Tuesday 30 August 2011

"தீராநதி"


தங்களது பதின்மங்களில், இருபதுகளில் புலம்பெயர்ந்த அல்லது புலத்தில் கழிக்க நேர்ந்த தமிழ் இளைஞர்களது வாழ்க்கையைப் பல காரணிகள் நிர்ணயித்தன, இப்போதும் நிர்ணயிக்கின்றன. தாய் நிலத்தில் தொடர்ந்த பல தாசாப்தங்களை ஏப்பம்விட்ட உள்நாட்டு யுத்தமும், சிறுபான்மையினம் என்கின்ற அடையாளமும் எங்கள் இளைஞர்களை ஊரைவிட்டு, உறவுகளிடமிருந்து பிரித்து, தாய்நாட்டை விட்டுக் கிளப்பி உலகின் ஏழு கண்டங்களிலும் சேர்த்தன. அவ்வாறு புலம்பெயர்ந்த இளைஞர்களுக்கு தம் வாழ்க்கையின் முதல் குறிக்கோள் யாதாக இருக்குமெனின் புலம்பெயர்ந்த நாடு எத்தகையதாக இருப்பினும், என்ன கஷ்டத்தைத் தந்திடினும் எதிர்காலத்தில் உயிர் வாழும் சாத்தியத்தை அந்த நாடு நீட்டிப்பதால் அங்கேயே எப்படியோ வாழ்வை ஒப்பெற்றித் ஊரில் வாழும் தன குடும்பத்தையும் கரை சேர்த்து விட்டுவிட வேண்டுமென்பதாகத்தான் இருக்கும். புலம்பெயர்தலும் புதிய நாட்டில் வாழ ஆரம்பித்தலும் உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் வெகுவான சவாலாக இருக்கும் பட்சத்தில் யாரும் அதற்கு விதிவிலக்கல்ல. குறிப்பாக காலங்காலமாக குடும்பம், பெற்றோர் மகன்/மகள் உறவு, மற்றும் இதர உறவுகள் என குறித்த வட்டத்துக்குள்ளே வளரும் இளைஞர்கள் புலம்பெயர்ந்து தனியே தமது வாழ்க்கையைக் கொண்டு நகர்த்தப் பணிக்கப்ப்படும்போது தடுமாறுவதும் இயல்பாகவே நடந்தேறுகிறது. தனிக் குழுக்களாக இயங்குதல் அல்லது இணைந்து கொள்ளல் என்பது இலகுவாகவும், தனக்குரிய விடுதலையை தேடித் பெறுவதான ஒரு மனப்பாங்கை வழங்கிவிடுவதுமாக இருப்பது மட்டுமின்றி, இந்தியத் திரைப்படங்கள், வரலாற்றுக் கதைகள் சிறுவயதிலிருந்தே மனதில் ஏற்படுத்திப் போகும் நாயக மனப்பாங்கும் இப்படியான குழுக்களின் உருவாக்கத்திற்கும் இயக்கத்திற்கும் அடிப்படையான காரணங்களாக இருக்கின்றன. அப்படியான குழுக்களின் சுழற்சிக்குள் தன்னையறியாமல் சிக்கிக் கொள்ளும் நாயகனது கதையை திரையில் சொல்லி நகர்கிறது "படலைக்குப் படலை" புகழ் மன்மதனின் கதை, வசனம், இயக்கம் மற்றும் நடிப்பில் வெளிவந்திருக்கும் "தீராநதி."

புலம்பெயர்ந்த தமிழர்கள் அதிகம் வசிக்கும் பரிஸ் நகரத்திற்குப் புலம்பெயர்ந்து அந்த நாட்டின் குடியுரிமைக்காக விண்ணப்பித்துவிட்டுக் காத்திருக்கும் ஆயிரத்திலொரு இளைஞனாக அறிமுகமாகிறார் கதையின் நாயகன் பாஸ்கர் (படலைக்குப் படலை மன்மதன்). சபேசன் என்றழைக்கப்படும் கால் ஊனமுற்ற நண்பருடன் ஒரு குறித்த வீட்டை நோக்கிப் பயணிக்கும் போது தங்களைத் துரத்தும் இளைஞர்களிடமிருந்து தப்பித்துப் பதுங்கிக் கொள்ளும் இடங்களிலிருந்து நாயகனின் நினைவுகளில் பின்னோக்கி நகர்கின்றன காட்சிகள். அரசாங்கத்தால் அனுப்பப்பட்ட கடிதமொன்றை படிப்பதன் பொருட்டு மொழி தெரியாக் காரணத்தால் தன்னை அணுகும் பாஸ்கருக்கு அதனை வாசித்துச் சொல்வதுடன் கதைக்குள் நுழைகிறார் நாயகி மதனா (வோபிதா). தனது விசா நிராகரிக்கப்பட்டதாகச் சொல்லும் அந்தக் கடிதத்தைக் கண்டு கலங்கியழும் பாஸ்கரை சமாதானப்படுத்தும் மதனா, உதவி தேவைப்படின் தன்னை அணுகுமாறு சொல்லி அகல்கிறார். ஏற்கனவே தனது உறவுகளுக்கு மீள விண்ணப்பித்து விசாவைப் பெற்றுக் கொடுத்த அனுபவத்தில் பாஸ்கருக்கும் உதவ சம்மதிக்கிறார் அவர். தொடரும் உறவு நட்பாகி, பாஸ்கரின் மனதில் காதலாக பரிணமிக்க அதனை வெளிப்படுத்தினால் எங்கே மதனா தன்னை விட்டு விலகுவாரோ என்ற எண்ணத்தில் மௌனமாகிறார் பாஸ்கர். இந்த நிலையில் மதனாவின் உறவுக்கார இளைஞர்களால் மதனாவுடனான பழக்கம் குறித்துக் கண்டிக்கப்படும் பாஸ்கரும், பாஸ்கரினால் அவரது நண்பர்களும் தங்களை அறியாமலேயே குழு மோதல்களுக்குள் இழுத்து விடப்படுகிறார்கள். பாஸ்கரின் நட்புக் குறித்து எச்சரிக்கப்பட்ட போதும் அவருக்கு உதவுவதில் உறுதியாக இருக்கும் மதனா விசாவுக்கான மீள் விண்ணப்பத்தை எழுதிக் கொடுப்பதுடன் இனித் தாமிருவரும் சந்திப்பது நல்லதில்லை எனவும், குடியுரிமை குறித்த முடிவைத் தன்னுடன் பகிர்ந்து கொள்ளுமாறும் சொல்லி பாஸ்கரைப் பிரிகிறார். ஆனால் தன் காதலைத் தெரியப்படுத்தும் நோக்கில் மதனாவை சந்தித்த பாஸ்கரின் காதலை மறுக்கும் மதனா முகாமில் தனக்கு நேர்ந்த அவலத்தைச் சொல்லி தன்னை விட்டுப் போகும்படி சொல்கிறார். இருப்பினும் தன் காதலில் உறுதியாக இருக்கும் பாஸ்கர் தன்னை அழைத்து முடிவைச் சொல்லும்படி பிரிகிறார்.
இந்நிலையில் தம்மைத் துரத்தும் இளைஞர் குழுவை தனது பழைய எதிரிகளாக அடையாளங்காணும் சபேசன், தன் காலுக்கு நேர்ந்த கதியையும் அதற்கான தனது பழிவாங்கலையும் பாஸ்கரிடம் சொல்லி உடனடியாக அந்த வீட்டை நோக்கிய பயணத்தைக் கைவிட்டுவதுடன் பாதுகாப்பாகத் திரும்பவேண்டிய காரணங்களையும் சொல்லுகிறார். இருப்பினும் அந்த வீட்டை அடைந்துவிடுவது குறித்த தீவிரத்தில் இருக்கும் பாஸ்கர், சபேசனை வற்புறுத்திக் கெஞ்சி தன்னுடன் அழைத்துச் செல்கிறார். அவர்கள் இருவரும் பாதுகாப்பாக சென்று சேர்ந்தார்களா? யாரைப்பார்க்க சென்றார்கள்? சபேசனால் பழிவாங்கப்பட்ட அந்த இளைஞன் யார்? அவருக்கும் மதனாவுக்கும் என்ன தொடர்பு? பாஸ்கருக்கு என்ன நடந்தது என்பதுதான் மீதிக் கதை.

குடியுரிமைக்காக விண்ணப்பித்து விட்டு, எப்போதாவது கிடைக்கும் வேலைகளை செய்து கொண்டு மாமாவால் ஒழுங்கு செய்யப்பட்ட வீட்டில் மச்சன்மார்களுடனும், நண்பனுடனும் தங்கியிருக்கும் புலம்பெயர்ந்த சராசரி தமிழ் இளைஞனாக அச்சொட்டாகப் பொருந்தியிருக்கிறார் பாஸ்கர். கடிதம் சொல்லும் செய்தியைக் கேட்டு நிலைகுலைவதாகட்டும், மதனாவுக்கு நேர்ந்த அவலத்தைக் கேட்டு கலங்குவதாகட்டும், உயிருக்குப் பயந்து ஒடுவதாகட்டும் தன் பாத்திரத்தின் கனதி உணர்ந்து கச்சிதமாக நடித்திருக்கிறார் பாஸ்கர். நண்பனின் சொல்லைக் கேட்டு அவனது உடைத்தெரிவுடன் மதனாவை சந்திக்க செல்வதும், அங்கே மதனாவின் கேலியில் நண்பனை மனதுக்குள் திட்டுவதும் நயம்.
"இஞ்சே, நான் இப்படிக் கதைக்கிறன் எண்டு என்னைத் தப்பா நினைக்க வேண்டாம், என்ன?" என்று பாஸ்கரை ஆரம்பத்தில் எச்சரிக்கும் பேச்சில், பாத்திர வெளிப்பாட்டில் மதனா சகோதரியாக, நண்பியாக, தினமும் சந்திக்கும் சாதாரண பெண்ணாக மனதில் பதிகிறார்.
ஆரம்பத்தில் மாமாவாகத் தோன்றும் அருணகிரி (லண்டன் அங்கிள் - படலைக்குப் படலை) அவர்களும், மதனாவின் மாமாவாக வரும் சிறி (அங்கிள் - படலைக்குப் படலை) அவர்களும் தங்களுக்கேயுரிய தனித்துவத்துடன் திரையில் தோன்றுகிறார்கள். மதனாவின் தாத்தாவாக வரும் ரகுநாதன் அவர்களது பங்கும் சிறப்பாக அமையப்பெற்றிருக்கிறது. பாஸ்கரை உருவேற்றி அனுப்புவதாகட்டும், தனது ஆடையைப் போடச் சொல்லி வற்புறுத்துவதாகட்டும், மதனாவின் கதையைக் கேட்டுத் தன் அக்காவின் நிலையைச் சொல்லிக் கலங்குவதாகட்டும் தனது பாத்திரத்தை நன்றாக உள்வாங்கி நடித்திருக்கிறார் நண்பராக வரும் தயாளன். பாஸ்கரை மிரட்டுவதும், அவரைத் துரத்துவதுமாய் வரும் இளைஞர்கள் முதற்கொண்டு அனைவரும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக வழங்கியிருக்கிறார்கள். அந்தவகையில் இயக்குனரின் பாத்திரப்படைப்பு மற்றும் தெரிவு பாராட்டத்தக்கது.

கஜியின் இசையில், கவிநாத்தின் கமெராவில் விரைவாக திரையில் நகரும் "தீராநதி" சங்கரினால் எடிட் செய்யப்பட்டிருக்கிறது. சுஜித் ஜியின் உருவாக்கத்தில் ஒலிக்கும் "அடிதடி வெட்டுக் குத்து" பாடலும், பாடல் காட்சியமைப்பும் அருமை. பிரணவனின் வரிகளில் ஒலிக்கும் பாடல் தாளம்போட வைக்கிறது. பாடல் காட்சி இயல்பாக, அழகாகத் திரையில் தோன்றுகிறது. ஊரில் செய்த செயல்களை வீர தீர செயல்களாகப் பேசி, அங்கிருந்த சாதியின் தீவிரத்தை அப்படியே புலம்பெயர்ந்த தேசத்திலும் தங்கள் குழந்தைகளிடம் விதைக்கும் சிறி அங்கிளின் பாத்திரப் படைப்பு எம் சமூகத்தின் இன்றைய நிலையை அப்பட்டமாகக் காட்சிப்படுத்துகிறது. என்னதான் அவலங்களைத் தாண்டி வந்தாலும், தொடரும் சாதித் திமிரும் அதனைத் தம் எதிர்கால சந்ததியும் பின்பற்ற வேண்டுமென்ற நோக்கத்தில் இயங்குவதும் கவலைக்குரிய விடயம். "இப்பெல்லாம் யார் சாதி பார்க்கினம்" என்று சொல்லிக் கொண்டே தங்கள் உறவுகளைத் தாங்களே இகழ்வதும், தாக்கிக் கொள்வதும் இன்றும் எங்கும் தொடர்வதைக் காணமுடிகிறது. மாற்றங்கள் சில நிகழ்ந்தாலும் குறிப்பிடத்தக்களவில் நடந்தேறாமை எம்மை நினைத்து நாமே வெட்கித்துக் கொள்ளும் நிலையிலேயே இருக்கிறது. போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட பெண்களின் ஒரு பிரதிநிதியாக வரும் மதனாவின் பாத்திரம் சிறப்பு. அதிலும் வாய்ப்பேச்சில் மன்னர்களான சில மனிதர்கள் இராணுவத்தால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பெண்களை எந்தக் கண் கொண்டு கணிக்கின்றனர் என்பதை காட்சிப்படுத்தியமைக்கு இயக்குனரைப் பாராட்டத்தான் வேண்டும். மதனாவின் நிலையறிந்தும் பின்வாங்காமல், தியாக மனப்பாங்கு இல்லாமல் அவளின் மேல் கொண்ட காதலின் பெயரால் அவளையே மணக்கப் போவதாக சொல்லும் பாஸ்கரின் வார்த்தைகள் மற்றவர்களுக்கும் உதாரணமாக அமையவேண்டும் எனபதே எமது விருப்பமும். ஊடகங்கள் தமது தர்மத்துக்கு மீறி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பெண்களின் படங்களை அவர்களது மன உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் வெளியிடுவதும் அதனால் வரும் பாதிப்புக்களை பெண்களும் அவர்களது குடும்பத்தினரும் அனுபவிப்பதும் சமகாலத்தில் நம் முன்னே நடந்து கொண்டிருப்பது கண்கூடு. அதனை நண்பனினூடு வெளிப்படுத்திய லாவகம் சிறப்பு. மதனாவின் தாத்தா என்னும் பாத்திர அமைப்பு மதனா என்ற பெண்ணின் மனதை, அவளது உணர்வுகளைப் புரிந்து கொள்வதுடன் அவளுக்கு உரிய வழியில் உதவுவதாக அமைக்கப்பட்டிருப்பது ஆறுதலாக அமைந்திருக்கிறது. முதியவர்களாக இருந்து குடும்பத்தை வழிநடத்த வேண்டியவர்கள் மாற்றங்களை வரவேற்று அவற்றிலிருக்கும் தர்மத்தின்படி மற்றவர்களின் உணர்வுகளை மதித்து பிற உறவுகளை அழைத்து செல்ல வேண்டிய கட்டாயத்தின், கடமையின் வெளிப்பாட்டை அந்தப் படைப்பின் மூலம் காட்சிப்படுத்துகிறார் இயக்குனர்.

சமீபத்தில் எம்மவர்களால், எம்மவர்களின் முயற்சியுடன் மற்றும் பங்களிப்புடன் வெளிவந்திருக்கும் முழு நீளத் திரைப்படமாய் "தீராநதி" படத்தைப் பார்க்கும்போது வித்தியாசமான சினிமா அனுபவம் கிடைப்பது மிகுந்த மகிழ்ச்சி. எங்களது மொழி வழக்கில் உருவான படைப்பென்பது எமக்கும் திரைக்கும் இடையிலான நெருக்கத்தை அதிகரித்து செல்கிறது என்றவகையிலும் படைப்புக்களினை மெருகேற்ற வேண்டிய தேவையிருப்பதும் இயக்குனரிடம் சில விசயங்களை எதிர்பார்க்க வைக்கின்றது. உதாரணமாக நாயகன் மற்றும் நாயகனின் மொழி உபயோகம். சந்திக்கும் போதும், பிரியும் போதும் பிரெஞ்ச் மொழியில் வணக்கம், மற்றும் நன்றி சொல்வது சில இடங்களில் தமிழ் நன்றியாகவும், ஆங்கில நன்றியாகவும் ஒலிப்பது நெருடுகிறது. புலம்பெயர்ந்த மொழியைத் தமிழில் கலந்து உபயோகிப்பது இயல்பாகிவிட்டது என்ற போதும் தாம் ஆரம்பத்தில் பயன்படுத்திய ஒரு மொழியிலேயே தொடர்ந்திருப்பின் அந்த குறிப்பிட்ட வெகு சில காட்சிகள் புலம்பெயர்ந்த நாட்டின் இயல்புடன் வந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றும் தோழனுடன் பயணிக்கும் நாயகன் இடைவழியில் பதுங்கும் இடங்களிலிருந்து நினைவுகளில் நகரும் காட்சிகளில் பின்னணியில் ஒலிக்கும் நாயகனின் குரல் சில இடங்களில் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்ற உணர்வு எழாமல் இல்லை. நாயகனது சுய வர்ணனை அல்லது நினைவுகளின் மேலான பயணிப்பு எனபது அவரது சார்பில் குரலில் கேட்க நேரிடும்போது பார்வையாளர்களாகிய எங்களுக்கும் திரையில் நகரும் காட்சிகளுக்கும் இடையிலான மௌன உறவை ஊடுருவிப் பயணிப்பதான உணர்வு தோன்றி மறைகிறது. மேலும், பேசுவதற்கு காட்சிப்படுத்துவதற்கு என விரிவான தளங்கள் புலம்பெயர்ந்த எங்கள் முன் பரந்து கிடக்கும் போது குழுக்களின் மோதல், பழிவாங்கல் என்று குறித்த ஒரே தளத்துக்குள்ளே நிற்பது கவனிக்க வேண்டிய ஒரு விடயமாகும். எதிர்காலத்தில் எம்மவர்களின் படைப்புக்கள் இன்னும் விரிந்து செல்லவேண்டியது காலத்தின் கட்டாயம் மட்டுமன்றி, எம்மவர்களை எமக்கான சினிமா என்ற பார்வையை நோக்கி விரைவாக பயனிக்கவைக்கும் என்பதும் முக்கியமானதாகும்.

இந்தியத் திரைப்படங்களையே பார்த்துப் பழகிப்போன எமக்கு வித்தியாசமானதாகவும், அத்தியாவசியமானதாகவும் இருக்கும் எம்மவர்களின் படைப்புக்கள் திரையிடப்படுவது மிகவும் வரவேற்கப்பட வேண்டிய விடயமாகும். என்னதான் இருப்பினும் குறுகிய காலப்பகுதிஎனினும், விளம்பரப்படுத்தப்பட்டபோதும் எம்மவர்கள், எம்மவர்களின் முயற்சிக்கு உரிய பதிலைத் தமது வரவின் மூலம் உறுதிப்படுத்தாத தமிழ் சமூகத்தின் மனப்பாங்கு தொடர்வது கவலையளிப்பதாகவே உள்ளது. தன் நாட்டிலேயே பாரிய வசூலைக் குவித்துவிடும் அல்லது பெயரை சம்பாதித்துவிடும் இந்தியத் திரைப்படங்களுக்கு நீண்ட வரிசையில் காத்திருக்கும் கனடா வாழ் மக்கள், பல சிரமங்களுக்கு மத்தியில் துளிர் விடும் எங்களுக்குத் தேவையான சினிமாத் துறையை, படைப்புக்களை வளர்த்து விடுவதில் ஆர்வங்காட்டாமை வருத்தமளிக்கிறது என்றேதான் சொல்லவேண்டும். எங்கள் கலைஞர்களைப் படைப்பாளிகளை வளர்த்துவிடும் கடப்பாடும், தேவையும் இருக்கும் இந்த நேரத்தில் நாங்களும் எங்கள் பங்களிப்பை வழங்குவது கட்டாயமாகும். தேவையற்ற காட்சியமைப்புக்கள், நேர விரயங்களின்றி "தீராநதி" என்ற படைப்பை உருவாக்கி வழங்கியிருக்கும் இயக்குனர் மற்றும் நடிகர் பாஸ்கர் அவர்களை வாழ்த்துவதுடன் தொடரப்போகும் எம்மவர்களது படைப்புக்களை வரவேற்று உரிய ஊக்குவிப்பை வழங்குவதுடன் எங்கள் பங்களிப்பையும் பதிவு செய்வோம்.


நன்றி - "வீடு" பத்திரிகை.

No comments:

Post a Comment