Monday 5 April 2010

என் குட்டிப் பெறா மகளுக்கு...முதலாவது பிறந்ததின வாழ்த்துக்கள்...!!!


மென் மொட்டை
தேன் சிட்டு
இதழ் பிரித்தது - அது எம்
மனம் பிரித்து
இதய வாசலதில்
பூவாய் மலர்ந்தது!

உயிர் குழைத்து
அதைப் பருகும்
சின்ன அன்னமே - உன்
வண்ண முகம்
எண்ணமெல்லாம்
நின்று நிறையுதே!

கண்மணியே
என் கண்ணே
எங்கள் செல்வமே;
நீ வந்தாய்
வாழ்வில் நாமும்
மீளப் பிறந்தோம்!

மழை முகிலும்
மாலை வானும்
என்ன அழகு? - அடி
வர்ண மயில்
தோகை அதில்
என்ன வனப்பு?

என் கிளியே
பஞ்ச வர்ணம்
உந்தன் சிறப்பு!
அதன் ஆரம்
உன் இதழில்
சிரிப்பாய் பிறப்பு!

சிப்பி தரும்
முத்ததுவில்
என்ன இருக்கு?
வைரமதோ
உன் சிரிப்பில்
விளைந்து கிடக்கு!

நதி பாயும்
வழியெங்கும்
சிரிக்கும் வயல்கள்!
நீ இருக்கும்
என் இல்லம்
சிறக்கும் கணங்கள்!

ஒரு பெண் குழந்தை
இருக்கும் வீட்டில்
அதிசயம் நடக்கும்!
தேவதைகள்
பூமி வரும்
என்பதும் பலிக்கும்!

கடவுள் என்பது
உணரும் வரை
உண்மை இல்லை!
உன் கைகள்
தீண்டும் வரை
நான் நம்பவும் இல்லை!

என் குடும்ப
குட்டித் தீபம் - நீ
ஒளிரம்மா!
வெளிச்சமதால்
அறி"யாமை" களின்
இருட்டகற்றம்மா!

நீ பிறந்த
இந்த நாளில்
நான் பிறக்கிறேன்!
உன்னைக் கையில்
ஏந்திக் கொண்டு
மோட்சம் சுகிக்கிறேன்!

தொலைந்த உயிர்
தேடித் தேடி
பிஞ்சுக் கை
பிரிக்கிறேன்!
நீ பொத்தி வைக்கும்
என்னை எடுத்து
திறந்து பார்க்கிறேன்!

உன் மூச்சுக் காற்றுப்
போதுமம்மா
என் பாவங்கள் மாளும்;
உன் பிஞ்சுப் பாதம்
பட்டால் போதும்
என் பிறவிகள் தீரும்!

என் தமிழில்
வார்த்தை இல்லை
உந்தனைப் பாட!
என்னிடமோ
கவிதையும் இல்லை
உன் அழகினைச் சொல்ல!

கண்மணியே!
என் கண்ணே
குட்டித் தீபமே!
உன் வெளிச்சம்
அறி"யாமை"களின்
இருட்டகற்றட்டும்!

கார் முகிலே
கரை கடலே
வல்ல தென்றலே!
கொஞ்சம் நில்லுங்கள்;
மழைத் துளியே
பூமித் தாயே
இங்கே பாருங்கள்!

என் தேவதையின்
பிறப்பதனை
உரக்க சொல்கிறேன்!
அவள் ஒளிர்ந்து
உலகு சிறக்க
வாழ்த்துக் கூறுங்கள்!

11 comments:

  1. நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

    - பொன்.வாசுதேவன்

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்........

    ReplyDelete
  3. ஒரு பெண் குழந்தை
    இருக்கும் வீட்டில்
    அதிசயம் நடக்கும்!
    தேவதைகள்
    பூமி வரும்
    என்பதும் பலிக்கும்!

    yes. keep writing.

    ReplyDelete
  4. வாழ்த்துகள்

    ReplyDelete
  5. வாழ்த்துகள்.

    வாழ்வாங்கு வாழ்ந்து வளம் பல பெருக கிள்ளாய்

    ReplyDelete
  6. வாழ்த்துகள்

    ReplyDelete
  7. உங்கள் அனைவரினதும் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி..குட்டிச் செல்வம் சிறப்பாக வாழட்டும்...

    ReplyDelete
  8. நதி பாயும்
    வழியெங்கும்
    சிரிக்கும் வயல்கள்!

    nice line nathi,
    kutti paappaavukku vazhthukkal
    anbudan
    ursularagav

    ReplyDelete
  9. வாழ்த்துகள்... பாப்பாவிற்கு.!

    ReplyDelete