Friday 4 March 2011

இரவு(வில்) எழுதிய நாட்குறிப்பு..!!

நிசப்தம் ஒழுகிக் கொண்டிருக்கும் இரவெனும் பாத்திரத்தினுள் எட்டிப் பார்ப்பதுடன் நின்றுவிடுகிறது உடல். மெல்ல நுழைந்து உள்ளே புகுந்து கனவுகளை சிறைப்பிடித்து இழுத்துக் கொண்டு அலைகிறது மனம். வீறிட்டு கத்தும் நினைவுகளை, மெலிதாய் முனகிவிட்டு அமர்ந்த நினைவுகளை, எப்போதோ மரணித்த நினைவுகளை, இன்னும் வராத நினைவுகளை என ஆயிரக்கணக்கான நினைவுகளை அள்ளிக் கட்டி இழுத்துக் கொண்டு மெல்ல மெல்லமாய் இரவை ஆக்கிரமிக்கத் தொடங்குகிறது மனம். இரவுகளை நேசிக்கும் பழக்கத்தில் தொலைந்து போகும் தூக்கத்தைத் தேடுவதை பழக்கமாக்கிக் கொண்டுவிட்டது பகல்.

நிற்க, கண்மூடி உடல் வளர்த்து, தூங்குவதும் தூக்கமில்லாததுமாய் மல்லாந்து கிடக்கும், உடல் குறுக்கி அமர்ந்து கிடக்கும் பொழுதில் பிறந்து தொலைகின்றன கனவுகள் கண்ணுக்குள்ளேயே. எப்போதும் போயேயிராத இடத்தில் நின்று கொண்டு இந்த இடத்துக்கு வந்திருக்கிறேன், இவரைப் பார்த்திருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு ஒரு மாயை உலகில் உலவுவதான உணர்வில் திரிகிறது உடல் அவற்றுக்குள்ளே. ஊர் முழுதும், தேசம் முழுதும் தங்களை விற்றுத் திரிகிறார்கள் மனிதர்கள் தங்களின் கனவுகளின் பொருட்டு.

துளிர்த்து ஊத்தும் வானத்தின் முடிவை நோக்கி விரிகிறது கனவு விழிகளில்;
வெளியில்
மார்பில் அடித்துப் பெய்து கொண்டிருக்கிறது மழை..!

என் பிரியங்களை சொல்லிக் கொண்டிருக்கிறேன் மழைக்கு..!!

1.
விதந்தோதித் திரியும் பிரியங்களின்
கணக்கீடுகளின் படி
நிகழ்தகவுகளில் பிறப்பிக்கப்படுகிறது
உறவு
கூட்டிக் கழித்துப் பிரித்து பெரு(பொறு)க்கி
பெயரிட்டு முடிக்கிறேன்
மிஞ்சிக் கிடக்கின்றன தாள்கள்
என் பொருட்டு;

மடி பெருத்தலையும்
வியாபாரப் பசுவின் உடலில்
எங்கிருப்பான் பிரம்மன்?
பெறா மகளுக்கு குரங்கு கீறி
பூனை கீறி
பாம்பு கீறி
சொல்லிக் கொண்டிருக்கிறேன்
உயிர்களை வதைக்காதே
ஆறிக் கொண்டிருக்கிறது
அந்தப் பசுவின் பால்;

காதுக்குள் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது
கதைகளை சொல்லிக்கொண்டே மரித்த
கிழவியின் குரல்
செவி வழி கேட்டும், புனைந்தும், திரித்தும்
கதை சொல்லிக் கொண்டு அலைகின்றான்
தேசாந்திரி மனதுக்குள்
வனாந்திரத்தின் தேவதைகளையும்
பிசாசுகளையும்
ரட்சகிகளையும்
காதலிப்பதாய் சொல்லி காணாமற் போயிருக்கிறான்
நான்கு நாட்களுக்கு;

நாட்குறிப்பைக் கிழித்துப் போடும் அவசரத்தில், ஆக்ரோசமாய் அடித்து வீசுகிறது காற்று. யன்னல்கள் உடைத்து, திரைச்சீலை கிழித்து முகத்தில் அறைந்து வீச்சாய் நுழைகிறது அறைக்குள். இருட்டின் மோன தவத்தைக் கிழித்துப் போகும் வாகனங்களின் இரைச்சல் காற்றுடன் நிறைந்து அறை விட்டத்தில் படிக்கிறது. மேலெழுந்து பறக்கும் கனவுகளைப் பிடிக்க பின்னாலே திரிந்து கொண்டிருக்கிறாள் ஒரு சிறுமி. காற்றின் அடர்த்தியில் உடையும் பலூன்களின் துண்டுகளாய் பறந்துகொண்டிருக்கின்றன அவளின் உடலின் அவயவங்கள். கட்டிலில் விழுந்து கிடந்தது பொறுமையுடன் அவற்றைப் பொறுக்கி ஒட்டவைத்து தனக்கான உடலத்தை பொருத்திக் கொண்டிருக்கிறாள். இரவு வளர்ந்து கொண்டே போகிறது பகலுக்குள்.

2.

விட்டேத்தியாய்த் திரியும் இருட்டை
மௌனத்தைக் குழைத்து
அள்ளிப் பூசிக் கொண்டலையும் கறுப்பை
நிசப்தத்துக்குள் மறைந்த உலகை
இரவுக்குள் மரித்த பகலை
தூக்கிக் கொண்டு திரிகின்றன
நொடிகள் அங்குமிங்குமாய்;

கறுப்பைப் பூசிக் கொண்டு
பெரு வாய் கொண்டு
திறந்து கிடக்கிறது
பெரும் பாத்திரம்;
உடலைத் துறந்து
உருகி துளித்துளியாய்
ஒழுகிக்கொண்டிருக்கிறது
உயிர்;

ஒடுங்கிப் போயிருக்கிறது உலகம். மூச்சுவிடும் பாத்தியத்தின் பொருட்டாய் நாசிகளைத் திறந்து வைத்துக் கொண்டுள்ளேன். சர்வமும் சப்தமற்று அடங்கி இயங்கிக் கொண்டிருக்கிறது உடலுள். கனவுகளைத் தட்டி சத்தங்களை நிறுத்தச் சொல்லிக் கொண்டு எழுந்தமானமாய் அலைகிறது உயிர் உள்ளே.

3.

காணாமல் போயிருந்தன
நட்சத்திரங்கள்
தொலைந்து போயிருந்தது
நிலா;
கீறாய்த் தேய்ந்து
கிடந்தது இரவு
பகலுக்குள்;

சூரியன் எரிந்து கொண்டிருக்கும் போதில்
சிறுமி எறிந்து விட்ட அரிசிகளை
கொத்தித் தின்று கொண்டிருக்கும்
ஒரு சிட்டுக் குருவி
அதன் கண்கள் மூடிக் கிடக்கும்
இறுக;

வளர்ந்து கொண்டேயிருக்கிறது இரவு பகலுக்குள், இன்னோர் இரவாய்.!!

1 comment: