Sunday 4 March 2012

"ஆறாவடு"

"87 இல் தொடக்கி 2003 வரையான இந்த இரண்டு 'அமைதி"க் காலங்களுக்கு இடையே இந்த நாவலின் கதை நகர்கிறது." என்று தன்னுரையில் குறிப்பிடும் சயந்தனின் வரிகளுடன் நாவலுக்குள் நுழைகிறேன்.

"நீர்கொழும்புக்கு அருகேயான கடற்கரையில் குந்தியிருந்து இத்தாலிக்கு எந்த ரூட்டால் போவது என்று இவன் யோசித்துக் கொண்டிருந்தபோது இரவாகியிருந்தது."

இப்படித்தான் நாவல் தொடங்குகிறது. ஆரவாரங்கள், சொற்களால் கட்டப்படும் அலங்காரத் தோரணங்கள் இன்றி ஆரம்பிக்கும் நாவல் முழுவதும் எங்கும் மிகையான அலங்கார சொற்களின் தடங்கள் இல்லை.

இந்திய இராணுவம் யாழ்ப்பாணத்தில் நிலை கொண்டிருந்தகாலத்தில் விடுதலை இயக்கமொன்றில் உயிர்ப்பயம் காட்டப்பட்டுக் கட்டாயமாக இணைக்கப்பட்டு பின் விடுதலையாகி விடுதலைப்புலிகளுடன் இணையும் அமுதன் என்ற கதாபாத்திரத்தின் அனுபவங்களையும், அவன் சார்ந்த மக்களின், ஊரின் கதையையும் ஆறாவடு பேசுகிறது.

"யாழ்ப்பாணத்திற்குப் பாதை திறக்க என்று புறப்பட்ட ஆமி, கடைசியில் எந்த பஸ்ஸிற்கு டிக்கெட் கிடைக்கிறதோ அங்கேயே போகலாம் என்ற மாதிரியான நினைப்பில் நிலை கொண்டிருந்தான். இங்காலே சனங்கள் நிலைகொள்ளாமல் இருந்தார்கள்." பக்-74


"ஓர் இரவு நேரச் செய்தியைக் கோகுலன் வாசித்துக் கொண்டிருந்தபோது அருகில் குண்டுவிழும் சத்தங்கள் கேட்டன. கொஞ்ச நேர அமைதிக்குப் பிறகு கோகுலன் மீண்டும் செய்தியை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார்."  பக்-75

இப்படியாக நாவல் முழுவதும் ஒருவித எள்ளல் தொனியுடன் கதை சொல்லும் கதைசொல்லி சலிப்படையாது வாசிப்பவரை தன் கதையுடன் பயணிக்கவைக்கிறார். எள்ளல் சுவையுடன் படைப்புக்களை எழுதுவது ஆசிரியரின் தனித்தன்மையாக அறியப்பட்டிருப்பினும் இந்த நாவலில் எழுத்தாளரால் கையாளப்பட்ட மொழியானது நாவல் தொட்டு நகரும் அரசியல் நிகழ்வுகள், போராட்டாங்களுக்கிடையிலான மக்களதும், போராளிகளதும் வாழ்க்கை போன்ற கனதியான உணச்சிபூர்வமான தளங்களுக்கிடையில் மிகவும் நுணுக்கமாகவும், இலகுவாகவும் பயணிப்பது மிகவும் சிறப்பாக அமைந்திருக்கிறது. நாவலின் ஏதோ ஒரு பகுதியிலாவது பாத்திரங்களின் வார்த்தைகளில், நினைவுகளில், அனுபவங்களில் ஈழத்துப் பிரதிநிதியாக வாசகரைப் பொருத்தக்கூடியதாக இருப்பதும் நாவலை பலப்படுத்துகிறது.

ஈழப் படைப்புலகில் வெளிவரும் படைப்புக்கள் ஒவ்வொன்றும் தங்களுக்கென்று அடையாளப்படுத்தப்பட்ட அரசியலூடாகவே அணுகப்படுவது கண்கூடு. படைப்புக்களை விடுதலைப்புலிகள் ஆதரவான படைப்புக்கள் அல்லது எதிரானவை என்ற இரண்டு வகைக்குள்ளாக அவை அடக்கப்படுவதும், புறக்கணிக்கப்படுவதும் இலக்கிய உலகில் நடந்து கொண்டிருக்கும் தொடர் நிகழ்வுகள் என்றால் மறுப்பதற்கில்லை. இந்த சூழ்நிலையில் ஈழத்துப் படைப்புக்களாக வெளிவந்த ஷோபா சக்தியின் "கொரில்லா" மற்றும் விமல் குழந்தை வேல் அவர்களின் "கசகரணம்" ஆகிய நாவல்கள் அரசியல் சார்ந்த எழுத்துக்களாக மிகவும் கவனிக்கப்பட்டன.

நாவல்கள் பேசும் வரலாற்று, அரசியல் நிகழ்வுகள் தவிர்ந்து அந்த சூழலுக்குள் வாழும் சாதாரண பொது மக்களது கதை எந்தளவுக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என்ற கேள்வி இருந்து கொண்டேயிருக்கும் நிலையில் சயந்தனின் "ஆறாவடு" அதனை தன் பங்கிற்கு செய்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். உதாரணமாக விடுதலைப்புலிகளுக்கு மறைமுகமாக உதவிகள் செய்தும், அவர்களைக் காப்பாற்றியும் வரும் மக்கள் இடம் பெயரவேண்டுமென்று வெளிக்கிடும்போது தங்களிடையே பயணிக்க நேரிடும் காயப்பட்ட போராளிகளின் வாகனத்திற்கு "நீங்களும் எங்களோடைதான் வரோணுமே.. மேலாலை அவன் கண்டானென்றால் நாங்களும் சிதறித்தான் சாக வேணும்" என்று ஒரு உரையாடலாக நாவலாசிரியர் அதை பதிவு செய்கிறார். மக்களது மனநிலை மாற்றங்களையும் அவர்களது உடனடித்தேவைகளின் நிமித்தம் தங்கள் முடிவுகளை எடுத்துக் கொள்ளும் தன்மையும் நாவலின் பல பகுதிகளில் உரையாடல்கள், சம்பவங்களூடு பதியப்பட்டிருக்கின்றன. விடுதலைப்புலிகளுக்கும் மக்களுக்கும் இருந்த உறவின் தன்மைகளை வேறு வேறு இடங்களில் சொல்லிப்போகும் ஆசிரியரின் இன்னொரு உருவந்தான் நேரு ஐயரோ என்ற எண்ணமும் தோன்றி மறைகிறது.

"பள்ளிப்பிள்ளைகளை ஏன் இணைக்கிறீர்கள்?  "நீயே சொல்லு.. நீங்கள் செய்றதெல்லாம் சரியெண்டு நினைக்கிறியோ? போன்ற கேள்விகளோடும் "குடை கொடி ஆலவட்டம் செங்கோல் என்று சனங்களிட்டை இருந்து நீங்கள் தூரப் போய்க் கொண்டிருக்கிறியள்" என்று மக்களின் பிரதிநிதியாய் கருத்துக்களோடும் விடுதலைப்புலிகளை நெருங்கும் நேரு ஐயாவிற்கு போராளியாக இருக்கும் அமுதனின் பதில் பெரும்பாலும் "ஐயா, இது நெருக்கடிக் காலம், அண்ணைக்கு எல்லாம் தெரியும், மேலிடத்தில் இதைப்பற்றிக் கதைக்கிறோம்" என்றவாறாக இருக்கிறது.
"ஆறாவடு" நாவல் பேசும் அரசியல் பல தளங்களில் நிகழ்கிறது. மக்களுக்காக என்று உருவாக்கப்பட்ட இயக்கங்களும், அரசியல் அமைப்புக்களும் மக்களிடமிருந்து விலகிப்போன தருணங்களை இந்தவகையில் நேரு ஐயாவின் பாத்திரப்படைப்பில் படைப்பாளி சரியாகவே கணித்திருக்கிறார். சகோதரப்படுகொலைகளை அமுதனின் அனுபவங்கள் மூலம் காட்சிப்படுத்தும் படைப்பாளி இன்னொரு பத்திரமான பெரியையா மூலம் இப்படி சொல்கிறார். "அவனுக்கு நினைவு தெரிஞ்சு இது தான் ஆமி, இதுதான் இயக்கம், இதுதான் துவக்கு என்று அறிய முதலே நீங்கள் மற்ற இயக்கங்களை முடிச்சுப் புதைச்சிட்டீங்க." போர் நிறுத்தக் காலப்பகுதியில் நேரு ஐயாவின் நடவடிக்கைகளை விபரிக்கும் போதும் மக்களின் மனநிலையே காணக் கிடைக்கிறது. இவ்வாறாக புலி எதிர்ப்பு, புலி சார்பு என்று வகைப்படும் இலக்கியங்களுக்குள் அடங்கிவிடாமல் மக்கள் பார்வையிலிருந்தும் அரசியலைப் பதிந்திருப்பது நாவலின் சிறப்புக்களில் ஒன்றெனலாம்.

தொடர்ந்து, நாவலின் பாத்திரப் படைப்புக்களிலும், சம்பவங்களின் பதிவுகளிலும் பல நேரங்களில் தொடர்பிலாமலே இருக்கின்றன. அதாவது நாவல் ஒன்றிற்கு அடிப்படையாக இருக்கும் பாத்திரங்களை உருவாக்குதல், அவற்றை அவர் சார்ந்த உறவு, மற்றும் அனுபவங்களின் அடிப்படையில் கட்டியெழுப்புதல், கதை நிகழுமிடம் பற்றிய வர்ணனைகள் போன்றவற்றை "ஆறாவடு" தளர்த்தியிருக்கிறது. நாவலில் இந்திய இராணுவத்தால் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட தேவி, போராளிகளுக்கு உதவி செய்து எதிர்பாராமல் குண்டொன்றை வெடிக்க வைத்து இறக்க நேரிடும் நிலாமதி, தாயை வீட்டில் விட்டு இடம்பெயர்ந்து மீண்டும் தாயைத் தேடி வரும் போது ஊனம் வடியும் எலும்புக்கூடை கண்டடையும் சிவராசன், சாதி பற்றிப் பேசும் கோயில் சொந்தக்காரரை போராளிகளினூடு தண்டிக்கும் இளைஞன் என்று பாத்திரங்கள் தன்னியல்பாக நாவலின் ஒவ்வொரு பகுதியிலும் இணைந்து அந்தப் பகுதியிலேயே விடைபெற்றுப் போகிறார்கள். சிறுகதை ஒன்றுக்கு இருக்கக்கூடிய கட்டமைப்பு இயல்புகளுடன் அமைந்திருக்கும் இந்தப் பகுதிகளை தனித்தனி சிறுகதைகளாகக்கூட அணுக முடிகிறது. நாவலின் இந்தப் பகுதிகளை மக்களின் வாழ்க்கையாகப் பார்க்க முடியும் அதே நேரத்தில் ஒட்டு மொத்த நாவலையும் நுண்ணிய அரசியல் இணைத்து நிற்கிறது.

நாவலின் முழுதும் பல வரலாற்று சம்பவங்கள் விரவிக் கிடக்கின்றன.அவற்றைத் தரவுகளாகத் தராமல் சம்பவங்களுடன் பாத்திரங்களுடன் பொருத்திப் புனைவினூடு எழுதியிருக்கக் காணலாம். உதாரணமாக "நல்லவேளையாக அதற்கு ஐந்து நாட்கள் பிந்தி சிங்கக்கோடியை ரத்வத்தை ஏற்றினார். சிங்கக்கொடிக்குப் பக்கத்தில் நந்திக்கொடியொன்றை தம்பு இராமலிங்கம் ஏற்றினார். நான்கு மாதம் பிந்தி தென்மராட்சியிருந்தும் வடமராட்சியிளிர்ந்தும் இயக்கம் வெளியேறியது. சனங்கள் திரும்பவும் யாழ்ப்பாணம் போனார்கள். அதற்கு மூன்று மாதம் பிந்தி தம்பு இராமலிங்கத்தை வீட்டில் வைத்து இயக்கம் சுட்டது. அதற்கு ஒரு மாதம் பிந்தி செம்மணி செக்பொயிண்டில் கிருசாந்தியின் சைக்கிளை இராணுவம் மறித்தது."  தொடர்ந்து நடந்த சம்பவங்களின் தரவுகள். ஆனால் நாவலின் ஒரு பகுதியின் தொடர்ச்சியாக இது பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எனினும் இத்தனை விபரங்களும் முக்கியமானவை, அவற்றைக் குறிப்பிடவேண்டுமென்ற பதற்றத்தைக் காணக்கூடியதாகவும் இருக்கிறது.

மேலும், இறுதியாக வரும் பகுதிகளில் கடலில் தங்களுடன் பயணிக்கும் சிங்களப் போராளிகளின் உணர்வுகளையும் உரையாடல்களூடு பதிந்திருக்கிறார் படைப்பாளி. வறுமையின் நிமித்தம் இராணுவத்தில் இணையும் இளைஞர்களின் எண்ணமெல்லாம் தங்கள் தங்கள் குடும்பத்துக்குத் தங்களால் கிடைக்கப்போகும் சம்பளத்தைப் பற்றியதாக இருக்கிறது. அமுதன் போரில் பங்கேற்றபோது கைப்பற்றப்பட்ட இராணுவ முகாமில் கிடக்கும் இராணுவத்தினரின் உடைமைகளுக்குள் பொதித்து வைக்கப்பட்டிருக்கும் குழந்தையின் படத்தையும், துணைகளின் படங்களையும் சாட்சிகளாக சொல்லிப் போகும் நாவலாசிரியர் உயிருக்குப் பயந்து கடைசி முயற்சியை செய்து நகரும் இராணுவ வீரன் ஒருவனைத் தப்ப விட்டுத் தனது பாவக் கணக்கைத் தீர்த்துக் கொள்ள முயற்சிக்கிறார். தொடர்ந்து பண்டாரா என்ற சக பயணி மற்றும் முன்னாள் இராணுவம் என்ற பாத்திரத்தினூடாக "பண்டாராவுக்கு புலிகளின் பெரிய தலைவர்களின் நினவு நாட்கள் ஓரளவுக்கு மனப்பாடமாயிருந்தன. அன்றைய நாட்களின் விடியற்காலையில் புலிகள் புகுந்து தாக்க நேரலாம் என்பதால் தப்பிவிடுவதட்கு தயாராய் இருக்க வேண்டுமென்று அவன் பிரார்த்தித்துக் கொண்டான்" என்று நாவலாசிரியர் எழுதிச் செல்கிறார். முன்போருக்கால் அமுதனின் வார்த்தைகளாக "சண்டையில் நிற்கின்ற நேரங்களில் காயம் படலாம் என்றோ செத்துப் போவேன் என்றோ நினைப்பெதுவும் எனக்கு வருவதில்லை. சண்டைகளுக்குப் பிறகு யோசிப்பதுண்டு. வீரச்சாவடைந்த போராளிகளின் இறுதி ஊர்வலங்களில் அந்தச் சவப்பெட்டிகளில் நானே படுத்திருப்பது போன்ற நினைவு ஓடும். அப்பொழுது கண்களில் நீர் முட்டிக்கொண்டு வரும். நான் சாவினை விரும்பவில்லை என்று நினைத்துக் கொள்வேன்" என்று எழுதப்பட்டிருக்கிறது. போர்க்களத்தில் எதிர் எதிர் காலங்களில் நிற்கும் இரு வேறு தரப்பட்ட மனிதர்களின் உணர்வுகளைப் பதிந்த விதத்தில் நாவலாசிரியர் வெற்றிபெற்றிருக்கிறார் என்றே சொல்லவேண்டும்.

புலிகள் இயக்கத்தில் களப் போராளியாய் இணைந்து கால் ஊனமுற்று அரசியல் பகுதியில் இருக்கும் அமுதன் தனது காதலின் நிமித்தம் இயக்கத்திலிருந்து விடுபட முயற்சிக்கும்போது நேரு ஐயா முன்வைத்த சில கேள்விகள் அவனுக்கு சரியெனப்படுகிறது. "காதல் ஒரு தனிமனிதனின் சுதந்திரமில்லையா என்ற யோசனை அன்றைக்குத்தான் முதலில் தோன்றியிருக்கவேண்டும், முன்பொரு நாள் நேரு ஐயா சொல்லியிருந்தார். நீங்கள் இனத்தின்ரை சுதந்திரத்திற்காக என்று சொல்லிக்கொண்டு தனி மனிதரின்ரை சுதந்திரங்களிலை தலையிட்டுத் தடுக்கிறீங்கள். அது சரியில்லை."

"அண்ணைக்கு எல்லாம் தெரியும்" என்று பல கேள்விகளுக்குப் பதிலளிக்கும் அமுதன் இந்தப் பொழுதில் "அண்ணைக்கு எல்லாம் தெரியுமா என்ற கேள்வி இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு தோன்றுவது ஆச்சரியமாயிருந்தது." என்று சொல்கிறார். எனக்குத் தோன்றும் கேள்வியெல்லாம் போராளிகள் புலிகளை விமர்சிக்க அல்லது அவர்களை/கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய வெளிக்கிடும் சந்தர்ப்பங்கள் எப்போது நேர்கின்றன. இயக்கத்திலிருந்துகொண்டே இதனை செய்து கொள்ள குறைந்தளவு சாத்தியப்பாடுகள் இருந்தபோதும் காதல், குடும்பம் போன்ற தனிப்பட்ட சுதந்திரத்துக்குள் இயக்கம் நுழையும்போது தீவிரமாக விமர்சிக்க நேரிடுவதாக முன்வைக்கப்படும் பார்வைக்கு அமுதன் பாத்திரம் வலுச் சேர்க்கிறதா? தான் இயக்கத்திலிருந்த காலத்தில் இயக்கத்தை நோக்கி வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை ஒரே பதிலில் கடக்கும் அமுதன் தன்னை நோக்கி இயக்கத்தின் முடிவு எறியப்பட்டபோது, கேள்வி கேட்கும் சுதந்திரத்தை வழங்க வேண்டுமென்றும், மக்களின் விருப்பத்தையும் அவர்களின் முடிவையும் கேட்டபிறகே இயக்கம் தங்கள் முடிவுகளை முன்வைக்க வேண்டுமென்றெல்லாம் நேரு ஐயா சொன்னவற்றை நினைவுகூருகிறான்.

"இந்த உலகத்தில், இயக்கம் இல்லையென்று ஒருதடவை கண்ணை மூடி யோசித்துப் பார்த்தேன். நீயும் அகிலாவும் எவ்வளவு சந்தோசமாக இருக்கிறீர்கள்" என்று நேரு ஐயாவால் சொல்லப்படுவதாக கற்பனை செய்யும் அமுதன் என்ன சொல்ல முற்படுகிறான்?

இந்த நாவலின் போதாமையாக சில பகுதிகள் விரிவாக இல்லாதிருப்பதை சொல்லலாம். அமுதனின் தாயாரையும், தங்கையையும் அறிமுகப்படுத்தும் கதாசிரியர் அவர்களை இடப்பெயர்வில் கைவிட்டு நகர்கிறார். போராளி தன் குடும்பம் பற்றிக் கவலைப்படக்கூடாது என்பது போல நினைக்கும் அமுதனின் மனப்பான்மைக்காக அவ்வாறு நிகழ்ந்திருக்கலாம் என்றாலுங்கூட இன்னும் இடம்பெயர்ந்த மக்களின் அவதிகள், வலிகள், விடுபட்ட உறவினர்கள், புலம்பெயர்ந்த உறவுகளுக்காக வருடக்கணக்காகக் காத்திருந்த/காத்திருக்கின்ற மக்கள், புலிகளால் இடம்பெயர்க்கப்பட்ட முஸ்லிம் மக்கள் போன்ற மக்களின் இன்னொரு வாழ்க்கைக் குறிப்புக்கள் பற்றிப் பதிந்திருக்கவில்லை. இருப்பினும் நாவலில் எத்தனைப் பதிவது, எதனைத் தவிர்ப்பது என்பது நாவலாசிரியனின் தெரிவு என்பதையும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

உயிருக்கு அஞ்சி ஆபத்தான வழியில் நாட்டை விட்டுத் தப்பும் முன்னாள் விடுதலைப்புலிப் போராளிகள், தமிழ் இளைஞர்கள் பயணிக்கும் அதே வள்ளத்தில் அவர்களுடன் களத்தில் எதிரியாகப் போராடிய, வாழ்க்கையில் பெரும்தாக்கங்களை ஏற்படுத்திய இராணுவத்தின் பிரதிநிதிகளும் பயணிக்க நேரிடுவதை அவர்களுடன் சில உரையாடல்களையே நாவலில் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர். இந்திய ராணுவத்தின் வன்முறைகள், தமிழ் விடுதலைக் குழுக்கள், அவர்களின் அரசியல், விடுதலைப்புலிகள், பொதுமக்கள் என்று எல்லாத்தளங்களையும் தொட்டுவிடும் படைப்பாளி நாவலை இன்னும் மெருகேற்றியிருக்கலாமோ என்ற அவாவும் தோன்றுகிறது. கடலில் வள்ளங் கவிழ்ந்து அமுதன் அணிந்திருந்த செயற்கைக்கால் எரித்திரிய முன்னாள் போராளிக் கிழவனுக்கு கிடைப்பதாக நாவல் முடிவடையும்போது, முடிவில் படைப்பை முடித்துவிடும் அவசரத்தன்மையையும் காணமுடிகிறது.

"ஆறாவடு" என்னும் சொல்லின் அர்த்தத்தைப் பார்த்தால், வடு எனப்படுவது காயம் ஆறியபிறகு ஏற்படும் தழும்பை சொல்வது. இதைத் தெரிந்து கொண்டு எழுத்தாளர் மற்றும் தலைப்பை முன்மொழிந்தவர்கள் இந்தத் தலைப்பைத் தேர்ந்தெடுத்தார்களா, இல்லை அவர்கள் அறியாமல் இந்தப் பொருளுடன் தலைப்புத் தேர்ந்தெடுக்கப்பட்டதா? என்ற கேள்விக்குப் பதிலை எழுத்தாளரிடமே விட்டு விடுகிறேன்.

இருப்பினும் ஒரு சிறந்த படைப்பின் மூலம் எங்கள் கதையை தன் பங்கிற்கு சீரிய கதைசொல்லியின் ஆளுமையுடன் சொல்லியிருக்கும் சயந்தனிற்கு வாழ்த்துக்கள்.

இணையம் மூலம் நாவலை வாங்க : வடலி

சமீபத்தில் "தமிழினி" பதிப்பகத்தினூடு வெளியாகிய எழுத்தாளர் சயந்தனின் "ஆறாவடு" நாவல் வெளியீடு 04 - மார்ச் - 2012 அன்று கனடாவில் நடந்த போது வாசிக்கப்பட்ட பதிவு. 

3 comments:

  1. அருமையான விமர்சனம்,

    ReplyDelete
  2. நாவலைப்போலவே உங்கள் விமர்சனமும் பிடித்திருக்கிறது மயூ.!!

    ReplyDelete
  3. நாவலைப்போலவே உங்கள் விமர்சனமும் பிடித்திருக்கிறது மயூ.!!

    ReplyDelete