Friday 11 December 2009

நான் இருந்தேன்

என் சோற்றுப் பருக்கைகளில்
உன் பெயர் எழுதப்பட்டு
அழிக்கப்பட்டிருக்கவேண்டும்
உண்ணும் போது
உன் நினைவு வந்தது

சாலை கடக்கையில் எனக்குக்
கை காட்டிய சிறுவன்
நீயாகத் தெரிந்தாய்
அப்போது சிரிக்கவும் செய்தாய்

இலக்கற்று அலைந்த மேகத்தில்
மழை கருக்கட்டியதை
நான் ரசித்தபோது
அந்த வெள்ளத்தில்
நீ மூழ்கிக் கொண்டிருந்தாய்

இசை மீட்டி யாசித்த
முதியவனின் வயலின்
உன் ஏந்திய கைபோல
வளைந்து தெரிந்தது
அதன் இசையில் உன் குரல்
இழைந்து இழைந்தது

மார்புறிஞ்சிக் கண்ணயர்ந்த
பிஞ்சொன்றைக் காண்கையிலே
நீ தாயிழந்து நின்று
ஓவென்று அலறியதும்

கந்தல் உடை கட்டி
காணமல் போன தந்தை தேடி
விந்தி விந்தி நீ
வீதிகளில் திரிந்ததுவும்

பெருந் தெருக்கள் தாங்கும்
நியோன் விளக்குகளில்
நின் விழியின் கண்ணீர்
தளும்பி வழிந்ததுவும்

என் அடி மனதில் ஊறி
ஊழித்தாண்டவம் ஆடி
உலுக்கிப் போட்ட போதும்
நீ என் நினைவில் இருந்தாய்

இன்னொரு கவிதை பற்றி
இந்தக் கவியூடு எண்ணி
எழுதி முடிக்க முன்
நீ மரித்திருந்தாய்
என் மகவே
அப்போதும் நான்
உன்னை நினைத்துக் கொண்டே இருந்தேன்
நினைக்க மட்டுந்தான் இருந்தேன்

3 comments:

  1. சின்னப்பயல்12 December 2009 at 01:12

    யூகிக்க முடிகிறது..இது யாரைப்பற்றி என்று..நன்று...

    ReplyDelete
  2. மிக நன்றாக பயணிக்கும் கவிதை
    தாய் தேடும் மகவாக உருப்பெருகையில் இடறுகிறது அதன் சுட்டுப் பொருள் உணரத்தருகையில்

    ஆனால் கவிதை தன்னை திறக்கத்தரும் சாவிகள் புத்துணர்வு தருகின்றன

    ReplyDelete