Friday 23 August 2013

ஆகக் கடவ..;



நடுச்சாமத் திடுக்கிடலில்
அவரை கண்டேன்
அசுமாத்தங்களின்றி போர்வைக்குள் நுழைந்தவரை
யாரென்று கேட்பதுடன் அயர்ந்தேன்
ஆக
உனக்குக் கடவுளைத் தெரியாதென்றது அசரீரி
மயிர்க்கால்கள் கூச்செறிய துடித்தெழுந்து
அவர் காலடியில் அமர்ந்து கொண்டேன்

சாமங்கள் தாண்டிய குளிர்
கடவுளுக்கப்பால் கிடந்தது 

தூக்கமேயில்லை என்றேன்
கனவுகள் அந்தரித்துத் திரிகின்றன என்றும் சொல்லி
அவர் நாமங்களை உச்சரித்துச் சாய்ந்தேன்

----------

வெக்கை முகிழ்த்த பகல்

பெருமழைக்கான காத்திருப்பில்
பூளை கசியும் கண்மூடி
தனித்திருந்தாள் கிழவி
காற்றில் கைகள் துளாவி
இவளைப் பிடிக்க வந்தாள்

கடவுளே
முற்றமெல்லாம் மாம்பழங்கள்
வெம்பிப் பழுத்தவற்றை
தின்று செரித்தது மாடு

கடவுளே
கோழிப்பீ கரைந்தோடும் மண்ணை
நான் வெறுத்தேன்

கடவுளே
போறணைக்குள் தூங்கிக் கிடந்த போயிலை மணம்
என் அம்மாவிலும் வீசியது
ஈரப் பொச்சு மட்டைகளின்
தீய்ந்த மணம் காற்றில்

கடவுளே
பனையளவு தாப்பம் எங்கள் கிணறு
அதுக்குள் நிலவு விழுந்து கிடந்தது

கடவுளே
என் கொலுசை
பாம்புப் புத்துக்குள் ஒளித்து வைத்தேன்

கடவுளே
இப்படி ஒரு சாமத்தில்
நான் கடல்களை நீந்தித் தாண்டினேன்

கடவுளே
நேற்று என் கனவுகளை
மழைக்குக் கடன் கொடுத்தேன்

இன்றைக்கானவற்றை
செம்பாட்டு மண்ணுக்கு

நாளைக்கானவற்றை
வரப்பு நிறையும் மிளகாய்களுக்கு

----------

கால் உதறி விழிக்கையிலும்
கடவுள் அங்கிருந்தார்

கொடுத்தனுப்ப ஒன்றுமில்லை

குழந்தையின் எச்சில் முத்தமும்
சாம இருட்டின் ஒரு கைப்பிடியுமாய்
அவரை அனுப்பலாயிற்று

கடவுளே
இந்த அறை உன்னுடையதாயிருந்தது
இப்போது என் போர்வையும்
உனதேயாகக் கடவ

- நன்றி பெட்னா இலக்கிய மலர். 

No comments:

Post a Comment