Sunday 23 October 2011

உனக்கும் எனக்குமிடையே..!

போத்தல் விளக்கை சுற்றி
பறந்து கொண்டிருக்கும்
ஈசல்கள்
செட்டைகள் விழ விழ
முதலில் இருந்தே எண்ண ஆரம்பிப்பேன்

பேசாமப் படி என்றவாறோ
விளக்கை உன் பக்கம் இழுத்தவாறோ
ஆரம்பிப்பாய்
அந்த இரவுக்கானதை

கிடுகின் பின்னல்களூடு
வீழும் மழையின்
சத்தத்தைத் மீறட்டுமென
யாவற்றுக்குமாய் ஆரம்பிப்போம்

ஏழேழு நாப்பதொம்பது
ஏழெட்டு அம்பத்தாறு
உச்சஸ்தாயில் தொடங்கி
ஈரமூறிய
சுவர்களையும்
சாணியில் மெழுகிய தரையையும் உரசி
படர்ந்து நிறைக்கும்
எங்களது குரல்கள்

ஆச்சியின் காசுத்துணி முடிப்பிலிருந்து
புளிப்பு நெல்லி
உப்புத்தூள் மாங்காய்
ஐஸ்பழம் என்று நீண்டு
மீன் பொரியலின் நீள அகலத்தில்
அம்மாவுடன் பொருதுவதில்
மீள ஆரம்பிக்கும்
எனக்கும் உனக்குமான சண்டை

வைரவருக்கு மடை போட்ட பின்
வீடு வரும் பெரிய பாயில்
விட்டம் பார்த்துக் கிடப்போம்

வெள்ளையடித்த சுவர்களில்
தாழ்ந்த திரி வெளிச்சத்தில்
தங்களுருவை விதம் விதமாய்
எழுதியும் கிறுக்கியும் போகும்
கூரைக் கிடுகுக்குள் கிடப்பதாய் நீ சொன்ன
பாம்பும் பூராணும்

நீ
முதல் நாள் "போ" என்று கலைத்த
பேய் பற்றிய கதையை
சொல்லத் தொடங்குவாய்
முகட்டுக்குள் உறங்கும் அதை
இருட்டுக்குள் தேடியவாறு
உன் பக்கத்திலேயே ஒடுங்குவேன்

ஆனாலும் பார்
அம்மாவின் காலுக்காய்
மாறி மாறி உதைபட்டு
பின்னிரவில்
அவளுக்கு அங்காலும் இங்காலுமாய்
உறங்கிவிடும் நமக்கிடையே
அப்போதே விழுந்து கிடந்திருக்க வேண்டும்
நாம் கவனித்தேயிராத
இந்த மௌனம்

- அண்ணாவுக்கு

8 comments:

  1. இந்தக் கவிதை பாசாங்குகள் போலித்தனங்கள் ஏதுமின்றி என்றுமே வண்ணம் மங்கிப் போகாத காலமொன்றைக் கண்முன்னே கொண்டு வருகிறது.படித்ததன் பின்னர் மனதைவிட்டு அகலாதது எதுவோ அதுவே நல்ல கவிதை."உனக்கும் எனக்குமிடையே" கவிதையும் அவ்வாறு தான்.வாசிப்பவர்களை அவரவர் சிறுபருவ இரவுகளுக்குள் கொண்டுபோய்ச் சேர்க்கிறது.

    ReplyDelete
  2. வருகைக்கு மிக்க நன்றி ஃபஹீமா,,

    ReplyDelete
  3. வெள்ளையடித்த சுவர்களில்
    தாழ்ந்த திரி வெளிச்சத்தில்
    தங்களுருவை விதம் விதமாய்
    எழுதியும் கிறுக்கியும் போகும்
    கூரைக் கிடுகுக்குள் கிடப்பதாய் நீ சொன்ன
    பாம்பும் பூராணும்
    மனதைவிட்டு மறையாத
    கடந்தகால நிகழ்வுகளின்
    ஒளிப்படம் தங்கள் கவிதைவரிகள்
    ஊடாகக் கண்டுகொண்டேன் .அருமை!....வாழ்த்துக்கள் சகோதரி .நம் தேசம்விட்டு பறந்து சென்றாலும் எம் மண் வாசம் விட்டுப் போகாத எழுத்துனடைக்கு .

    ReplyDelete
  4. மழைத்துளிக்கும் கிடுகுப் பின்னல்களுக்கும் மண்சுவர்களுக்குமான உறவுகள் ஈரம் நிறைந்தவை. அவை கடந்தகால வாழ்வின் தகர்க்கமுடியாத நினைவுகளின் இடுக்குகளுக்குள் இன்றும் உறங்கிப்போய்க் கிடக்கின்றது. சிறு சலனங்களினூடு அது மனதை மேவிப்பாயவல்ல சக்தியோடு அடங்கிப்போய் இருப்பவை. அம்மாக்களைத் தவிர்த்து இந்த நினைவுகள் உயிர்பெறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. வாழ்நிலைகளின் உயிர்ப்புள்ள இடங்களை அவள் வாழ்காலம்வரை பேணிக்கொண்டேயிருப்பதுதான் அதற்கான காரணம்.

    இந்தக் கவிதைகளும் இந்த இடுக்குகளை உசுப்பிவிடுகிறது. அனுபவங்களிலிருந்து உருவாகி - பூசிப்புணர்த்தல் ஏதுமின்றி - ஆத்மார்த்தம் கொள்கிறது மயூவின் கவிதை மொழி.
    - ரவி

    ReplyDelete
  5. வருகைக்கும் கருத்துப் பகிர்விற்கும் மிக்க நன்றி அம்பாளடியாள் ; மற்றும் ரவி.

    ReplyDelete
  6. http://amuttu.net/viewArticle/getArticle/234


    பிரபல எழுத்தாளர் சு.ராவின் மனைவி கமலா எழுதிய ’நெஞ்சில் ஒளிரும் சுடர்’ நூலை சமீபத்தில் படித்தேன். அதில் அவர் தனது சின்ன வயதுச் சம்பவங்களை நினைவு மீட்டிருக்கிறார். தினமும் அவருக்கும் அவருடைய அண்ணன்மாருக்கும் இடையில் சண்டை மூளும். ’விளக்கு இழுக்கும்’ சண்டை. படிக்கும்போது யார் பக்கம் அதிக வெளிச்சம் விழவேண்டும் என்பதற்கான போராட்டம். ஆப்பிரிக்காவில் நான் இருந்தபோது இந்தச் சண்டையை பார்த்திருக்கிறேன். சிறு வயதில் எங்கள் வீட்டில் விளக்கு வைத்ததும் இந்தச் சண்டை தொடங்கிவிடும். அண்ணன் தங்கைகளுக்கு இடையில் மட்டுமே இந்தச் சண்டை விருத்தி அடையும். யோசித்து பார்க்கும்போது இது சண்டையே அல்ல. அன்பின் வெளிப்பாடு.

    ஈழத்துப் பெண்ணான மயூ மனோவின் கவிதை ஒன்று இதைச் சொல்கிறது. அண்ணனுக்கும் தங்கைக்கும் இடையில் விளக்கு இழுப்பு சண்டை படிப்பு மேசையில் ஆரம்பித்து படுக்கையிலும் தொடர்கிறது, அம்மாவின்மேல் யார் கால் போடுவது என்று. கவிதை இப்படி முடிவுக்கு வருகிறது.

    ஆனாலும் பார்

    அம்மாவின் காலுக்காய்

    மாறி மாறி உதைபட்டு

    பின்னிரவில்

    அவளுக்கு அங்காலும் இங்காலுமாய்

    உறங்கிவிடும் நமக்கிடையே

    அப்போது விழுந்து கிடந்திருக்க வேண்டும்

    நாம் கவனித்தேயிராத

    இந்த மௌனம்.

    http://mayoomano.blogspot.com/ என்ற அவருடைய வலைப்பூவில் முழுக்கவிதையையும் படிக்கலாம். மனதின் அடியிலிருந்து அப்படியே முகிழ்த்து வருவது.

    திட்டமிடாத கவிதை.

    END

    ReplyDelete
  7. "அம்மாவின் காலுக்காய்
    மாறி மாறி உதைபட்டு
    பின்னிரவில்
    அவளுக்கு அங்காலும் இங்காலுமாய்
    உறங்கிவிடும் நமக்கிடையே
    அப்போதே விழுந்து கிடந்திருக்க வேண்டும்
    நாம் கவனித்தேயிராத
    இந்த மௌனம்"

    மலரும் நினைவுகளை மனக்கண் முன்
    கொண்டு வந்து என் ஈரவிழிகளில் தூறல்
    விழ வைத்த மணி ஆர வரிகள்!!!

    நன்றி சகோதரி!!!

    by
    AMU SHAHUL HAMEED

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் பதிவுக்கும் மிக்க நன்றி. மிகத் தாமதமாக வாசிக்கிறேன். மன்னித்துக்கொள்ளுங்கள்.

      Delete