Tuesday 3 March 2015

"கானல் வரி" - தமிழ்நதியின் குறுநாவல்

தமிழ்நதியின் கானல் வரி என்கின்ற குறுநாவல் 2009 ஆம் ஆண்டு வெளிவந்திருந்தது. எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களின் முன்னுரையுடன் வெளியாகிய இந்தக் குறுநாவல் பேசும் தளம்தான் நாவலை சுவாரஸ்யமானதாகவும் அதைப் பற்றி நாம் பேசவும் வைத்துவிடுகிறது. திருமணமாகிய ஒரு பெண் எழுத்தாளர் மாதவி, இன்னொரு எழுத்தாளர் மௌலியுடன் கணணி வழி தொடரும் நட்பு என்னும் உறவை ஆரம்பிக்கிறார். ஆரம்பத்திலில் எழுத்துக்கள் தொடக்கி வைத்த பாதை வழி பயணிக்கும் நட்பை, காலவோட்டத்தில் காதலாக இனங்கண்டு கொள்கின்றனர் இருவரும். கணவர் வேறு நாட்டில் பணிபுரியும் நிலையிலிருக்கும் மாதவியும், மனைவி குழந்தையை தாய்நாட்டில் விட்டுவிட்டு வேறு ஒரு இடத்தில் வேலை செய்யும் மௌலியும் தங்களுக்குரிய சிநேகத்தை கணணி வழி ஆரம்பித்து அதன் வழி பயணிக்க ஆரம்பிக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின் தனது குடும்ப நன்மைக்காகவும், குழந்தைகளுக்காகவும் என்று காரணங்கள் சொல்லி மாதவியைப் பிரிகிறான் மௌலி. வழமை போல தனித்துவிடப்படுகிறாள் மாதவி. தங்களது உறவைத் தோற்கடித்துப் தன் வழியில் பயணிக்கும் மௌலிக்கு எழுதும் கடிதங்களாக விரிகிறது நாவல். 

 நாவலின் ஆரம்பத்தில் குடும்ப அமைப்பை மறுத்தோடும், கணவணினால் மிகவும் நேசிக்கப்படுகிற, மிக சுதந்திரமாக தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்கின்ற மாதவியைக் காணக்கிடைக்கிறது. காலங்காலமாகவே குடும்ப அமைப்பைக் கட்டிக்காக்கின்ற பெரும் பொறுப்புடன் வளர்க்கப்படும் பெண் என்ற பிராணி  நிலையிலிருந்து எல்லாவற்றையும் தளர்த்தி வெளியேறும் மாதவி, ஒரு சந்தர்ப்பத்தில் தன் கணவனுக்கு தன்னால் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட புது உறவைப்பற்றித் தெரியப்படுத்திவிடுகிறாள். அவளால் வெளிப்படுத்தப்படும் நேர்மை மாதவி மேல் மரியாதையைக் கொண்டுவருகிறது. ஆயுளுக்கும் என்று எழுதப்படும் காதல்களும், கல்யாணங்களும் நேசத்தில் எழுதப்படுகின்றனவோ இல்லையோ நேர்மையில் எழுதப்பட வேண்டும். எப்போது இன்னொரு உறவு சந்தர்ப்ப சூழ்நிலைகளில் உருவாக்கப்படுகிறதோ அப்போதே அது குறித்த தெளிவை தேர்ந்துணர்ந்து, யாருக்குத் தெரியப்படுத்தாவிடினும், எம்மை பரிபூரணமாக நம்பி, காலத்துக்கும் என்று வாழத்தலைப்படும் துணைக்குத் தெரியப்படுத்திவிடுதலையும் கற்பு என்றே நான் அடையாளப்படுத்துவேன். இராமன்களை கண்டறிதல் சாத்தியப்படாத நிலையிலும், கல்லாக யுகங்கள்தோறும் காத்துக்கிடத்தல் முடியாத நிலையிலும், தனது கணவருக்குத் துரோகம் செய்துவிடக்கூடாது என்ற நிலையில் தன்னை வெளிப்படுத்தும் மனைவியாக மாதவி தன்னிலையில் நிற்கிறாள். "நானும் ராமனில்லை மாதவி, நீயும் உன்னைச்சுற்றி ஒரு நெருப்பு வளையத்தைப் போட்டுக்கொள்ளாதே" என்று மௌனமாகும் கணவன் ஆச்சரியப்படுத்துகிறான். பொருள் தேடப்புறப்ட்டுக் கணவன் சென்றுவிட, தனது உடல் மனம் சார்ந்த தேவைகளைத் தளர்த்தி, கணவன் அற்ற வீடு தரும் தனிமை, உறவுகளற்ற தனிமை, புது நாடும், புது சூழலும் தரும் தனிமை என்று எல்லாக் கொடுந்தனிமைகளுக்குள்ளும் உழழும் மாதவியை, அவள் நிலையைத் தன்னிலையோடு ஒப்பு நோக்கி அவள் ஏற்படுத்திக்கொண்ட உறவின் தேவையை புரிந்துகொள்ளும் கணவனை ஏனோ பிடித்துக்கொள்கிறது. ஆனால் தன் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் நேர்மையாகவில்லாமல், இறுதியில் மாதவியுடனான உறவுக்கும் நேர்மையில்லாமல் பிரியும் எழுத்தாளர் மௌலியை ஏனோ பிடிக்காதும் போய் விடுகிறது. எழுத்தாளர்கள், படைப்பாளிகள் என்று அறியப்படும் மக்கள் மறுத்தோடிகள் என்று தம்மை அழைத்துக்  கொள்வதும்,பின்னர் தங்களது வாழ்க்கையில் அவற்றைப் பின்பற்ற முடியாது தங்கள் மறுத்தோடும் வார்த்தைகளை வெறும் வார்த்தைகளாகப் படைப்புக்களில் மட்டும் சொல்லிவிட்டுப் போகும் போக்கை மௌலியிடமும், சாதாரண மக்களாக தங்களை வரித்துக்கொண்டவர்கள் பண்பாடு சார்ந்த கேள்விகள் தங்களை அணுகும்போது வெகு நேர்மையாக அவற்றை எதிர்கொள்வதை மாதவியின் கணவனிலும் காணக்கிடைக்கிறது. இந்தப் போராட்டம், காலத்துக்கும் பண்பாட்டுக்கும் இடையில் எப்போதும் நடந்து கொண்டிருப்பதாகவும் படுகிறது. 

குறுநாவலின் கதை நாயகன் மௌலியை, பல இடங்களில் சமூகம் கட்டியமைத்த ஆண் என்பவனின் சாதாரண நகலாகவே பார்க்கக் கிடைக்கிறது. மாதவிக்கு வைத்திருக்கும் பிற ஆன் நண்பர்களைப் பற்றிய கண்ணோட்டத்திலும் சரி மாதவியை தனக்கு சொந்தமான ஒரு பொருள் போலக் கருதி, அவள் தான் சொல்வதைக்கேட்டுத் தன்னையே மாற்றிக்கொள்ளவேண்டும் என்று நினைப்பதிலும் சரி மௌலி தன் ஆண்மையை பறைசாற்றத் தொடங்கிவிடுகிறான். இரு குழந்தைகளுக்குத் தகப்பனாய், தன் மனைவிக்குத் துணையாய் வாய்த்திருக்கும் மௌலி நம்பிக்கைகளின் வழி கட்டப்பட்ட அந்த உறவுகளை, தனது பிம்பங்களைத் திருட்டுத்தனமாக உடைத்து, மாதவியுடனான உறவை ஏற்படுத்திக் கொள்ளும் நிலையில் மாதவியின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கேள்வி எழுப்பும் நிலையைப் பார்க்கும் போது மிகவும் அபத்தமாக இருக்கிறது. மாதவியைக் கேள்வி கேட்டு, தன்னைத்தானே சிகரெட்டால் சுட்டு மாதவியை மனரீதியாக சித்திரவதைப்படுத்தும் மௌலியை நோக்கி தன் மனதுக்குள்ளாகவே, "ஏன் அப்படியிருந்தாய் மௌலி? கூப்பிடுகிற எல்லோருடனும் போய்விடுகிற ஆளா நான்?" என்று கேள்வி எழுப்புகிறாள். தன்மேலான மாதவியின் காதலில் நம்பிக்கையில்லாத மௌலியும், இவற்றையெல்லாம் தாங்கிப் போக வேண்டியநிலையில் மாதவியும் இருக்கிறாள் என்றாகும் போது, எப்படிப்பட்ட உறவு என்றாலும் பெண் என்பவள் பெண்ணாகவும், ஆண் என்பவன் ஆணாகவும் இருக்கவேண்டிய, கட்டமைக்கப்பட்ட பண்பாட்டுவழிச் சிக்கல் எப்போதும் தொடரத்தான் செய்கிறது என்பதையும் உணரத்தான் வேண்டியிருக்கிறது. 
மேலும், இந்தக் கதையில் மௌலியின் மனைவியின் நிலை என்னவாகியிருந்தது? இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகியதுடன் அவளது சுதந்திரத்தை காலாசாரமும் பண்பாடும் வழங்கும் மனைவி, தாய் என்கின்ற பட்டங்கள் பொறுப்பெடுத்துக் கொண்டனவா? தனிமையின் நிமித்தம் மௌலியால் ஒரு உறவைக் கட்டமைத்துக் கொள்ள நேரிட்டது என்றால், அப்படி ஒரு உறவைக் கட்டமைக்கும் சுதந்திரத்தை மாதவியின் கணவன் வழங்கியதைப் போல மௌலி தன் மனைவிக்கு வழங்க முன்வந்திருப்பானா? அவளின் உடல் மற்றும் மனம் சார்ந்த தேவைகள் குறித்து மௌலி அறிந்திருந்தானா? தனது நிலையுடன் ஒப்பிட்டு அவளும் ஒரு மனிதப்பிறவிதான் என்பதை உணரவாவது முற்பட்டானா? மீண்டும் மீண்டும் கலாசாரம் கட்டியமைத்த சமூகத்தில் பெரும்பாலும் பெண் என்பவள் குடும்ப அமைப்பைக் கட்டிக்காக்க வேண்டிய பிராணியாகவே கருதப்படுகிறாள் என்பதற்கு மௌலியின் மனைவியும் உதாரணமாகி விடுகிறாள். 

ஆரம்பத்தில் மறுத்தோடி என்று அறிமுகப்படுத்தப்பட்ட மாதவி, நாவலோட்டத்தில் இன்னொரு மாதவியாகவே மாறிக்கொண்டாள் என்பதை நாவல் காட்டுகிறது. தன் குடும்பம் விட்டு, தன் காதலின் வழி நேர்மையுடன் புறப்படும் மாதவி, மௌலி தனது குடும்பத்துக்கு செய்து கொண்டிருக்கின்ற துரோகத்தை மௌனமாக ஆதரிக்கவும் செய்தாள், அது என்ன விதத்தில் நியாயம் என்ற உளவியல் கேள்வியை இங்கு முன்வைக்க வேண்டியிருக்கிறது. தன் கணவனுக்கு நேர்மையாக இருக்க முனைந்த மாதவி, ஏன் மௌலியிடம் அதை எதிர்பார்க்கவில்லை? இறுதியில் மாதவியை விட்டு விலகும் மௌலிக்கு துரோகம் மிக இலகுவாக கைவருவது இதனாலும் இருக்கக்கூடும். ஏற்கனவே தனது குடும்பத்துக்குத் துரோகம் செய்வதை  எந்த விதக் குற்ற உணர்வுகளும் இன்றி செய்பவர்கள் தாம் கொண்ட உறவுக்கு நேர்மையாக இருப்பார்கள் என்று எதிர் பார்ப்பது அறிவீனம் என்பதை மாதவி ஏன் அறிந்திருக்கவில்லை? இப்படியே மறைவாக தொடரும் என்ற ரீதியில் தனது காதலைத் தொடர்ந்து எழுதத் தலைப்பட்டிருந்தாளா? எது எப்படியிருப்பினும் தங்கள் உறவின் பிரிவு என்பது ஏலவே மறைமுகமாக எழுதப்படிருந்ததை மாதவி அறிந்திருக்காமல் விட்டதும், அதன் பொருட்டு பாரம் சுமப்பதும் காலத்தின் கட்டாயாமாக நிகழ்ந்தேறுகிறது. 

தனது முப்பதாவது வயதில் தற்கொலை செய்துகொண்டு வாதைகளிடமிருந்தும், வார்த்தைகளிடமிருந்தும் தன் குழந்தைகளிடமிருந்தும் தன்னை விடுவித்துக்கொண்ட கவிஞை, படைப்பாளி சில்வியா பிளாத் சிறு வயதிலிருந்தே மன உளைச்சலால் அவதிப்பட்டுக்கொண்டிருந்தார். சிறுவயதிலேயே தந்தையை இழந்து மன உளைச்சலால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த அவரது மன அழுத்தம் இன்னும் இன்னும் மேலிட அவரது காதல் கணவன் இன்னொரு உறவைத் தேடி அவரையும், அவரது இரு குழந்தைகளையும் கைவிட்டு சென்றதும் முக்கியாமான காரணம் என்கிறது காலம். அவரும் ஒரு படைப்பாளி என்பதுவும் இங்கு குறிப்பிடத்தக்கது. "Dying is an art, Like everything else. I do it exceptionally well. I do it so it feels like hell. I do it so it feels real. I guess you could say I've a call." - மரணிப்பது எல்லாவற்றையும் போல ஒரு கலை. அதை நான் மிகவும் திறம்பட செய்வேன். அது நரகமாக உணரக்கூடியது போலவும், உண்மையானதாக உணரக்கூடியதாகவும் அதை நான் செய்துகொள்வேன். எனக்கு ஒரு அழைப்பு வந்திருப்பதாக நீங்கள் அப்போது சொல்லக்கூடும் என்று நான் எண்ணிக்கொள்கிறேன். என்றாள் அவள். தன்னை எழுத்துக்களில் வடிக்கக்கூடிய மிகச்சிறந்த கவிஞை. படைப்பாளி தனக்கு செய்யப்பட்ட துரோகத்தில் எப்படி இன்னும் மீள முடியாத அளவுக்கு சிதைந்து போகிறாள் என்பதற்கு சில்வியா பிளாத் ஒரு உதாரணம். 

கானல் வரி இதன் மறுதலையாகி நடந்தேறி விடுகிறது. துரோகங்களை இலகுவாக செய்துவிட்டு, மீண்டும் பண்பாட்டைக் காக்கும் பொருட்டு தன் மனைவியுடன் குழந்தைகளுடன் இணைந்து கொள்கிறான் மௌலி. துரோகங்கள் யார் செய்தாலும் தாங்க முடியாததாகவே இருக்கும் போது மனைவியுடன் இணைந்து அவளைக் காப்பாற்ற முனைந்த மௌலி, தன்னை நம்பிப் புறப்பட்ட மாதவியைக் கைவிட்டதும், என்ன செய்தாலும் ஆண் என்பவன் "சேறு கண்ட இடத்தில் மிதித்து தண்ணீர் கண்ட இடத்தில் கழுவி" வந்தாலும் அவன் ஆணாகி விடுகிறான். என்னதான் மறுத்தோடிகளாகப் புறப்பட்டாலும் பெண்கள் இறுதியில் பண்பாடுகளின் அவமான சின்னமாகிவிடுகிறார்கள்.  பண்பாட்டையும், கலாசாரத்தையும் காரணம் காட்டி இன்னொரு கோவலன் ஆகிவிடுகிறான் மௌலி. ஆனால் அவன் பொருட்டு புறப்பட்ட மாதவி காவியம் கண்ட இன்னொரு மாதவியாகவே தொலைந்து போகிறாள்.  


No comments:

Post a Comment