Wednesday 1 February 2012

தவறான முகவரியிடப்பட்ட நாட்குறிப்பும் எனது நான்கு நாட்களும்..;பகுதி - 02


I ....
எலிசபெத்தை அன்று நாள் முழுதும் காணவில்லை. விசாரித்தால் அவரை வைத்தியசாலையில் அனுமதித்துவிட்டார்கள் என்ற செய்தி கிடைத்தது. போய்ப் பார்க்கலாம் என்று மனம் சொன்னாலும் வந்ததும் ஆறுதலாக பேசிக்கொள்ளலாம் என்று இருந்துவிட்டேன். எங்களில் சிலர் சென்று வந்து அவரை வயிறு மற்றும் கால் பகுதிகளுக்குரிய சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் மறித்து வைத்திருக்கிறார்கள் என்று சொன்னார்கள். உண்மைதான் நீண்டகாலமாகவே உபாதைகள் குறித்து முறையிட்டபடியிருந்தார். இந்தமுறை அவருக்கு நல்ல சிகிச்சை கிடைத்து வீடு திரும்ப வேண்டும். 

II . 

இன்று நான் மீண்டும் அந்தக் கோப்பிக் கடைக்கு சென்றேன். அங்கு அவளைக் காணவில்லை. வந்ததற்கு காரணம் உண்டு. இன்னும் இரு வாரங்களில் எனது மகளின் பிறந்ததினம். மகளுக்கு அனுப்ப என்று ஊதா நிறத்தில் சேலையும் அதே நிறத்தில் காப்புக்களையும் வாங்கியிருந்தேன். அதேபோல பச்சை நிறத்தில் இன்னொரு தொகுதிக்காப்புக்களையும் வாங்கி வந்திருந்தேன். பௌஷிகாவுக்குக் கொடுக்க வேண்டுமென்ற ஆர்வம் எழுந்தது. அவளைக் கண்டு நீ காப்புக்கள் அணிவாயா என்று கேட்கவே போயிருந்தேன். ஆனால் அவள் அங்கு இல்லை. சில நிமிடங்கள் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு கிளம்பி வந்துவிட்டேன். அவள் இடைவேளையில் நின்றிருக்கலாம், இல்லை சுகவீன விடுப்பு எடுத்திருக்கலாம். அவளைப் பற்றி விசாரித்துவிட்டு வந்திருக்கலாம் என்று தோன்றியது. 

III ....

எலிசபெத்தின் உடல் வெள்ளைப்பூக்கள் சூழ அடுக்கப்பட்ட சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்ததாம். உடல் வெளுத்தும் உப்பியும் இருந்ததென்று பேசிக் கொண்டார்கள். சுருக்கம் நிறைந்த முகத்தில் கண்களும் சிரிக்கும் அமைப்பைப் பெற்றிருந்த எலிசபெத்தின் முகம் உப்பியிருக்கும் போது எப்படியிருந்திருக்கும். நான் எலிசபெத்தின் மீள் வருகையின் போது கொடுக்க வாங்கி வைத்திருந்த அவருக்குப் பிடித்த திராட்சை வத்தலை எடுத்துக் குப்பைக்கூடைக்குள் போட்டேன். எனது மகளுக்கு நேற்றுத்தான் சேலையை அனுப்பிவைத்தேன். அவள் பதில் அனுப்பப் போவதில்லை. சிலவேளைகளில் இந்தமாதம் அழைத்தால் கிடைத்ததா இல்லையா என்று தெரியும்.  

IV .....

இன்று கடையில் சரியான கூட்டம். பௌஷிகா மிகவும் களைத்துப் போயிருந்தாள். தலைமுடியெல்லாம் கலைந்து பறக்க சிவந்த கண்களுடன் சூடாக்கும் இயந்திரத்துடனும் பாண் துண்டுகளுடனும் பட்டருடனும் வேறு சிலவற்றுடனும் போராடிக் கொண்டிருந்தாள். அவளுக்கு உதவ அருகில் நின்றவளுக்கு வியர்த்து வழிந்தது. எனக்கு சாப்பாடு ஓர்டர் கொடுக்க மனம் வரவில்லை. ஒரு சிறிய அளவிலான டீயை வாங்கிக் கொண்டு வெளியேறிவிட்டேன். இந்த பௌஷிகா எனக்கு யாரை நினைவுபடுத்துகிறாள். கலைந்த முகத்திலும் ஓரத்தில் ஒளிந்திருக்கும் அந்த அமைதி யாருடைய முகத்தை நினைவுபடுத்துகிறது. 

V ....

இன்று எலிசபெத்துக்காக நினைவு கூட்டம் நடத்தப்பட்டது. எலிசபெத்தின் மகளும் பேத்திகளும் நிகழ்வு முடிந்ததும் அவரது பொருட்களைப் பொறுப்பேற்றார்கள். இரண்டு பேத்திகளில் ஒருத்திக்கு எலிசபெத்தின் உதடும் நீண்ட கழுத்தும் வைத்திருந்தது. மற்றவள் தன் தாய்போல இருந்தாள். எலிசபெத் எனக்கு நெருங்கிய தோழியல்ல. ஆனால் தோழி. மரணமும் எனக்கு நெருங்கிய தோழியல்ல. ஆனால் அது எனக்குத் தோள் கொடுக்கக் காத்திருக்கிறது. இந்த இல்லத்தில் வந்து சேர்ந்த புதிதில் என்னைக் கலவரப்படுத்தியவை இந்த மரணங்களே. இப்போது கூடவிருப்பவர்கள் வைத்தியசாலை சென்றதும் அவர்களின் திரும்புதல்களுக்கு என்று ஒரு பொருளை வாங்கி வைத்துக் கொள்கிறேன். அவற்றை குப்பைத் தொட்டியில் போட்டும் விடுகிறேன். நினைவு நிகழ்வின் முடிவில் எலிசபெத்தின் சிறிய புகைப்படம் ஒன்று சுவரில் ஏறியது. அதே சுருக்கங்கள் கொண்ட முகம். அதே சிரிக்கும் கண்கள்.  

4 ....

இப்படித் தொடரும் டைரியின் சில பக்கங்கள் திகதி, நாள் கணக்கில்லாமல் நீண்டன. சில பக்கங்கள் எழுதப்படாமலே கிடந்தன. சிலவற்றில் ஓரிரு வரிகள் எழுதப்பட்டிருந்தன. எனக்கு எல்லாப் பக்கங்களையும் நினைவில் வைத்திருக்கவோ குறிப்பெடுக்கவோ முடியவில்லை. இந்தக் கதையில் வரும் பௌஷிகாவைக் கண்டுபிடிப்பதை தொடர வேண்டுமா வேண்டாமா என்றும் எனக்குத் தெரியவில்லை. எனக்குத் தலைக்கு மேல் வேலையிருந்தது. கடைசிப்பக்கங்களைப் புரட்டாமல் அபபடியே எனது பல்கலைக்கழக முதலாமாண்டுப் புத்தகங்களுக்குள் ஒளித்து வைத்தேன். 

இரண்டு கிழமை சென்றிருக்கும். பஸ்ஸில் மிதிக்கப்பட்டு இருக்கைகளுக்குக் கீழ் தள்ளப்பட்டிருந்த மெட்ரோ நியூஸ் பேப்பரை எடுத்து எதேச்சையாகத் திருப்புகையில் இரண்டாம் பக்கத்தில் ஒரு பெட்டிச் செய்தியாய் முதியோர் இல்லத்தில் தீப்பிடிப்பு, இரு பெண்கள் பலி ஐவர் காயம் என்று தொடங்கிய செய்தி கிடந்தது. எரிந்த குறையிலிருந்த முதியோர் படமொன்றையும் தாங்கிவந்த அந்த செய்தியில் பரிதாபகரமாக தெரிந்தது எனது கோப்பிக் கடை இருக்கும் தெரு. அது வெள்ளிக்கிழமை தேதியிடப்பட்ட செய்தித்தாள். நான் பார்த்தது சனி மாலை. ஆக நடந்து ஏறக்குறைய இரு நாட்கள் ஆகிவிட்டன. நான் இதுவரைக்கும் அப்படி ஒரு முதியோர் இல்லத்தை கண்டதில்லை. இருந்திருக்கலாம், ஆனால் நான் கவனித்ததில்லை. அது எனது கோப்பிக் கடையைத் தாண்டிய அடுத்த பேரூந்து நிறுத்தத்தின் முன்னே இருந்தது. 

நான் அந்த நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டேன். முதியோர் இல்லத்தின் முகப்பும் சில பக்கப் பகுதிகளும் கருப்பு வர்ணம் பூசி விநோதமாக என்னை வரவேற்றது. முன்னே யாருமில்லை. எல்லோரும் இடம் மாற்றப்பட்டிருக்கலாம். ஒரு பகுதி முழுக்க மஞ்சள் நிற டேப்களால் சுற்றப்பட்டு "உள்ளே வராதே" என்று எழுதியிருந்தது. மயான நிசப்தம். வரவேற்பறையில் ஒருவர், காவலாளி போல இருக்கவேண்டும், அமர்ந்து கோப்பி குடித்துக் கொண்டிருந்தார். அவர் என்னை அடையாளங் கண்டதுபோல் புன்னகைத்தார். இருக்கலாம், எனக்குத்தான் எங்கள் கோப்பிக் கடைக்கு வரும் பலரை மறந்துவிடும். நான் அவர்களின் முகத்தைப் பார்த்துத்தான் கேள்வி கேட்பேன். ஆனால் அந்த முகங்கள் என் மனதில் படிகின்றனவா என்றால் இல்லை என்பதுதான் பதிலாக இருக்கும். 

"ஹாய்"

"ஹாய்,"

"இங்கு என்ன நடந்தது?"

"நேற்றிரவு ஒரு தீவிபத்து. இங்கிருந்தவர்கள் எல்லோரும் இடம் மாற்றப்பட்டிருக்கிறார்கள். சிலர் வைத்தியசாலையில் தங்கவைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்கள்."

"அப்படியா? இங்கு எலிசபெத் என்று ஒருவர் இருந்தாரா? ஜூலை மாதம் இருப்பத்தெட்டாம் திகதி வைத்தியசாலையில் மரணித்திருக்கவேண்டும்."

"ஆமாம், இருந்தார். அவரது மரணத்தின் பின் சில மாதங்களுக்குள்ளாகவே இப்போது இந்த அனர்த்தம் நிகழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் இருவர் இறந்துவிட்டார்கள்."

"அவர்களது பெயர்கள் உங்களுக்குத் தெரியுமா? மிகுதிப்பேர் எங்கே தங்கவைக்கப்பட்டு இருக்கிறார்கள்? அங்கே சென்று பார்க்க முடியுமா?"

"அதனை சொல்வதற்கு இயலாது. அதற்கு நீங்கள் முகாமையாளரைத் தொடர்பு கொண்டு உங்களது அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும். உங்கள் உறவினர்/தெரிந்தவர் இங்கு இருந்தாரா?" 

"இல்லை, நான் அதோ அங்கிருக்கும் கோப்பிக்கடையில்தான் வேலை செய்கிறேன். விபத்து நடந்ததாக அறிந்தேன். விசாரித்துப் போக வந்தேன்.
மீண்டும் இல்லம் இந்த இடத்தில் எப்போதிருந்து இயங்கத் தொடங்கும்?"

"மூன்று கிழமைகள் ஆகும், நீங்கள் எலிசபெத்தை அறிந்திருக்கிறீர்களே,"

"அவரை அறிந்தவர் என்னுடன் வேலை செய்தார். நன்றி, நான் வரப்போகிறேன்."

"சரி," 

அவர் மீண்டும் கோப்பிக் கப்பைக் கையிலெடுத்துக் கொண்டார். ஆக இந்த டைரியின் சொந்தக்காரி இங்குதான் வாழ்ந்திருக்கிறார். எனது கடைக்குத்தான் அடிக்கடி வந்திருக்கிறார். பௌஷிகா என்பவளும் எனது கோப்பிக் கடையில்தான் வேலை செய்கிறாள். அந்தப் பௌஷிகா யார்? நான் எனது கோப்பிக்கடைக்குள் நுழைந்துகொண்டேன். முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் இருக்கும் அந்த நாட்குறிப்பை எழுதிய பெண் தீவிபத்தில் மரணித்திருப்பாரா? எனக்கு இது குறித்து மேலும் விசாரிக்கவேண்டுமென்று தோன்றவில்லை. அந்தப் பௌஷிகாவாக என்னை நினைத்துக் கொண்டேன். அதை எனக்குப் பரிசளிக்கவேண்டுமென்று ஏன் தோன்றியது?. எனக்குத் தெரியாமல் என்னை அவதானித்திருப்பாரா? சொன்ன அடையாளங்களுக்கு நான் கொஞ்சமும் பொருந்தவில்லையே? முதலிலேயே ஏன் அருகே முதியோர் இல்லம் இருக்கலாம் என்றும் அதைத் தேடவும் எனக்குத் தோன்றவில்லை. நான் ஏன் உருவகங்கள் சொல்லும் பெண்ணையே தேடி அலைந்தேன்? என் கண்களில் துளிர்த்த நீரை குளிர் காற்று உறைய வைத்து அகர்ந்தது. 

வீடு வந்து டைரியை திறந்தேன். முடிக்கப்படாத பக்கங்களுக்குத் திருப்பி படிக்கத்தொடங்கினேன். 

5 .

I ....

என் மகள் பௌஷிகா இப்போதெல்லாம் பேசுவதைக் குறைத்துக் கொண்டுவிட்டாள். அவளது வீட்டுக்குப் போன போது இனிமேல் வரமாட்டேன் என்று சொல்லிவிட்டு வந்தது தவறுதான் போலும். என் உடமைகளை எடுத்துக்கொள்ள எலிசபெத்தின் மகள் போல அவள் வருவாளா என்ன? அவள் எங்கிருக்கிறாள் என்று கண்டுபிடித்துத் தகவல் சொல்லவே மாதக் கணக்காகிவிடும் என்றுதான் தோன்றுகிறது. நான் கோப்பிக் கடைக்கு செல்ல வேண்டும். எனது மகள் அவளது பதின்மங்களில் வேலை செய்த கடை. அவளைப்போன்ற ஒரு பெண். இளம் பெண். நிறமும் மொழியும் வேறுபட என் மகளைப் போன்று இயங்கிக் கொண்டிருக்கும் இவளது உண்மைப்பெயர் யாதாக இருக்கும். கேட்கவேண்டும். அவள் அங்கு இல்லாவிட்டால் அவளைப் பற்றி விசாரிக்க வேண்டும். விசாரித்து இந்த டைரியிலேயே குறித்து வைக்கவேண்டும். 

II ....

இதை அவளுக்கே பரிசாகத் தருவதாக முடிவெடுத்துவிட்டேன். அவள் வாசிப்பாளா இல்லையோ அவள் வைத்துக் கொள்ளட்டும். என் சொத்துக்களை/பொருட்களைப் பெற்றுக் கொள்ள என் மகள் அல்லது மகன் வரப்போகிறார்களா என்ன? வந்தாலும் இந்த டைரியை சொத்துக்கள் பட்டியலில் சேர்ப்பார்களா என்ன? இதை அவளே வைத்திருக்கட்டும். 

6 .

டைரியை மூடி மீண்டும் புத்தகங்களுக்குள்ளே ஒளித்து வைத்தேன். வேலைக்குப் போகும்போதும் சரி வீடு திரும்பும்போதும் சரி அந்த இல்லம் இருக்கும் திசையையே பார்ப்பதைத் தவிர்க்க வேண்டுமென்ற தீவிரம் எழுந்தது. இன்னும் ஒரு வருடம், சரியாக பன்னிரண்டு மாதங்கள், காத்திருக்க வேண்டும். என்னுடைய புத்தகங்களுக்கிடையில் இன்னும் பல டைரிகளை ஒளிக்கலாம். ஆனால் அவரது தோழியில்லாத மரணம் அவரது தோளில் இருந்து இறங்கிவிடாது இருக்கவேண்டும். எனக்குத் தூக்கம் வந்தது. இரவு பதினொரு மணிக்கு வேலை. இன்னும் நான்கு மணித்தியாலங்கள் இருக்கு. அதில் ஒரு மணித்தியாலமாவது தூங்கலாம். மூன்று மணித்தியாலங்கள் முயற்சிக்கலாம். நான் இரண்டு மணித்தியாலங்கள் கட்டிலில் புரண்டு கொண்டிருந்துவிட்டு எழுந்தேன். மேசையில் கிடந்த கைதுடைக்கும் பேப்பர் துண்டில் எழுத ஆரம்பித்தேன். 

"உங்கள் பரிசு கிடைத்தது, மிக்க நன்றி.

அன்புடன்,
பௌஷிகா."

இதை இல்லத்தில் சேர்ப்பிப்பது என்று தீர்மானத்துடன் கட்டிலில் விழுந்தேன். எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை. 

2 comments:

  1. இடஐப் படித்த போது ஏற்பட்ட உணார்ச்சிகளை எப்படி சொல்வது என்று புரியவில்லை. மிக நன்றாக இருந்தது.

    ReplyDelete