Thursday 28 April 2011

மௌனம் கசியும் இரவு..

தேவதையே
மௌனம் கசியும் பார்
இந்த இரவும்

சொருகும் கண்களுடன்
தயங்கிப் பார்க்கும் உன்னை
மோர்ந்து பருகி
திமிறி தோற்கின்றது
மூச்சு

என் கண்ணே
என் உலகின் சூலை
உன் கண்கள்
எத்தனை ஆண்டுகள் சுமக்கும்?

கனவின் தொலையில்
மீட்டப்பட்டுக் கொண்டிருக்கும் வீணையின்
தந்திக் கம்பிகள் மீதேறி
தத்தியும் தாவியும் குதித்தும்
நடை பழகுகிறது காற்று
அந்தி பெய்த
மழையின் ஈரம் பிசைந்து
தயங்கி நகர்கின்றன நொடிகள்
நீ நழுவி ஓடுகிறாய்

இத்தனை நேரமும்
நானல்லவா உன்னை
கர்ப்பம் சுமக்கின்றேன் என்று கொண்டேன்;

தேவ தேவியே
தேவதைகளின் ராணியே
இந்தப் போதில்
ராட்சசிகளை கற்பித்தம் கொள்கிறேன்
கை தேர்ந்த ராட்சசி நீ
அவர்களின் குழந்தைகள்
உன்னைப் போலவும் தானே

ஒளித்து ஓடி
இழுத்து அணைக்கிறேன்
திமிறித் தோற்கிறாய் நீ
இப்போது

என் அன்பே
மெல்லென ஏதாவது சொல்லாய்
மடி நிறைந்து வழியும்
இந்த
பிரியத்தின் பேரால்

மணம் வீசும் கேசமும்
உதடு பதித்த கன்னமும்
அதிராத சுவாசமும்
நிறைய
என் உயிர் நிறைய;
வாளாதிருக்கிறாய்
நீ

என் தளிரே
உயிர் தளர்ந்து
உணர்விழந்து
என்னிலிருந்து நழுவி ஓடி
உன்னுள் வீழ

மெலிதாய் சிரிக்கிறேன்
தூக்கத்திலேயே
நீயும்

மௌனம் கசிய
கடந்து போய்க் கொண்டிருக்கின்றது
இந்த இரவும்

(அக்காவின் மகளுக்கு...)

5 comments:

  1. //மணம் வீசும் கேசமும்
    உதடு பதித்த கன்னமும்
    அதிராத சுவாசமும்
    நிறைய
    என் உயிர் நிறைய;
    வாளாதிருக்கிறாய்
    நீ //

    அழகான வரிகள்....

    ReplyDelete
  2. >>>என் கண்ணே
    என் உலகின் சூலை
    உன் கண்கள்
    எத்தனை ஆண்டுகள் சுமக்கும்?

    நீங்கள் படைத்த வரிகளில் நாங்கள் படித்துப்பிடித்தது

    ReplyDelete
  3. நல்ல கவிதை.
    வாழ்த்துக்கள் அம்மா.

    ReplyDelete