Monday 21 September 2009

என் தேசத்தின் தேவியே....

புல்லரிப்பதோடு நிறுத்திக் கொள்கின்றன
என் கைகள்
பல வேளைகளில் கோஷம் போடவும்
ஏன் சில வேளைகளில்
உன்னைப் பற்றிக் கவிதை கிறுக்கவும்

தலைப்புக்களில் தலையின்றிக் கிடக்கும்
தமிழினத்தைப் பார்த்து
முதல் பந்தி தாண்ட மறுக்கின்றன
என் விழிகள் அதிலேயே செத்து
கண்ணிமைக் கல்லறைகளைத்
தாமாகவே மூடுகின்றன

ஐயோ கடவுளே என்று
கதறுவதோடு நிற்கிறது
என் மனம்
இதயச் சவப்பெட்டிக்குள் இருப்பதால்
மெலிதாகவே கேட்கின்றன
அதன் முனகல்கள்

விதைத்த மனிதர்களின் தோட்டத்திலேயே
நடக்க மறுக்கும்
என் கால்கள்
மயானமான என் தேசத்தில்
எப்படிப் பதியும்
இப்போதே உதிர்கின்றன
என் விரல்கள் ஒவ்வொன்றாய்

புலம் பெயர்ந்து தொலைந்து
புதைந்தே போனது வாழ்க்கை
விட்டுப் பறந்த உயிரும்
அழுகிப் போன உடலும்
மரணித்துக் கிடக்கின்றேன் நான்

என் முகவரி தந்த
என் ஈழ தேசமே
உன் எரியும் நெருப்பில்
என் சிதைக்குக் கொஞ்சம்
கொள்ளி கிடைக்காது போயிற்றே
என் சாம்பல் தூவ
உன் நதிகள் ஒன்றிலிருந்தும்
உத்தரவு கிடைக்காது போயிற்றே

என் தேசத்தின் தேவியே
அந்நியப் பனியில்
அஸ்தியைக் கரைக்கும்
ஆசி வாங்கி வந்தவளம்மா
நான்
அதனால் தான்
உன் எல்லை தாண்டுகையிலேயே
செத்து விட்டு வந்தேன்

என் தாயே
உன்னுடன் உதிர்க்கட்டும்
என் உணர்வுகள்
நீ எரிக்கையில்
எரிக்கப் படட்டும் என் சாபங்கள்

அதுவரை பிசாசாய்த் தானும்
என்னுயிர் உன் மடி தேடி வந்தால்
இருக்க விடம்மா
உன் புளிய மரத்தில்
நீ பெற்றவள்
இது கூடவா செய்ய மாட்டாய்

3 comments:

  1. நல்லா இருக்கு மயூரா...:))
    ///அந்நியப் பனியில்
    அஸ்தியைக் கரைக்கும்
    ஆசி வாங்கி வந்தவளம்மா
    நான்///
    சுடுகிற வரிகள்

    ReplyDelete
  2. உண்மைதான்..சுடும் நிஜம்...நன்றி...

    ReplyDelete
  3. //நீ எரிக்கையில்
    எரிக்கப் படட்டும் என் சாபங்கள்//

    இதுதான் டாப்....

    ReplyDelete