்கின்ற சருகுகளுடன்
காய்ந்து கிடக்கின்றன மனத் துகள்கள்

பாதி மனதுதான் பாவம்
உச்சியில் கூடு கட்டி
கீழிருக்கும் மீதிக்காய்
ஓர் ஒப்பாரி முடிக்கிறது

எப்போதோ பொழியும் ஒரு மழையில்
துளிர்க்கிறது சிறு தளிர்
இப்போது மனது கீழே பார்ப்பதில்லை
அதற்கு தளிருடன் வேலையிருக்கு

காலமரத்தின் இன்னொரு வளையத்தில்
அது இலையாக உதிர்க்கப் படலாம்
மரத்துக்கு இதைப் பற்றித்
துளியூண்டும் வருத்தமில்லை
மிஞ்சிய மனம்தான் விம்மும்
அடுத்த மழைக்கான காத்திருப்பில்

இன்னொரு ஒப்பாரி இசைக்கும்
அது அடிக்கடி குனிந்து பார்க்கும்