Saturday, 10 March 2012

ஆச்சி எனப்படும் தொன்மங்களின் அரசியிடமிருந்து ஆரம்பித்து..;


சொற்கள் என்னும் வார்த்தை சில வேளைகளில் பெரும் வாதையைத் தருவதாகிறது. அவை சில சந்தர்ப்பங்களில் மனதின் ஒரு மூலையில் தோன்றி சுற்றி சுற்றி ஒரு புள்ளியையே சூழ்கின்றன. ஒரு பொழுதில் ஒரு வார்த்தை, மறு பொழுதில் மற்றொன்று, இன்னொரு பொழுதில் இன்னொன்று. மனதின் மடிப்புக்கள் தோறும் நிரம்பிக் கொள்ளும் அவை ஒரு தருணத்தில் படைப்பாகப் பிரசவிக்கப்படுகின்றன. ஒரு சொல்லை அல்லது பல சொற்களை மனதுக்குள் உருப்போட்டுக் கொண்டு நாட்கணக்குகள் பொதித்து வைத்திருப்பதும் சில சமயங்களில் நடப்பதுதான். இதில் முதல் வார்ப்பு எப்படி நடந்தது என்றும் எதனால் நடந்தது என்றும் காரணங்கள் சொல்லிவிடக்கூடியவையா என்பதுதான் தெரியவில்லை.

ஒவ்வொருவருக்கும் பாலர் பாடசாலை போய்ச் சேர்ந்த கதை என்று ஒன்று இருக்கும். சில குழந்தைகளே புதிய பள்ளிச் சூழலை ஆர்வத்துடன் எதிர்கொள்கின்றனர் அல்லது எதிர்கொள்ள முயற்சிகின்றனர். பாலர் வகுப்பில் சேர்க்கப்பட்டுப் பல மாதங்களாகியும் என்னால் இந்த வகைக்குள் அடங்கிவிட முடியவில்லை. விவசாயக் குடிகளான என் குடும்பத்தின் வயல்களிலும், தோட்டங்களிலும் சுற்றித்திரியவே நான் விரும்பியிருந்தேன். அம்மாவின் பின்னால் அலைந்து கொண்டும், வயல்களில் பிஞ்சு வெண்டிக்காய், ஈச்சம் பழம் சாப்பிட்டும் அறுத்த புகையிலை காம்புகள் காயும் தோட்டங்களில் பக்கத்து வீட்டுக் குழந்தைகளுடன் கெந்திக்கோடு விளையாடிக் கொண்டிருக்கும் வாழ்க்கையே எனக்குத் தேவையாகவிருந்தது. ஆக ஒவ்வொரு நாளும் காலையில் என் அழுகைதான் தெருவை எழுப்பியது. பாலர் பாடசாலையின் சுவர்களில் என் கதறல் எதிரொலித்து எதிர்க்க நின்ற புளிப்பு நெல்லி மரத்திலும், கிலுகிலுப்பை மரத்திலும் பட்டு அவற்றின் கிளைகளுக்குள்ளே அமர்ந்து அழிந்தது. இந்தத் துயரைப் பொறுக்க மாட்டாமல் தானாக என் பால்யத்துக்குள் நுழைந்தாள் ஆச்சி, அம்மாவின் அம்மா. அவளை எல்லோரும் ஆச்சி என்பதால் எங்களாலும் ஆச்சி என்றே அழைக்கப்பட்டாள்.

காலையில் எழுந்து என்னை எழுப்பி, வெளிக்கிடுத்தி இடுப்பில் தூக்கிக் கொள்ளும் ஆச்சி வயல் வரம்புகளில் சுலபமாக வேகமாக வெறுங்காலுடன் நடந்து பள்ளிக்கூட வாசலில் இறக்குவாள். பின் அங்கு வைத்துத் தூக்கி என்னை இடுப்பில் வைத்துக் கொண்டாள் என்றால் மீண்டும் அதே வழியால் நுழைந்து வீட்டு முற்றத்தில் இறக்குவாள். பாலர் வகுப்பு நடக்கும் அந்த மூன்று மணித்தியாலங்களும் என் கண்ணில் படுமாறு கிளைத்த நெல்லி மரத்தின் கீழ் கட்டியிருந்த சீமெந்துக் கட்டுகளில் இருந்து வெற்றிலை போட்டுத் துப்பிக் கொண்டிருப்பாள். அவளை அடிக்கடி பார்த்துக் கொண்டே நான் வகுப்பில் அமர்ந்திருப்பேன். ஆனால் என் அழுகை நின்றுவிட்டது. என்னைச் சுற்றியிருக்கும் குழந்தைகளையும், புதிய சூழலையும் நான் உணர்ந்து கொள்ள முற்பட்டேன். அந்தப் புதுச் சூழல் நான் விரும்பிய வயலையும், தோட்டத்தையும், பறவைகளையும் என்னிடமிருந்து விலக்கி அவற்றை கைவேலையாக செய்து சுவரில் தொங்கப்போட வைத்தன. ஆனால் நான் முன்போல அழவில்லை. அடிக்கடி என் தொன்மங்களைப் புதைத்து வைத்திருப்பவளை யன்னல் கம்பிகளுக்கால் எட்டிப்பார்த்தபடியே அவற்றைக் கீறினேன், ஒட்டினேன். சுவரிலும் தொங்கவிட்டேன்.

ஆச்சிக்கு அப்போதே எண்பத்தியிரண்டு வயதாகிவிட்டிருந்தது. இரண்டாவது வகுப்பு மட்டுமே படித்த அவளுக்குள் கதைகளும், நினைவுகளும், புனைவுகளும் கொட்டிக் கிடந்தன. அம்மாவின் ஊர் தீவாக இருந்தது. கடலில் குட்டியாக மாங்காய் வடிவத்தில் கிடக்கும் இலங்கையின் வட பகுதியில் வெள்ளைத்தாளில் மையால் தொட்டு வைத்த குட்டிப் புள்ளிப் போல இருந்தது அம்மாவின் ஊர். அங்கு பிறந்து இரண்டு வயதிலே இடம்பெயர்ந்துவிட்ட என் நினைவுகளில் தன் ஊரை கட்டிஎழுப்பித் தந்தாள் ஆச்சி. அவள் சொல்லச் சொல்ல என்னுள் எழுந்தன அந்த ஊரின் மனிதர்களும் வீடுகளும், வயல்களும் தோட்டங்களும், மண் தெருக்களும். இரவு ஊரையே காவல் காக்கும் ஐயனாரும், பறக்கும் பாம்பும், காவு வாங்கும் புளியமரமும். போதாக்குறைக்கு பட்டினத்தார் பாடல்களையும், தேவாரங்களையும் பாடிக் கொண்டே சுடு மண்ணில் செருப்பில்லாது குடு குடுவென்று தூக்கிக் கொண்டு திரிந்தாள் அவள். ஆச்சி சொன்ன கதைகளும் நினைவுகளும் மனதின் மடிப்புகளுக்குள் புதைந்து போயின. படிந்து கொள்ள முடியாமல் உழன்று திரிந்தன.

ஈழத்தில் எண்பதுகளில் பிறந்த என்னையொத்தவர்களுக்கு யுத்தம், இடப்பெயர்வு, பிரிவு, மரணம் எல்லாம் பிறப்பிலேயே இயல்பாக அறிமுகமானவை. பிறந்த ஊரைவிட்டு இடம்பெயர்ந்திருந்தாலும் எனது ஆறு வயது வரைக்கும் யாழில் ஒரு இடம் வாய்த்திருந்தது. பின்னதாக நடந்த பெரும் இடப்பெயர்வில் யாழ்ப்பாணத்தில் பெரும்பகுதியைத் துடைத்தவாறு மக்கள் இடம்பெயர்ந்துவிட தொடங்கியது இடைவிடாத இடப்பெயர்வு. ஏலவே நிறைந்த நினைவுகளையும், தொன்மத்தின் கதைகளையும் காவித் திரிந்த மனது ஒரு பொழுதில் வார்ப்பாகப் படைக்க ஆரம்பித்தது. அந்தப் பொழுதைப் பிரிவுகள் தொடக்கித் தந்தன. எந்த இடப்பெயர்விலும், போர்ச் சூழலிலும் உறவுகளைப் பிரியாத குடும்பத்தை உயிர் வாழ்தலுக்கான இறுதிச் சாத்தியம் என்றிருந்த புலம்பெயர்வுகள் பிரிக்க நான் எனக்கான படைத்தலை ஆரம்பித்தேன். முதல் வார்ப்பு "வாழ்க்கை என்னும் காகித ஓடம்" என்றாரம்பித்தது.

என் தொன்மங்களின் ராணி சொன்ன கதைகளை வேறு வேறு ஊர்களிலிருந்து வேறு வேறு கதை சொல்லிகள் பலதரப்பட்டவாறு புனைந்தனர். அநேகமானவை எனது ஊரையும், மனதின் ஆழ்ந்த இருட்டுக்குள் அமிழாமல் உரசித் திரியும் நினைவுகளையும் புரட்டிப் போட்டன. அவற்றை கனவுகளில் காணவும், நிஜத்தில் தேடவும் வைத்து வதைத்தன. எல்லா சித்திரவதைகளுக்கும் புத்தகங்களின் வார்த்தைகளுக்குள் மருந்திருந்தது. பதின்மங்களை நிரப்பிய புத்தகங்களே என்னைத் திசை திருப்பின.

கண்டங்கள் தாண்டிப் பறந்தாவது தம் உயிர் வாழ்தலுக்கான சாத்தியங்களை உறுதிப்படுத்த முனையும் ஈழத்தமிழர்களின் பிரதிநிதியாய் என்னாலும் அதைத்தான் செய்ய முடிந்தது. நீண்ட காத்திருப்புக்கள் என்னை என் உறவுகளிடம் மீண்டும் சேர்த்தாலும் இந்த தேசத்தில் என் இருப்பு இன்னொரு இடப்பெயர்வாகவே நினைவுகளை ஆட்கொண்டிருக்கிறது என்றால் மறுப்பதற்கில்லை. முற்றுமுழுதாக வேறுபட்ட காலநிலையிலிருந்து தொடங்கும் அனுபவங்களைப் புனையும் எனக்கான ஒரு மொழியை நான் தினமும் கற்றுக் கொள்கிறேன். அந்த மொழி கொண்டு அவற்றை நாட்குறிப்புக்களாகப் பதிந்து கொள்ள முயற்சிக்கிறேன். இந்த முயற்சிகளே இந்த இடப்பெயர்வை வாழ்தலுக்கான சாத்தியத்தை அதிகரிக்கும் ஒரு முயற்சியாகவும் மாற்றுகின்றன. அவை ஆச்சி சொன்ன கதைகளுடன் வெகுவாகவே முரண்படுகின்றன எனவிருந்தபோதும் முரண்பாடுகளுடன் முரண்படுவதும் மீள அவற்றைத் திருத்திப் படைப்பதுவும் வாழ்தலை சுவைப்படுத்துகின்றன என்பதுதான் உண்மை. என்னவிருப்பினும் மனவிடுக்குளில் படியாமல் ஆழ்ந்த மௌனத்துக்குள் திரியும் சொற்களை எப்போதாவது உணர முடிகிறது. அந்த வார்த்தைகளைக் கொண்டு ஒன்றை வார்த்து விட முடியுமானால் இந்த இடப்பெயர்வும் முடிவிற்கு வந்துவிடுமென்றும் தோன்றாமல் இல்லை.

படைப்புக்கள் தன்னைப் படைத்த படைப்பாளிக்கே உருவாக்கித்தரும் உலகம் மிகவும் விசித்திரமானது. ஒரு நொடியை அல்லது குறித்த நுண்மையான உணர்வைப் பதிந்து கொள்ள முற்படும்போது சிலபொழுதுகளில் நிறைவும் சில பொழுதுகளில் நிறைவின்மையும் கிடைப்பது படைப்பாளிக்கு சாதாரணமாகக் கிடைக்கும் அனுபவமாகிறது. ஒரு குறித்த மனநிலையில் தேர்ந்த படைப்பாக இருக்கும் ஒன்று இன்னொரு பொழுதில் வேறொரு வாசிப்பனுபவத்தைத் தருகிறது. இந்த சார்பு நிலைகளைத் தாண்டி படைப்புக்களைத் தேர்ந்து நூலாகத் தொகுப்பதென்பது இலகுவானதாக இல்லை.  கவிதைகளைத் தொகுப்பதென்ற எண்ணம் ஆரம்பத்திலேயே தோன்றியிருந்தது என்றாலும் சாத்தியப்பட்டதென்னவோ சமீபத்தில்தான். கவிதைகளையும் வேறு சில படைப்புக்களையும் சிற்றிதழ்களும், இலக்கிய சஞ்சிகைகளும் வெளியிட்டதுடன் தொடர்ந்து இயங்குவதற்கான தளத்தையும் ஏற்படுத்தித்தந்தன. அவற்றின் ஊக்கமும் நண்பர்களின் அக்கறையும் எனது படைப்புக்களை ஒவ்வொரு முறையும் மெருகேற்ற உதவியதுடன் தொடர்ந்து மெருகேற்றிக் கொள்ளவும் உதவுகின்றன.

முதலாவது தொகுப்பான "நான் பேசிக் கொண்டிருந்தபோது பெய்திராத மழை" என்னும் கவிதை நூலை வடலி பதிப்பகத்தினர் வெளியீடு செய்திருந்தனர்.  அதன் என்னுரையில் குறிப்பிட்டது போல தொடர்ந்து இடம்பெயர்ந்து பழக்கப்பட்டுவிட்டிருந்த உடலுக்கும் மனதுக்கும் புலம் பெயர்தல் என்பது பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்திவிடப் போவதில்லை என்று எண்ணியிருந்த போதிலும் அது அவ்வளவு எதிர்பார்த்தது போலல்ல என்பதுதான் நிஜம். வாழ்தலுக்கான சாத்தியக்கூறுகளை அதிகரித்துவிடப் பனி(ணி)யைக் கரைத்துப் பாதை செய்து பயணிக்க வேண்டியிருக்கும் இந்தப் புலம்பெயர் தேசத்திலிருந்து எனது முதலாவது கவிதைத்தொகுப்பு வெளிவந்தது குறித்து உண்மையிலேயே மனதளவில் எந்தவொரு கிளர்ச்சியையும் உணர்ந்து கொள்ள முடியவில்லை. பயணங்கள் தம்பாட்டுக்கு நீண்டு கொண்டே செல்வதான பிரம்மை தொடர அவற்றின் வழி செல்வது அன்றி வேறொன்றையும் செய்து விட முடியாத கையாலாகாத தனத்தையே இப்போது காலம் என் முன்னே வைத்திருக்கிறது என்றாலும் மறுப்பதற்கில்லை. வாழ்வு குறித்தும் எனது சுயதேடல் குறித்தும் எந்தவகையான முடிவை அல்லது தேடல் பரப்பை நான் கண்டுகொள்ளலாம் என்பதும் விரிந்து கொண்டே செல்ல எனது வாழ்க்கைக்கான குறிப்பை எனது மொழி எழுதிப் போகுமெனின் அதுவே எனது எழுத்தின் வெற்றியாகவும் அமையும்.

- "புத்தகம் பேசுது" மார்ச் மாத இதழில் வெளியாகிய பதிவு.

1 comment:

  1. தங்கள் பதிவை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.
    http://blogintamil.blogspot.com.au/2012/03/blog-post_16.html

    ReplyDelete