Thursday, 15 October 2009

காதலின் மேல் ஒரு நட்பு


நீளும் மயான வெளிகளில்
தூங்கிக் கிடந்த நிசப்தத்தைக்
கிழித்துப் போட்டதல்லால்
வேறொன்றும் செய்யவில்லை
உன் குரல்

துயின்றிருந்த நினைவுக் குழந்தைகளை
மீண்டும் தாலாட்டுவதுதான்
பெரும் பாடாகிப் போனது எனக்கு

பொட்டல் வெளிகளில்
கொட்டும் மேகத்துக்கும் எனக்கும்
யாதொரு சம்பந்தங்களும் இல்லை
என் உயிர் நனைக்கும் துளியை
எந்த வானமும் கருக் கொள்ளவில்லை

கண்கள் வழியும் கனவுகளை
வாசிக்கத்தான் உன்னால் முடியும்
என் மன ஊருணியின் ஆழங்கள்
ஆபத்தானவை
அவற்றுக்குப் பலி கொடுக்க
உன்னைத் தயார் படுத்த முடியாது
என் சுயங்களைப் பதுக்கி
உன் கருத்துக்களில் வாழ
என்னால் முடியாது

என் காதலுக்கான ஒரு கவிதையில்
பிறக்கும் காதலை
இன்னொன்றுக்காக நொடியில்
கொன்றே போடுகிறேன்
இது நிஜத்தில் முடியுமென்றிருக்கிறாயா?

உன் காதல்
என் நட்பு
சிறு இடைவெளியில்
நூற்றாண்டுகளுக்கான தூரம்
என்னால் கடக்க முடியாது

வழிப் போக்கர்களை பிரிகையிலே
வலித்துப் போகும் போது
நட்பைப் பிரிதல்
வலிக்காதா என்ன?

வலிகளில் வடியும் குருதியின்
பசைகளில் ஒட்டி இருக்கிறது
மீந்த நேசம்
இன்னொரு சந்தர்ப்பத்தில்
இன்னொரு காதலில்
உனக்கு நிச்சயம் பயன்படட்டும்

சற்று விலகு
தள்ளி நின்று அழு
என் மயானங்களின் நிசப்தத்தில்
தூங்கும் என் நினைவுகளை
மீண்டும் எழுப்பாதே
நான் இவ்வளவுதான்
இப்படித்தான்....!

8 comments:

 1. //உன் காதல்
  என் நட்பு
  சிறு இடைவெளியில்
  நூற்றாண்டுகளுக்கான தூரம்
  என்னால் கடக்க முடியாது //

  மயூரா,

  உங்கள் கவிதைகளினூடே வெகுதூரம் பயணிக்கும் பாக்கியம் கிடைத்திருக்கிறது.
  சிந்திக்கத் தூண்டும் உணர்வின் சிறப்பான வெளிப்பாடு.

  ஆனாலும், கவிதையின் வரிகள் இன்னும் காய்ச்சப்பட வேண்டும்.

  ReplyDelete
 2. ////சற்று விலகு
  தள்ளி நின்று அழு
  என் மயானங்களின் நிசப்தத்தில்
  தூங்கும் என் நினைவுகளை
  மீண்டும் எழுப்பாதே
  நான் இவ்வளவுதான்
  இப்படித்தான்

  எனக்குத் துரோகங்கள்
  தெரிய வேண்டாம்
  தெரியப்படுத்தப் படவும் வேண்டாம்////

  தோழி மயூரா,

  தங்களின் கவிதையில் அடர்த்தியான அர்த்தமான வார்த்தைகள் உண்டு. அதுவும் மேற்குறிப்பிட்ட வரிகளில் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு. ஆனால், சொல்ல வந்த விடயத்தை குறுகிய எல்லைக்குள் சொல்லிவிடுங்கள். அது உங்கள் கவிதையை இன்னும் வீரியமாக்கும். தங்களின் எழுத்துலக வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. //என் காதலுக்கான ஒரு கவிதையில்
  பிறக்கும் காதலை
  இன்னொன்றுக்காக நொடியில்
  கொன்றே போடுகிறேன்//

  ம்ம்ம் இதைத்தான் நதியானவள் என்பதா?

  மிகவும் வித்தியாசமான வரிகள். இதுவரை எழுதப்படாத நிலைப்பாடு என்றும் சொல்வேன்.

  எவ்வுணர்வாயினும் சரி, கல்லிலும் வேர்விடும் உறுதியானதாய் இருந்தால் நிச்சயம் அது மேன்மையின் மடிகளில்தான்.

  கவிதை முழுவதும் நதியின் ஓட்டம் கடலுக்குரிய அலைகளைக் கொண்டதாய் இருக்கிறது.

  என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

  அன்புடன் புகாரி

  ReplyDelete
 4. தொடா்ந்தும் சிறந்த கவிதையை உங்களால் எழுத முடியும்..உங்கள் கவிதைக்கு உயிர் உண்டு தோழி..

  ReplyDelete
 5. உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் என் நன்றிகள்....

  ReplyDelete
 6. கவிப்பூக்கள் அத்தனையும் அழகு

  ReplyDelete
 7. என் மயானங்களின் நிசப்தத்தில்
  தூங்கும் என் நினைவுகளை
  மீண்டும் எழுப்பாதே
  நான் இவ்வளவுதான்
  இப்படித்தான் -

  அருமையான வரிகள் நன்கு உணர்ந்து எழுதி இருக்கிறீர்கள்


  காதலை கீழே போட்டு
  நட்புக் கோபுரங் கட்டும்
  துரோகங்கள் எனக்கு வேண்டாம் -சொல்லவந்த எண்ணங்களில் முரண் இருப்பதாக தோன்றுகிறது .நட்பை கீழே போட்டு
  காதல் கோபுரங் கட்டும்,துரோகங்கள் எனக்கு வேண்டாம் என்று இருக்க வேண்டும் என்று நினைக்கிறன் தவறாய் இருந்தால் திருத்துங்கள்

  ReplyDelete
 8. வார்த்தை பிரயோகங்கள்..அருமை..!!
  தவறுகளை...
  சகித்துகொள்பவள்
  காதலியாகிறாள்...!!
  தவறுகளுக்காக
  சண்டை இடுகிறவள்
  தோழியாகிறாள்..!!

  ReplyDelete