Sunday 19 February 2012

இலையுதிர்காலக் குறிப்புக்கள்..!

1 .

தொன்மைக் கட்டிடங்கள் நிறைந்த
நகருக்குள் நுழைகிறேன்

ஆதி மணத்தை நுகர்ந்தும்
அடையாளந் தெரியாது போன
தொல் குடிகளின் சாட்சியங்களை
தடவிப் பரிசித்துக் கொண்டும்
நிலம் கிண்டும் தீவிரத்தோடு
புகுகிறேன்

சட்ட ஓவியங்களும்
சிலைகளும்
சொல்லிச் சொல்லி ஓயும் கதைகளை
அசைபோட்டவாறு நகர்ந்து
பூங்காவில் சரியும் என் முன்
நீண்டு படுத்திருக்கிறது
தெரு

இலைகள் உதிரும் மரங்களை
முத்தமிட்ட பின்னும்
வேட்கையுற்றுத் திரியும் காற்றின்
கைகளுக்குள் சிக்கித் தவிக்கிறது
இலையுதிர் காலமில்லா நாட்டில்
பிறப்புவிக்கப்பட்ட உடல்

2.

மஞ்சள் இலைகள் நான்கு
சிவப்பு நான்கு
பிறகு மண்ணிறமும்
போனால் போகுது பச்சையும்
நன் நான்கு இலைகள்
வேணும்

பசை கொண்டு இலை ஒட்டி
செய்யப்பட்ட மரத்தை
வரவேற்பறையில் நிறுத்துவேன்

நீங்கள் வருவீர்கள்
என் வீட்டுக்கு
என்ன இது
யார் செய்தது
நல்லா இருக்கு
கூட இலைகள் ஒட்டியிருக்கலாம்

என்னிடம் பதில்கள் இருக்கும்
எப்பவும் போல

பால்கனியின் கண்ணாடிக் கதவுகள்
அறைந்து அறைந்து திரும்பும்
காற்றையும்
அது அள்ளி வந்த
குளிரையும்
கதவின் வழி
பொட்டலங் கட்டிக் கொண்டு வரும்
உங்கள் வருகை

உங்கள் மீளலின் பின்
கூட்டி அள்ளுவதற்கு சரியாக இருக்கும்
இலைகளையும்
குளிர்ப் பொட்டலங்களையும்

அந்தப் பின்னிரவில்
என் கனவுகளில் முளைத்தெழும்
மரங்கள் இலையுதிர்க்கா
காற்றில் குளிர் இருக்காது

கிழிந்த போர்வைக்குள்
மடிந்துறங்கும் என்னை
மொட்டை மாடி நட்சத்திரங்கள் தாலாட்டும்.;

2 comments: