Monday 5 October 2009

அம்மா


கர்ப்பம் தந்த அதே கதகதப்பை
இப்போதும் பொழிகின்றன
உன் பேரன்புச் சிறகுகள்
நித்தமும் பிரவாகமெடுக்கும்
உன் கருணைச் சுழிக்குத்தான்
எத்துணை ஆழம்

அட்சய பாத்திரங்கள் அத்தனையும்
கையிலே வைத்திருக்கிறாய்
போதாதற்கு உன் புன்னகை வேறு

பருவ காலங்கள் அத்தனையும்
உன்னைக் கேட்டே வருகின்றன
நீயே காவலுக்கிருப்பதால்

எதற்கும் யோசிப்பதா
கணமும் கவலைப்படுவதா
எனக்காக அதையும் நீயே செய்கிறாய்

என் வலிகள் உனதாக்கி
சுகங்கள் மட்டுமே எனதாக்கி வாழ
உன்னால் மட்டுமே முடிகிறது

அம்மா

கோடி வார்த்தைகளை
என் தமிழ் தந்திடினும்
திணறித் தான் போனேன்
உன்னைக் கவிதையாய் வடிக்க

முடிவில்லாது நீளும்
உன் பேரன்பு போலவே
முடிக்க முடியாது நீள்கின்றன
உன்னைப் பற்றிய என் கவிதைகள்

9 comments:

  1. *//கோடி வார்த்தைகளை
    என் தமிழ் தந்திடினும்
    திணறித் தான் போனேன்
    உன்னைக் கவிதையாய் வடிக்க//*

    அம்மாவைப் பற்றி இரசித்து எழுதியுள்ளீர்கள்.

    ReplyDelete
  2. //அம்மா
    .............
    .............
    முடிவில்லாது நீளும்
    உன் பேரன்பு போலவே
    முடிக்க முடியாது நீள்கின்றன
    உன்னைப் பற்றிய என் கவிதைகள் //

    மயூரா,

    உன் அம்மாவாய் நான் இருந்திருக்கலாம். உன் கவிதைக்காக...!

    ReplyDelete
  3. எல்லா இடத்திலும் கடவுள் இருக்க முடியாது என்பதால்தான் இறைவன் தாயை படைத்தான்...
    தாயை பற்றிய கவிதைக்கு எப்போதும் மரணமில்லை...
    மகேந்திரன்

    ReplyDelete
  4. ///அட்சய பாத்திரங்கள் அத்தனையும்
    கையிலே வைத்திருக்கிறாய்
    போதாதற்கு உன் புன்னகை வேறு///

    அம்மாவின் புன்னகையை இவ்விதம் அளந்த பெண் நீயாகத்தான் இருப்பாய்!
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. மொழி வளம்! உணர்வில் ஊறிய சொற்களின் அணிவகுப்பு...
    கவிதை அழகு

    ReplyDelete
  6. //அட்சய பாத்திரங்கள் அத்தனையும்
    கையிலே வைத்திருக்கிறாய்
    போதாதற்கு உன் புன்னகை வேறு//

    கையிலே வைத்திருக்கிறாய் என்பதோடு கண்ணிலே வைத்திருக்கிறாய் என்றும் வாசித்துப் பார்த்தேன். அம்மாவின் முகம் சட்டென முன்வந்து முத்தங்களாய்ப் பொழிகிறது.

    இந்த வரிகளே முழுக்கவிதைக்குமான சுருக்கம் என்றும் சொல்லலாம்.

    //கோடி வார்த்தைகளை
    என் தமிழ் தந்திடினும்
    திணறித் தான் போனேன்
    உன்னைக் கவிதையாய் வடிக்க

    முடிவில்லாது நீளும்
    உன் பேரன்பு போலவே
    முடிக்க முடியாது நீள்கின்றன
    உன்னைப் பற்றிய என் கவிதைகள்//

    முடிக்க முடியாமல் எது திருப்தியற்று திணறி நிற்கிறதோ அதுதான் உண்மையான உணர்வுகளின் கவிதை.

    சொல்லுக்கு சில சிறகுகள்தாம். சொல்லாமைக்கு கோடி கோடி சிறகுகள்.

    அன்புடன் புகாரி

    ReplyDelete