Thursday 10 December 2009

தண்ணீர்ப் பாம்புகள்

ஆழ்கிணற்றுக்குள் யாரோ
அள்ளிக் கொட்டிய இருட்டைக்
கிள்ளிப் போடுவது பற்றியும்
துலாவின் வாளி விழ எழும்
பிலாக்கணத்தை நிறுத்துவது குறித்தும்
தண்ணீர்ப் பாம்புகளை விடத்
தவளைகள்தான் கவலைப்பட்டன

படிகளில் குறிக்கப்பட்ட தத்தம்
பரம்பரைப் பெயர்கள் கொண்டே அவை
நீதிமன்றக் கூடுகளில்
அழைக்கப் பட்டிருந்தன

கோப்புகளுக்கும் வாய்தாக்களுக்கும்
நீர்ப்பாம்புகள் தலையைக் காட்டின
அதில் பல பெண்களாக இருந்தன
சில வாற்பேத்தைகளும்

நிலாவின் நிழல் விழுந்த
அரைகுறை இரவொன்றில்
"பாம்புகள் படியேற"
விதிகள் செய்யப்பட்டதாக
தவளைகள் கத்தின
அடுத்த மழையில் செத்தன

பின்வந்த அமாவாசையில்
பிசைந்த இருட்டில் நின்று
பாம்புகள் தீர்ப்பைப் படித்தன
தங்களின் காதுகள்
செவிடாகிப் போனதனால்
காத்திருக்கத் தொடங்கின
வாற்பேத்தைகளுக்காக
இப்போதும்

7 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. சத்தியமா கவிதை புரியல ?

    ஆனா ஏதோ வலியின் ஒலி மட்டும் கேட்குது....

    ReplyDelete
  3. //தங்களின் காதுகள்
    செவிடாகிப் போனதனால்//

    அருமை..

    ReplyDelete
  4. :)

    முதிர்ந்த சொற்கள்

    ReplyDelete