Tuesday 12 July 2011

பெயரற்றவன்..!

இரவு மணி 10.00

கொட்டஹேனாவின் சமீபத்திய திடீர் வரவுகளான அடுக்குமாடிக் குடியிருப்புக்களின் ஐந்தாவது மாடியின் பல்கனியில் கதிரை போட்டு அமர்ந்திருந்தாள் சைந்தவி. நல்லகாலம் அவள் அப்பாவோ அம்மாவோ வீட்டில் இல்லை. அப்பா நின்றால் இப்படி வெளியில் காற்றாட நிற்கவோ இருக்கவோ விடமாட்டார். தெருவுக்கு எதிரே இருக்கிற டெலிபோன் கடையில் வேலைக்கு நிற்கிற பெடியங்கள் முதல் கொண்டு ஏஜென்சி அனுப்பும்வரை இங்கு தங்கிக் கொண்டு வெளிநாடுகளுக்கு கதைக்க வரும் பெடியங்கள் வரை இவர்களது மற்றும் அடுத்திருக்கும் தொடர்மாடிகளையும், அங்கிருக்கும் பெண் பிள்ளைகளையும், குறிப்பாக இவளது இரண்டு அக்காமாரையும் இவளையும் சேர்த்து வெறித்துப் பார்ப்பதாகவும், காதலில் வீழ்த்தி கூட்டிக் கொண்டு ஓடிப் போவதாயும் அவருக்கு கற்பனைகள் எழுந்து எழுந்து அடங்கும். அப்படிக் கற்பனைகள் கனவுகளாக வந்து அவரை குழப்பிவிட்டிருக்கும் நாட்களில் கடுமையாக நடந்து கொள்ளுவார். சும்மா சும்மா அக்காமாரைக் கண்டிப்பதில் இருந்து அவர்கள் மேல் எரிந்து விழுவதுவரை அவர் செய்துகொண்டிருப்பார். அப்பாவிலும் நியாயம் இல்லாமல் இல்லை. இப்படித்தான் பத்தாவது மாடியில் இருந்த உமா அக்கா பிரான்சுக்குப் போகவென்று வந்து நின்ற சதீஷ் அண்ணாவை மேல நின்றே காதலித்து திருட்டுத்தனமாய் கல்யாணமும் செய்து இப்ப அவர் போனபிறகு தன் வீட்டுக்கு வந்து அவட அம்மாட கால்ல விழுந்து அவர் கூப்பிடும் வரை காத்திருக்கிறா. இந்தக் கதையை அந்த மூன்று குடியிருப்புக்களும் முண்ணூறு நாட்கள் பேசித் தீர்த்தன. உமா அக்காதான் பாவம், குனிஞ்ச தலை நிமிராம நடந்து முதுகு கூனிப் போச்சு.

இரவு மணி 10.20

"சே, இவன் இப்படித்தான். பத்து மணிக்கு வந்திருவான். இண்டைக்கு இவ்வளவு லேட்டாகிட்டு."

இவன் யார், என்ன பெயர், எங்கே போகிறான், எங்கே வருகிறான், சொந்த இடம் எது, பார்க்க சிங்கள சாயல் அடிக்குது போல இருக்கு, வேலை பார்க்கிறானா இல்லையா, இல்லை எங்கேனும் வெளிநாட்டுக்குப் போகக் காத்திருக்கிறானா; ஒரு மண்ணும் அவளுக்குத் தெரியாது. இவன் இங்கின எங்கேயும் தான் இருக்கிறான் எண்டதில அவளுக்கு சந்தேகங்கள் இல்லை. கொச்சிக்கடை அந்தோனியார் திருவிழாவில தூரத்தில கூட்டத்தோட கூட்டமாப் பார்த்த நினைவு. சத்தியா கொஞ்சம் மெல்லமா நடந்திருந்தால் அவன்ட வீட்ட ஒழுங்காப் பார்த்திருக்கலாம். அவள் தன்னோட ஆளோட கதைக்கிற அவசரத்தில எட்டி எட்டி நடந்ததில இவள் இவனை மிஸ் பண்ணிவிட்டிருந்தாள்.

சைந்தவி நிமிர்ந்து அமர்ந்தாள். போன் கடை கல்லாகட்டத் தொடங்கிவிட்டிருந்தது. இப்ப இங்க இரவென்றால் அநேகமான வெளிநாடுகளிலெல்லாம் பகல் அல்லது மதியமாக இருக்கும். வேலைக்குப் போகமுதல் சொந்தக்காரரைப் போனில பிடிச்சுக் கொள்ளவேண்டுமென்ற அவசரமும், ஏஜென்சி இன்றும் தங்களை அனுப்பிவிடவில்லை என்ற தகவலை சொல்லி துக்கத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டிய தீவிரமும் இளந்தாரிகள் பலரையும், வயதுபோன சிலரையும் அந்தக் கடையில் சேர்த்துவிட்டிருந்தது. அந்தக் கடையை ஒட்டியபடியே இருந்த கொத்துறொட்டிக் கடையிலும், அதுக்கு முன்னாலே இருந்த பீடாக் கடையிலும் கூட்டமாக இருந்தது.

இரவு மணி 10.30

தொலைபேசி அலறியது. சைந்தவி எழுந்து வந்து அலட்சியமாய் ரிசீவரைத் தூக்கி காதில் வைத்தபடி "ஹலோ" என்றாள்.

"இல்லை, நான் சைந்தவி. சின்னக்கா டியூஷன் போட்டாள்."
"..............................."
"அப்பாவும், அம்மாவும் பெரியக்காவுமாய்க் கோவிலுக்குப் போட்டினம்."
"..............................."
"பொன்னம்பலவாணேஸ்வரம், இண்டைக்குப் பிரதோஷமாம்."
"..............................."
"அண்ணாவுக்கு இன்னும் விசா கிடைக்கேல, வார கிழமை திரும்ப கேஸ் வருதாம்."
"..............................."
"சரி, நான் எடுக்க சொல்றன்."

சைந்தவி பழையபடி வந்து அமர்ந்து கொண்டாள். அவளது மூத்த அண்ணா லண்டன் போய் ஐந்துவருடங்களாகப் போகின்றன. அவருக்கு விசா கிடைத்ததும் குடும்பமாய்ப் போய் சேர்வதற்காக அவளது குடும்பம் காத்திருக்கிறது. அண்ணாவுக்கு விசாதான் கிடைக்கவில்லையே தவிர அவர் குடும்பத்தை எந்தவித கஷ்டமும் இல்லாமல் தான் பார்த்து வருகிறார். அவர்ட காசில்லாமலே சின்னன்னாவை இத்தாலிக்கு எடுப்பிச்சு விட்டிருக்கிறார். சின்னண்ணா அங்கிருந்து கனடா போகப் போறதா அப்பா சொல்லிக் கொண்டிருந்தார். பெரியக்காவுக்குப் பார்க்கும் மாப்பிள்ளைகளும் லண்டன் அல்லது கனடாவில் மட்டுமே இருந்துகொண்டிருந்தார்கள். அவளுக்குத்தான் எங்கும் போகாமல் இங்கேயே இருக்க வேண்டுமென்று தோன்றியது.

"இவன் எங்க போய்த் தொலைஞ்சான்.."

முதுகைத் துளைக்கும் பார்வைகளை நரம்பு முனைகள் உணர்ந்துகொண்டன. கூசி கொஞ்சநேரம் குறுகுறுத்துத் தன்பாட்டுக்கு அடங்கிக் கொண்டன. அவள் அதையெல்லாம் சட்டை செய்யாமல் வாகாய் சாய்ந்து காலை நீட்டி வைத்துக் கொண்டாள். இது இப்பதான், கொஞ்ச நாளாகத் தொடர்கிறது. அவன் பெயர்கூட இன்னும் அறியமுடியவில்லை. டியூசன் போய்வரும் போது ஆட்டோ ஒன்றில் ஏற நேர்ந்தபோது இவனை அங்கே கண்டாள். ஆட்டோ டிரைவர் தன் நண்பன் என்று கேட்டுக் கொண்டதன் பேரில் அவனும் தன்னுடன் ஆட்டோவை சேர் பண்ண சரி என்று சொல்லிவிட்டிருந்தாள். அப்பா கண்டால் தெருவிலேயே வைத்து பெல்டால் விளாசித்தள்ளிவிடுவார் என்பது அவளுக்குத் தெரியாமலில்லை. டிரைவர் கேட்டபோது அவனுக்கு முன்னே இல்லை என்று சொல்லி அவளது கட்டுப் பெட்டித்தனத்தை காட்ட விருப்பமுல்லாமல் சரி என்று தலைய ஆட்டிவிட்டிருந்தாள். அன்றிலிருந்து அவன் இப்படிப் பின்னே தொடர்வதும் வீட்டுக்கு எதிரே வந்து நிற்பதும் ஆரம்பித்துவிட்டிருந்தது.

இரவு மணி 10.45

தூரத்தில் அவன் தலை தெரிந்தது. முதலாவது தொடர்மாடி தொடங்கும் குறுக்குச்சந்தின் அந்தத்தில் இருந்து மூன்றாவதாய் இருக்கும் சைந்தவியின் குடியிருப்பு வரை அவன் நடந்து வந்து தெருவை குறுக்கால் கடந்து எதிர்க்கடையில் நின்று கொள்வது வரை அவனை இவள் தெளிவாகப் பார்க்கலாம். பிறகு பார்க்க முடியாது. ஏனென்றால் இவள் பார்ப்பதை யாராவது மேலிருந்து பார்த்துவிட்டு வீட்டுக்கு சொல்லிவிடுவார்கள். இல்லை என்றால் அப்பா வீட்டிலிருந்தால் அவர் இவளை எழுப்பிவிட்டு தான் அமர்ந்துகொண்டு வேடிக்கை பார்க்க, அல்லாட்டால் இங்காலப் பக்கம் பார்க்கும் பெடியங்களைத் அவர்கள் குடும்பத்துடன் குலப்பெருமையுடன் சேர்த்து வையத் தொடங்கிவிடுவார்.

அவன் மெதுவாய் இவளது தெருவுக்குள் நுழைந்தான். நீலக்கலரில டெனிமும் மஞ்சள் நிறத்தில சட்டையுமாய் வந்தவனை வடிவாகப் பார்க்கத் தொடங்கினாள் சைந்தவி. உண்மையிலேயே இவன் யாழ்ப்பாணத்துப் பெடியன் மாதிரி இல்லை. கொழும்புப் பக்கமாகத்தான் இருக்கவேண்டும். இவனை வீட்டில் காட்டினால் வீட்டில் நிகழப்போகும் பயங்கரத்தை அவள் அறியாமல் இல்லை. ஏனோ உமா அக்காவின் நினைவு வந்து இதழோரத்தில் பயங்கலந்த குறுகுறுப்புடன் கூடிய சிரிப்பைத் தவழவிட்டது. அவன் அருகே சிரித்தபடியும், ஏதோ சொல்லியபடியும் அந்த ஆட்டோ டிரைவரும் வந்து கொண்டிருந்தார். அவருக்கு இவனை விட எப்படியும் பத்து வயதளவில் அதிகமாகவே இருக்கவேண்டும் என்று சைந்தவிக்குத் தோன்றியது. இவனுக்கு இருபத்தைந்து வயதிருக்கலாம். இவளை விட எட்டு வயதுகள் அதிகம். ஆனால் வயதில் என்ன இருக்கிறது. பேசியபடியே நடந்துவரும் அவன் தூரத்தே பார்ப்பது போல இவள் அமர்ந்திருக்கும் மாடியையும் பார்க்காமல் இல்லை. வெளியிலிருந்து பார்த்தால் இவள் அமர்ந்திருப்பது தெரியாது எனினும் பல்கனியின் கீழிருக்கும் பூக்கல்லினூடு கொஞ்சமாய்த் தெரியும் பாவாடை காட்டிக் கொடுக்கும் என்பதை இவள் அறியாமல் இல்லை. அவன் நண்பனுடன் தெருவைக் கடந்து போன் கடைக் கூரைக்குள் ஒதுங்கி நின்று கொண்டான்.

இரவு மணி 11.00

அம்மா, அப்பா, சின்னக்கா, பெரியக்கா என்று ஒருத்தரையும் காணவில்லை. அவர்கள் அப்படியே பெரியம்மா வீட்ட போயிருக்கவேண்டும். "நல்லகாலம்," சைந்தவிக்கு கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது. கோவிலுக்கு எதிர்த்தவாறு பெரியம்மா வாடகைக்கு இருந்தாள். அது கொச்சிக்கடைப் பகுதிக்கு சேர்ந்தது எனினும் பெரியம்மாவுக்கு அந்தப் பகுதி பற்றிய பயம் இல்லை. பெரியம்மாவைப் போல யாழ்ப்பாணத்தவர்கள் சிலரும் அங்கே குடியேறத் தொடங்கிவிட்டிருந்தார்கள்.

மெலிதாய் எட்டிப் பார்த்து தான் அங்கிருப்பதை அவன் அறிந்திருக்கிறான் என்று தெரிந்தபின் மீண்டும் தலையைக் குறுக்கிக் கொண்டாள். உள்ளங்கால்கள் வியர்த்து பல்கனியின் சீமெந்து தரையில் குறுமணல்களுடன் சேர்ந்து கசியத் தொடங்கியிருந்தன. கால்களைத் தூக்கி மடித்து கதிரையில் பதித்து மடிந்து அமர்ந்து கொண்டபோது தான் இதயம் இவ்வளவு வேகமாக அடிப்பது புரிந்தது. அவன் மேலே பார்ப்பதும் போனில் ஒன்றிவிட்ட நண்பனைப் பார்ப்பதுமாய் நின்றான். ஒரு சிகரெட்டைப் பற்றவைத்து இரண்டு இழுப்புக்களில் தூக்கி எறிந்துவிட்டு சுவரோடு சாய்ந்து நின்றபடி போனை நோண்டத் தொடங்கினான். தெருவில் ஆள் நடமாட்டம் குறையத் தொடங்கிவிட்டிருந்தது. இந்தத் தெருவின் மட்டுமில்லை கொழும்பில் தமிழர்கள் வாழும் தெருக்களின் இயல்பே இதுதான். பத்துப் பத்தரைக்குப் பின் அதிகம் ஆள் நடமாட்டம் இருக்காது. பதினோரு மணிக்கு எல்லோரும் கோழி அடைவது போல வீடுகளுக்குள் அடைந்து கொண்டுவிடுவார்கள். என்னதான் லட்சங்கள் கட்டி போலீஸ் ரிபோர்ட் எடுத்தாலும் திடீரென்று நடக்கும் தேடுதல்களும் கைதுகளும் தன்பாட்டுக்கு நடந்து கொண்டுதான் இருந்தன. இவளால் அவனை இப்போது தெளிவாகப் பார்க்க முடிந்தது. டிரைவர் இன்னும் போனைக் காதில் இருந்து எடுக்கவில்லை. அவன் சுவர்ப்பக்கமாகத் திரும்பிப் பேசிக்கொண்டிருந்தான்.

"ஐயோ, என்ன இது."
"கத்தியா, இல்லை அரிவாள்.."
"கடவுளே, கழுத்தில வெட்டிறாங்கள்.. ஐயோ, வயித்திலையும்..டேய், உன் பிரண்டை வெட்டிறாங்கள். திரும்பிப் பாரேண்டா. டேய், உன்னைத்தான்..ஐயோ, கடவுளே.."

இரத்தம் கொப்புளித்து நுரைத்துக் கொண்டு பாய்ந்தது. அவன் மடிந்து முகங்குப்புற விழுந்தான். வெட்டியவர்கள் பாய்ந்து ஏறிக்கொள்ள ஹொண்டா மோட்டார் பைக் பறந்து மறைந்தது. டிரைவர் சாவகாசமாய்த் திரும்பி அவனைத் தூக்கிக் கொண்டான். சட சடவென கடைக் கதவுகள் சாத்துப்படுவதும், டெலிபோன் கடையின் விளக்குகள் அணைக்கப்பட்டு எல்லோரும் ஒளிந்துகொள்வதும் தெரிந்தது.

டிரைவரின் புலம்பல்கள் சைந்தவிக்குத் தெரியாத சிங்களமொழியில் இருந்தன. சாத்தப்பட்ட கடைக் கதவுகளிலும், கணத்தில் வெறிச்சோடிய தெருவிலும் அவள் அர்த்தமறியாத வார்த்தைகள் அதிர்ந்து கொண்டிருந்தன.

அந்தப் பெயரற்றவனின் உடல் இப்போது குளிர்ந்திருக்கும். இரத்தம் பாய்வது நின்று லேசாய் ஒடுங்கி வழியத் தொடங்கியிருக்கும்.

"டேய், உன்னை..இப்படிக் கூட்டிக் கொண்டுவந்து கொலை பண்ணிட்டியேடா"

"சைந்தவி, என்னடி அங்க வேடிக்கை பார்க்கிறாய். அங்க போயிருக்காத எண்டு எத்தினைதரம் சொல்றது. உள்ள வாடி." அப்பா கத்திக் கொண்டு சைந்தவி மேல் பாய்ந்து உள்ளே இழுத்துக் கொண்டார்.

கொஞ்ச நேரத்தில் போலீஸ் ஜீப் வந்து நிற்பதும் ஆட்கள் தடதடப்பதும் தெருவை அதிர்த்து கேட்டன.

போலீஸ் விசாரணை போன் கடையில தான் முதல்ல தொடங்கியிருக்கும்..

"மல்லி, இப்ப கொஞ்சம் முன்னே இங்கன ஒரு கொல நடந்திச்சுத்தானே. அத நீ பார்த்ததா?"

"ஐயோ, இல்லையே மாத்தையா, நாங்க பத்துமணிக்கே கடையைப் பூட்டிட்டமே."

"பொய் சொல்லப்படாது. நாங்க ஒழுங்கா......"

இரவு மணி 11.10

சைந்தவி அக்காவுக்கருகில் படுத்துக்கொண்டாள்.

"சார், நான் பார்க்கேல. அப்பா அம்மா வருகினமா எண்டு பார்த்தனான். பிறகு வீட்டுக்குள்ள வந்திட்டன். கொலை நடந்தமாதிரி சத்தங்கூடக் கேட்கேல.."

மடிந்து விழும்போது பெயரற்றவனின் கண்கள் இவள் வீட்டையா வெறிச்சுக் கொண்டு விழுந்தது.


(2007/Dec)

5 comments:

  1. அழகான மொழி நடை, வித்தியாசமான ஆனால் எதிர்பார்த்த முடிவு. இடையிடையே எங்களவர்களின் கஸ்டங்கள் நஸ்டங்கள், வாழ்த்துக்கள். மயூவின் கவிதைகளை விட எனக்கு ஏனோ கதை பிடித்திருக்கின்றது.

    ReplyDelete
  2. நல்ல பதிவு.
    அதிர்ச்சியாக இருக்கிறது.

    ReplyDelete
  3. கதையின் ஆரம்பத்தில் வர்ணனை தவிர்க்கவும். நன்று.

    ReplyDelete
  4. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி ரத்னவேல் மற்றும் ராஜ்.!

    ReplyDelete