Tuesday, 3 March 2015

"கானல் வரி" - தமிழ்நதியின் குறுநாவல்

தமிழ்நதியின் கானல் வரி என்கின்ற குறுநாவல் 2009 ஆம் ஆண்டு வெளிவந்திருந்தது. எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களின் முன்னுரையுடன் வெளியாகிய இந்தக் குறுநாவல் பேசும் தளம்தான் நாவலை சுவாரஸ்யமானதாகவும் அதைப் பற்றி நாம் பேசவும் வைத்துவிடுகிறது. திருமணமாகிய ஒரு பெண் எழுத்தாளர் மாதவி, இன்னொரு எழுத்தாளர் மௌலியுடன் கணணி வழி தொடரும் நட்பு என்னும் உறவை ஆரம்பிக்கிறார். ஆரம்பத்திலில் எழுத்துக்கள் தொடக்கி வைத்த பாதை வழி பயணிக்கும் நட்பை, காலவோட்டத்தில் காதலாக இனங்கண்டு கொள்கின்றனர் இருவரும். கணவர் வேறு நாட்டில் பணிபுரியும் நிலையிலிருக்கும் மாதவியும், மனைவி குழந்தையை தாய்நாட்டில் விட்டுவிட்டு வேறு ஒரு இடத்தில் வேலை செய்யும் மௌலியும் தங்களுக்குரிய சிநேகத்தை கணணி வழி ஆரம்பித்து அதன் வழி பயணிக்க ஆரம்பிக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின் தனது குடும்ப நன்மைக்காகவும், குழந்தைகளுக்காகவும் என்று காரணங்கள் சொல்லி மாதவியைப் பிரிகிறான் மௌலி. வழமை போல தனித்துவிடப்படுகிறாள் மாதவி. தங்களது உறவைத் தோற்கடித்துப் தன் வழியில் பயணிக்கும் மௌலிக்கு எழுதும் கடிதங்களாக விரிகிறது நாவல். 

 நாவலின் ஆரம்பத்தில் குடும்ப அமைப்பை மறுத்தோடும், கணவணினால் மிகவும் நேசிக்கப்படுகிற, மிக சுதந்திரமாக தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்கின்ற மாதவியைக் காணக்கிடைக்கிறது. காலங்காலமாகவே குடும்ப அமைப்பைக் கட்டிக்காக்கின்ற பெரும் பொறுப்புடன் வளர்க்கப்படும் பெண் என்ற பிராணி  நிலையிலிருந்து எல்லாவற்றையும் தளர்த்தி வெளியேறும் மாதவி, ஒரு சந்தர்ப்பத்தில் தன் கணவனுக்கு தன்னால் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட புது உறவைப்பற்றித் தெரியப்படுத்திவிடுகிறாள். அவளால் வெளிப்படுத்தப்படும் நேர்மை மாதவி மேல் மரியாதையைக் கொண்டுவருகிறது. ஆயுளுக்கும் என்று எழுதப்படும் காதல்களும், கல்யாணங்களும் நேசத்தில் எழுதப்படுகின்றனவோ இல்லையோ நேர்மையில் எழுதப்பட வேண்டும். எப்போது இன்னொரு உறவு சந்தர்ப்ப சூழ்நிலைகளில் உருவாக்கப்படுகிறதோ அப்போதே அது குறித்த தெளிவை தேர்ந்துணர்ந்து, யாருக்குத் தெரியப்படுத்தாவிடினும், எம்மை பரிபூரணமாக நம்பி, காலத்துக்கும் என்று வாழத்தலைப்படும் துணைக்குத் தெரியப்படுத்திவிடுதலையும் கற்பு என்றே நான் அடையாளப்படுத்துவேன். இராமன்களை கண்டறிதல் சாத்தியப்படாத நிலையிலும், கல்லாக யுகங்கள்தோறும் காத்துக்கிடத்தல் முடியாத நிலையிலும், தனது கணவருக்குத் துரோகம் செய்துவிடக்கூடாது என்ற நிலையில் தன்னை வெளிப்படுத்தும் மனைவியாக மாதவி தன்னிலையில் நிற்கிறாள். "நானும் ராமனில்லை மாதவி, நீயும் உன்னைச்சுற்றி ஒரு நெருப்பு வளையத்தைப் போட்டுக்கொள்ளாதே" என்று மௌனமாகும் கணவன் ஆச்சரியப்படுத்துகிறான். பொருள் தேடப்புறப்ட்டுக் கணவன் சென்றுவிட, தனது உடல் மனம் சார்ந்த தேவைகளைத் தளர்த்தி, கணவன் அற்ற வீடு தரும் தனிமை, உறவுகளற்ற தனிமை, புது நாடும், புது சூழலும் தரும் தனிமை என்று எல்லாக் கொடுந்தனிமைகளுக்குள்ளும் உழழும் மாதவியை, அவள் நிலையைத் தன்னிலையோடு ஒப்பு நோக்கி அவள் ஏற்படுத்திக்கொண்ட உறவின் தேவையை புரிந்துகொள்ளும் கணவனை ஏனோ பிடித்துக்கொள்கிறது. ஆனால் தன் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் நேர்மையாகவில்லாமல், இறுதியில் மாதவியுடனான உறவுக்கும் நேர்மையில்லாமல் பிரியும் எழுத்தாளர் மௌலியை ஏனோ பிடிக்காதும் போய் விடுகிறது. எழுத்தாளர்கள், படைப்பாளிகள் என்று அறியப்படும் மக்கள் மறுத்தோடிகள் என்று தம்மை அழைத்துக்  கொள்வதும்,பின்னர் தங்களது வாழ்க்கையில் அவற்றைப் பின்பற்ற முடியாது தங்கள் மறுத்தோடும் வார்த்தைகளை வெறும் வார்த்தைகளாகப் படைப்புக்களில் மட்டும் சொல்லிவிட்டுப் போகும் போக்கை மௌலியிடமும், சாதாரண மக்களாக தங்களை வரித்துக்கொண்டவர்கள் பண்பாடு சார்ந்த கேள்விகள் தங்களை அணுகும்போது வெகு நேர்மையாக அவற்றை எதிர்கொள்வதை மாதவியின் கணவனிலும் காணக்கிடைக்கிறது. இந்தப் போராட்டம், காலத்துக்கும் பண்பாட்டுக்கும் இடையில் எப்போதும் நடந்து கொண்டிருப்பதாகவும் படுகிறது. 

குறுநாவலின் கதை நாயகன் மௌலியை, பல இடங்களில் சமூகம் கட்டியமைத்த ஆண் என்பவனின் சாதாரண நகலாகவே பார்க்கக் கிடைக்கிறது. மாதவிக்கு வைத்திருக்கும் பிற ஆன் நண்பர்களைப் பற்றிய கண்ணோட்டத்திலும் சரி மாதவியை தனக்கு சொந்தமான ஒரு பொருள் போலக் கருதி, அவள் தான் சொல்வதைக்கேட்டுத் தன்னையே மாற்றிக்கொள்ளவேண்டும் என்று நினைப்பதிலும் சரி மௌலி தன் ஆண்மையை பறைசாற்றத் தொடங்கிவிடுகிறான். இரு குழந்தைகளுக்குத் தகப்பனாய், தன் மனைவிக்குத் துணையாய் வாய்த்திருக்கும் மௌலி நம்பிக்கைகளின் வழி கட்டப்பட்ட அந்த உறவுகளை, தனது பிம்பங்களைத் திருட்டுத்தனமாக உடைத்து, மாதவியுடனான உறவை ஏற்படுத்திக் கொள்ளும் நிலையில் மாதவியின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கேள்வி எழுப்பும் நிலையைப் பார்க்கும் போது மிகவும் அபத்தமாக இருக்கிறது. மாதவியைக் கேள்வி கேட்டு, தன்னைத்தானே சிகரெட்டால் சுட்டு மாதவியை மனரீதியாக சித்திரவதைப்படுத்தும் மௌலியை நோக்கி தன் மனதுக்குள்ளாகவே, "ஏன் அப்படியிருந்தாய் மௌலி? கூப்பிடுகிற எல்லோருடனும் போய்விடுகிற ஆளா நான்?" என்று கேள்வி எழுப்புகிறாள். தன்மேலான மாதவியின் காதலில் நம்பிக்கையில்லாத மௌலியும், இவற்றையெல்லாம் தாங்கிப் போக வேண்டியநிலையில் மாதவியும் இருக்கிறாள் என்றாகும் போது, எப்படிப்பட்ட உறவு என்றாலும் பெண் என்பவள் பெண்ணாகவும், ஆண் என்பவன் ஆணாகவும் இருக்கவேண்டிய, கட்டமைக்கப்பட்ட பண்பாட்டுவழிச் சிக்கல் எப்போதும் தொடரத்தான் செய்கிறது என்பதையும் உணரத்தான் வேண்டியிருக்கிறது. 
மேலும், இந்தக் கதையில் மௌலியின் மனைவியின் நிலை என்னவாகியிருந்தது? இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகியதுடன் அவளது சுதந்திரத்தை காலாசாரமும் பண்பாடும் வழங்கும் மனைவி, தாய் என்கின்ற பட்டங்கள் பொறுப்பெடுத்துக் கொண்டனவா? தனிமையின் நிமித்தம் மௌலியால் ஒரு உறவைக் கட்டமைத்துக் கொள்ள நேரிட்டது என்றால், அப்படி ஒரு உறவைக் கட்டமைக்கும் சுதந்திரத்தை மாதவியின் கணவன் வழங்கியதைப் போல மௌலி தன் மனைவிக்கு வழங்க முன்வந்திருப்பானா? அவளின் உடல் மற்றும் மனம் சார்ந்த தேவைகள் குறித்து மௌலி அறிந்திருந்தானா? தனது நிலையுடன் ஒப்பிட்டு அவளும் ஒரு மனிதப்பிறவிதான் என்பதை உணரவாவது முற்பட்டானா? மீண்டும் மீண்டும் கலாசாரம் கட்டியமைத்த சமூகத்தில் பெரும்பாலும் பெண் என்பவள் குடும்ப அமைப்பைக் கட்டிக்காக்க வேண்டிய பிராணியாகவே கருதப்படுகிறாள் என்பதற்கு மௌலியின் மனைவியும் உதாரணமாகி விடுகிறாள். 

ஆரம்பத்தில் மறுத்தோடி என்று அறிமுகப்படுத்தப்பட்ட மாதவி, நாவலோட்டத்தில் இன்னொரு மாதவியாகவே மாறிக்கொண்டாள் என்பதை நாவல் காட்டுகிறது. தன் குடும்பம் விட்டு, தன் காதலின் வழி நேர்மையுடன் புறப்படும் மாதவி, மௌலி தனது குடும்பத்துக்கு செய்து கொண்டிருக்கின்ற துரோகத்தை மௌனமாக ஆதரிக்கவும் செய்தாள், அது என்ன விதத்தில் நியாயம் என்ற உளவியல் கேள்வியை இங்கு முன்வைக்க வேண்டியிருக்கிறது. தன் கணவனுக்கு நேர்மையாக இருக்க முனைந்த மாதவி, ஏன் மௌலியிடம் அதை எதிர்பார்க்கவில்லை? இறுதியில் மாதவியை விட்டு விலகும் மௌலிக்கு துரோகம் மிக இலகுவாக கைவருவது இதனாலும் இருக்கக்கூடும். ஏற்கனவே தனது குடும்பத்துக்குத் துரோகம் செய்வதை  எந்த விதக் குற்ற உணர்வுகளும் இன்றி செய்பவர்கள் தாம் கொண்ட உறவுக்கு நேர்மையாக இருப்பார்கள் என்று எதிர் பார்ப்பது அறிவீனம் என்பதை மாதவி ஏன் அறிந்திருக்கவில்லை? இப்படியே மறைவாக தொடரும் என்ற ரீதியில் தனது காதலைத் தொடர்ந்து எழுதத் தலைப்பட்டிருந்தாளா? எது எப்படியிருப்பினும் தங்கள் உறவின் பிரிவு என்பது ஏலவே மறைமுகமாக எழுதப்படிருந்ததை மாதவி அறிந்திருக்காமல் விட்டதும், அதன் பொருட்டு பாரம் சுமப்பதும் காலத்தின் கட்டாயாமாக நிகழ்ந்தேறுகிறது. 

தனது முப்பதாவது வயதில் தற்கொலை செய்துகொண்டு வாதைகளிடமிருந்தும், வார்த்தைகளிடமிருந்தும் தன் குழந்தைகளிடமிருந்தும் தன்னை விடுவித்துக்கொண்ட கவிஞை, படைப்பாளி சில்வியா பிளாத் சிறு வயதிலிருந்தே மன உளைச்சலால் அவதிப்பட்டுக்கொண்டிருந்தார். சிறுவயதிலேயே தந்தையை இழந்து மன உளைச்சலால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த அவரது மன அழுத்தம் இன்னும் இன்னும் மேலிட அவரது காதல் கணவன் இன்னொரு உறவைத் தேடி அவரையும், அவரது இரு குழந்தைகளையும் கைவிட்டு சென்றதும் முக்கியாமான காரணம் என்கிறது காலம். அவரும் ஒரு படைப்பாளி என்பதுவும் இங்கு குறிப்பிடத்தக்கது. "Dying is an art, Like everything else. I do it exceptionally well. I do it so it feels like hell. I do it so it feels real. I guess you could say I've a call." - மரணிப்பது எல்லாவற்றையும் போல ஒரு கலை. அதை நான் மிகவும் திறம்பட செய்வேன். அது நரகமாக உணரக்கூடியது போலவும், உண்மையானதாக உணரக்கூடியதாகவும் அதை நான் செய்துகொள்வேன். எனக்கு ஒரு அழைப்பு வந்திருப்பதாக நீங்கள் அப்போது சொல்லக்கூடும் என்று நான் எண்ணிக்கொள்கிறேன். என்றாள் அவள். தன்னை எழுத்துக்களில் வடிக்கக்கூடிய மிகச்சிறந்த கவிஞை. படைப்பாளி தனக்கு செய்யப்பட்ட துரோகத்தில் எப்படி இன்னும் மீள முடியாத அளவுக்கு சிதைந்து போகிறாள் என்பதற்கு சில்வியா பிளாத் ஒரு உதாரணம். 

கானல் வரி இதன் மறுதலையாகி நடந்தேறி விடுகிறது. துரோகங்களை இலகுவாக செய்துவிட்டு, மீண்டும் பண்பாட்டைக் காக்கும் பொருட்டு தன் மனைவியுடன் குழந்தைகளுடன் இணைந்து கொள்கிறான் மௌலி. துரோகங்கள் யார் செய்தாலும் தாங்க முடியாததாகவே இருக்கும் போது மனைவியுடன் இணைந்து அவளைக் காப்பாற்ற முனைந்த மௌலி, தன்னை நம்பிப் புறப்பட்ட மாதவியைக் கைவிட்டதும், என்ன செய்தாலும் ஆண் என்பவன் "சேறு கண்ட இடத்தில் மிதித்து தண்ணீர் கண்ட இடத்தில் கழுவி" வந்தாலும் அவன் ஆணாகி விடுகிறான். என்னதான் மறுத்தோடிகளாகப் புறப்பட்டாலும் பெண்கள் இறுதியில் பண்பாடுகளின் அவமான சின்னமாகிவிடுகிறார்கள்.  பண்பாட்டையும், கலாசாரத்தையும் காரணம் காட்டி இன்னொரு கோவலன் ஆகிவிடுகிறான் மௌலி. ஆனால் அவன் பொருட்டு புறப்பட்ட மாதவி காவியம் கண்ட இன்னொரு மாதவியாகவே தொலைந்து போகிறாள்.  


Thursday, 27 February 2014

நெடி

கையில் மந்திரக் கோலேதும் இல்லாது
மரணத்தின் நெடியைத் தேடியபடி
ஈரத்துக்குள் தூங்கும் நகரில் பயணித்த என்னை
ஓநாய்களும் துருவக்கரடிகளும்
கண்டங்கள் தாண்டி வழிநடத்தின
இலை துளிர்க்க சிலிர்த்துப் பூக்கும் மரத்தில்
காதலின் வாசமடி என்ற போது கிளுக்கிச் சிரித்து
இருக்கலாம் என்றவள் தான்
உடல் இளக மனதுள் கசியும் மூன்றாஞ் சாமத்தின் மௌனத்துக்கு
குளிரின் பச்சை மணமென்று நான் சொன்னபோது
மௌனித்திருந்தாள்
நிக்கோட்டின் வழியும் முத்தத்தின் வாசமென்று
பின்னதான இரவில் அவள் வாதாடிய நினைவு வந்தபோது
நான் துருவங்களைத் தாண்டியிருந்தேன்
மொட்டை மரங்களையும்
வெள்ளை மலைகளையும் விலத்திக் கடந்தபோது
தாழப்பதிந்து நதியாடிய கிளையிலிருந்து
பனிக்குள் உதிர்ந்து அழுகிய பூவின் சக்கு மணத்தோடு
உறைந்த நதியின் ஆழத்தில் சலசலப்பற்று கிடந்தது
தனிமை;
அந்தப்போதில்
சூரியன் குளிருக்குப் பயந்து
தயங்கித் தயங்கி மேலெழப் பார்த்தபின்
பனி  விலத்திக் கரைதட்டிய மீனுக்கு சாவின் நெடி
என்  உள்ளங்கை வியர்வையின் பிசுபிசுப்பாய் இருந்திருக்கக்கூடும்

- நன்றி உரையாடல் சஞ்சிகை 

Sunday, 2 February 2014

ஒரேகதைகள்..!

கிடுகு பதியக்கட்டிய தாழ்வாரத்தை
ஒளிந்து கடந்தது  வெயில்
கோழிக்குப் போட்ட குறுனிகளை
கொத்திக் கொண்டு திரிந்தது புலுனி
முந்தநாள் இரவில் போதை கிளர்த்தி
அடித்துப் பெய்த நிலவின் தடயங்கள் அழிந்து
வெறித்துக்  கிடந்தது முற்றம்
வெப்பமிலையும் மாவிலையும் உதிர்த்து
அறம் பாடி இழைந்தது காற்று
துமிக்காத மழையை திட்டாமல் திட்டி
உப்புமிளகாய்ச் சுளகுகளைப் பரப்பி வைத்தபடியிருந்தாள் கிழவி
வெடித்துக் கிளம்பும் அழுகையை
சுவரும் அறியாமல் அடக்கி
மண்சுவருடைத்து சுண்ணாம்பு சாப்பிடவாரம்பித்தாள்
பதின்மச்சிறுமி;

பாரிஸ் நகரத்தெருக்களில்
பொம்மையொன்றை ஆட்டுவித்துக்கொண்டிருந்தவனை
நான் கண்டேன்
பின்னொரு நாளில் புகையிரதநிலையத்திலும்
இன்னொரு பனிப்புயலிலும் அவன் நிற்கப் பார்த்தேன்
நூலிழையில் விரல் கோர்த்து அவன் அசைத்தபோது
பொம்மையின் உடல் முழுதும்
கொடிகள் முளைத்தன
பூமியோடு வேரோடிப் பிரிந்தோடிய கிளைகள்தோறும்
பொம்மையின் நூலெல்லாம் பின்னிப்  பிணைந்தது
விரல்கள்தோறும் நூல்கண்டுகளுடன்
அவன் நகர்ந்தபடியே இருந்தான்
கொடிகள் செழித்து வளர்வதாய் அவன் நம்பிய பொழுதில்
வேரோடு கிளர்ந்தது கொடி
நூல் இற்றுத் தெறிக்க
பொம்மையின் வாய் உமிழ்ந்த நீரில் முகம் நனைய நகர்ந்தவனை
மீண்டும் அதே தெருக்களில் இன்னொரு பொம்மையுடன் கண்டேன்
போதை தலைக்கேறி மயங்கிக் கிளர்ந்த பொழுதில்
ரஷ்யத் தெருக்களில் திரிந்த பொம்மலாட்டக்காரன் பற்றி
வேறொரு மொழியில் பாடிச்சரிந்தாள்
இன்னொருத்தி;

- உரையாடல் சஞ்சிகை - ஜனவரி 2014

Friday, 23 August 2013

ஆகக் கடவ..;நடுச்சாமத் திடுக்கிடலில்
அவரை கண்டேன்
அசுமாத்தங்களின்றி போர்வைக்குள் நுழைந்தவரை
யாரென்று கேட்பதுடன் அயர்ந்தேன்
ஆக
உனக்குக் கடவுளைத் தெரியாதென்றது அசரீரி
மயிர்க்கால்கள் கூச்செறிய துடித்தெழுந்து
அவர் காலடியில் அமர்ந்து கொண்டேன்

சாமங்கள் தாண்டிய குளிர்
கடவுளுக்கப்பால் கிடந்தது 

தூக்கமேயில்லை என்றேன்
கனவுகள் அந்தரித்துத் திரிகின்றன என்றும் சொல்லி
அவர் நாமங்களை உச்சரித்துச் சாய்ந்தேன்

----------

வெக்கை முகிழ்த்த பகல்

பெருமழைக்கான காத்திருப்பில்
பூளை கசியும் கண்மூடி
தனித்திருந்தாள் கிழவி
காற்றில் கைகள் துளாவி
இவளைப் பிடிக்க வந்தாள்

கடவுளே
முற்றமெல்லாம் மாம்பழங்கள்
வெம்பிப் பழுத்தவற்றை
தின்று செரித்தது மாடு

கடவுளே
கோழிப்பீ கரைந்தோடும் மண்ணை
நான் வெறுத்தேன்

கடவுளே
போறணைக்குள் தூங்கிக் கிடந்த போயிலை மணம்
என் அம்மாவிலும் வீசியது
ஈரப் பொச்சு மட்டைகளின்
தீய்ந்த மணம் காற்றில்

கடவுளே
பனையளவு தாப்பம் எங்கள் கிணறு
அதுக்குள் நிலவு விழுந்து கிடந்தது

கடவுளே
என் கொலுசை
பாம்புப் புத்துக்குள் ஒளித்து வைத்தேன்

கடவுளே
இப்படி ஒரு சாமத்தில்
நான் கடல்களை நீந்தித் தாண்டினேன்

கடவுளே
நேற்று என் கனவுகளை
மழைக்குக் கடன் கொடுத்தேன்

இன்றைக்கானவற்றை
செம்பாட்டு மண்ணுக்கு

நாளைக்கானவற்றை
வரப்பு நிறையும் மிளகாய்களுக்கு

----------

கால் உதறி விழிக்கையிலும்
கடவுள் அங்கிருந்தார்

கொடுத்தனுப்ப ஒன்றுமில்லை

குழந்தையின் எச்சில் முத்தமும்
சாம இருட்டின் ஒரு கைப்பிடியுமாய்
அவரை அனுப்பலாயிற்று

கடவுளே
இந்த அறை உன்னுடையதாயிருந்தது
இப்போது என் போர்வையும்
உனதேயாகக் கடவ

- நன்றி பெட்னா இலக்கிய மலர். 

Saturday, 3 August 2013

தனித்த வைரவர்..!


தனித்த வைரவர்..!

1.


பெரிய குளம் கரை புரண்டு
இருட்டு ஒதுங்கும் மரத்தடியில் 
வாளாதிருக்கிறார் வைரவர் 
துடித்தடங்கும் ஆட்டின் கழுத்தடியில் வழியும் 
இரத்தத்தின் செஞ்சூடு இரவில் விரவ 
மல்லாந்து வீழ்கிறது உடலம்
நான் இறைஞ்சி மண்டாடுகிறேன்
மடை புரண்டோடுகிறது சோறும் கறியும்
காலம் கரைந்து மூழ்க
முக்கித் தவிக்கின்றன நினைவுகள்
உணர்வுகள் விரயமாகி வீழ
நிர்வாணித்து நிற்கும் இந்த சொற்கள்
வைரவரின் நடுச்சாம உலாவலுடன்
புலம் பெயர்ந்தன 


2.

காரணங்கள் சொல்லி அலுத்த பொழுதில்
சூரியன் கைவிட்ட இப்பெருவெளி நிறைத்து 
சொற்களைப் பெய்கிறது மேகம்
போதை நிறைந்த கண்களில் 
நீர்த்த கனவுகளின் கிறக்கம் தீர்ந்தபாடில்லை 
வாதை சொல்லாக் கவிதை பாழ் 
மொழி பாழ் என்றேன் 
இல்லை நீயே அழிந்தாய் 
என்று ஆவேசமாடி புழுங்கும் மனதை 
கூறு போட்டு பரிமாறியதைக் குறித்தும் 
சலனமில் தாமரை குளத்தைச் சுட்டி 
தியான மந்திரங்களை உருப்போட்டதையும்
சொல்லிய பின் 
குளம் நிறையக் குவிந்த பறவைகள் 
இரத்தஞ் சொட்டும் அலகுகளும்
நீள் கால்களும் 
கொண்டு பறந்தன
கனவுகளில் துருப்பிடித்த சூலமேந்தி அலைகிறார்
தனித்த வைரவர்

- நன்றி எழுநா..

Thursday, 12 April 2012

சொல்லெனப்படும் சொல் ..!

குரல்கள் இறைந்து பாயும்
மண்டபத்தில் அமர்ந்திருக்கிறேன்
காண்ணாடி மதில்களில்
வழுக்கித் தோற்கின்றன
உதிர்க்கப்பட்ட சொற்கள்


இன்றைய ஆயிரமாவது சொல்லை
யார் சொல்லியிருக்கக்கூடும்
எந்த மொழியில்?


சிரிப்புக்குள் கரையும் சொற்கள்
காதலில் ஒளியும் சொற்கள்
சலிப்பில் ஒழியும் சொற்கள்
பொய்யில் வெட்கிக்கும் சொற்கள்
சொற்கள்
சொற்கள் மட்டும்

சூடில்லா சூரியன்
நிழலில்லா மரங்கள்
வெளியில்..;
இளவேனிலின் ஈரம்
உடலில்..;
இது/இத்யாதி தவிர்த்து
மனதின் வெப்பியாரத்தை
சொல்லிவிடக்கூடிய ஒரு சொல்
என்னிடமில்லை

சொல்லப்படாத சொற்களில்தான்
உறவுகளின் ஆயுள்
மேலுஞ் சொல்லப்படாத சொற்களே தான்
உறவுகளும்

பின்னே?

உலுக்கி உதறுகிறேன்
என்னை
நேற்றெழுதிய சொல்லில்
ஒன்றில்லை
சொல்லப்படாதவற்றின்
அர்த்தங்களும் நினைவிலில்லை 

@ Seneca College Cafe

Saturday, 10 March 2012

ஆச்சி எனப்படும் தொன்மங்களின் அரசியிடமிருந்து ஆரம்பித்து..;


சொற்கள் என்னும் வார்த்தை சில வேளைகளில் பெரும் வாதையைத் தருவதாகிறது. அவை சில சந்தர்ப்பங்களில் மனதின் ஒரு மூலையில் தோன்றி சுற்றி சுற்றி ஒரு புள்ளியையே சூழ்கின்றன. ஒரு பொழுதில் ஒரு வார்த்தை, மறு பொழுதில் மற்றொன்று, இன்னொரு பொழுதில் இன்னொன்று. மனதின் மடிப்புக்கள் தோறும் நிரம்பிக் கொள்ளும் அவை ஒரு தருணத்தில் படைப்பாகப் பிரசவிக்கப்படுகின்றன. ஒரு சொல்லை அல்லது பல சொற்களை மனதுக்குள் உருப்போட்டுக் கொண்டு நாட்கணக்குகள் பொதித்து வைத்திருப்பதும் சில சமயங்களில் நடப்பதுதான். இதில் முதல் வார்ப்பு எப்படி நடந்தது என்றும் எதனால் நடந்தது என்றும் காரணங்கள் சொல்லிவிடக்கூடியவையா என்பதுதான் தெரியவில்லை.

ஒவ்வொருவருக்கும் பாலர் பாடசாலை போய்ச் சேர்ந்த கதை என்று ஒன்று இருக்கும். சில குழந்தைகளே புதிய பள்ளிச் சூழலை ஆர்வத்துடன் எதிர்கொள்கின்றனர் அல்லது எதிர்கொள்ள முயற்சிகின்றனர். பாலர் வகுப்பில் சேர்க்கப்பட்டுப் பல மாதங்களாகியும் என்னால் இந்த வகைக்குள் அடங்கிவிட முடியவில்லை. விவசாயக் குடிகளான என் குடும்பத்தின் வயல்களிலும், தோட்டங்களிலும் சுற்றித்திரியவே நான் விரும்பியிருந்தேன். அம்மாவின் பின்னால் அலைந்து கொண்டும், வயல்களில் பிஞ்சு வெண்டிக்காய், ஈச்சம் பழம் சாப்பிட்டும் அறுத்த புகையிலை காம்புகள் காயும் தோட்டங்களில் பக்கத்து வீட்டுக் குழந்தைகளுடன் கெந்திக்கோடு விளையாடிக் கொண்டிருக்கும் வாழ்க்கையே எனக்குத் தேவையாகவிருந்தது. ஆக ஒவ்வொரு நாளும் காலையில் என் அழுகைதான் தெருவை எழுப்பியது. பாலர் பாடசாலையின் சுவர்களில் என் கதறல் எதிரொலித்து எதிர்க்க நின்ற புளிப்பு நெல்லி மரத்திலும், கிலுகிலுப்பை மரத்திலும் பட்டு அவற்றின் கிளைகளுக்குள்ளே அமர்ந்து அழிந்தது. இந்தத் துயரைப் பொறுக்க மாட்டாமல் தானாக என் பால்யத்துக்குள் நுழைந்தாள் ஆச்சி, அம்மாவின் அம்மா. அவளை எல்லோரும் ஆச்சி என்பதால் எங்களாலும் ஆச்சி என்றே அழைக்கப்பட்டாள்.

காலையில் எழுந்து என்னை எழுப்பி, வெளிக்கிடுத்தி இடுப்பில் தூக்கிக் கொள்ளும் ஆச்சி வயல் வரம்புகளில் சுலபமாக வேகமாக வெறுங்காலுடன் நடந்து பள்ளிக்கூட வாசலில் இறக்குவாள். பின் அங்கு வைத்துத் தூக்கி என்னை இடுப்பில் வைத்துக் கொண்டாள் என்றால் மீண்டும் அதே வழியால் நுழைந்து வீட்டு முற்றத்தில் இறக்குவாள். பாலர் வகுப்பு நடக்கும் அந்த மூன்று மணித்தியாலங்களும் என் கண்ணில் படுமாறு கிளைத்த நெல்லி மரத்தின் கீழ் கட்டியிருந்த சீமெந்துக் கட்டுகளில் இருந்து வெற்றிலை போட்டுத் துப்பிக் கொண்டிருப்பாள். அவளை அடிக்கடி பார்த்துக் கொண்டே நான் வகுப்பில் அமர்ந்திருப்பேன். ஆனால் என் அழுகை நின்றுவிட்டது. என்னைச் சுற்றியிருக்கும் குழந்தைகளையும், புதிய சூழலையும் நான் உணர்ந்து கொள்ள முற்பட்டேன். அந்தப் புதுச் சூழல் நான் விரும்பிய வயலையும், தோட்டத்தையும், பறவைகளையும் என்னிடமிருந்து விலக்கி அவற்றை கைவேலையாக செய்து சுவரில் தொங்கப்போட வைத்தன. ஆனால் நான் முன்போல அழவில்லை. அடிக்கடி என் தொன்மங்களைப் புதைத்து வைத்திருப்பவளை யன்னல் கம்பிகளுக்கால் எட்டிப்பார்த்தபடியே அவற்றைக் கீறினேன், ஒட்டினேன். சுவரிலும் தொங்கவிட்டேன்.

ஆச்சிக்கு அப்போதே எண்பத்தியிரண்டு வயதாகிவிட்டிருந்தது. இரண்டாவது வகுப்பு மட்டுமே படித்த அவளுக்குள் கதைகளும், நினைவுகளும், புனைவுகளும் கொட்டிக் கிடந்தன. அம்மாவின் ஊர் தீவாக இருந்தது. கடலில் குட்டியாக மாங்காய் வடிவத்தில் கிடக்கும் இலங்கையின் வட பகுதியில் வெள்ளைத்தாளில் மையால் தொட்டு வைத்த குட்டிப் புள்ளிப் போல இருந்தது அம்மாவின் ஊர். அங்கு பிறந்து இரண்டு வயதிலே இடம்பெயர்ந்துவிட்ட என் நினைவுகளில் தன் ஊரை கட்டிஎழுப்பித் தந்தாள் ஆச்சி. அவள் சொல்லச் சொல்ல என்னுள் எழுந்தன அந்த ஊரின் மனிதர்களும் வீடுகளும், வயல்களும் தோட்டங்களும், மண் தெருக்களும். இரவு ஊரையே காவல் காக்கும் ஐயனாரும், பறக்கும் பாம்பும், காவு வாங்கும் புளியமரமும். போதாக்குறைக்கு பட்டினத்தார் பாடல்களையும், தேவாரங்களையும் பாடிக் கொண்டே சுடு மண்ணில் செருப்பில்லாது குடு குடுவென்று தூக்கிக் கொண்டு திரிந்தாள் அவள். ஆச்சி சொன்ன கதைகளும் நினைவுகளும் மனதின் மடிப்புகளுக்குள் புதைந்து போயின. படிந்து கொள்ள முடியாமல் உழன்று திரிந்தன.

ஈழத்தில் எண்பதுகளில் பிறந்த என்னையொத்தவர்களுக்கு யுத்தம், இடப்பெயர்வு, பிரிவு, மரணம் எல்லாம் பிறப்பிலேயே இயல்பாக அறிமுகமானவை. பிறந்த ஊரைவிட்டு இடம்பெயர்ந்திருந்தாலும் எனது ஆறு வயது வரைக்கும் யாழில் ஒரு இடம் வாய்த்திருந்தது. பின்னதாக நடந்த பெரும் இடப்பெயர்வில் யாழ்ப்பாணத்தில் பெரும்பகுதியைத் துடைத்தவாறு மக்கள் இடம்பெயர்ந்துவிட தொடங்கியது இடைவிடாத இடப்பெயர்வு. ஏலவே நிறைந்த நினைவுகளையும், தொன்மத்தின் கதைகளையும் காவித் திரிந்த மனது ஒரு பொழுதில் வார்ப்பாகப் படைக்க ஆரம்பித்தது. அந்தப் பொழுதைப் பிரிவுகள் தொடக்கித் தந்தன. எந்த இடப்பெயர்விலும், போர்ச் சூழலிலும் உறவுகளைப் பிரியாத குடும்பத்தை உயிர் வாழ்தலுக்கான இறுதிச் சாத்தியம் என்றிருந்த புலம்பெயர்வுகள் பிரிக்க நான் எனக்கான படைத்தலை ஆரம்பித்தேன். முதல் வார்ப்பு "வாழ்க்கை என்னும் காகித ஓடம்" என்றாரம்பித்தது.

என் தொன்மங்களின் ராணி சொன்ன கதைகளை வேறு வேறு ஊர்களிலிருந்து வேறு வேறு கதை சொல்லிகள் பலதரப்பட்டவாறு புனைந்தனர். அநேகமானவை எனது ஊரையும், மனதின் ஆழ்ந்த இருட்டுக்குள் அமிழாமல் உரசித் திரியும் நினைவுகளையும் புரட்டிப் போட்டன. அவற்றை கனவுகளில் காணவும், நிஜத்தில் தேடவும் வைத்து வதைத்தன. எல்லா சித்திரவதைகளுக்கும் புத்தகங்களின் வார்த்தைகளுக்குள் மருந்திருந்தது. பதின்மங்களை நிரப்பிய புத்தகங்களே என்னைத் திசை திருப்பின.

கண்டங்கள் தாண்டிப் பறந்தாவது தம் உயிர் வாழ்தலுக்கான சாத்தியங்களை உறுதிப்படுத்த முனையும் ஈழத்தமிழர்களின் பிரதிநிதியாய் என்னாலும் அதைத்தான் செய்ய முடிந்தது. நீண்ட காத்திருப்புக்கள் என்னை என் உறவுகளிடம் மீண்டும் சேர்த்தாலும் இந்த தேசத்தில் என் இருப்பு இன்னொரு இடப்பெயர்வாகவே நினைவுகளை ஆட்கொண்டிருக்கிறது என்றால் மறுப்பதற்கில்லை. முற்றுமுழுதாக வேறுபட்ட காலநிலையிலிருந்து தொடங்கும் அனுபவங்களைப் புனையும் எனக்கான ஒரு மொழியை நான் தினமும் கற்றுக் கொள்கிறேன். அந்த மொழி கொண்டு அவற்றை நாட்குறிப்புக்களாகப் பதிந்து கொள்ள முயற்சிக்கிறேன். இந்த முயற்சிகளே இந்த இடப்பெயர்வை வாழ்தலுக்கான சாத்தியத்தை அதிகரிக்கும் ஒரு முயற்சியாகவும் மாற்றுகின்றன. அவை ஆச்சி சொன்ன கதைகளுடன் வெகுவாகவே முரண்படுகின்றன எனவிருந்தபோதும் முரண்பாடுகளுடன் முரண்படுவதும் மீள அவற்றைத் திருத்திப் படைப்பதுவும் வாழ்தலை சுவைப்படுத்துகின்றன என்பதுதான் உண்மை. என்னவிருப்பினும் மனவிடுக்குளில் படியாமல் ஆழ்ந்த மௌனத்துக்குள் திரியும் சொற்களை எப்போதாவது உணர முடிகிறது. அந்த வார்த்தைகளைக் கொண்டு ஒன்றை வார்த்து விட முடியுமானால் இந்த இடப்பெயர்வும் முடிவிற்கு வந்துவிடுமென்றும் தோன்றாமல் இல்லை.

படைப்புக்கள் தன்னைப் படைத்த படைப்பாளிக்கே உருவாக்கித்தரும் உலகம் மிகவும் விசித்திரமானது. ஒரு நொடியை அல்லது குறித்த நுண்மையான உணர்வைப் பதிந்து கொள்ள முற்படும்போது சிலபொழுதுகளில் நிறைவும் சில பொழுதுகளில் நிறைவின்மையும் கிடைப்பது படைப்பாளிக்கு சாதாரணமாகக் கிடைக்கும் அனுபவமாகிறது. ஒரு குறித்த மனநிலையில் தேர்ந்த படைப்பாக இருக்கும் ஒன்று இன்னொரு பொழுதில் வேறொரு வாசிப்பனுபவத்தைத் தருகிறது. இந்த சார்பு நிலைகளைத் தாண்டி படைப்புக்களைத் தேர்ந்து நூலாகத் தொகுப்பதென்பது இலகுவானதாக இல்லை.  கவிதைகளைத் தொகுப்பதென்ற எண்ணம் ஆரம்பத்திலேயே தோன்றியிருந்தது என்றாலும் சாத்தியப்பட்டதென்னவோ சமீபத்தில்தான். கவிதைகளையும் வேறு சில படைப்புக்களையும் சிற்றிதழ்களும், இலக்கிய சஞ்சிகைகளும் வெளியிட்டதுடன் தொடர்ந்து இயங்குவதற்கான தளத்தையும் ஏற்படுத்தித்தந்தன. அவற்றின் ஊக்கமும் நண்பர்களின் அக்கறையும் எனது படைப்புக்களை ஒவ்வொரு முறையும் மெருகேற்ற உதவியதுடன் தொடர்ந்து மெருகேற்றிக் கொள்ளவும் உதவுகின்றன.

முதலாவது தொகுப்பான "நான் பேசிக் கொண்டிருந்தபோது பெய்திராத மழை" என்னும் கவிதை நூலை வடலி பதிப்பகத்தினர் வெளியீடு செய்திருந்தனர்.  அதன் என்னுரையில் குறிப்பிட்டது போல தொடர்ந்து இடம்பெயர்ந்து பழக்கப்பட்டுவிட்டிருந்த உடலுக்கும் மனதுக்கும் புலம் பெயர்தல் என்பது பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்திவிடப் போவதில்லை என்று எண்ணியிருந்த போதிலும் அது அவ்வளவு எதிர்பார்த்தது போலல்ல என்பதுதான் நிஜம். வாழ்தலுக்கான சாத்தியக்கூறுகளை அதிகரித்துவிடப் பனி(ணி)யைக் கரைத்துப் பாதை செய்து பயணிக்க வேண்டியிருக்கும் இந்தப் புலம்பெயர் தேசத்திலிருந்து எனது முதலாவது கவிதைத்தொகுப்பு வெளிவந்தது குறித்து உண்மையிலேயே மனதளவில் எந்தவொரு கிளர்ச்சியையும் உணர்ந்து கொள்ள முடியவில்லை. பயணங்கள் தம்பாட்டுக்கு நீண்டு கொண்டே செல்வதான பிரம்மை தொடர அவற்றின் வழி செல்வது அன்றி வேறொன்றையும் செய்து விட முடியாத கையாலாகாத தனத்தையே இப்போது காலம் என் முன்னே வைத்திருக்கிறது என்றாலும் மறுப்பதற்கில்லை. வாழ்வு குறித்தும் எனது சுயதேடல் குறித்தும் எந்தவகையான முடிவை அல்லது தேடல் பரப்பை நான் கண்டுகொள்ளலாம் என்பதும் விரிந்து கொண்டே செல்ல எனது வாழ்க்கைக்கான குறிப்பை எனது மொழி எழுதிப் போகுமெனின் அதுவே எனது எழுத்தின் வெற்றியாகவும் அமையும்.

- "புத்தகம் பேசுது" மார்ச் மாத இதழில் வெளியாகிய பதிவு.