Friday 30 September 2011

எழுத்துருக்கள்..

இசை அல்லாத பாலைவனத்தில் மணல் காற்றை வேற்று வெளிக்குள் சுழற்றிமிகத் தனிமையான மணல் ஒன்றின் விரக்தி நிலையை தீராத நாட்டியமாக இசையின் மாயத்திற்குள் நகரும் குருடர்களின் தனிமைத் தீவானான் பீத்தோவன். குருடரின் ஜீவரசம் பூசிய ஸ்பரிசவெளி இசைப் பாலையில் தவிக்கிறது.. - "பாழி" கோணங்கி

1.
கண் தெரியும் புள்ளிக்கும் அப்பால்
விரிந்து செல்கிறது பார்வைப் புலம்
மோகித்து இடை நடுவில்
விலகி நெளிகின்றன நினைவுகள்
ஆழ உள்ளிறங்கி
அடியில் தேங்குகிறது
மிதமான சூடு
காதலின் பெயரால்
காணிக்கையாக்கப்பட்டிருக்கின்றன
சில அப்பங்களும் சிவப்பு வைனும்
பருகி முடித்த பின்
குழைந்து ஒழுகும் அவளின்
உடலின் துளிகள்
இறைந்து கிடக்கின்றன
வழி நெடுக

2.
கொளுத்தும் வெயிலின் நடுவே
கைக்கெட்டும் தூரமாய் நகர்கிறது
நீர்
சுடுமணல் குறுணிகளை
பெய்து நகர்கிறது
காற்று
வெளியாய் தீர்ந்து
தீயாய் எரிகிறது
மூச்சு
மீளவும் ஒருக்கால்
மிதமாய் ஒடுங்கி
மெல்ல சுடுகிறது
உடல்

3.
அநாசாயமாய் ஒலித்துக் கொண்டும்
பின் புலத்தில்
தீராமல் தேய்ந்தும்
அலைந்து கொண்டிருக்கிறது
பீத்தோவானின்
இன்னும் இசைக்கப்படாத சிம்பொனி;
ஆழ்ந்த இருட்டின்
மையப்புள்ளியை நோக்கி
விசையுடன் இயங்குகிறது
இசை
பார்வைக்குமப்பால் இயங்கும்
வடிவமைக்கப்படா உலகின்பால்
காமுறும் உடலை
கட்டியிழுத்து தோற்கிறது
சூடு
தீரத் தீர தேடித் புகுந்து
பொங்கி மிதக்கிறது
புணர்வின் பின் இடுவதற்காய்
ஏலவே தீர்மானிக்கப்பட்டிருந்த முத்தம்...

No comments:

Post a Comment