Wednesday 6 July 2011

சாணும் முழமும் அடியும்..!!!

மிதந்தெழும் தொன்மத்தின் வன்மப் புணர்ச்சிக்குள்
சிதைந்தொழுகும் என்னை
பெண்ணென்று சொல்லிக்கொள்கிறேன்
ஆக
நீ என்னவனாகிறாய்
கேள்விக்குறியுடன் திரும்பி முழிக்கும் என்னை
உறுத்து நோக்குகிறாய்
அன்பே,
நாளை என்பதற்குத் தேவையான
என் சுதந்திரங்களின் நீளங்களை
அடிகளால், சாண்களால், முழங்களால்
எதனால் அளந்து முடித்தாய்?
அவற்றை நான் எதற்குள் போட்டுக்கொள்ளட்டும்?
கைப்பை, கர்ப்பப்பை நிறைந்து
உடல் வழியும் அவற்றை
இழுத்து மூடுகிறேன்;
தெறித்து விழப்போகும் பொத்தான்களின் வழி
தொங்கிக்கிடக்கிறது
நேற்றைய எழுச்சியில் நீ
மீதம் வைத்த முத்த(ம்)த்தை
நான் யாரிடம் பரிசளிக்கலாம்?
சக மனுசியெனும் மதிப்பில் மயங்கி
முத்தங்களை பறக்கவிடுவதான கனவில்
ஆயாசத்துடன் மூடும் விழிகளில்
தேங்கிக் கிடக்கிறது
நூற்றாண்டுக்கான தூக்கம்;
இன்னும் சூல் கொள்ளாத
என் குழந்தைகளைக் கூப்பிடு
பேசிக் கொள்வோம் என்கிறாய்
சமத்துவம் பற்றி என்கிறாய்
எழுத்துப் பிரதிகளைப் புரட்டி
அடிமை என்ற சொல்லைத் தேடுகிறேன்
அகராதிகளை தின்று ஏப்பமிட்டதில்
புகைப்படத்துக்கான வெளிச்சத்தில் காணமலாகி
தொலை நிலத்தில் கிடக்கிறது
கறுப்பாலான உன் உடலொன்றின் பிரதி
நீ சொல்லத் தொடங்குகிறாய்
"ஆணும் பெண்ணும் சமனெனக் கொள்வதால்"
சரி, நீ சொல்லேன்
இன்றைக்கானதை நான் முழத்தால் அளக்கவா?

5 comments:

  1. //இன்னும் சூல் கொள்ளாத
    என் குழந்தைகளைக் கூப்பிடு
    பேசிக் கொள்வோம்
    சமத்துவம் பற்றி என்கிறாய்..//

    சாட்டையை மெளனங்களால் சுழற்றும் போது, சத்தமிட்டு கதற முடிவதில்லை.

    இங்கே,மெளனமாகச் சுழல்கிறது சொற்கள் சாட்டையாய்!

    ReplyDelete
  2. அருமை.

    ///என் சுதந்திரங்களின் நீளங்களை
    அடிகளால், சாண்களால், முழங்களால்
    எதனால் அளந்து முடித்தாய்?
    அவற்றை நான் எதற்குள் போட்டுக்கொள்ளட்டும்?///

    ReplyDelete
  3. வருகைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete