Monday 30 November 2009

கண்ணில்லாக் கண்ணாடி

என் கண்ணாடிக்கு
கண்கள் முளைத்திருந்ததை
இன்று அதிகாலைதான் பார்த்தேன்

நான் எதிர்பார்த்ததை விட
அகோரமாக இருந்தது
நான் அழகாகத் தெரிந்தேன்
ஆனால் அதன் கோர விழிகள்
என்னை நிராகரித்து
எனக்குள் இறங்கின
கண்ணாடியின் நீள் கரங்கள்
என்னுடல் கிழித்து
உள்ளே பதிந்து
நார் நாராய் நார் நாராய்
இழுத்துக் கொண்டே இருந்தன

இது என்ன
எதன்மேலான ஆசை இது
மேலும் என்னென்ன
காயங்கள்
வலிகள்
கலைந்த கவிக்கருக்கள்
இன்றிரவுக்கான கனவு
நாளைக்கான பயம்
அடுத்த நொடிக்கான பொய்
இன்னொன்றிலான பொறாமை
ஏன் நேற்று, முந்தய நாள்,
முதல்மாதம் அதற்கு
முந்திய வருடக் காதல்கள்
துரோக நட்பு
அப்பப்பா ஆயிரம் ஆயிரம்

கழிவுச் சாக்கடைக்குள்
அமிழ்ந்த ஒரு ஊரின் பிணக்குவியல் போல
கணக்கற்று கணக்கற்று

பொல பொலவென உதிர்ந்த
புற உடம்பை அள்ளி
பொட்டலங் கட்டிஎடுத்து
என் முன்னே கடை பரப்பியது
கண்ணாடி

ஒரு தலைச் சிலுப்பலில்
மீண்டும் வளர்ந்தது உடல்
சாக்கடைப் பிணங்களை
தின்று கொண்டே
கண்ணாடி பார்த்தது

நான் மிக அழகாகத் தெரிந்தேன்
கண்களிருக்கவில்லை
அதற்கு
இப்போது எனக்கும்

6 comments:

  1. //இன்றிரவுக்கான கனவு
    நாளைக்கான பயம்
    அடுத்த நொடிக்கான பொய்
    இன்னொன்றிலான பொறாமை
    ஏன் நேற்று, முந்தய நாள்,
    முதல்மாதம் அதற்கு
    முந்திய வருடக் காதல்கள்
    துரோக நட்பு
    அப்பப்பா ஆயிரம் ஆயிரம்//

    இதுதாங்க வாழ்க்கை என்கிற உண்மை நெற்றிபொட்டில் சுட்டாலும் வாழ்க்கை சக்கரம் சுழன்றுகொண்டே இருக்கிறது.நல்ல கவிதை தோழி.

    ReplyDelete
  2. //பொல பொலவென உதிர்ந்த
    புற உடம்பை அள்ளி
    பொட்டலங் கட்டிஎடுத்து
    என் முன்னே கடை பரப்பியது
    கண்ணாடி...//

    மயூரா,

    மனம் எப்பவுமே அப்படித்தான். நம்மை நம்மிடமே காட்டி கேள்வி கேட்டு, ... குற்றுயிராக்கும் குழந்தைத்தனம் கொண்டது.

    அழகான வெளிப்பாட்டுக் கவிதை..

    ReplyDelete
  3. நன்றாக இருந்தது கண்ணாடியின் அக ஊடுருவுப் பார்வையும், அதைச் சகிக்க மாட்டாத நமது இயல்புப் பார்வையும்...

    ReplyDelete
  4. //ஒரு தலைச் சிலுப்பலில்
    மீண்டும் வளர்ந்தது உடல்
    சாக்கடைப் பிணங்களை
    தின்று கொண்டே
    கண்ணாடி பார்த்தது

    நான் மிக அழகாகத் தெரிந்தேன்
    கண்களிருக்கவில்லை
    அதற்கு
    இப்போது எனக்கும்//

    நேர்த்தியான வடிவமைப்பு...

    கவிதை உடையாத பிம்பமாய் தெரிகிறது.

    ReplyDelete
  5. இன்னும் கொஞ்சம் எதிர்பார்த்து வந்தேன்

    :)

    ReplyDelete
  6. உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

    நேசமித்திரன் யோசிக்கிறேன். : )

    ReplyDelete