Friday 22 October 2010

பின்னோக்கி நீளும் கனவின் தடம்...!

கனவில் அடிப்பதாய் ஒலிக்கத் தொடங்கியிருந்தது அலாரம். இமைகளைத் திறக்க முடியாமல் பிரித்து இருட்டுக்கு கண்களைப் பழக்க முற்பட்டேன். சிறிதாய் விலக்கப்பட்டிருந்த திரைச்சீலைகளினிடையே யன்னல் கண்ணாடியில் பட்டுத் தெறித்து உள் நுழையப் போராடிக் கொண்டிருந்தது காலை வெளிச்சம். இருளும் பிரகாசமுமற்ற மெல்லிய கோடென ஊர்ந்த வெளிச்சம். தலையணிகளின் கீழ் மறைந்து போயிருந்த அலைபேசியில் இருந்து எழும்பச் சொல்லி அலாரம் ஒலித்துக் கொண்டிருந்தது. கைவசத்திற்கு எட்டாதபடி இரண்டு தலையணிகளின் கீழிருந்ததின் உறைக்குள் புகுந்து கிடந்த்து போன். நித்திரைக் குழப்பத்தில் போர்வையை உதறி, தலையணைகளைப் பிரட்டி இழுத்ததில் நழுவி கட்டில் சட்டத்தில் பட்டு நிலத்தில் விழுந்தது. சலனமில்லாமல் சில நொடிகள் கிடந்து மீண்டும் பழைய வேகத்தோடு கீழிருந்தவாறே கத்தத் தொடங்கியது. நான் பேசாமல் கண்களை மூடிக் கொண்டேன். அருகில் அம்மா அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். மெதுவாக அவளை நோக்கி சாய்ந்து முகத்தை அவள் கழுத்தின் கீழ் புதைத்துக் கொண்டேன். அவள் கைகள் அனிச்சையாக என் முதுகில் மெல்லத் தட்டின. இது அவளின் பழக்கம். எவ்வளவு அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாலும் நான் அருண்டால் மெதுவாய் அவள் தட்டிவிடுவது குட்டிப் பூனையொன்றினை பரமாரிக்கும் தாய்ப்பூனையைப் போன்றிருக்கும்.

விழித்து மீண்டும் உறங்கும் சில நிமிட உறக்கத்தில் தனியானதொரு சுகம் இருக்கிறதுதான், காலை எட்டரைக்கு முதலாவது வகுப்பு எனக்கு, இந்த எட்டரை மணிக்குள் தூங்குகிற ஐந்து நிமிட பத்து நிமிட இடைவெளியான தூக்கத்தில் கடந்து போகிற எல்லாவற்றிலும் சொந்த நிலத்தின் ஏதோவொரு நினைவினை மீட்டெடுத்துக் கொண்டபடியேதான் நித்தமும் பயணம் கழிகிறது. வீட்டுச் சுவர்களைத் தாண்டி நெறிக்கும் இக்குளிரில் ஐந்தரை மணிக்கு எழுந்து புத்தகங்கள் அடுக்கி, கணணி மேய்ந்து, குளித்துத் தயாரானால் தான் ஏழுமணிக்கு பஸ் எடுக்கலாம். இன்னொரு முறை போன் மீண்டும் கத்தத் தொடங்கிய பொழுது அம்மா முழித்துக் கொண்டாள். கண்களை திறந்து கொள்ளாமலேயே "எத்தனை மணிம்மா" . நான் கேட்ட்தற்கு, எழுந்து நேரம் பார்த்து "ஐந்தே முக்கால்" என்றாள். "அம்மா தேத்தா" சொல்லிக் கொண்டே மீண்டும் கண்களை மூடினேன். அம்மாவோ தூக்க கலக்கத்தில் கண்கள் சொருக தூங்கத் தொடங்கினாள். அருகே புரண்டு படுத்து அவளின் கண்மடல்களைத் திறந்தேன். "சும்மாயிரு" முணுமுணுத்தபடியே தூங்கத் தொடங்கினாள். சிலவேளைகளில்அம்மா தூங்கும் போது பார்க்கையில் ஒரு வித பயம் வந்து கவிழும். அநேக சமயங்களில் அவளை விட முதலில் நான் முழித்துவிடும் போது அப்படி அவளின் கண்ணிமைகளைத் திறந்து கண்மணிகளைப் பார்ப்பதும், அவள் உதடுகளைத் திறக்க முற்படுவதுமாய் இருப்பேன். எப்போதும் ஒரு "சும்மாயிரு" என்ற முணுமுணுப்பு தான் பதிலாய்க் கிடைக்கும். இந்தப் பழக்கத்தை இப்போது என் அக்காவின் மகளில் காண்கிறேன். நேற்றுத் தோளில் போட்டு ஆட்டி அவளைத் தூங்க வைத்துவிட்டு, அருகிலேய படுத்து கண் மூடிக்கிடந்தேன். யாரோ விரல்களால் எனது கண்களைத் திறக்கும் உணர்வு. விழித்தால் அருகே எழுந்து உட்கார்ந்து கொண்டு என் கண்மடல்களைத் திறக்க முற்பட்டுக் கொண்டிருந்தாள் குழந்தை. ஏதோ தொடர்பில் கண்கள் பனித்தன. இறுக்கிக் கண்களை மூடுவதும், அவள் திறக்கும் போது கண்களைத் திறப்புதுமாய் விளையாடிக் கொண்டிருந்தேன். ஏதோ அவளால் தான் எனக்கு உயிர் வருகிறது என்று நினைத்தாள் போதும், சின்னக் கண்களை மூடிச் சுருக்கி, மூக்கை நெளித்துக் கொண்டு சிரித்தாள். அந்த நினைவு கண்களில் விரிய நான் புன்னகைத்துக் கொண்டேன்.

அம்மாவை மீண்டும் சுரண்டினேன். "அம்மா தேத்தா, லேட் ஆகுது" என்று விட்டு மீண்டும் படுத்தேன். அம்மா வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தாள். அவளுக்குத் தெரியும், இது கட்டிலை விட்டு எழும்பும் நேரத்தை ஐந்தோ, பத்தோ நிமிடங்களுக்குக் கொஞ்சம் தள்ள வருடக் கணக்காக நான் கொண்டிருக்கிற யுக்தியென்பது. போர்வையை மேல் இழுத்திப் போர்த்திக் கொண்டு மெல்லக் கண்களை மூடினேன். போர்வையின் இதமான கதகதப்பில் மனம் லயித்து தூங்க முற்பட்டது. அவள் கதவைத் திறந்து வெளியேறி குசினியில் பாத்திரங்களை கழுவும் ஓசை கேட்டது. இப்போது எழும்புகிறவள் படுக்க இரவு பதினொரு மணியாகிவிடும். எப்போதும் எதையாவது செய்து கொண்டும், நடந்து கொண்டும் இருப்பாள். வேலையில்லாமல் அவளைக் காண்பது கடினம். அம்மா பாவம் என்று தோன்றியது. அதற்கு மேல் எண்ணத் தோன்றவில்லை. எண்ணப் பிடிக்கவில்லை எனலாம். போர்வையை தலைக்கு மேல் இழுத்துப் போர்த்திக் கொண்டேன். நெருப்புக் கோழி இப்படித்தான் தலை மறைக்குமாம் என்று மன சாட்சி சொல்லிக்கொண்டது.

அம்மா தேநீரோடு உள்ளே வந்தாள். "எழும்பு லேட் ஆகிட்டு" என்றபடியே தேநீர்க் கோப்பையை நீட்டினாள். மேசையில் வைக்கச் சொல்லிவிட்டு இன்னொரு முறை பிரண்டு படுத்தேன். அம்மா குனிந்து அலறிக் கொண்டிருந்த போனை எடுத்து "இந்தா பிடி, அடிச்சுக் கொண்டே இருக்கு", போனை வாங்கி நேரம் பார்க்கையில் ஐந்தே முக்கால் ஆகியிருந்தது. இரண்டு குறுஞ்செய்திகள், மூன்று எடுக்கத் தவறிய அழைப்புக்கள். அதில் ஓன்று என்னுடன் செயற்திட்டம் செய்யும் மாணவனிடமிருந்து. சீ, நேரத்திற்கே வருவேன் என்று வாக்குத் தந்திருந்தேன். போர்வையை உதறிக் கொண்டு எழுந்து மேசைக்கு வந்தேன். மடி கணனியைத் திறந்து இயக்கிவிட்டு யன்னல் கண்ணாடியை மெல்லத் திறந்தேன். குளிர் காற்று போட்டி போட்டுக் கொண்டு உள்நுழைந்து தலை கோதியது. கண்களை மூடிக் கொண்டு தேநீரைக் குடிக்க ஆரம்பித்தேன். "அம்மா" என்று நான் கூப்பிட்டு முடிக்க முன்னமே அம்மா சீனிப் போத்தலும் கையுமாய் வந்து விட்டிருந்தாள். தினமும் அதிகமாகப் போட மறக்கிறாளா இல்லை திடீரென்று ஒரு நாள் இப்படி அதிகமாய் சீனி போட்டுக் குடிப்பதை நான் நிறுத்திவிடுவேன் என்று நினைக்கிறாளா? சிரித்தேன். அவளும் புன்னகைத்தாள். கணனித் திரையை மேயத் தொடங்கினேன். முகப் புத்தகம், வலைப்பூ, மின்னஞ்சல்கள், இலங்கை, இந்தியா, இறுதியில் கனடா. எல்லாம் பார்த்து சலித்த செய்திகள் தான். மணி ஆறேகால் ஆகியிருந்தது. இன்னும் அரை மணித்தியாலங்களில் நான் பஸ் நிறுத்தத்தில் நிற்க வேண்டும். கால்கள் தானாகவே பரபரத்து கொள்வதும் இயல்பிற்கு வருவதுமாய் அலைய எதையும் எடுக்க மறந்துவிடக்கூடாதெனெ மீண்டும் மீண்டும் மனம் சொல்லிக் கொண்ட்து.

அம்மா தந்த சாப்பாட்டுப் பெட்டியை புத்தகப் பைக்குள் போட்டுக் கொண்டே காலுறை தேடினேன். ஏதோ வேலையாக இருந்தவள் போகிற அவசரத்தில் அதனைக் கொண்டு வந்து நீட்டினாள். தண்ணீர்ப் போத்தல் அம்மா, தேநீர் குடிக்கக் காசு அம்மா, கழுத்தைச் சுற்றும் துணி அம்மா. இப்படி எல்லாமே அம்மா. வெட்கமாக இருந்தது. அவசரமாய்க் காலணியைப் போட்டுக் கொண்டே கதவருகே வந்து "போயிட்டு வாறன் அம்மா" என்றேன். உள்ளிருந்தபடியே சரியென்று பதில் வந்தது. மீண்டும் ஒரு போயிற்று வாறன். மீண்டும் உள்ளிருந்தபடி சரியென்ற பதில். மீண்டும் போயிற்று வாறன் என்று உச்சஸ்தாயில் தொடங்கியிருந்தேன். வாசலிற்கு வந்து சரி என்றாள். எனக்கு அம்மா வாசல் வரை வர வேண்டும். நான் என் நாளை படிமுறைகளின் அடிப்படையில் செய்கிறேன். ஒன்றும் பிசகக் கூடாது. படிகளில் என் காலடிச் சத்தம் பலமாகக் கேட்டது. வெறுமை நிறைந்த படிக்கட்டுகளிலும், சுவர்களிலும் என் நிழல் இழுபட்டு எதிரொலிகளில் அதிர்ந்து சிதறியது. விரைவாக இரங்கி வராந்தாவின் கதவைத் திறந்து பிடித்துக் கொண்டேன். மழை தூறிக் கொண்டிருந்தது. இலையுதிர் காலக் காலையொன்றில் மழை பொழிவதொன்றும் அதிசயமில்லை. பையில் குடையைக் காணவில்லை. அம்மா என்று கத்த வேண்டும் போல தோன்றியது. ஏதோ குடையை நான் எடுக்காது வந்தது அவள் பிழை போல, இந்தக் குடையுடன் நான் போடும் சண்டை பற்றியே தனியாகக் கதை எழுதலாம். வராந்தாவின் விளிம்பில் நின்றவாறு உள்ளங்கைகளை நீட்டினேன். மெலிதாய் ஒரு துளி பட்டு கை கூசியது. அடுத்ததாய் இன்னொன்று. இன்னுமொன்று. துளிகள் ஒன்றாகி விரல் இடுக்குகளில் வழிந்தன. மழை பெலக்க இன்னும் நேரமிருப்பதாய் தோன்றியது. இரு மாடிப் படிகள் கடந்து வீடு போய் குடை எடுக்க பஞ்சியாக இருந்தது. தூரத்தில் பஸ் வருவது தெரிய, அகலக் கால்கள் வைத்து விரைவாகத் தெருவைக் கடந்து பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டேன். "துளித் துளியாய் துளிர்க்கும் வானம், இடையில் காற்று, ஏந்த மண், ஏதோவொரு மண் " வாழ்க்கை. எல்லாக் காலைகளிலும் நான் பார்க்கிற வெவ்வேறு தேசத்து முகங்கள், சிரித்தும் சிரிக்காமலும் இறுக்கமாகவும் இந்த தேசத்தின் எல்லா வீதிகளிலும் யாரோ ஒருவரின் சாயலை இன்னொருவரிடம் பார்க்க முடிகிறது. நிறுத்தத்தில் குழந்தைகள் அதிகமில்லை, ஒரு பெரியவர் தன் பேத்தியை வழியனுப்ப நின்றிருந்தார், கருப்பும் வெளுப்புமற்ற அந்தக் குழந்தை அவரிடமிருந்த அந்நியமாகத் தெரிவதைக் கவனிக்கையில் அவர் இங்கு வந்து சில பத்தாண்டுகள் ஆகியிருக்கலாமெனப் பட்டது. ஆப்பிரிக்க தேசங்களுக்கேயான பிரத்யேக கருப்பு, நாங்கள் சில நொடிகள் சிரித்துக் கொண்டோம். அவரது கண்களில் நெருக்கமானதொரு ப்ரியமும் அன்பும் கசிய நெருங்கிச் சென்று அவரின் பெயர் கேட்கத் தோன்றியது. இன்னொரு முறை நான் புன்னகைக்க, ’தினமும் இந்த நிறுத்த்த்திலிருந்துதான் செல்கிறாயா?’வென ஆங்கிலத்தில் கேட்டார். நான் சிரித்தபடியே தலையாட்ட, அதற்குமேல் எங்களிடம் பேசுவதற்கு அவகாசமின்றி பேருந்து வந்துவிட்டிருந்த்து.

அந்த நிலக்கீழ்ப் புகையிரதம் "Downsview " நிறுத்தத்தில் வேகத்தைக் குறைத்துத் தரித்து நின்றது. ஏதோ பெருத்த ஏமாற்றம் என்னை மேவிப் படர்ந்த உணர்வில் புத்தகத்தில் இருந்து கண்களை அகற்றி வெளியே பார்த்தேன். சுற்றிலும் இருட்டு. இந்தப் பயணம் முடிவில்லாது நீளுமென்ற எண்ணம் இல்லாவிடின் நீள வேண்டுமே என்ற விருப்பம் அடி மனதில் ஊறிக் கிடந்திருக்குமோ என்ற ஐயம் தோன்றியது. அப்படித்தான் இருந்திருக்க வேண்டும். இல்லாவிடின் தன் இறுதி நிறுத்தத்தில் அது தரித்தமைக்கு நான் இவ்வளவு வருத்தப்படத் தேவையில்லை. அதனால் இனி தண்டவாளத்தில் போகவே முடியாது. அத்துடன் நிலத்தைக் குடைவதை நிறுத்தி இருந்தார்கள். பூமியின் உள்ளிருட்டு செயற்கை வெளிச்சங்களால் தடுக்கப்படிருந்தது. அப்படி இருந்தும் மிஞ்சப்படாமல் போனதால் மிச்சம் வைக்கப்பட்டிருக்கும் இருட்டு ஆத்ம பலத்துடன் முகத்தில் அறைவது போல முரட்டு வேகத்துடன் மோதி அணைத்துக் கொண்டது. ஒரு வித மனக்கிலேசம் தோன்றி நொடியில் மறைந்தது. இப்போதும் கூட ஒன்றும் தாமதமாகவில்லை. நான் இறங்காமல் அப்படியே இருந்தால் மீள வீடு போய்ச் சேர்ந்து விடலாம். நான் இறங்காமல் உள் பெட்டியைத் திரும்பிப் பார்த்தேன். பெட்டி வெறுமையாக இருந்தது. அனைவரும் இறங்கி இருந்தார்கள். என்னை விநோதமாகப் பார்த்தபடியே அவர்கள் செல்வது போன்ற உணர்வு உடல் முழுவதும் ஊர்ந்தாலும் என்ன செய்வதென்று யோசித்தபடியே அமர்ந்திருந்தேன். மற்றவர்களை இயந்திரங்கள் போல் அவர்கள் கால்களே அவர்களை சுமந்து செல்கின்றன. என் உடலின் பாகங்கள் ஒவ்வொன்றும் தங்களுக்கு ஏற்ற உத்தரவுகளைப் பிறப்பித்து அவற்றுக்கேற்ப இயங்குவதாய் ஒரு பிரமை விரிந்தது. புத்தகத்தை சுருட்டி உருட்டிக் கொண்டு இறங்கினேன். என்னோடு இறங்குவதற்கு அப்போதைக்கு ஒருவரும் இருந்திருக்கவில்லை, வெறுமையான பெட்டியினை சில நொடிகள் திரும்பி கவனிக்கையில் விளக்குகள் மட்டும் அதே வெளிச்சத்துடன் ஒளிர்ந்து கொண்டிருந்தன.

புத்தகப் பையில் பாடப் புத்தகங்கள் கனத்தன. பையக் கழற்றி கை மாற்றி மற்ற தோளில் கொழுவிக் கொண்டே சுற்று முற்றும் பார்த்துக் கொண்டேன். பகல் இன்னும் பழக்கப் படவில்லை எனக்கென்று தோன்றியது. மெல்ல நடந்து கூட்டத்தில் கலந்து மேல் நோக்கி நகரும் படிக்கட்டுகளில் ஏறி இரு படிகள் முன்னேறி நடந்து விட்டு நின்று கொண்டேன். தனக்கு நியமிக்கப்பட்டிருந்த வேகத்தில் ஒரே சீராக படிகள் நகர்ந்தன. மெல்ல ஊர்ந்து வந்து படி போன்ற அமைப்பை ஏற்படுத்திப் பின் மேல் தளத்தை அடைந்ததும் பின் நீண்டு கீழிறங்கி, அடியிலிருந்து மீளப் படி போன்ற அமைப்பை அடைந்து, பார்த்துக் கொண்டேயிருந்தேன்.. அவை அழகாக இருந்தன. அப்படியே நியமிக்கப்பட்டதைப் பின்பற்றி, அழகழகாகப் பற்கள் பற்களாக நகர்ந்து கொண்டும் தன் பாட்டில் இயங்கிக் கொண்டும் இருந்தன. என் உடல் மடிந்து அதன் மீது விழுந்து கீழிறங்கிப், படிகளாகி, மேலேறி, ஒரு இயந்திரமாய்... கண்களை இறுக்க மூடித் திறந்து கொண்டேன். அசையும் படிகள் என்னை மேற் தளத்தில் கொண்டு வந்து சேர்த்திருந்தன. கைப்படிக்கு அருகிலேயே கீழ் நோக்கி நகரும் படிகளும் வாழ்க்கை போலவே ஏறவும் இறங்கவும். இப்போதும் இன்னமும் நேரமிருக்கிறது. இறங்கி நொடியில் புகையிரதத்தை அடைந்து ஏறிய இடத்திற்கே செல்வது சாத்தியமே. ஆனால் இந்த வசதி வாழ்க்கையில் இல்லை. என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டே ஒரு கணம் நிற்கலாம் என்று முடிவெடுத்தேன். ஆனால் அதற்குள் பேருந்துகள் நிற்கும் இடத்திற்கு நகர்ந்து விட்டிருந்தன கால்கள். பேருந்திற்காக மிக நீண்ட வரிசை காத்திருந்தது. ஒரு முனையில் இருந்து மறு முனை வரை என் பல்கலைக்கழக மாணவர்களும், வேலைக்குச் செல்பவர்களும், இன்ன பிறரும் காத்திருந்தனர். அந்த பேருந்து என் கல்லூரிக்குத் தான் நேரடியாகச் செல்லும் என்பதால் வரிசை நீண்டு கொண்டே இருந்தது. நூற்றுக்குக் குறையாத மானுடர்கள். வெற்றுக் கிரகத்தில் கொண்டு வந்து யாரோ விட்டுவிட்டுப் போன உணர்வு பரவியது. கையில் சுருட்டி வைத்திருந்த அந்த உலகத் தமிழ் இலக்கிய இதழை விரித்து முகத்தை மறைத்துப் பிடித்து வைத்துக்கொண்டேன்.

ஒரு பக்கமாய்ச் சரிந்த மெல்லிய அட்டையை பின்பக்கமாக வளைத்து இதழின் முள்ளந்தண்டுப் பக்கமாக திருப்பி தாளை மேலிருந்து கீழாக அழுத்தினேன். இதழ் விரிதலுக்கான திமிறலின் பின் அடங்கியது. ஏலவே நெடுக்காய் மடிக்கப்பட்ட தாள்களின் நடுவே கோடு விழுந்திருந்தது. அந்த மடிப்பிற்குள் சில எழுத்துக்கள் மறைந்து போவது போல போய் விழுந்து எழுந்து கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தன. இப்படி இதழ்களை, புத்தகங்களை மடக்குவது, புத்தகத்தின் தாளைப் பக்கமொன்றை நினவு படுத்தும் பொருட்டு சிறிதாய் மடிப்பது போன்ற இத்யாதியான பழக்கங்கள் என்னிடம் எப்படி எப்போது வந்தன என்று நினைவிலில்லை. ஆனால் சமீப காலங்களிலெல்லாம் பேரூந்தில், புகையிரதத்தில் நின்று கொண்டு படிக்க வசதியாகப் புத்தகங்களை மடிக்க, மடக்கவெல்லாம் ஆரம்பித்திருக்கிறேன். பதின்மங்களின் ஆரம்பத்தில் எங்களுக்கு மறுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த புத்தக அலுமாரிகளின் முன் ஒரு ஆர்வத்துடன் நின்றது நினைவுக்கு வந்தது. உயர் தரம் படிக்கும் அக்காமார்களின் வால் பிடித்தும், தமிழ் ஆசிரியர் எடுக்க சொன்னார் என்று பொய் சொல்லியுந்தான் புத்தகங்கள் எடுக்க முடிந்தது. அப்படி எடுத்து வீட்டுக்குக் கொண்டு வரும் புத்தகங்களை அம்மாவிடம் மறைக்கப் பட்ட பிரயத்தனங்களும், அவற்றை வாசித்துவிடப் பட்ட பாடுகளும் சொல்லி மாளா. அப்போதிருந்த புத்தகக் காதல் இப்போது எங்கே போயிற்று. எமக்கானது இல்லை என்று மறுக்கப்படும் போது அதன் மீது அதீதமாய்க் காதல் கொள்கிறோமோ? மெலிதாய்ப் புன்னகைத்துக் கொண்டேன். புத்தகங்களை ஒளித்துப் படிக்க நேர்ந்த போது கூட ஒருபோதும் புத்தகங்களை மடித்து சிதைக்கும் பழக்கம் எனக்கு இருந்ததில்லை. வாசிக்கிற எல்லாப் புத்தகங்களிலும் உண்மையும் பொய்யும் வேறுபாடின்றி எப்படி ஒளிந்து கிடந்த்துவோ அப்படித்தான் யாரோ சிலரின் வாழ்க்கையும் ஒளிந்து கிடந்தது.

ஏழெட்டு வயதுகளில் அக்கா ஒளித்துப் படிக்கும் "ரமணிச்சந்திரனின்" குடும்ப நாவல்கள் வாழ்க்கையை வெகு சுலபமானதாக அறிமுகப்படுத்தியிருந்தன. பதின்மங்களில் பிரட்டியவை வாழ்க்கையின் இன்னொரு பக்கத்தை, உண்மையை எடுத்துரைத்த போது அதனை உடனே ஏற்றுக்கொள்ளவியலாத, நம்பவிடாத வாழ்வியல் அமைப்பும், சமூகக் கட்டமைப்பும், குடும்ப ஒழுங்கமைப்புக்களும், மேலும் உள் மனமும், சுய அனுபவங்களும் இன்ன பிறவும் தடுத்து நின்றன. பதின்மங்களைக் கடக்கும் போது வாழ்க்கை ஓரளவுக்குப் புரிந்தபோது வாசிப்புக்கள் புரிபடத் தொடங்கின. அப்போதெல்லாம் சிறு கட்டுரை எழுதுபவரைக் கூட நான் வியந்து நோக்கிய காலமொன்று இருந்தது. எழுத்தாளர்களின் புத்தகங்களை யாராகவிருப்பினும், கருப்பொருள் என்னவாயிருப்பினும் வாசிக்கும் மன நிலை, எழுத்துக்களை காதல் செய்ய வைத்தது. புத்தகங்களைக் கொண்டாட வைத்தது. இப்போதெல்லாம் புத்தகங்களை மடித்து, கசக்கி பையில் போடும் போதெல்லாம் யோசித்துக் கொள்வேன். வாழ்க்கை புரிந்துவிட்டதா? இல்லை எனக்குத் தெரிந்த உள்ளங்கையளவு கூட இல்லாத இந்த உலகத்தோடு என் தொடர்புகள் நிறுத்திவிடப் போகிறேனா? மெல்லிய நடுக்கம் கைவிரல்களில் பரவியது. இலக்கிய இதழில் வாசகர் பதிப்பாசிரியரின் சாதியைக் குறிப்பிட்டு, உங்களால் குறித்த பிரச்சினையை எப்படி நடு நிலைமையுடன் அணுக முடியும் என்று கேட்டிருந்தார். பக்கங்களை அசூசையாகத் திருப்பினேன். மீண்டும் இதழை மூடிப் பையில் போட்டுக் கொண்டேன். இப்போது பிரச்சினைகள் என் கைப்பைக்குள் நடக்கும். கூடவே மனதுக்குள்ளும். வாழ்க்கை என்பது வெகு இலகுவாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. கட்டங் கட்டமாக அமைக்கப்பட்டிருக்கிறது எனலாம். முக்கியமாக எங்கள் வயதினருக்கு வாழ்க்கை இதென்பதாகக் காட்டபபடுகிறது. நியமிக்கப்படுகிறது; அவர்க்கு எவ்வாறு நியமிக்கப்பட்டதோ அவ்வாறு நியமிக்கப்பட்டதாக.

பேருந்தைக் காணவில்லை. எனக்கு இன்னமும் நேரமிருந்தது. நெடு கண்ணாடி பதித்த சுவரில் ஒற்றைக் காலை ஊன்றிப் பின் முதுகில் சாய்ந்து கொண்டேன். வரிசை நீண்டு கொண்டிருந்தது. இவர்கள் எல்லோரும் எங்கே பயணிக்கிறார்கள் என்றொரு கேள்வி மனதில் விரிந்தது. நான்கு வருடப் படிப்பின் பின், மேலதிகமாக சில வருடங்கள். பின் ஒரு தொழில். பின் ஒரு குடும்பம். பின் ஒரு வாழ்வு. பின்னதாக மரணம். சாதாரணமாக மிக மிக சாதாரணமாக ஒரு மரணம். நான் வரிசையில் இருந்து தள்ளி அடுத்த பக்க சுவரில் சாய்ந்து கொண்டேன். எனக்கு இன்னமும் நேரமிருக்கிறது.

"புல் நுனிக்கும் பனித்துளிக்கும் இடையில் மல்லாந்து கிடந்தது உடல்; சூரியன் மேலேறத் தொடங்கினான்." சூரியனின் வெப்பம் பரவ முதல் ஆத்மா உணர்வதாய் நினைத்து மகிழ்ந்த கதகதப்பு இன்னும் சற்று நேரங்களில் காணாமல் போகப் போகிறது. புல் வெளியின் மேல் பனித் துளிகளின் தடயங்களும் காணாமல் போகும். இதைக் கவிதையாகவும் கொள்ளலாம்.! எப்படி கொண்டேனோ தெரியவில்லை, மனதில் வழிந்தது. முதல் நாள் இரவின் மழையின் ஈரம் சீமெந்து தரைகளில் ஊறிக் கிடந்தது. இன்னும் குளிரில் ஊறி விறைத்துப் போயிருந்தன மரங்கள். மெலிதாய் சிலிர்ப்பதும் தம்முள்ளே மீள ஒடுங்குவதுமாய் குளிர் காற்றில் தள்ளாடிக் கொண்டிருந்தன இலைகள். மெல்லிய குளிர் உடலைத் தழுவியது. இளங்காலை மலர்ந்து கொண்டு வந்தது. சூரியனின் சூட்டுக் கதிர்களை ஆரத் தழுவிக் கொண்டு அலைந்தன காற்றின் கைகள். புகை மூட்டத்தினுள் மெல்லிய மஞ்சள் கதிர்கள் இருப்பதும் இல்லாதுமாய் மாயாஜாலம் காட்டின. சூரியன் அழகாய் இருக்கிறான் என்று எண்ணிக் கொண்டேன். உண்மையில் எல்லாம் அழகு. பாரதி சொன்னது போல, "பரிதியே, பொருள் யாவிற்கும் முதலே! பானுவே! பொன் செய் பேரொளித் திறலே கருதி நினைத்து வணங்கிட வந்தேன்" இப்படித்தான் தொடங்கும், இல்லை முடியும். மறந்து விட்டிருந்தேன். இப்படி எத்தனையையோ மறந்திருக்க வேண்டும். சில வேளைகளில் சிலரின் பெயர்களைக் கூட மறக்கிறேன் என்று தோன்றியது. இந்த மனம் இப்படித்தான். எப்போது நேரம் கிடைக்கும் பாயலாம் என்று காத்திருக்கும்.

உண்மையில் காலை அழகு. காலை மட்டுமில்லை எல்லாமே அழகு. இந்தப் பரிதியில் உள்ள அனைத்துமே அழகு. மண்ணுள் நெளியும் புழு கூட அழகு. தனக்குரிய உலகத்தில் அது தனக்கான மொழியில் பேசும். தன் சிற்றுலகைப் பேருலகாகப் பாவித்து அது பேசும். தனக்காகப் போராடும். இரைக்காக, உறைவிடத்துக்காக, ஏன் தன் இணைக்காக என தன்னுலகைத் தனக்கான பேருலகாகப் "பாவித்து" போராடும். அது தான் உலகம். அது தான் அதன் உலகம், என்னுடையதைப் போல. நான் என்னுடையதைப் பேருலகாகக் கொள்வதால் என்னுடையதுடன் போராடுகிறேன். போராட நிர்ப்பந்திக்கப் பட்டிருக்கிறேன். ஈர மண் மற்றும் எரிந்து சாம்பார் சிந்தும் சிகரெட் துண்டுகள், காலடிகள் எல்லாம் சேர்ந்து சகதியாய்க் கிடந்தது நடைபாதை. அதில் நத்தைகள் இரண்டு மூன்று ஊர்ந்து திரிந்தன. உண்மையில் கனடாவில் நடை பாதையில் நத்தையை ஒரு மழை நாளின் முடிவில் முதன் முதலில் நான் கண்ட போது அதிசயப்பட்டேன். இப்போது அப்படியில்லை. அதிக நத்தைகளைக் காண்கிறேன். தமக்கான கூட்டுக்குள் ஒதுங்குவதும், தேவைப்படும் போது வெளி வருவதும், தம் கூட்டைத் தம்முடனேயே சுமந்து கொண்டு, மெல்ல ஊர்வதும், எல்லா இடங்களில் எதிர்பாராமல் காரணமே தெரியாமல் நசிந்து சாவதுமாய், எந்த விதப் பிரக்ஞ்சைகளும் அற்று அலையும் ஆயிரம் ஆயிரம் நத்தைகளைக் காண்கிறேன். நானும் சில வேளைகளில் நத்தையாகி அலையும் உணர்வு. எனக்கான கூடு பிறப்பிலேயே எழுதப்பட்டிருக்கிறது. இந்த பேரூந்து நிறுத்தத்தில் நான் நிற்கிறேன். அது மண்ணில் ஊர்கிறது. அவ்வளவுதான் வித்தியாசமாய் இருக்க முடியும். உடல் முழுதும் அருவருப்பு இரத்தம் பாய்ந்து ஓடியது. நானும் ஒரு நத்தை. ஒரு பெண் நத்தை.இந்த அவசர உலகில், அழகான உலகில் எனக்கான சிற்றுலகை வரிந்து கட்டிக் கொண்டு, ஒரு வட்டம் கீறி அதற்குள் ஊர்ந்து சாகப் போகும் ஒரு நத்தை. நான் வரிசையில் இருந்து நன்றாக விலகி நின்று கொண்டேன். பேரூந்து வந்து சேர்ந்து விட்டிருந்தது. ஒரு நத்தையின் கூடு உடைந்து, குருதி வழிந்து..

நானில்லை, நான் புகையிரதம் நோக்கி நகரும் படிக்கட்டுகளை நெருங்கி விட்டிருந்தேன். விரைவாய் இறங்கிக் கடந்து யன்னலோரமாய் அமர்ந்த பின்னும், அதிர்ந்து கொண்டிருந்தது இதயம். காதுக்குள் அதன் குரல் சன்னமாய் ஒலித்தது. ரயில் புறப்பட்டிருந்தது. நெக்ஸ்ட் ஸ்டேசன் இஸ் வில்சன். வில்சன் ஸ்டேசன் (Next station is Wilson. Wilson Station) என்று இயந்திரத்தில் பதிவு செய்யப்பட்ட பெண் குரல் ஓன்று தீர்க்கமாய் அறிவித்தது. என்னுள்ளே ஏதோ அதிர்ந்தது. நான் வடக்கு நோக்கிப் போகும் ரயிலில் ஏறி இருக்க வேண்டும். இது தெற்கே போகிறது. இல்லை நீ கனவு காண்கிறாய், வடக்கு நோக்கி இந்த ரயிலால் போக முடியாது, இனிப் பாதையில்லை. என்ன சொல்கிறாய், பாதைகளை யார் போட்டது, என் பாதைகளை உங்களைப் போடச் சொல்லி நான் கேட்கவில்லையே. நில்லு..இறங்காதே. நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்த ரயில் தான் உன் இருப்பிடம் சேர்க்கும். இல்லையேல் உன் கதி அதோ கதி தான். உன் பயணங்களை ரயில்கள் தான் தீர்மானிக்கும். மின்சாரத்தில் இயங்கும் ரயில்கள். நீ உன் கடைசிப் புகலிடத்தில் காலடி எடுத்து வைத்திருக்கிறாய். இனி நீ இவ்வாறாக இயக்கப்படுவாய். நான் அடுத்த நிறுத்தத்தில் பாய்ந்து இறங்கிக் கொண்டேன். நான் வடக்கு நோக்கிப் போகவேண்டும் என்று வாய்விட்டு சொல்லிக் கொண்டேன். கீழ் நோக்கி நகரும் படிக்கட்டில் ஏறி நின்று கொண்டேன். வடக்கு நோக்கிப் போக மேல் நோக்கிப் போகும் படிக்கட்டுகளில் ஏறியிருக்க வேண்டும் என்று புரிந்தது. அவசரத்தில் கால்களை நகர்த்தி...ஐயோ என்ன செய்கிறாய் நீ. நான் எண்ணி முடிப்பதற்கு முன்னமே நகரும் படிக்கட்டுகள் என்னை சுழற்றி வீசி எறிந்து விட்டிருந்தன. "Please someone stop the train" என்று நான் கத்துவது அவர்களிற்கு கேட்டிராது. ஏன் எனக்கே கேட்கவில்லை. நான் ரயிலின் மேல் வாகாய் அமர்ந்து கொண்டேன். கீழே பார்த்தேன். என்னைச் சுற்றி கூட்டம் கூடியிருந்தது. இந்த ரயில் இன்னும் சில நொடிகளில் புறப்படும் என்று ஒலி பெருக்கியில் ஒரு குரல் ஆங்கிலத்தில் அலறியது. எனக்குத் தூக்கம் வந்தது. அருகில் அம்மா இருந்திருந்தால் கால் போட்டபடி நிம்மதியாய்த் தூங்கியிருக்கலாம் என்று நினைத்துக் கொண்டேன்.

6 comments:

  1. Very nice article...
    I like the way you used the words...

    ReplyDelete
  2. கிரேட்.வாழ்வை மிக நெருக்கமாய் உற்று நோக்கும் பார்வை கிடைத்துவிட்டது போல் தோன்றுகிறது.விடாது எழுதுங்கள்.

    ReplyDelete
  3. beautiful mayoo...
    every time i read you i get more impressed.
    keep going

    ReplyDelete
  4. அடித்து ஆடுதல் என்போம்.. அப்படி இருக்கிறது

    ReplyDelete
  5. thanks for coming to my page after a long time Kiruththikan.. and thanks for ur comment too..!!

    ReplyDelete