அவள் அவனை காரில் ஏற்றிக் கொள்வதற்குப் போன போது வெளியில் மழை தூறிக் கொண்டிருந்தது. லேசான இளவேனில் மழை. அவன் வீட்டு வாசல்படிகள் தொடங்கும் இடத்தில் குந்தியிருந்தான். கைகளின் ஒரு பொலித்தீன் பையுக்குள் ஒன்றிரண்டு உடுப்புகளும் போத்தில்களும் இருந்தன. மறு கையில் போன் இருந்தது. இவளது கார் டிரைவ் வேயில் வந்தும் அவன் எழும்பி வரவில்லை. இன்னொருவர் வந்து அவனுக்கு உபெர் (Uber) வந்துவிட்டதாய் சொன்ன பின் அவன் காரை நோக்கி வந்தான்.
"நீங்கள் தான் கிறிஸ் பார்க்கர்?" அவள் வழமை போல கேட்டாள்.
"இல்லை, நான் ஜெரோனி"
"ஓ"
அவன் பின் கார் கதவைத் திறந்து ஏறி அமர்ந்து கொண்டான். அவளுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவள் திரும்பி அவனிடம் பேச முயன்ற போது மற்றவன் இவளின் பக்கமாக வந்தான்.
"நான் கிறிஸ், இவர் என் நண்பன் ஜெரோனி. இவருக்காக நான் தான் உபேர் அழைத்தேன். நான் வரவில்லை"
"சரி, அப்படியானால் நான் விடைபெறுகிறேன்" இவள் பொதுப் படையாக சொல்லி விட்டு திரும்பி ஜெரோனியைப் பார்த்துப் புன்னகைத்தாள். ஜெரோனி நாற்பதுகளின் ஆரம்பத்தில் இருக்கலாம் என்று தோன்றியது. நல்ல உயரமாக உடற்கட்டுடன் இருந்தான். பேச விருப்பப்படுபவனாக தெரியவில்லை. அவன் காரில் ஏறும்போது அவனுடன் ஏறிய சிகரெட்டும் மழையும் கலந்த மணம் இவளுக்கு ஒத்துவருமாய் போல் இல்லை. அவனும் பதிலுக்குப் புன்னகைத்தான். இவளுடைய போனில் இன்னும் போக இருக்கும் தூரம் அறுபத்தாறு கிலோமீற்றர்களாக இருந்தது. இன்னும் கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலம் இந்த மனிதனுடன் பயணிக்கவேண்டும். இவளுக்கு யோசனையாக இருந்தது. இந்த உபேர் அழைப்பை அவள் ஏற்றுக் கொள்ளும்போது அவளுக்குத் தோன்றியதெல்லாம் ஓன்று தான், இதை முடித்தால் இன்றைய நாளின் இலக்காக நூறு டொலர்கள் வந்துவிடும். நேரத்துடன் வீட்டுக்குப் போகலாம், போகும் போது மகனுக்கு மக் டொனல்ட்ஸ் சிக்கின் நக்கெட்ஸ் வாங்கிப் போனால் இரவு சாப்பாடு பற்றிக் கவலைப் படத்தேவையில்லை என்பது மட்டும் தான். இப்போது இந்த மனிதனுடன் தூறும் மழையில் ஒரு மணித்தியாலம் பயணம் என்னும் போது அவளுக்கு என்ன நினைப்பதென்று தெரியவில்லை. இறக்கி விட்டுப் போனாலும் கஸ்டமர் சர்வீஸில் முறைப்பாடு செய்துவிடுவார்கள். அது வேறு சிரமமாக இருக்கும். வருவது வரட்டும் என்று தோன்றியது அவளுக்கு. காரை மித வேகத்தில் ஒட்டி நெடுஞ்சாலையில் ஏற்றினாள்.
நெடுஞ்சாலை அவ்வளவு இறுக்கமாக இல்லை. கோரோனாவின் விதிகள் மக்களை கட்டிப்போட்டிருந்தன. இவள் சற்று வேகமாகவே ஒட்டிக் கொண்டிருந்தாள்.
"உங்களுக்கு ரேடியோ வைக்கட்டுமா? எந்த சேனல்?"
"தேவையில்லை, நான் கேட்பதில்லை."
"ஓகே."
அந்தக் காரின் அளவு சிறுத்துக் கொண்டு வருவது போல இருந்தது. மழைத் துளிகள் விழும் சத்தமும், வைப்பரின் சர சரவும் தவிர காருக்குள் வேறு ஓசைகளும் இல்லை. அவனின் மூச்சு சற்று பலமாக வந்து கொண்டிருந்தது. இவளுக்கு அந்த அமைதியின் அடர்த்தியைத் தங்க முடியாது போல தோன்றியது.
"ஜெரோனி, நீங்கள் இப்போது போகும் இடத்தில் தான் இருக்கிறீர்களா?"
"யா, ஒருவருடம் ஆகிறது. இங்கு என் அம்மா இறந்துவிட்டார், அதனால்தான் வந்தேன்."
"ஓ, ஐ ஆம் சாரி"
"பரவாயில்லை, அவர் முதியோர் இல்லத்தில் இருந்தார். கொரோனா என்று சொன்னார்கள். அவரைப் பார்க்கக் கூடவில்லை. எல்லாம் முடிந்து விட்டது."
"மிகவும் கடினமான காலம் தான்."
"நான் இதை எதிர்பார்க்கவில்லை. அவரை இந்த மாதம் முழுதும் சந்திக்கவில்லை. ஒன்றிரண்டு தடவைகள் வீடியோ காலில் பார்த்தது தான். அவர் சந்தோசமான வாழ்க்கையை வாழ்ந்தார். அதனால் என் மனதுக்கு சமாதானமாக இருக்கிறது. அவரது இறுதிக் கிரியையை நான் எங்களது இடத்தில் செய்யவேண்டும் என்று விரும்பினேன். இப்படியாகிவிட்டது."
"எது உங்களது சொந்த இடம்?"
"ஹா ஹா, கனடா முழுவதும் எங்களது சொந்த இடந்தான். ஆனால் நாங்கள் அந்த வாழ்க்கையை இழந்துவிட்டோம். நான் இந்த நாட்டின் பூர்வீகக் குடியை சேர்ந்தவன், மனிடோபா மாநிலந்தான் எங்களது பிறந்த இடம். இப்போது இங்கு வந்துவிட்டோம்"
"ஓ," இவளுக்கு இப்போது என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவனைக் காயப்படுத்திவிட்டோமோ என்று தோன்றியது. "எனக்குத் தெரியவில்லை, சொந்த இடத்தைத் தொலைத்த வலியை நானும் அறிவேன். உன் நிலையை நான் உணர்ந்து கொள்கிறேன்"
"இட்ஸ் ஓகே. எனக்குப் பழகிவிட்டது. நீ எந்த நாட்டைச் சேர்ந்தவள்? இந்தியாவா?"
"இல்லை, ஸ்ரீ லங்கா"
"எனக்கு இந்தியாவை சேர்ந்த காதலி ஒருத்தி இருந்தாள். அவளும் உன் சாயல் தான். அதனால் தான் கேட்டேன்"
"இட்ஸ் ஓகே"
"அவளது பெயர் சிவாங்கி, அவள் ஒரு நர்ஸ். அவளை நான் மெடிக்கல் கேம்ப் ஒன்றில் சந்தித்தேன். இருபது வருடங்கள் இருக்கும். அவள் மனிடோபா வந்திருந்தாள். அவளை மறக்கவில்லை நான்"
"இப்போதும் தொடர்பில் இருக்கிறீர்களா?"
"இல்லை, அவள் எங்கிருக்கிறாள் என்று தெரியவில்லை. ஐந்து வருடங்கள் அவளுடன் உறவில் இருந்தேன். பிறகு என்னால் முடியவில்லை."
"நல்லது."
"நீ இந்துவா? சிவு ஒரு இந்து. அவளுக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். அவள் குடும்பத்துக்கு மிகவும் பயந்தவளாக இருந்தாள். என்னால் அதை எதிர்க்கவும் முடியவில்லை, ஒத்துக் கொள்ளவும் முடியவில்லை. அதனால் நான் விலக வேண்டியதாகப் போனது."
"புரியவில்லை"
"ம்ம், அவளால் சேர்ந்து வாழ வர முடியவில்லை. அவளது குடும்பம் என்னை வெறுத்தது. இருந்தும் அவள் திருமணத்தை வலியுறுத்தினாள். திருமணம் செய்தால் மட்டும் தான் அவளுடன் வாழ முடியும் என்று சொன்னாள். என்னை மனிடோபாவில் இருந்து ஒண்டாரியோ வர சொல்லி வற்புறுத்தினாள்."
"நீங்கள் திருமணம் செய்ய விரும்பவில்லையா?"
"ம்ம், எனக்கு அப்போது இருபத்தைந்து வயதளவு தான் இருக்கும். எனக்கும் நிறைய பொறுப்புகள் இருந்தன. நான் இந்த உலகத்தை சுற்றிப் பார்க்க ஆசைப்பட்டேன். சேர்ந்து வாழ்வதற்கே திருமணம் என்பது எனக்குப் புதிதாக இருந்தது. எல்லாம் அவள் கர்ப்பமானதுடன் முடிந்து போனது."
"ஓ, குழந்தை என்னவானது?"
"அதை அவர்கள் குடும்பத்தினர் கலைத்து விட்டனர்."
அவன் மௌனமானான். அவன் முகத்தில் ஒருவித இறுக்கம் பரவியது இவளுக்கு கண்ணாடியில் தெரிந்தது. இருபது வருடங்களுக்கு முதல் கலைந்து போன குழந்தையின் சாயலை மனது யோசித்தது. இவளது மகன் போல இருக்கலாம். கொஞ்சம் கூட வெள்ளையாக இருந்திருக்கும்.
"அவள் என்னை மிகவும் விரும்பினாள். வீட்டை விட்டு வர அவளுக்கு முடியவில்லை. அவளது அறை யன்னல் ஏறித்தான் அவளை சந்திக்க வேண்டும். அப்போதெல்லாம் வீட்டில் தான் தொலைபேசி இருக்கும். நான் அவளது அறை பக்க தெருவில் காத்திருப்பேன். என்னை அவள் கண்டதும் சுவரேறி அவளறைக்குள் செல்வேன். பிறகு அப்படியே இறங்கி வீட்டுக்குப் போவேன். நான் அவளைத் தொலைத்துவிட்டேன் "
"நல்ல காதல் கதை தான் வைத்திருக்கிறீர்கள்" இவளுக்கு என்னவோ போலிருந்தது. யார்தான் காதலைத் தொலைக்கவில்லை. எல்லோரும்தான் தொலைக்கிறார்கள். தொலைத்தது தெரியாமாலே தொலைக்கிறார்கள்.
"நீ காதலித்திருக்கிறாயா?"
"ஆம்,"
"அவனையே மணந்து கொண்டாயா?"
"என் முதற் காதலை மணக்கவில்லை"
"ஓ, உன்னை இரண்டு மூன்று தடவைகள் காதலிக்க அனுமதிக்கிறார்களா என்ன? காலம் மாறிவிட்டது தான்." அவனுக்கு அது ஆச்சரியமாக இருந்தது இவளுக்கு கோபம் வந்தது.
"ஏன் அப்படிக் கேட்கிறீர்கள்?"
"சிவு திருமணம் செய்திருப்பாளா என்று நான் யோசித்திருக்கிறேன். அதனால் தான் கேட்டேன். நீயும் திருமணம் செய்த பிறகா சேர்ந்து வாழத் தொடங்கினாய்?"
"அப்படித்தான் விதிகள் எழுதப்பட்டிருக்கிறது, உங்கள் சிவு போல என்னால் என் காதலனை அறைக்குள் யன்னல் வழியாகக் கொண்டுவர முடியவில்லை."
அவன் புன்னகைக்கும் போது இன்னும் இளமையாகத் தெரிந்தான்.
"என் சிவு" அவன் திரும்ப சொல்லிக் கொண்டான். "உனக்கு சந்தர்ப்பம் கிடைத்திருந்தால் நீ அதை செய்திருப்பாயா?"
"இல்லை என்று பொய் சொல்ல மாட்டேன். அது மட்டுமில்லை, என் முதல் காதல் தொலை தூரத்தில் இருந்தது. அவனால் இந்த தொலை தூரக் காதலை சமாளிக்க முடியவில்லை. இன்னொரு பெண்ணைத் தேடிப் போய்விட்டான்"
"நீ திருமணம் செய்து கொண்டததிற்காக வருத்தப்பட்டிருக்கிறாயா?"
"அப்படியில்லை, கொஞ்சம் சேர்ந்து பழகி அதன் பிறகு குடும்பம் என்று ஆரம்பித்திருந்தால் நல்லது என்று தோன்றி இருக்கிறது."
"அதை இப்போது உணர்கிறாயா?"
"அப்படி யார் தான் உணரவில்லை என்கிறீர்கள்? எனக்குத் தெரிந்து அதிகமானவர்கள் அப்படித்தான் உணர்கிறார்கள். யாரேனும் இல்லை நான் ஒரு போதும் மண வாழ்க்கை சலித்ததாய் காணவில்லை என்று சொன்னால் அதை நான் பொய் என்பேன்."
அவளுக்கு இந்த வாழ்க்கை பிடிக்கவில்லையென்று அவனுக்கு சொல்லவேண்டும் என்று தோன்றியது. அவன் தன்னை மதிக்க மாடடானோ என்று சந்தேகம் வந்தது. அவளுக்கு தன் வாழ்வில் ஆணின் தேவை குறைந்து கொண்டே வருவது போல இருந்தது. அப்படி இருப்பதை மறைத்துக் கொண்டு திரியப் பழகி இருந்தாள். திருமணம் செய்தது தப்போ என்றுகூட அவள் யோசித்திருக்கிறாள். அவளுக்கு அப்போது தேவைப்பட்ட ஆண் துணையை அவளால் சாதாரணமாக அடைய நேர்ந்திருந்தால் அவள் திருமணம் செய்திருப்பாளா என்று தோன்றியது. அவன் தனக்குள் துளைத்து மனதில் கேள்விகளை உருவாக்குவதை அவள் விரும்பவில்லை. அந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல அவளுக்கு பிடிக்கவில்லை.
"எனக்கு உன்னை பிடித்திருக்கிறது, நீ இயல்பாக பேசுகிறாய். நீ என்னை மதிப்பிட முயற்சிக்கவில்லை" அவன் புன்னகை மாறாமல் பதில் சொன்னான்.
"நீங்கள் இப்போது யாருடன் இருக்கிறீர்கள்?"
"என் வாழ்க்கை முழுவதும் நான் திருமணம் செய்து கொள்ளவேயில்லை. இப்போது எனது தோழியுடன் ட்ரைலர் ஒன்றில் வசிக்கிறேன். எனது வீடு, வாகனங்கள் எல்லாவற்றையும் விற்று விட்டேன். ஒரு சின்ன டிரக் வைத்திருக்கிறேன். நினைத்தவுடன் அதில் என் ட்ரெய்லரை கொழுவிக் கொண்டு பயணப்படுவேன். உனக்குத் தெரியுமா, என் வாழ்க்கையில் குறைந்தது இருபது பெண்களை சந்தித்திருக்கிறேன். ஒவொரு பெண்களும் ஒவ்வொரு நாட்டை சேர்ந்தவர்கள். நான் யாரையும் ஏமாற்றவில்லை. என்னைப் பற்றி சொல்லித்தான் பழகி இருக்கிறேன். அவர்களுடன் பழகிய நாட்கள் செக்ஸ் என்பது தாண்டி நாங்கள் மகிழ்வாகவே இருந்தோம். பிரியும் போதும் அப்படியே, அனைத்து கலாச்சாரங்களையும் நான் மதிக்கிறேன். என் மனத்துக்குப் பிடித்த சிலவற்றைப் பின்பற்றுகிறேன். இப்படி உன்னால் ஒத்துக்கொள்ள முடியுமா?"
"என் வாழ்க்கை ஒரு காதல் தோல்வியிலும் மற்ற காதல் திருமணத்திலும் முடிந்ததையொட்டி நான் கவலைப் படவில்லை. ஏனென்றால் கவலைப்பட அவகாசம் கிடைக்கவில்லை. நான் ஓடிக்கொண்டேயிருக்கிறேன். எனக்கு காதல் அன்பு செக்ஸ் என்பது தாண்டிய வாழ்க்கை தேவைப்படுகிறது. நான் நாடோடியாகவே இருக்க ஆசைப்படுகிறேன். என் கவலையெல்லாம் ஏன் நான் நாடோடியாக இருக்க முடியாதிருக்கிறதென்பது தானேயல்லாது இருபது நாட்டு ஆண்களுடன் வாழ முடியாமல் போனதில்லை"
"உன் ஆசைகளை நீதான் நிறைவேற்ற வேண்டும், மற்றவர்கள் அல்ல. நீ எப்படி உபேர் ஓடுகிறாய்? நான் உபேர் எடுப்பதில்லை. ஆனால் நான் நினைக்கிறேன் பெண்கள் இந்த வேலை செய்ய விருப்பப் படுவதில்லை."
"என் கணவரது வேலை கொரோனாவால் நின்று போனது. அரசாங்கம் தரும் பணம் போதுமாக இல்லை. என்னால் வேறு வேலை இப்போது தேட முடியாது. அதனால் நான் உபேர் ஓடுகிறேன். மற்ற நேரங்களில் சாப்பாடு டெலிவெரி செய்கிறேன்" இவளுக்கு கண் கலங்கியது. குடும்பத்தின் சுமை அவள் தோள்களில் அப்படி அழுத்தியது. இன்னும் என்னென்ன வரப்போகிறதோ தெரியவில்லை.
"ஓ, உன்னை நினைத்து நான் வருத்தப்படுகிறேன். உன்னால் முடிந்தால் இப்போது என்ன செய்ய விரும்புகிறாய்?"
"என் மகனுடைய உரிமைகள் பாதிக்கப்படாத ஒரு வாழ்க்கையை அவனுக்கு கொடுக்க வேண்டும். அதை முன்னிறுத்தி எதுவும் செய்வேன்"
"ஓ" ஒற்றை சொல்லோடு அவன் மௌனமானான்.
இவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. பேசவே மாட்டான் போல இருந்த அவனது கேள்விகள் அவளுக்குள் இறங்கி வேலை செய்யத் தொடங்கின. அவளால் முடிந்திருந்தால் எத்தனையோ செய்திருப்பாள். ஏன் முடியவில்லை என்று தான் தெரியவில்லை. தெரிந்துகொள்ளவும் அவள் முயற்சிக்கவில்லை. அவளுக்கான கோடுகளை யார் யாரோ போட்டுக் கொடுத்தார்கள். அவளது வேலை அதில் பிசகாமல் நடப்பது மட்டுமாகத் தானிருந்தது. அவள் அதில் சிறந்திருந்தாள்.
கார் நெடுஞ்சாலைகளில் இருந்து இறங்கி சாதாரண வீதிகள் தாண்டி இரு பக்கமும் வயல்கள் சூழ்ந்த குறுந்தெருக்களுக்குள் நுழைந்தது. குதிரைகளும் மாடுகளும் மேய்ந்து கொண்டு நின்றன. இவளுக்கு ஊர் நினைவு வந்தது. எப்போதிருந்து தான் இப்படி விலங்குகளைக் காண முடியும். அவள் அமைதியாகப் பார்த்துக் கொண்டு வந்தாள். மனம் கொஞ்சம் யோசனையில் இருந்தது. அவனுந்தான். அவள் மௌனம் அவனைக் காயப்படுத்தியிருக்கலாம்; இல்லை அவனும் சிவுவை யோசித்திருக்கலாம். அப்படியே கண்களும்.
"நீ சந்தோசமாகவிருக்கிறாயா?"
"என்ன?" அவளுக்கு அப்படி ஒரு கேள்வி இருக்கிறதா என்று தெரியாதது போலத் தோன்றியது. அந்தக் கேள்வி எந்த மொழியிலும் கேட்கப்பட்டாலும் அதற்கு என்ன பதில் சொல்வதென்று அவளுக்கு தெரிந்திருக்கவில்லை. அவளிடம் யாரும் அந்தக் கேள்வியைக் கேட்டதுமில்லை. சந்தோசம் எப்படியிருக்கும் என்பது அவளுக்கு மறந்துவிட்டது போலத் தோன்றியது. அவளுக்கு சடுதியாக அவனது அம்மாவின் சாவு நினைவுக்கு வந்தது. இந்த மரணம் எப்படியிருக்கும்? எந்தவகையான ஆறுதலை அது தரக்கூடும். திரும்பி அந்த விலங்குகளைப் பார்த்தாள். மழை பெலுக்குமாய்ப் போல இருந்தது. அவை தங்கள் குடிலுக்குள் புகுந்து கொண்டிருந்தன. அவள் அவனை இறக்கிவிட்டு இன்னும் ஒரு மணித்தியாலத்தில் செய்யப் போவதைப் போல. இந்த ஆயுளைக் கடந்தே ஆகவேண்டுமென்ற தீவிரம் அவளுக்குள் பொங்கி வழிந்தது. அவள் காரை நிறுத்திவிட்டு மழைக்குள் ஒடத் தொடங்கினாள்.
- நன்றி காலம் இதழ்