"ஊர் திரும்புதல்" தொகுப்பிலிருக்கும் ஏழு கதைகளில் நான்கு ஸ்ரீரஞ்சியினதும், மீதமுள்ள மூன்று ரஞ்சியின் மகள் சிவாகாமியினதுமாக இருக்கின்றது. தாயும் மகளும் இணைந்து வெளியிட்டிருக்கும் இந்தத் தொகுப்பில் இருவரது கதைகளும் ஒன்றன்பின் ஒன்றாக ஒழுங்கமைக்கப்பட்டிருக்கின்றன என்ற போதும், தனித்தனியாக எழுத்தாளர்களின் கதைகளைப் பற்றிய என் கருத்துக்களைப் பகிர நினைக்கிறேன். அந்தவகையில், சிவகாமியின் "ஊர் திரும்பல், கார்திகைப் பெண்கள், மற்றும் மீளிணைவு என்கின்ற சிறுகதைகளோடு ஆரம்பிக்கையில், ஒரு சிறுகதை என்னவெல்லாம் செய்யும் அல்லது செய்யவேண்டும் என்று நான் சில நேரங்களில் யோசித்துப் பார்ப்பதுண்டு. என்னுடைய சிறுகதைகள் ஒரு பொழுதில் ஸ்தம்பித்து நிற்கும் போது அல்லது முடிவென்று நான் நினைப்பது முடிவில்லாமல் போகும் போது என் மனதில் எழும் கேள்வி இந்தக் கதையை வாசிக்கும் இன்னொருவர் இதனை எவ்வாறு உள்வாங்கிக் கொள்வார் என்பதாக இருக்கும். சிவகாமி சிறுமியாக கனடா நாட்டுக்கு குடிபெயர்ந்த எழுத்தாளர். அவர் தனது பார்வையில், அனுபவத்தில் எழுதிய இந்த மூன்று கதைகளும் எனக்குள் மூன்றுவிதமான சிறு வெளிகளைத் தோற்றுவித்தன என்றுதான் சொல்லவேண்டும். அவை தோற்றுவித்த வெளிகள் ஏற்கனவே என் மனதில் இருந்த எண்ணங்களோடும், நினைவுகளோடும் பலமாகப் பொருந்திப் போனபோது சிவகாமி மிகச்சிறப்பாகவே தனது உணர்வுகளை வாசிப்பவர்களுக்குள் கடத்திவிடுகிறார் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.
"ஊர் திரும்பல்" சிறுகதையில், தனது தாயின் சாம்பலை ஊரில் கரைக்கச் செல்லும் மகளை உருவகிக்கும் சிவகாமி ஊரில் நிகழ்ந்த மாற்றங்களையும், நாடு விட்டு நாடு பெயர்ந்த எங்களது மனங்களில் எப்போதும் இருக்கும் "எது எங்களது நாடு/இருப்பிடம்" என்ற கேள்வியையும் தொட்டுச் செல்கிறார். நான் எனது பத்தொன்பதாவது வயதில்தான் நாடு பெயர்ந்து கனடா வந்து சேர்ந்தேன். பத்தொன்பது வயதுக்குள்ளாகவே ஆறு நகரங்களையும், ஏழு பாடசாலைகளையும் மாற்றி மாற்றி வாழ்ந்த எனக்கு, சிவகாமியின் எது எனது இருப்பிடம் என்ற கேள்வியும், எவை என்னுடன் வரப்போகின்றன என்ற குழப்பமும், எந்தெந்த நினைவுகளை நான் நினைவில் வைத்திருப்பது என்ற பதற்றமும் இலகுவாகப் புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. நான் பதினேழு வருடங்களின் பின்னர் கடந்த வருடம் நாடு திரும்பியிருந்தேன். இதில் என்ன காட்சிப்பிழை என்றால், நாட்டில் இருந்த பத்தொன்பது வருடங்களில் நான் பிறந்த வீட்டைப் பார்க்கும் வாய்ப்போ, அல்லது அம்மாவின் பிறந்த ஊரைப் பார்க்கும் சந்தர்ப்பமோ எனக்கு கிடைக்கவே இல்லை. அம்மாவின் ஊரை, நான் பிறந்து இரண்டு வயது வரை வாழ்ந்த எங்களது வீட்டை, எனது முப்பதுகளின் இறுதியில் தான் போய்ப் பார்க்க முடிந்தது என்பது எவ்வளவு முரண்நகை. "எனது தமிழ் எவருடையுது போலவும் இருக்கவில்லை' என்று சிவகாமி கலக்கமுறும் இடத்தில், சமீபத்தில் யாழ்ப்பாணத்திற்கு போயிருந்த எனக்குத் தமிழுடன் ஆங்கிலம் கலக்காமல் கதைக்க கொஞ்ச நாட்கள் எடுத்ததும், என்னுடன் படித்த எனது தோழி தனது குழந்தைகளுக்கு ஆங்கில மொழியில் கல்வி கற்பிக்கிறாள் என்பதுவும் அவளது இரு குழந்தைகளும் வீட்டில் சரளமாக ஆங்கிலத்தில் மட்டுந்தான் பேசுகிறார்கள் என்பதுவும் நினைவுக்கு வந்தது. வீடு திரும்பும் நாங்கள் ஒவ்வொருத்தரும் எதனை எதிர்பார்க்கிறோம்? என்னைக் கேட்டீர்கள் என்றால் நான் எனது ஆறு வயதுவரை யாழில் வாழ்ந்திருந்தேன். எனது நினைவுகள் அதிலேயே தான் நின்று சுற்றுகிறது என்பதை நான் கொஞ்சம் வெட்கத்துடன் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். அதாவது, நான் எனது ஆறாவது வயதில் எப்படி யாழ்ப்பாணம் என் நினைவில் இருந்ததோ, அப்படியானதொரு சூழலை எதிர்பார்க்கிறேன் என்று தான் நினைக்கிறேன். புலம்பெயர்ந்த நாங்கள் அங்கிருக்கும், புலம்பெயராத மனிதர்களை, எல்லா இழப்புக்களையும், துன்பங்களையும், அடடூழியங்களையும் தாங்கி வாழ்ந்த மனிதர்களை மாறாமல் அப்படியே இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறோமா? எனக்குத் தெரியவில்லை. அங்கு இருப்பவர்கள் எல்லோரும் இங்கு வந்துவிட்டால் இவ்வளவு செலவழித்து கட்டின வீடடை என்ன செய்வது என்ற சிவகாமியின் கேள்வி எனக்குள்ளும் நிறைந்திருக்கிறது. சிவகாமியாவது எப்போதாவது போய்த் தங்கக்கூடிய வீடு குறித்துக் கவலை கொண்டார். ஆளில்லாத ஊர்களில் எல்லாம் கோடிகளில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் கோவில்கள் குறித்தும், மணிமண்டபங்கள் குறித்தும் கவலை கொண்டேன். ஆனால் நான் வந்துவிட்டேன், அதனால் இங்கு வர நினைப்பவர்களை வராதீர்கள் என்று சொல்லவும் தகுதி இழந்தவள் ஆகிறேன் என்றவகையில் சிவகாமியின் குழப்பங்கள் தான் எனக்குள்ளும். பதில் தான் இல்லை. புலம்பெயர்ந்த முதலாம் தலைமுறையை சேர்ந்த ரஞ்சி மற்றும் இரண்டாம் தலைமுறையை சேர்ந்த சிவகாமி ஆகியோரது நினைவுகளில் உறைந்துபோன ஊரானது இப்போது இல்லை என்பதுதான் உண்மை. ஊர் திரும்பும் நாங்கள் தேடுவது இப்போது அங்கு இல்லை. இந்த யாதும் செய்யமுடியாத கையறு நிலையில் நிற்கும் நிலையை இந்த சிறுகதை மிகச் சிறப்பாகப் பேசுகிறது.
"ஊர் திரும்புதல்" கதையில் எழும் மனக்குழப்பங்களுக்குப் பதிலை தனது "கார்த்திகைப் பெண்கள்" கதையில் முன்வைக்கிறார் சிவகாமி என்று நான் நினைத்துக் கொண்டேன். எப்படியென்றால், ஒன்பது வயதில் குடிபெயர்ந்த பெண் குழந்தைக்குத் தனது அடையாளங்களை தெளிவாகப் பிரித்துப் பார்க்கவும், அவைக்கு உரிய மரியாதைகளை செய்யவும் முடிகிறது. ஏனெனில், இரு உலகங்களையும் அந்தந்த இடத்து மொழியுடன் நினைவுகளாக்கிக் கொள்ளும் போது பெரிதாக குழப்பங்கள் நேர்ந்துவிடாது. ஒரு வயதில் வந்த குழந்தைக்கு, கனடா நாடுதான் அவளது உலகமாக இருக்கும். எந்தக் குழப்பங்களும், நினைவுகளும் ஊர் குறித்து அவளுக்கு இருக்கப் போவது இல்லை. ஆனால், ஐந்து வயதில் குடிபெயர்ந்த குழந்தை எப்படி முற்றிலும், அதாவது கலாசாரம், பண்பாடு, பழக்கவழக்கம், மொழி என்று எல்லாவிதத்திலும் வேறுபட்ட இரு வேறு உலகங்களுடன் பொருந்திப் போக முடியும். இரெண்டு உலகங்களும் உருவாக்கித் தந்த, தரப்போகும் நினைவுகளை எப்படிப் பிரித்தறிய அந்தச் சிறுமியால் முடியக்கூடும்? இவ்வாறான உளப் போராட்டங்களுக்குள் சிக்கிக்கொண்ட குழந்தைகள் எவ்வாறு தங்கள் நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் எதிர்கொள்கிறார்கள் என்பது மிகச் சவாலான ஒரு விடயம்தான். சகோதரிகளுக்கு இடையில் நிகழும் உரையாடலில் உளச்சிக்கலை தெளிவாகப் பேசுகிறார் சிவகாமி. புலம்பெயர்ந்த தமிழர்களுக்குள் இருக்கும் பதட்டம் என்று நான் நினைப்பதென்றால், பிள்ளைகளை "ஒழுங்காக" வளர்க்க வேண்டும். இந்த "ஒழுங்காக" என்ற சொல்லுக்குள் எத்தனையோ சொற்கள் அடங்கிவிடும். அவர்கள் ஒழுங்காகப் படிக்கவேண்டும், ஒழுங்காக கலாச்சாரத்தைப் பேணவேண்டும். நாங்கள் சாதி பார்க்கிறதில்லை என்று சொல்லிக்கொண்டு ஆனால் அந்த சாதிக்குள், மதத்துக்குள் மட்டுமே திருமணம் செய்யவேண்டும். அப்படி இப்படி என்று இந்த "ஒழுங்காக" என்ற சொல்லுக்குள் எத்தனையோ சொற்கள். மீண்டும் ஊரில் தங்கிப் படிக்கப் போகும் அக்காவிற்குப் பதில் சொல்லும், ஒரு வயதில் கனடாவிற்கு வந்த குழந்தை, "இங்கையிருக்கிற தமிழாக்கள் மாதிரி சின்னச் சின்ன விஷயங்களைத் தூக்கிப் பிடிக்கிறதில்லை" என்று சொல்கிறாள். எனக்கு அந்தக் கூற்றில் எவ்வ்ளவு உடன்பாடு இருக்கிறது என்று சொல்லத் தெரியவில்லை ஆனால், வாய்ச்சொல்லில் வீரர்களாக புலம்பெயர்ந்த சமூகம் வாழ்ந்து கொண்டிருப்பதையும், ஆனால் ஊரில் மாற்றங்களை கொஞ்சம் இலகுவாக ஏற்றுக் கொள்கிறார்கள் போலத்தோன்றுவதையும் இங்கு நான் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
சிவகாமியின் மூன்று சிறுகதைகளிலும் எனக்குள் வெகுவான தாக்கத்தை ஏற்ப்படுத்திய சிறுகதை "மீளிணைவு." கடந்த வருடம் நான் யாழ்ப்பாணத்தில் நின்ற இரு மாதங்களில் நான் பயணித்த அத்தனை ஊர்களிலும் திரும்பிய பக்கமெல்லாம் கோவில்கள் அமைந்திருந்தன. எல்லா ஊர்களிலும் குறைந்தது இரண்டு கோவில்களிலாவது திருவிழாக்கள் நடந்து கொண்டிருந்தன. அதன் பொருட்டு ஊர் மக்கள், அல்லது அந்தத் தெருக்களைச் சேர்ந்த மக்கள் பல்வேறு விரதங்களையும், கட்டுப்பாடுகளையும் மேற்கொள்பவர்களாகவும் இருந்தார்கள். இது குறித்துப் பேச்சு வாக்கில் எங்களுடன் பயணித்த சாரதியிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். பிறந்தது முதல் தன் ஊரைவிட்டு வெளியேறி அறிந்திராத அவர் வெகு இயல்பாக, "எத்தனை அவலச்சாவுகள் பிள்ளை. அத்தனை ஆவிகளையும் எப்படி கட்டுக்குள்ள வைச்சிருக்கிறது. இத்தனை கோவில்கள் இருக்கிறதால தானே" என்றார். அந்தக் கூற்றில் இருக்கும் உண்மையின் தார்ப்பரியத்தை நான் அறியேன். ஆயினும், சிவகாமி சொல்லிய பேய்கள் எத்தனை எத்தனையோ. சிவகாமி போலவே தனது குழந்தைப் பருவத்தில் வெளியேறி இருபத்தைந்து வருடங்களின் பின் நாடு திரும்பிய எனது கணவரின் வீடு இப்போதும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. அந்த வீடு இருக்கும் பகுதியை இராணுவம் முழுக்க முள்ளுக் கம்பிகளால் வேலி கட்டிப் பாதுகாத்து வருகிறது. அந்தப் பகுதிகளைக் காட்டிய எனது கணவர் சொன்னதெல்லாம் எங்கெல்லாம் சடலங்களும், காயப்பட்ட உடலங்களும் எறிபட்டுக் கிடக்கும் என்பதுதான். சிவகாமியின் மீளிணைவு என்னை இந்த நினைவுகளுக்குள் தூக்கி எறிந்துவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். என்னால் அந்த சுழலுக்குள் இருந்து மீள இலகுவாக முடியவில்லை. ஊரிலிருந்து வெளியேறி அறியாத, சாதாரணமான தனது அறுபதுகளில் இருக்கும் ஒரு மனிதனும், தனது குழந்தைப் பருவத்தில் நாடு விட்டு வெளியேறிய சிவகாமியும் அவலச்சாவடைந்த உயிர்களை இரு வேறுவிதமாக ஆனால் ஒன்றாக உருவகித்ததை இந்தச் சிறுகதையின் வெற்றியாக நான் பார்க்கிறேன். செத்த மனிதர்களெல்லாம் இந்துக்களாகத்தான் இருப்பார்கள் எனது சாரதி நினைத்துக் கொண்டாரா, இல்லை, இந்துக் கோவில்களுக்குள் குடியிருக்கும் கடவுள்கள் எல்லாப் பேய்களை கட்டுக்குள் வைத்திருக்கும் சக்தி வாய்ந்தவையா என்று நான் அப்போது நினைத்துப் பார்க்கவில்லை. "மீளிணைவு" சிறுகதை என்னை நினைக்கவைத்தது. அதுமட்டுமில்லாமல், "வீடு திரும்புதல்" சிறுகதைத் தொகுப்பில் கூடுதலாக இந்து மதச்சடங்குகளை அதிகம் குறிப்பிட்டதாலும் இருக்கலாம். சிவகாமியின் கதைகள் மிக சிறப்பாக மொழி பெயர்க்கப்பட்டிருக்கின்றன. அந்தவகையில் ரஞ்சிக்கு மிகுந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எங்களது கதைகளை வேறு மொழிகளில் முக்கியமாக சர்வதேச மொழியாகிவிட்ட ஆங்கிலத்தில் சொல்லவேண்டியது காலத்தின், வரலாற்றின் தேவை. அந்தவகையில் நான் சிவகாமியைக் கேட்டுக் கொள்ளவேண்டுவதெல்லாம் தொடர்ந்து எங்களது கதைகளை, சொல்லப்படாத நினைவுகளை, உணர்வுகளை, வரலாறுகளை, குரலற்றவர்களின் பாடல்களைத் தொடர்ந்து எழுதவேண்டும் என்பதுவே. அந்த வேண்டுகோளை அவர்முன் வைத்துக் கொண்டு, இனி ரஞ்சியின் கதைகளுக்குள் நுழையலாம் என்று நினைக்கிறேன்.
"பேசலின்றிக் கிளி ஒன்று" என்ற கதையில் ரஞ்சி போரில் காயப்பட்டு உடற்பாகங்களை இழந்த பெண் குழந்தை கனடா வந்ததால் எப்படி "அதிர்ஷ்டத்தை" கொண்ட குழந்தையாகினால் என்று சொல்கிறது. தாயே தன்னைக் கேடயமாக்கிக் காப்பாற்றியதால் மட்டுமே உயிர் பிழைத்து, குடும்பம் இழந்து, உறவினர்களைப் பெற்றோர் ஆகக் கொண்ட குழந்தைகள் எத்தனை எத்தனை. இறுதிப் போரில் தாய் இறந்ததையே அறியாமல் பால் குடித்த மழழையைப் பார்த்தோம். அந்தக் குழந்தை இப்போது எப்படி உணர்ந்து கொள்ளும்? எதுதான் அதிஷ்டம்? இப்படி இழந்தாலும் புலம்பெயர்ந்தபடியால் வாழமுடிகிறது. இதே ஊரில் என்றால் சாதாரண வாழ்க்கை என்பது கடினம். அதனால் அதிஸ்டமா? ரஞ்சி கேட்காமல் கேட்ட அதே கேள்வியுடனே கதையைக் கடந்தேன். "இழை ஒன்று அறுந்து போகின்றதா" என்ற கதையில் உறவுகளுக்குள் இருக்கும்/இழையோடும், தோன்றும் உணர்வுச் சிக்கல்களை பேசுகிறார் ரஞ்சி. எங்கள் குடும்ப அமைப்பென்ற வழக்கத்தில் இருக்கும் பெரிய நடைமுறைச் சிக்கலே நாம் குடும்ப அங்கத்தவர்களை தனி மனிதர்களாகப் பார்ப்பதில்லை. "அம்மா" என்றால் அம்மாதான். அவள் கடவுள், தேவதை. தப்பு என்று இந்த சமூகம் சொல்லும் எதையும் அவள் செய்ய மாட்டாள் அல்லது செய்யக்கூடாது. அப்பா என்றால் அவர் அப்பாவாக மட்டும் தான் இருக்கவேண்டும். இவர்கள் யாரேனும் துணை இன்றி அமைந்தால், மீண்டும் துணை தேடக்கூடாது, அல்லது முடியாது. இந்த எண்ணங்களை இந்த யுகத்திலும் குழந்தைகள் எவ்வாறு தங்கள் மனங்களில் உருவேற்றிக் கொள்கிறார்கள். இந்தக் குழப்பமான கருக்களை ஏன் நாங்கள் இன்னமும் பேசுகிறோம் இல்லை? அம்மாவை தனி மனுஷியாக, உணர்வுள்ள ஒரு பெண்ணாக, தகப்பனையும் அப்படியே பார்க்க எங்கள் சந்ததிகளுக்கு நாங்கள் சொல்லித் தரத்தான் வேண்டும். ஆனால், தங்களது பிள்ளைகள் யாராவது நண்பர்களை அழைத்து வந்தால், "பிள்ளை நீங்கள் ஊரில் எவ்விடம்" என்று கேட்டு அவர்களது சாதியைத் தெரிந்து கொள்ள முயலும் தலைமுறை இருக்கும் வரை இது கடினம் தான் என்பதும் நிதர்சனமே. "முகிலிருட்டில்" என்ற சிறுகதையும் இவ்வாறான சமூகப் பிரச்சினை குறித்தே பேசிச் செல்கிறது.
"நிழலில் நிஜம் தேடி" என்ற சிறுகதையில் ஊர் திரும்புதல் குறித்த தனது நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார் ரஞ்சி. ஊரில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள், அல்லது அந்தப் பெயரில் அப்போதே இறந்து போனவர்கள் குறித்து நான் வருந்தியிருக்கிறேன். அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டார்கள் அல்லது எங்கோ உயிரோடு இருக்கிறார்கள் என்று மீண்டும் மீண்டும் சொல்லிக்கொள்ள அவர்களது பெற்றோர்களோ, சகோதர்களோ, மனைவி குழந்தைகளோ இருந்தார்கள்/இருக்கிறார்கள். வாய்க்கும் வயிறுக்கும் பெரும்பாடு பட்டு உழைத்து, குழந்தைகளை வளர்த்துக்கொண்டிருக்கும் மனைவிகள் இருந்தார்கள்/இருக்கிறார்கள். அல்லது மற்றக் குழந்தைகளை வளர்த்துக் கொண்டு காணாமல் போன அந்த மகவை நினைத்து அழுது அழுது களைக்காத தாய்மார், பெற்றோர் இருந்தார்கள்/இருக்கிறார்கள். நான் அவர்களைக் குறித்து வருந்தியதோடு நிறுத்திக்கொண்டேன். காணாமல் போனவர் என்ற பெயரோடு அந்த நொடி போயாகிற்று. ஆனால் வெளியில் அவர்களது நினைவுகளோடு வாழ நிர்ப்பந்திக்கப்படட மக்களது நிலைமை பற்றி இந்தக் கதையும், சிவகாமியின் "மீளிணைவு" கதையும் பேசுகிறது. அவர்கள் தங்கள் வாழ்க்கையில் எத்தனை விடயங்களை, நினைவுகளை, மனித உடல், உளம் சார்ந்த தேவைகளை இழந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று உணரும் பொழுதில் இது எவ்வளவு பாரதூரமான,சமூங்கத்தின் அடிவேர் வரை ஊடுருவி மனிதர்களை அவர்களது வாழ்வியலை சிதைக்கும் போர்க் குற்றம் என்று தோன்றியது. ஆக, ஸ்ரீரஞ்சி மற்றும் சிவகாமியின், "ஊர் திரும்புதல்" சிறுகதைத் தொகுப்பு மனத்தைத் தொடும் ஒரு படைப்பாக அமைந்திருக்கிறது.
No comments:
Post a Comment