Sunday 6 June 2010

ஓர் இரவு...!

கறுப்பின் அடர்த்தியில்
நிறம்மாறிக் கிடக்கிறது
சற்றே முன் மரணித்த
பகலொன்றின் சடலம்!

சுடலை மரங்களின்
அமானுஷ்ய அமைதியில்
அசைய மறந்து
தூங்குகின்றன
இலைகள்;
சலனமற்ற இருளின்
தியானத்திற்குள்
மயங்கிக் கரைகிறது
ஆத்மா..!

அடங்குவதாய் நடிக்கும்
நிலத்தின் பேரெழுசசியை
ஆயுளை மணிக்கணக்கில்
அடகு வைத்தும்
ஊர்ந்தும் தவழ்ந்தும்
ஆட்சிப்படுத்துகிறது
நிசப்தம்;

ஒரு விடுதலைப் போரின்
நியாயமற்ற தீர்வை
அசரீரியில் சொல்லி
நத்தை வேகத்தில்
நகர்கிறது காற்று;

நிலமொட்டப் பறந்து
தன்னிருப்பை
தீனமாய் இசைக்கிறது
ஒரு பறவை;
நாளைக்கான ராகம்
ஒரு நூலிழையில்
பின்னிசைக்க..!

8 comments:

  1. இறுதிப்போர் முடிந்த ஊர் இரவு ...

    //அடங்குவதாய் நடிக்கும்
    நிலத்தின் பேரெழுசசியை
    ஆயுளை மணிக்கணக்கில்
    அடகு வைத்தும்
    ஊர்ந்தும் தவழ்ந்தும்
    ஆட்சிப்படுத்துகிறது
    நிசப்தம்;//

    மிகவும் மோசமாகிப் போன கடக்கவே முடியாது போன இந்த இரவு ..

    //நாளைக்கான ராகம்
    ஒரு நூலிழையில்
    பின்னிசைக்க..!//
    தப்பி பிழைத்தவை...

    நல்ல படைப்பு .. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  2. மன்னிக்கவும் இப்படி இருக்கவேண்டும் ..

    //பகலொன்றின் சடலம்//

    இறுதிப்போர் முடிந்த ஓர் இரவு ...

    //அடங்குவதாய் நடிக்கும்
    நிலத்தின் பேரெழுசசியை
    ஆயுளை மணிக்கணக்கில்
    அடகு வைத்தும்
    ஊர்ந்தும் தவழ்ந்தும்
    ஆட்சிப்படுத்துகிறது
    நிசப்தம்;//

    மிகவும் மோசமாகிப் போன கடக்கவே முடியாது போன இந்த இரவு ..

    //நாளைக்கான ராகம்
    ஒரு நூலிழையில்
    பின்னிசைக்க..!//

    தப்பி பிழைத்தவை...

    நல்ல படைப்பு .. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  3. இக்கவிதை மிகப்பிடித்திருக்கிறது தோழி. வாழ்த்துகள்! தொடருங்கள்.

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  4. வாசிக்கும் போது வார்த்தை புரிவதற்கு முன் மனதில் வலி வந்து சேர்கிறது... உங்கள் எழுத்தை என்ன வார்த்தையில் வரையரை செய்வதென்றே தெரியவில்லை...

    ReplyDelete
  5. வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி..!

    ReplyDelete
  6. வலியை பிழிந்து சொற்கள் எடுத்து கவிதை செய்திருக்கிறீர்கள்

    மீப்பெரும் துயர் படியும் வரிகள்

    ReplyDelete
  7. //கறுப்பின் அடர்த்தியில்
    நிறம்மாறிக் கிடக்கிறது
    சற்றே முன் மரணித்த
    பகலொன்றின் சடலம்//


    எழுதி கிழித்ததாய் நினைத்த மண்டையில் ஓங்கி அடித்த வரிகள்.
    பெண் சக்தியானவள்; வீர்யம் மிக்கவள்; உதாரணத்திற்கு இந்த வரிகளையும், உங்களின் கவிதைகளையும், சாட்சிக்கழைக்கலாம்!

    தொடர்ந்து எழுதுங்கள்; எழுத்து உங்களை குடித்து, எழுத்தாய் பிறப்பிப்பதில், வெற்றி காத்திருக்கிறது!

    மிக்க வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!!

    வித்யாசாகர்

    ReplyDelete
  8. மயூ மிகுந்த உன்னதமான மொழியும், கவிதையும் உங்களுக்கு சாதுரியத்தோடும், அனுபவத்தோடும் கைக்கூடி இருக்கிறது..இவற்றில் எதையும் ஒரு போதும் இழந்து விடாதீர்கள், மேலோட்டமாக பார்க்கும்போது வெறும் சிலாகிப்பு அரசியல் பேசுவதாகக் தோன்றக்கூடும், உங்கள் கவிதைக்கான அழகியல், ஆனால் வார்த்தைகளுக்கும், அதன் செரிவுகளுக்குள்ளும், நீங்கள் முன்வைக்கும் அரசியலும், அழகியலும் நுட்பமானவை, தொடர்ந்து எழுதுங்கள்..நிறைய வாசியுங்கள்...அன்பனின் வேண்டுகோள் இது

    ReplyDelete