Thursday 9 December 2010

"தூங்குவது போலும் சாக்காடு"

நீர்த்த பால் திரைவதொப்ப
பகலிலிருந்து பிரிந்த இரவில்
திட்டுத் திட்டாய் விரவிக் கிடக்கிறது
பகல்
பார்வைக்குப் புலப்படா நீள் கால்கள்
ஆழ ஊன்றுகின்றன
அத் தனித்தீவுகளில்
அலைகளற்ற கடலாய்
சூழ்கிறது இருட்டு
பேசாது போன
அடர்ந்த சொற்களை
கூட்டியள்ளி
கவிதை புனைய முயற்சிக்கிறேன்
நிரப்பப்படாமல் கிடக்கிறது தாள்
கனத்த மயானத்தின் அமைதியை
விரல்களை விட்டுத் துலாவிப்பின்
பாதை செய்கிறேன்
எனக்கான செபம்
சவக்காலையில் ஒலிக்க
பரிசுத்த ஆவியின்
பாதி அப்பம்
அடி நாக்கில் இனிக்கிறது
சாம்பல் கோடிட்ட நெற்றியில்
எலும்பொன்றின் தூசு
நாசியில் நிறையும்
மரண வாசனை
ஆஸ்பத்திரியில் அலையும்
அமானுஷ்ய இறுக்கத்தை சொல்கின்றன
என் வாழ் நாளில் ஒரு எறும்பை
கொல்லாது விட்டிருக்கிறேன்
சொர்க்கத்தின் பொருட்டு
என்ன இருந்தும் என்ன
நேற்றைய இரவின் சவப்பெட்டி ஆணி
இறுக்கமாயிருந்திருக்கவில்லை..!!!

6 comments:

  1. பிரமாதமான கவிதை..

    ReplyDelete
  2. நேற்றைய இரவின் சவப்பெட்டி ஆணி
    இறுக்கமாயிருந்திருக்கவில்லை..!!!

    உங்கள் கவிதையின் ஆகச் சிறந்தவரிகள்.

    தொடருங்கள் நதி.

    ReplyDelete
  3. இக்கவிதையின் அனைத்து வரிகளுக்கு கீழும் அடிக்கோடிடலாம்... அத்தனை சிறந்த வரிகள்...அனைத்தும்!!

    ReplyDelete
  4. வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி..!

    ReplyDelete
  5. கடைசி வரிகளில் கிடைத்தது கவிதை முழுவதுமுள்ள உருவகங்களை திறக்கும் சாவி. மயூ, இறப்புக்குப்பின் ஆவி எழுதிவிட்ட கவிதை தாளில் நிரம்பியிருக்கிறது, தளர்வாய் அடிக்கப் பட்ட சவப் பெட்டியின் ஆணிகளுக்கு எனது நன்றிகள்.

    ReplyDelete
  6. ///என் வாழ் நாளில் ஒரு எறும்பை
    கொல்லாது விட்டிருக்கிறேன்
    சொர்க்கத்தின் பொருட்டு
    என்ன இருந்தும் என்ன
    நேற்றைய இரவின் சவப்பெட்டி ஆணி
    இறுக்கமாயிருந்திருக்கவில்லை../// இயல்பான வரிகள்..முழுக்கவிதையும் அழகு..அருமை...

    ReplyDelete