Wednesday 4 January 2012

"உச்சிதனை முகர்ந்தால்" திரைப்படமும் சில அவதானங்களும்..!

இலங்கையில் நடந்துகொண்டிருக்கும் பேரவலங்களைத் திரையில் கொண்டுவருவதற்கு இந்தியத் திரையுலகினர் காட்டும் தயக்கமும் மௌனமும் கண்கூடு. அரசியல் மற்றும் இன்னபிறவற்றைக் காரணங்களாகப் பகிரும் திரையுலகிலிருந்து "காற்றுக்கென்ன வேலி" திரைப்பட இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் அவர்களின் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் "உச்சிதனை முகர்ந்தால்." இந்தத் திரைப்படத்தை புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் ஸ்ரீவன் புஸ்பராஜா, ஸ்ரீ பாலசுந்தரம், சிவகணேசன் தில்லையம்பலம், ரமணன் கந்தா மற்றும் விஜயசங்கர் அசோகன் இணைந்து குளோபல் மீடியா நிறுவனத்தின் சார்பில் தயாரித்திருக்கிறார்கள். மட்டக்களப்பில் பதின்மூன்று வயது சிறுமிக்கு நடந்த உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் என்பதே கதையின் கனதியை சொல்லிவிட மழை தூறிக் கொண்டிருந்த குளிர் மாலைப் பொழுதொன்றில் திரையரங்குக்குள் நுழைந்து கொண்டேன்.

ஈழத்தில் நடக்கும் அவலங்களை உடனுக்குடன் இந்தியச் செய்தியாளர்களுக்குத் தெரிவிக்கும் சமூக ஆர்வலர், பேராசிரியர் நடேசனுக்கு (சத்தியராஜ்) வரும் தொலைபேசி அழைப்பொன்றின் மூலம் கதைக்குள் நுழைகிறாள் சிறுமி புனிதவதி (நீநிகா) என்னும் புனிதா. தாயுடன் களவாக இந்தியாவுக்குள் நுழைய இருக்கும் புனிதாவுக்கு ஆதரவு தருவதுடன் கர்ப்பமாக இருக்கும் அவளது கருவைக் கலைத்து அவளது எதிர்காலத்தைச் சீர்படுத்த உதவுமாறு வேண்டி நிற்கிறது அந்த தொலைபேசி அழைப்பு. அந்தவகையில் இந்தியா வந்து சேரும் புனிதாவையும் தாயாரையும் தங்கள் வீட்டிலேயே வைத்துப் பராமரிக்கும் நடேசனும் அவர் மனைவியும் (நடிகை சங்கீதா) தங்கள் குடும்ப வைத்தியர் ரேகாவிடம் (லட்சுமி ராமகிருஷ்ணன்) அழைத்து செல்கின்றனர். கர்ப்பம் ஐந்து மாதத்தை நெருங்கிவிட்டதாலும் புனிதா பதின்மூன்று வயதேயான சிறுமி என்பதாலும் அவளது உடல் நிலை மிகவும் பலவீனமாக இருப்பதாலும் கர்ப்பத்தைக் கலைப்பதைவிட குழந்தையைப் பிரசவிப்பதே புனிதாவைக் காப்பாற்றும் என்று சொல்லிவிடுகிறார் வைத்தியர். தனது மகளின் எதிர்காலத்தை எப்பாடுபட்டாவது சீரமைத்துவிட வேண்டுமென்ற எதிர்பார்ப்பில் கடல் கடந்து வரும் புனிதாவின் தாய் வேறுவழியின்றி இந்தமுடிவுக்கு சம்மதிக்கிறார். இந்நிலையில் ஊரில் விசாரணைக்கென்று அழைத்து செல்லப்பட்ட புனிதாவின் தந்தையை வேறு சில தமிழ்க்கைதிகளுடன் சேர்த்து இராணுவத்தார் சுட்டுக் கொல்வதை ஒரு இணையத்தளத்தில் கண்ணுற்றவர் தகவல் சொல்ல அதனைத் தானும் பார்த்து உறுதிப்படுத்தும் புனிதாவின் தாய் மேலதிக அலுவல்களின் பொருட்டு புனிதாவை நடேசன் வீட்டில் விட்டுவிட்டு ஊர் திரும்புகிறார். பின்னதாக புனிதாவுக்கு வரும் காய்ச்சலின் போது செய்யப்பட்ட பரிசோதனைகளின் போது அவளுக்கு எய்ட்ஸ் இருப்பது உறுதிப்படுத்தப்பட ஆரம்பிக்கிறது கதையின் இரண்டாம் பாகம். அவளுக்கே தெரியாமல் தன்னை வன்புணர்ந்தவனின் கருவை சுமந்துகொண்டு தன் தந்தை இறந்தது தெரியாமல், தாயார் ஊருக்குப் போனாரே அவருக்கு என்ன நடந்தது என்று அறியாமல் இருக்கும் புனிதாவுக்கு என்ன நடந்தது? அவள் குழந்தை என்னவாயிற்று? தாயார் என்னவானார் போன்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லி முடிகிறது திரைப்படம். எய்ட்ஸால் பாதிப்புற்றவர்களுக்கு சிறப்பு வைத்தியம் தரும் வைத்திய நிபூனராக வருகிறார் நடிகர் நாசர். இன்ஸ்பெக்டராக வருகிறார் இயக்குனர் மற்றும் "நாம் தமிழர்" அமைப்பின் தலைவர் சீமான். 

புனிதா என்ற பாத்திரப்படைப்பு ஈழத்தில் சீரழிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான இளம்பெண்களின்/சிறுமிகளின் ஒரு பிரதிநிதியாக படைக்கப்பட்டிருக்கிறது. இராணுவத்தாரால் குழுவாக வன்புணர்வுக்குட்படுத்தப்பட்ட புனிதா தான் கர்ப்பமுற்றிருப்பதைக்கூட அறியாமல் பால்யத்தின் குட்டிக் குட்டிக் கனவுகளுடன் விருப்பங்களுடன் தன் வாழ்வை எதிர்கொள்ள முயற்சிக்கிறாள்.  பறவைகளுக்குத் தண்ணீர் வைத்து, பூக்களுடன் பேசி, நாயிற்கு தமிழ்ப் பெயர் வைத்து அழைத்து என்று தன்னைச் சார்ந்தவற்றை எல்லைகளற்று நேசிக்கும் புனிதா ஊரில் மண் தெருக்களில் புழுதி படிந்த உடலுடன் கெந்திக் கோடு விளையாடும் குழந்தைகளை நினைவுபடுத்துகிறாள். கள்ளங்கபடமற்று சிரிக்கும் அவளது ஆழ்மனக்கனவுகளில் அவளது ஊர் படர்ந்து கிடக்கிறது. போராளிகளுடன் சிரித்து விளையாடிய, உணவு பகிர்ந்துண்ட பொழுதுகளும், மருத்துவ வசதி கிடைக்காது குண்டடிபட்டு மரணித்த நண்பியும், இறுதியாக விடைபெற்றுப் போன மனதுக்குப் பிடித்த போராளியும் அவளது நினைவுகள் முழுக்க நிறைந்து கிடக்கிறார்கள். விமானத்தின் ஓசை கேட்டு அலுமாரிக்குள் ஒளியும் புனிதாவின் கை பங்கருக்குள் ஒளியும் பள்ளிக்கூட மாணவர்களையே வரைகிறது.  இவ்வாறாக முழுக்க முழுக்க போரின் பேரால் வஞ்சிக்கப்பட்ட ஈழத்து சிறுவர்களின் பிரதிநிதியான புனிதாவை தன் நடிப்பில் மிகச் சிறப்பாகப் பிரதிபலிக்கிறார் நீநிகா என்ற அந்த சிறுமி. அவரை உண்மையில் உச்சி முகரவே தோன்றியது. 

ஈழத்து அகதிகளாக, இலங்கைத் தமிழர்களாக இந்தியா புகும் மக்கள் சாதாரணமாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுக்க முயற்சிக்கும்போதே அனுபவிக்கும் இன்னல்களும் கஷ்டங்களும் ஏலவே எழுதப்பட்டு இருக்கும் நேரத்தில் தங்களிடம் உதவி தேடி வரும் புனிதாவையும் தாயையும் தங்களுக்கு என்ன நேர்ந்தாலும் பரவாயில்லை என்று அடைக்கலம் தரும் நடேசன் தம்பதிகள், மறுக்காமல் உதவி செய்யும் வைத்தியர் போன்றோர் ஆறுதல் தருகின்றனர். இப்படியான மாறுதல்கள் காலத்தின் தேவை என்பதும் மறுப்பதற்கில்லை. வழி தவறி சென்று சில ஆண்களிடம் மாட்டிக் கொள்ளும் புனிதாவைக் காப்பாற்ற முன்வரும் திருநங்கை ஐஸ்வர்யா, இறுதியில் அவரை கண்டுபிடித்து உதவும் ஆட்டோ ஓட்டுனர் என்று எல்லாப் பாத்திரப்படைப்புக்களும் தாம் எடுத்துக்கொண்ட கதையின் இயல்பை தங்களின் பங்களிப்பால் சிறப்பாக பார்வையாளனுக்குக் கடத்துகின்றனர். இந்தத் திரைப்படத்தின் வசனத்தை தமிழருவி மணியன் எழுதியிருக்க இசையமைப்பாளர் இமான் இசையமைத்திருக்கிறார். ஒளிப்பதிவு பி.கண்ணன் மற்றும் மணவாளன் அவர்களால் செய்யப்பட பி.லெனின் அவர்களால் படத் தொகுப்பு செய்யப்பட்டிருக்கிறது.

திரைப்படத்தின் காட்சியமைப்புக்கள் பாத்திரப்படைப்புக்கள் சிறப்பாக அமையும் அதே நேரத்தில் சிலவற்றைக் குறித்துப் பேசவேண்டியும் நேரிடுகிறது. குறிப்பாக ஆரம்பத்தில் இடம்பெறும் பெண்போராளிகள் மற்றும் தோழிகள் இணைந்து புனிதா குறித்துப் பாடுவதாக அமைந்த பாடல் காட்சியமைப்பு. போராளிகள் பாடலைப் பாடுவதுடன் புனிதாவுடன் இணைந்து நடனமாடுவதாகவும் அமைந்திருந்தது அந்தக் காட்சி. சமீபத்தில் "ஊடறு மற்றும் விடியல்" வெளியீடாக வெளிவந்த பெண் போராளிகளின் "பெயரிடாத நட்சத்திரங்கள்" கவிதைத் தொகுப்பில் பெண் போராளி அம்புலியின் கவிதை இப்படி சொல்கிறது;

"ஒரு வண்ணத்துப் பூச்சியின் சிறகடிப்பில்
எனை மறக்கவும்
ஒரு குழந்தையை மென்மையாக
தாலாட்டவும்
என்னால் முடியும்.
குளத்தடி மர நிழலில்
எனது புல்லாங்குழலைத் தழுவும்
காற்றோடு கதைபேச
நான் தயார்.
நிம்மதியான பூமியில் நித்திரை கொள்ள
எனக்கும் விருப்புண்டு.
எனது மரத்துப்போன கரங்களுள்
பாய்வது துடிப்புள்ள இரத்தம்
வெறும்
இடியும் முழக்கமுமல்ல நான்.
நான் இன்னமும் மரணிக்கவில்லை." (அம்புலி - 1997).

அமைதியாக சாதாரண வாழ்க்கை வாழும் கனவுகளை ஆழ் மனதுக்குள் புதைத்துவிட்டு காலத்தின் கட்டாயத்தின் பேரில் போராடப் புறப்பட்ட பெண்போராளிகளின் மனதைப் பிரதிபலிக்கும் இந்தக் கவிதையின் காட்சியமைப்பை சிறுமிகளுடன் விளையாடி, மழையை ரசித்து மகிழும் போராளிகளாக அந்தப் பாடலில் காணக்கிடைத்தது. ஆனால் ஒரு நடனக்குழு பின்னணியில் நடனமாடுவது போல சிறுமியை மையப்படுத்தி பெண்போராளிகள் நடனமாடுவதாக அந்தக் காட்சி சித்தரிக்கப்பட்டிருந்தவிதம் பிற திரைப்படங்களில் பிறந்தநாள் குழந்தையை சுற்றி குழுவினர் ஆடிப்பாடுவதுபோல அமைந்திருந்தது. போராளிகள் மக்களுடன் இணைந்து வாழ்ந்தனர் என்பதை சுட்டிக்காட்ட விழைந்த இயக்குனர் அதனை இன்னும் சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கலாம் என்ற எண்ணம் தோன்றி மறைந்தது.

மேலும் புனிதா சந்திக்கும் நபர்கள் எல்லோரும் நல்லவர்களாகவும், புனிதாவிற்கு உதவுபவர்களாகவும் இருக்க இதே இந்தியாவில் அகதிகளாக அடிப்படை வாழ்க்கைக்குப் போராடும் மக்களின் கதையையும், அவர்கள் தினம் தினம் சந்திக்கும் பிரச்சினைகளையும் காட்சிப்படுத்தும் திரைப்படம் ஒன்று வராதா என்ற ஏக்கமும் எழாமல் இல்லை. நடேசன் புனிதாவின் தாயாருக்கு சொல்வதாக வரும் வசனம் இப்படி அமைகிறது "இருபத்தாறு மைல் தொலைவில் இருக்கும்போது இருந்த நம்பிக்கை இப்போது அருகில் இருக்கும் போது இல்லையா." இந்தக் கேள்வியை தமிழ்நாட்டு மக்கள் தங்களிடம் கேட்டுக் கொள்ளவேண்டும். எந்த நம்பிக்கையில் கள்ளத் தோணியிலும், உயிரைப் பணயம் வைத்தும் தமிழ்நாட்டுக்குள் நுழைகிறார்களோ அந்த நம்பிக்கையை தமிழகம் ஈழத்து அகதிகளின் விசயத்தில் தொடர்ந்து அளிக்கிறதா என்பது கேள்விக்குறியே. தொடர்ந்த போராட்டங்கள், உயிரைக் காணிக்கையாக்கிய மரணங்கள் தமிழ் நாட்டு மக்களின் மனங்களில் மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கின்றமை மறுப்பதற்கில்லை எனினும் அவர்கள் ஈழத்து அகதிகளாக தங்கள் நாட்டில் சிறுமைப்படுத்தப்படும் உறவுகளுக்கு அடிப்படை வாழ்க்கையை வழங்குவதற்கு எந்தவகையில் நம்பிக்கையளிக்கிறார்கள் என்பது கேள்விக்குறியே. அதற்கு பத்திரிகையில் வரும் ஈழத்து அகதிகளுக்கு முகாம்களில், வெளியில் நிகழும் வன்முறைகளே சாட்சி.

நிற்க, மக்களை நேரடியாக சென்று சேர்வன திரைப்படங்கள் என்னும் வகையில் ஈழத்து அவலங்கள் திரையில் பேசப்பட வேண்டுமென்பதும் உலகமெங்கும் காட்சிப்படுத்தப்பட வேண்டுமென்பதும் காலத்தின் கட்டாயம். சில திரைப்படங்கள் சிலவரிகளிலேயே ஈழத் தமிழர்களுக்கு ஆதரவைத் தெரிவிக்க முனைவதாக சொல்லப்படுகிறது. ஆனால் தமிழர்கள் தங்களை என்ன காரணத்துக்காக பயன்படுத்துகிறார்கள் என்ற விசயத்தில் தெளிவாக இருக்க வேண்டுமென்பதும் முக்கியமானதாகும். குறிப்பாக சமீபத்தில் வெளிவந்த "ஏழாம் அறிவு" திரைப்படம் சில வரிகளில் ஈழத்துத் தமிழர்கள் குறித்துப் பேசிச் சென்றது. அந்தப் படத்தின் குறித்த வரிகளை சிலாகித்து, அவை தந்துசென்ற உணர்ச்சி வேகத்தை மெச்சி எழுதப்பட்ட பதிவுகளை சமூகத் தளங்களில் பரவலாகக் காணக் கிடைத்தது. அது எவ்வாறு இருந்தது எனின் பொதுக் கூட்டங்களில் பிறமொழி பேசும் பேச்சாளர்கள் "வணக்கம்" என்று தமிழால் தொடங்கும்போது விண்ணதிரும் தமிழர்களின் கரகோஷத்தையே. தமிழன் துரோகிக்கப்பட்டத்தை சொல்ல முழு நீளத் திரைப்படம் எடுக்க வேண்டும் என்று ஏன் பிரபல இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் முன்வருகிறார்கள் இல்லை என்பதை புரிந்து கொள்ளவேண்டியதும் அவசியமாகும். அவர்கள் இணைந்து செயல்படும்போது குறிப்பிடப்படும் தடைகளை அகற்றி வெற்றிபெறமுடியும் என்பதும் வெளிப்படை. பின்னதாக கவிஞர் யுகபாரதியால் எழுதப்பட்டிருந்த ராஜபாட்டை திரைப்பாடல் வரியொன்று "முள்வேலிக்குள் வாழும் தமிழீழம் போல.." என்று தொடங்கி காதலியின் பிரிவால் வாடும் காதலனை உவமித்துத் தொடர்கிறது. இவ்வாறு தமிழர்களின் கதைகளும், வாழ்க்கையும் வியாபாரத்துக்காகவும் புகழுக்காகவும் பயன்படுத்தப்பட ஈழத்து சிறுமியின் கதையை முழுக்க முழுக்க மையப்படுத்தி வந்த திரைப்படத்துக்கு என்னவாயிற்று? இந்தப் பதிவை எழுதிக் கொண்டிருக்கும் இந்தப் பொழுதில் "உச்சிதனை முகர்ந்தால்" பார்வையாளர்கள் இல்லாததால் திரையரங்குகளை விட்டு வெளியேற்றப்பட்டிருக்கும். பிற இந்தியத் திரைப்படங்களுடன் போராடி திரையரங்கு கிடைக்காமல் முன்னதாக திட்டமிடப்பட்டிருந்த தினத்திலிருந்து வெளியீடு பின்தள்ளப்பட்டே "உச்சிதனை முகர்ந்தால்" வெளியிடப்பட்டிருந்தது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஆக ஈழத்தின் அவலங்களை திரையில் பேசவேண்டுமேன்பதைக் கோரிக்கையாக, அப்படி செய்யவில்லை என்று குற்றச்சாட்டாக வைக்கும் மக்கள் அதனை சரிவர ஆதரிக்கிறார்களா என்றால் இல்லை. நான் அமர்ந்திருந்த திரையரங்கு வெறும் பத்துப் பேராலே நிறைந்திருந்தது. இந்தப் பத்துப் போரையும் ஏலவே இன்னொரு ஈழத்தவர் படைப்பில் கண்டிருக்க முடியும். இந்த நிலை ஏன் தொடர்கிறது என்றுதான் தெரியவில்லை.

இவ்வாறாக ஈழத்தின் அவலங்களைப் பேசும் முழு நீளத் திரைப்படங்கள் வருவதற்கு பல்வேறு தடைகள் இருக்க இயக்குனர் புகழேந்தி தங்கராஜின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் "உச்சிதனை முகர்ந்தால்" திரைப்படமும் தான் எடுத்துவந்த வஞ்சிக்கப்பட்ட சிறுமியின் கதையை பார்வையாளர்களுக்குள் இறக்கிவைக்கிறது. சேனல் 4 தொலைக்காட்சி வெளிக்கொணர்ந்த இராணுவம் புரிந்த போர்க்குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களைத் தொடர்ந்து இன்னொரு உறுதியான பதிவாக தெளிவாக எடுக்கப்பட்டிருக்கும் புனிதாவின் கதை ஒரு சிறுமியின்/பெண்ணின் கதையல்ல. சொல்லப்படாத ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான பெண்களின் கதை. புனிதாவுக்குக் கிடைத்த நடேசனின் குடும்பம் கிடைக்காமல் இப்போதும் அகதி முகாம்களிலும், கூடாரங்களிலும், கொட்டில்களிலும் தங்கள் எதிர்காலத்தைப் பொதித்து வைத்து நடு நிசியில் நட்ச்சத்திரங்கள் எழும் வானத்தை கூரையின் பொத்தல்களூடு வெறித்து எதிர்காலத்தை அச்சத்துடன் பார்த்திருக்கும் வாழ்க்கை வாழும் குழந்தைகளையும், மக்களையும் நினைக்க வைக்கும் திரைப்படம் பார்வையாளரின் மனச்சாட்சியையும்  இருப்பையும் கேள்விக்குட்படுத்தி நகர்கிறது.

புனிதா தன் மடியில் மரணத்தைத் தழுவிக்கொண்டிருக்கும் தோழி குறித்து இப்படி சொல்கிறாள், "அவள் செத்துக் கொண்டே இருந்தாள்; நாங்க பார்த்துக் கொண்டே இருந்தம்." ஆமாம், நானும் தான் புனிதா.

நன்றி - "வீடு" பத்திரிகை

1 comment:

  1. நீண்ட காலமாய் வியாபாரமாகி வந்த மொழியுனர்வு திரையில் நீர்த்துப்போன நிலையில் எமக்கு கிடைத்த மற்றுமொரு வணிக உளக்கிளர்ச்சியே ஈழம். பரவலாக சிரிதாய் பயண்படுத்தப்பட்டு வந்த ஈழத்தமிழும் ஈழமும் இப்பொழது பெரும் சிதைவுக்குள்ளாக்கப்படும் அபாயம் நெறுங்கி வருகிறது. இதற்க்கு நான் பனியாற்றும் சமீபத்திய படமே உதாரணம். இருந்தும் எதிர்வரும் நாட்களில் சில உண்மையான முயர்ச்சிகள் இங்கு நடந்து வருகிறது. அதில் என் பங்களிப்பும் இருக்கும். 'உச்சிதணை முகர்ந்தால்' நேர்மையான முயர்ச்யாகவே தோன்றுகிறது.

    ReplyDelete