Friday 6 August 2010

நினைவு படுத்துங்கள்...நான் தின்னாதிருக்க....!!!

உங்கள் பெயர்களை நினைவுபடுத்த
சொல்லித் தாருங்கள்

இருட்டிய பிறகு வருகிறேன்
அதோ அங்கே வாருங்கள்
எல்லையில்
இடுகாட்டில்
வருவேன்; காத்திருங்கள்

அந்தக் காட்டிடை மரமொன்றின்
பொந்திடை வசிப்பவள் நான்
உங்களை வரவேற்பேன்
தின்னப் பிணம் தருவேன்

ஆம்,
பிணத்திடை பிணங்களோடு
பிணமாய் வாழ்பவள் நான்
பெயரில்லாப் பிணங்கள்
பெயரறியாப் பிணங்கள்
பெயரற்ற பிணங்கள்
இது எனக்கு இலகுவாக இருக்கிறது
இவற்றுடன் உங்கள்
ஊர் எல்லை தாண்ட முடியவில்லை
காவல் சாமிகள்
அந்த சாமிக்கும் காவல்கள்
அதனால் நீங்கள் வாருங்கள்

என் சிசுவொன்றழிந்து
கழியும் குருதியை விட
மாடொன்றின் பிரசவ சீழின்
வெடுக்கு நாற்றத்தை விட
கேவலமாய் மணக்கிறீர்கள்
அதனால் உங்கள் எல்லைக்குள்ளிருந்தே
சொல்லித் தாருங்கள்

உண்மையான இரவின் இருட்டு
உங்களைக் கொல்வது போல்
உங்கள் போலிப் பகல் வெளிச்சம்
பயமுறுத்துகிறது என்னை
இரைச்சலைக் காதலித்து
கலவி செய்து
பெயரற்ற பிள்ளைகளோடு அலைகிறீர்கள்
அவர்கள் நன்றாகப் பிதற்றுகிறார்கள்
கேட்டதை இறுகப் பற்றி
கேட்காததை எதிர்வு கூறி
நீங்கள் கழிப்பதைத் தொடருங்கள்
மறக்காது நினைவுபடுத்துங்கள்
எனக்கு அவர்கள் பெயரும் வேண்டும்

அந்த நெடுநாள் பூட்டிய வீட்டின்
வெம்மைக்குள் குமைந்து
வெம்பி
ஊதி
வெடிக்காதும்
வெடிக்க முடியாதும்
எலும்புகளின் மச்சைகூட கரைந்து
பிதுங்கி வழிகிறது
உங்கள் ஊன்
அது விழுமிடமெல்லாம்
புதுபுதுப் பிணங்கள்
புதிது புதிதாய்
புழுக்களாய் நெளிந்து

அடச் சீ
அர்த்தம் செத்து
அடையாளத்துக்காய் ஒட்டியபடி
உங்கள் உயிர்
பயப்படாதீர்கள்
உங்களை என்னால்
தொடக் கூட முடியாது

அதனால் உங்கள்
பெயர்களை நினைவுபடுத்த சொல்லித் தாருங்கள்
உங்கள் மரண தினத்தன்று
அவை எனக்கு நினைவிருக்கட்டும்
எனக்குப் பசிக்காதிருக்கட்டும்
கூடவே கொலை செய்தல்
அலுக்காதிருக்கட்டும்....!!!!

9 comments:

  1. குருதியின் வீச்சமும் பிரசவ சீழின் வீச்சமும் கொண்ட கவிதையின் வீச்சு
    மெய்யாகவே மிரட்டுகிறது

    ReplyDelete
  2. மிகுந்த காட்டமான வரிகள்...ஒரு நிமிடம் நிலைகுலைந்து போய்விட்டேன். ஆனாலும் ஆழமான அரசியல், அதுவும் விளிம்புநிலை மனிதர்களுக்கான அரசியல் வரிக்கு வரி... தலைமுறைத்தாண்டியும் ஒடுக்கப்பட்ட ஒரு குரல் வெடித்து சிதறும்போது...இப்படி நிகழும், எந்த அதிகாரமும், எதைக்கொண்டும், இந்த குரலை அடக்கிவிடமுடியாது

    ReplyDelete
  3. touching.
    your portrait in penniyam is very good too.
    keep going

    ReplyDelete
  4. மனம் கனக்கும் வரிகள்

    ReplyDelete
  5. அருமையான கவிதை வரிகள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. உணர்ச்சியின் வெளிப்பாடு இன்னும் சற்று கூடுதலாக இருக்கலாம். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. nice thozi...

    anbudan
    ursularagav

    ReplyDelete
  8. it is really lines are haunting ...

    cheers,
    Shangaran
    http://shangaran.wordpress.com

    ReplyDelete
  9. அழகான rhetorical poem. சமீபத்தில் நான் வாசித்த நல்ல கவிதைகளில் ஒன்று. பகிர்தலுக்கு நன்றி. தொடர்ந்து எழுதுங்கள். (கலிங்கத்து பரணியின் சில காட்சிகளை நினைவுபடுத்துகிறது...அற்புதம்)

    ReplyDelete