Monday, 23 January 2012

தவறான முகவரியிடப்பட்ட நாட்குறிப்பும் எனது நான்கு நாட்களும்..; பகுதி 01


1...
இலையுதிர்காலத்தின் மாலைப் பொழுதுகளில் மழை பெய்வது வழமைதான் என்று தெரிந்துகொண்டே குடைகொண்டுவராமல் தெருவில் இறங்கிய என்னை என்ன செய்யட்டும். என் குடையை யாரோ இரவல் வாங்கிய நினைவு. யாரென்பதுதான் நினைவில்லை. எலிசபெத் ஆக இருக்கவேண்டும். அவர்தான் கால்நோவுக்கென்று பிசியோதெரபிக்கும் வீட்டுக்குமாக அலைந்து கொண்டிருக்கிறார். எலிசபெத் எங்கள் முதியோர் இல்லத்தில் வந்திணைந்த இந்த ஐந்தாறு வருடங்களில் அவர் இப்படி அவதிப்படுவது இதுவே முதல்முறை. நான் எல்லோருக்கும் சீனியர்; இந்த வருடம் மார்கழி வந்தால் பதினாறு வருடங்களாகப் போகின்றன. இப்படி ஒரு விடுமுறை காலத்தில்தான் வந்து சேர்ந்தேன். மகள் அமெரிக்காவும் மகன் ஆஸ்திரேலியாவுமாக சென்று சேர்ந்தபின் நானும் அவரும் இங்கிருந்து இரண்டு எட்டில் போய்விடக்கூடிய அந்தத் தொடர்மாடியில்தான் இருந்தோம். ஐப்பசி மாதம் போல இருந்தாப்போல அவரும் போனவுடன் என்னை வற்புறுத்தி இங்கே சேர்த்தது மகள்தான். வீட்டில் தனியே இருக்க பயம், தனிமை என்றெல்லாம் சொல்லிக் கொண்டுவந்து விட்டுவிட்டாள். அவள் சொன்னதும் நியாயந்தான். இங்க வந்த பிறகுதான் இப்படி என் வயதொத்தவர்களைக் காண முடிந்தது. 


ஆனால் நான் ஒரு இளம் பெண்ணையும் இதன் பலனாய் சந்தித்தேன். என் நர்சிங் ஹோமிலிருந்து சிறு தொலைவில் இருந்தது அந்தக் கோப்பிக் கடை. கனடாவின் அடையாளங்களில் ஒன்று. எப்போதாவது அங்கு சென்று சூப் அல்லது ஏதாவது உணவுப் பதார்த்தங்கள் வாங்கி அங்கேயே அமர்ந்து அருந்திவிட்டு வருவது என் வழக்கம். அப்படியொரு நாளில்தான் அவளை நான் கண்டேன். 

அன்று அந்தக் கடையில் கூட்டமில்லை. நான் மட்டும் தான் அப்போது சாப்பாடு வாங்கப் போயிருந்தேன். சிலவேளைகளில் வரிசை நீண்டிருக்கும். ஏற்கனவே கடைக்கு வந்தவர்களில் என் வயதொத்த முதியவர்களும், சில மாணவப் பருவத்தவர்களும் அங்கங்கே அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தனர். பொதுவாக இப்படியான கடைகளை சிலர் தங்கள் உத்தியோக சந்திப்பு அல்லது பிரத்யேக சந்திப்புக்கு வார இறுதிகளில் பயன்படுத்துவார்கள். அப்படியும் இரண்டு மூன்று பேரைக் காணக் கிடைத்தது. எனினும் மழை அடித்துப் பெய்யும் ஞாயிறு மாலை என்பதால் வழமையாக வரும் கூட்டத்தைக் காணக் கிடைக்கவில்லை. கடைக்குள் நிறைந்திருந்த மழைக் குளிரும், இயந்திரங்கள் பிறப்பிக்கும் செயற்கை வெப்பமும் சேர்ந்த மிதமான சூடு எனக்குப் பிடித்திருந்தது.  

கண்ணாடிக் கதவிலும், கண்ணாடி யன்னல்களால் கட்டப்பட்ட சுவர்களிலும் வழிந்தோடும் இந்த மழையை வேடிக்கை பார்த்தவாறு நிற்கும் அவளுக்கு வயது பதினேழு அல்லது பதினெட்டு இருக்கும். அவள் புதிதாகத்தான் வேலைக்கு சேர்ந்திருக்கவேண்டும். நான் ஒரு மாதம் மகள் வீட்டில் தங்கப் போனபோது வந்து சேர்ந்திருக்கலாம். 

"ஹாய்..;"
"குட் ஈவினிங்.., உங்களுக்கு எவ்வாறு உதவ வேண்டும்?.." 


ஆயிரம் தடவைகள் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டு அவளின் உணர்வின்றி வெளி விழும் வார்த்தைகள். ஒரு வித அவசரத்தில் வந்து விழுந்த ஆங்கில வார்த்தைகளின் உச்சரிப்புக்குள் அவளது சொந்த நாட்டைக் கண்டு பிடிக்க முற்பட்ட அறிவை நினைத்து சிறிதாய் புன்னகைத்தவாறே அவளை ஏறிட்டேன். 

அழகிய பெண்தான் அவள். திருத்தப்பட்ட புருவங்கள். நீண்ட மூக்கின் வலது பக்கத்தில் வெள்ளியிலான சிறு வளையம் அணிந்திருந்தாள். ரோஸ் நிற உதட்டுச் சாயத்துக்குள் துருத்திக் கொண்டு தெரிந்தது இடது மேலுதட்டிலிருந்த சிறு மச்சம். பல் ஒரு வித செம்மஞ்சள் நிறம். அவளது வேலைத்தளத்தின் சீருடையின் மேற்சட்டை பச்சையில் மண்ணிற சிறு கட்டங்களை கீறிய துணியில் தைக்கப்பட்டிருந்தது. மண்ணிற நீள் காற்சட்டை அணிந்திருந்தாள். அடர்ந்த சுருள் கூந்தலை கொத்தாகப் பிடரி அடியில் சேர்த்துக் கட்டியிருந்தாள். தலையில் போட்டிருந்த ஹேர் நெட்டின் துவாரங்களுக்கு உள்ளாகவும் அதன் மேல் அணிந்திருந்த தொப்பியை மீறியும் தலை முடி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. கன்னத்துப் பூனை முடிகள் தொப்பிக்குள் அடங்க மறுத்து சுருண்டு கிடந்தன. 

"உனது பெயர் என்ன?"
"பௌஷிகா" 
"நல்லதொரு பெயர்"
"நன்றி, நீங்கள் இன்னும் உங்களுக்கு என்ன வேண்டுமென்று சொல்லியிருக்கவில்லை." 

அப்படியே அவளுடன் பேசிக் கொண்டிருக்கவேண்டுமென்றும் தோன்றியது. 


"உனக்குப் பிடித்த குக்கி வகை சொல்லு?"


அவளது புருவம் ஓரத்தில் நெளிந்தது. இப்படியான கேள்விகளும் அவளுக்குப் பழையவைதான். ஆயிரம் தடவைகள் இல்லாவிடினும் சில நூறு தடவைகள் கேட்கப்பட்டிருக்கக்கூடிய கேள்வி. கேட்டுச் சலித்த கேள்வியுங்கூட. இதழ்களைப் பிரிக்காமல் புன்னகைத்தாள். பிறகு யோசிப்பவளாகத் தலையை சாய்த்தவள் அப்படியே "உங்கள் தெரிவு என்ன என்று வினாவினேன்.!" என்றவாறு மௌனமானாள்.

"உனக்கு என்ன பிடிக்கும் என்று கேட்டேன்." அவள் சிறிதாய் புன்னகைத்துக் கொண்டு அப்படியே நின்றாள்.


"ம்ம்..கிறீம் மஷ்ரூம் சூப் இருக்கிறதா?" 
"ஆம், அதனுடன் எதை விரும்புகிறீர்கள்? சிறு பாண் அல்லது சீஸ் பிஸ்கட்?"
"சீஸ் பிஸ்கட்.;" 
"சரி, வேறு ஏதாவது அருந்த விரும்புகிறீர்களா? கோப்பி அல்லது ஜூஸ்?"
"இல்லை, ஒரு கப் தண்ணீர் தர முடியுமா?"
"நிச்சயம் தருகிறேன், நீங்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்லப் போகிறீர்களா?"
"இல்லை, இங்கிருந்து அருந்தப் போகிறேன்."
"நல்லது, உங்களது தொகை மூன்று டொலர்களும் எழுபத்திநான்கு சதங்களும்."
"நன்றி."
"இது உங்களது மீதிப்பணம். இந்தத் தட்டுகளில் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். இதோ நீங்கள் கேட்ட தண்ணீர். அந்தப் பகுதியிலிருக்கும் பெண்ணிடம் உங்கள் உணவைப் பெற்றுக் கொள்ளுங்கள். உங்கள் நாள் நல்லதாகட்டும்."
"நன்றி, உன்னுடையதும், வருகிறேன்."


இந்த நீண்ட உரையாடலுக்குப் பின் அவள் களைத்துப் போனது போல தோன்றியது. முகத்தசைகளூடு ஒரு ஆயாசம் பரவித் தணிந்தது. அவள் அந்த உத்தியோகத்தில் திறம்பட இயங்குபவளாக இருந்தாள். நெடுநாளைய பயிற்ச்சியும், தொடந்த அனுபவங்களும், பல்வேறுபட்ட வாடிக்கையாளர்களை உபசரித்த பண்பும் அவள் முக பாவனைகளுக்கும், உதடு சிந்தும் மொழிக்கும், கைகளுக்கும் ஏன் உடலின் ஒவ்வொரு அசைவுகளுக்கும் ஒருவித அலட்சியத்தைத் தந்துவிட்டிருந்தது. அந்த அலட்சியம் அவளுடலில் ஒருவித அழகையும் கிளர்த்திவிட்டிருந்தது. கோப்பி சேகரிக்கப் பயன்படுத்தப்படும் கண்ணாடிக் கேத்திலை எடுத்து தண்ணீர்த் தொட்டியில் குழாயின் திருக்கை இரு விரல்களால் நெட்டித் தள்ளி ஓடும் தண்ணீரில் பிடித்து ஒரு சுற்று சுற்றிக் கழுவி மீண்டும் கோப்பியை சேகரிக்கும் இடத்தில் வைத்து கோப்பி தயாரிக்கும் இயந்திரத்தின் பொத்தானை அழுத்திவிட்டாள். பின் தாமதிக்காது ஏலவே பயன்படுத்திய பேப்பர் கப்களின் அளவுகளையும், கப் மற்றும் மூடிகளின் எண்ணிக்கைகளையும் மனதில் குறிப்பவள் போல அவற்றை உற்று நோக்கிவிட்டுத் திரும்பி அவை அடுக்கப்பட்ட தட்டிலிருந்து ஒவ்வொன்றாக எடுத்து அவற்றை மீள அடுக்கத் தொடங்கினாள். அவளின் செயற்பாடுகள் எல்லாமே அவளைப் பார்த்துக் கொண்டிருக்கவே சொல்லின. இவ்வாறு பலதரப்பட்ட வேலைகளை சில நிமிடங்களுக்குள் செய்துகொள்ளும் அவளது முகத்தில் எந்தவித உணர்சிகளும் இல்லை. சில நொடிகளுக்கு வந்து செல்வதாக நான் உணர்ந்த புன்னகையும் என் கற்பனைதானா? உண்மையில் அழகிதான் அவள். அழகாக இருப்பதற்குத் தான் எடுத்துக்கொண்ட முயற்சிகள் எல்லாம் தன் அலட்சிய பாவத்தால் வெகு இயல்பாகவே அழகாகக் காட்டப்படுவதை அறிந்தோ அறியாமலோ புன்னகைக்கும் அழகி. 

நான் சூப்பைத் தட்டில் வைத்துக் கொண்டு அந்தப் பகுதியிலிருந்து நகர்ந்து கண்ணாடி யன்னலோரம் இருந்த மேசையொன்றில் தெருவையும் கடையின் வரவேற்புப் பகுதியையும் பார்ப்பதாக அமர்ந்து கொண்டேன். சூடான கிறீம் மஷ்ரூம் சூப்பை மழையையும் தெருவையும் வேடிக்கை பார்த்தபடி அருந்துவது அற்புதமாக இருந்தது. கிறீம் மஷ்ரூம் சூப் எனக்குப் பிடித்தமானது. இருந்துவிட்டு இப்படி வெளியில் வந்து சாப்பிடும்போது பலவேளைகளில் கிடைக்காது. எந்த சூப் எந்த நாள் கிடைக்குமென்று ஒரு அட்டவணை வைத்திருந்தார்கள். ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த சூப் கிடைக்குமென்று எனக்குத் தெரியும். அதுவும் சில வேளைகளில் தீர்ந்துவிடும். 


அவள் இப்போது கையுறையணிந்த கையில் நீல நிற ஈரத்துண்டோடு மேசைகள் இருந்த பக்கம் வந்து கொண்டிருந்தாள். ஏற்கனவே அமர்ந்து சாப்பிட்டவர்கள் விட்டுப் போன தட்டுக்களை எடுத்துக் கொண்டு சிந்தியிருந்த கோப்பி மற்றும் சாப்பாட்டு மிச்சங்களையும் துணியால் ஒதுக்கி வழித்துத் துடைத்து மேசையை சுத்தம் செய்தவாறே நகர்ந்து கொண்டிருந்தாள். அவளது கண்களும் கைகளும் கால்களும் ஒருவித துரித லயத்தில் இயங்கின. 


"சூப் மிகவும் நன்றாக இருந்தது.."
"நன்றி.." 

அவள் என் மேசையைத்தாண்டி சென்று மற்ற மேசைகளை சுத்தப்படுத்தி முடித்தாள். பின் துடைப்பத்தையும் ஷவலையும் எடுத்து வந்து அங்கங்கு சிந்திக்கிடந்த குப்பைகளை கூட்டியள்ளத் தொடங்கினாள். இந்த இளங்குமர்ப் பருவத்தில் இருக்கும் பெண்ணை நான் அறிந்து கொள்ளவேண்டுமென்று தோன்றியது. அவள் பருவங்களைத் தாண்டி வந்துவிட்ட எனக்கும் அவளுக்குமிடையே காலம் வருடங்களாக, இடங்களாக, நினைவுகளாக, கனவுகளாக மல்லாந்து கிடந்தது.

மழை இப்போது லேசாகத் தூறிக் கொண்டிருந்தது. புதிதாக வருபவர்களின் காலணிகள் அள்ளி வரும் மண்ணையும், சேறையும் மீண்டும் மீண்டும் துடைக்க வேண்டி இருந்தது. அவள் சோர்வடையாதவளாக வெளி வருவதும் வாசல் பகுதியை ஈரத்துணி கொண்டு துடைத்துவிடுவதுமாக இயங்கிக் கொண்டிருந்தாள். அவளும் இன்னொரு பெண்ணுமே வேலை செய்துகொண்டிருந்ததால் இவளுக்கும் வேலை அதிகம் இருந்தது போலத் தோன்றியது. 

நான் கைதுடைத்த பேப்பரை குப்பைத்தொட்டிக்குள் போட்டுவிட்டு சூப் கோப்பையையும் கரண்டியையும் வெறுந்தட்டையும் குப்பைத்தொட்டிக்கு மேலே அவற்றின் இடத்தில் வைத்துவிட்டு பழைய இடத்திலேயே வந்தமர்ந்தேன். அவற்றை பௌஷிகா எடுத்துப்போனாள்.

2...

தலையும் வாலும் இல்லாமல் தொடங்கிய அந்த நாட்குறிப்பை இருபகலும் ஒரு இரவுமாய் வைத்துக் குழம்பிக் கொண்டிருக்கிறேன். இது பரிசாய்க் கிடைத்த நாட்குறிப்பு என்றால் நீங்கள் நம்புவீர்களா? ஏன் நானே இன்னமும் நம்பவில்லை. உண்மையைச் சொல்லப் போனா எனக்கு முதலில அந்தப் பரிசை என்ன செய்வதென்றே தெரியவில்லை. நேற்றைக்கு முந்திய தினம் இரவு பதினொரு மணி வேலை தொடங்க என்று பத்து நாற்பதுக்கு கடைக்குப் போனால் கூட வேலை செய்யும் அரூஜ் தான் இதைக் கொண்டுவந்து தந்தாள். கூடவே ஒரு நமுட்டுச் சிரிப்பும். அவள் சிரித்தற்கும் காரணம் இருக்கு. நானும் இதுவரை யாருக்கும் பரிசு கொடுக்கிறதில்லை. யாரும் எனக்கும் தருவதில்லை. இதில வேற தினமும் மாலை கடைக்கு வரும், பக்கத்துப் பீட்சா கடையில் வேலை செய்யும் தமிழ் பெடியனை டேட்டிங் செய்யும்படி அரூஜ் அறிவுறுத்தத் தொடங்கிவிட்டிருந்தாள். அவள் அந்தப் பரிசு அவனிடமிருந்து வந்திருக்கலாம் என்று நினைத்து சிரித்ததில் தவறொன்றும் இல்லைத்தான்.

சரி, இப்ப பரிசுக்கு வருவோம். பரிசென்றால் பெரிதாக ஒன்றுமில்லை, ஒரு நாட்குறிப்பு. கிறிஸ்மஸ் காலங்களில் நான் வேலை செய்யும் கடையின் வரவேற்புப் பகுதியில் ஒரு பையைத் தொங்கவிடுவோம். அதில் கிறிஸ்மஸ் தாத்தா பரிசைக் கொண்டுவந்து போடுவார் என்பது ஐதீகம். உண்மையில் அவர் போடுறதில்லை என்பது எனக்குத் தெரிவதுபோல உங்களுக்கும் தெரிந்திருக்கும். கூட வேலை செய்யும் யாராவது இல்லை நெடுங்கால வாடிக்கையாளர்களில் யாராவது தங்களுக்குப் பிடித்த பணியாட்களின் பெயரை மட்டும் எழுதி அவர்களைப் பற்றி எந்தவொரு குறிப்பும் இல்லாமல் அந்தப் பைக்குள் போட்டு விடுவார்கள். இதில் அவர்களுக்கும் பரிசைப் பெற்றுக் கொள்பவர்களுக்கும் ஒரு சந்தோசம். இந்தக் கோப்பிக் கடையில் வேலை செய்யத் தொடங்கிய இரண்டு வருடங்களில் எனக்குக் கிடைத்த முதலாவது பரிசு இதுதான். யார் எண்டு தெரியேல ஒரு டைரியைக் கொண்டு வந்து போட்டிருக்கினம். அதுவும் வெற்று டைரி என்றால் பரவாயில்லை. முழுக்க எழுதிய முடிந்துகொண்டிருக்கும் அந்த வருடத்துக்கான டைரி. முதலில திறந்து படிக்கக் கூடாது என்றுதான் நினைத்தேன். பிறகு படித்தால் என்ன என்று தொடங்கி இப்போது கீழே வைக்க முடியாத அளவுக்கு சுவாரஸ்யமானதாக ஆகிவிட்டிருந்தது. யாரோவொரு வயோதிபப் பெண்ணின் நாட்குறிப்பு. பௌஷிகா என்ற பெயரோடு எங்கள் வேலைத்தளத்தில் யாரும் இல்லை. அவர் சொல்லும் வர்ணனைகளுடனும் யாரையும் பொருத்திப் பார்க்க முடியவில்லை. அரூஜ் கொஞ்சம் பொருந்தி வருகிறாள். ஆனால் அவள் ஒரு நாளும் பகலில் வேலை செய்வதில்லை. அவளுக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் இரவு வேலை. நான் மாறி மாறி இரவும் வார இறுதிகளில் பின்னேரமுமாய் வேலை செய்வேன்.

என்னால் அமைதியாக இருக்க முடியவில்லை. இதைப்பற்றி எனது மேலாளருக்கு சொல்ல நினைத்துவிட்டுப் பேசாமல் இருந்துவிட்டேன். அவரும் மற்றவர்களும் சேர்ந்து டைரியை வாங்கி நான்காய் கிழித்து குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விடுவார்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஆக இதை ரகசியமாகவே வைத்துக் கொண்டேன். எனக்குப் பரிசு வந்திருந்த செய்தி பரவியிருந்ததால் சொந்தக் காசில் ஒரு டைரியை வாங்கி எனக்குக் கிடைத்த பரிசென்று காட்ட வேண்டியதாகப் போய்விட்டது. அதுவும் நல்லதுதான். இல்லாவிட்டால் இதை எழுதும் சந்தர்ப்பமும் எண்ணமும் வாய்த்திருக்காது. நான் எனது வேலை முடிய என் வீட்டுக்கு எதிர்த் திசையில் போகும் பஸ்ஸில் ஏறி அமர்ந்துகொண்டேன். மூன்று நிறுத்தங்கள் போனதும் ஒரு கோப்பிக் கடை வரும். அதுவும் எங்களுடையது போலத் தான். ஆனால் வேறு முதலாளி. அங்கு சென்று சேரவேண்டிய டைரி எனக்கு வந்து செர்ந்துவிட்டதோ என்ற சந்தேகம் எனக்குள் வலுப்பெற்றுவிட்டிருந்தது. கடைக்குள் நுழைந்து அங்குமிங்கும் பார்த்துவிட்டு ஒரு ஓரமாக அமர்ந்துகொண்டேன். கடையில் வரிசை வாசல் வரை முட்டிக் கொண்டு நின்றது. வேலையாட்கள் அங்குமிங்குமாய்ப் பாயாத குறையாக இயங்கிக் கொண்டிருந்தனர். இப்படிப் பாயாத குறையாக இயங்குவதற்கும் காரணம் இருக்கு. எவ்வளவு குறைந்த நேரத்தில் வாடிக்கையாளர் சேவையைப் பெற்றுக் கொள்கிறார் என்ற அடிப்படையிலேயே குறித்த கடையின் தரவரிசை மேம்படுத்தப்படும். தரவரிசையை மேம்படுத்த எங்கோ இருந்தவாறு நிறுவனமும், வீட்டிலிருந்தவாறு முதலாளியும், கடை அறைக்குள் இருந்தவாறு மனேஜரும், கூடவே நின்றவாறு மேலாளரும் பணியாட்களை நோண்டிக் கொண்டிருப்பார்கள். மாகாண அரசால் கட்டாயம் வழங்கப்பட வேண்டுமென்று அறிவிக்கப்பட்ட அடிப்படை சம்பளத்துக்குத்தான் இவ்வளவு பாய்ச்சலும். 

இபப்டி வேறு ஒரு கடையில் வந்து அமர்ந்து கொண்டு என்னைப் போல வேலை செய்யும் இன்னொரு மனித ஜென்மத்தைப் பார்த்துக் கொண்டிருப்பது எனக்கே சகிக்கவில்லை. ஆனால் வேறு வழியில்லை. கொஞ்சமாகக் கூட்டம் குறைந்தால் டைரியில் சொல்லப்பட்ட வர்ணனைகளுடன் ஒத்துப்போகும் பெண் இருக்கிறாளா இல்லையா என்பது தெரியும். ஏற்கனவே மூன்று பேரை லிஸ்டிலிருந்து எடுத்துவிட்டேன். வீட்டில் போய்த் தூங்கினால் நாளை இரவு வேலைக்கு வரும்போது களைப்பாக இருக்காது. ஆக வெட்டி வேலை செய்துகொண்டு இப்படி அமர்ந்திருப்பதைத் தவிர அந்தப் பரிசு எனக்கு ஒன்றையும் தரவில்லை. டைரியை அப்படியே குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டுப் போய்விடுவோம் என்றால் இன்னும் முடிக்காத பக்கங்களும், எனக்கு அனுமதிக்கப்படாத வேறொருவரின் டைரியைப் படித்துக் கொண்டிருக்கும் குற்றவுணர்ச்சியும் அப்படிச் செய்யாதே என்று சொல்லிக் கொண்டிருந்தன. நான் வரிசை காணாமல் போகும் வரை காத்திருக்கத் தொடங்கினேன்.

- இன்னொரு பதிவில்...;

No comments:

Post a Comment