Sunday, 27 March 2011

மழையின் பெயரால்...!!

P.G சரவணனின் முதலாவது கவிதைத்தொகுப்பான "முகில் பூக்கள்" கவிதைநூலினை முன்வைத்து..!!

மழையைக் கொண்டாடும் குட்டிக் கவிதைகளை அள்ளிக் கொண்டு வந்து தூவிசெல்கிறது சரவணனின் "முகில் பூக்கள்." வெளியிலில் ஒளிர்ந்து கொண்டிருக்கும் மாலை திடீரென்று கறுத்து மழையாய்ப் பொழிந்து போகும்கணங்களின் உயிர்ப்பை, அந்த நிமிடங்களின் மனதில் தோன்றும் எண்ணங்களைவார்த்தைகளில் சொல்லிவிடுவது எப்போதுமே வாய்ப்பதில்லை. பல சமயங்களில் மழை பற்றி எந்தவித பிரக்ஞைகளும் அற்று குடையைப் பிடித்தோ, பிடிக்காமலோ, மழையை சபித்துக் கொண்டோ, திட்டிக் கொண்டோ ஓடிக் கடந்து விடுவதை சலிக்காமல் செய்ய விழைகிறோம். மழை யாரையும் பற்றி யோசிப்பதாய்த் தெரிவதில்லை. அது எவர் போருட்டுமில்லாமல் தன்பாட்டுக்கு கொட்டிப் போவதையோ, அடித்துப் பெய்வதையோ, வந்த சுவடே தெரியாமல் மண்ணை ஒற்றிப் போவதையோ செய்துகொண்டிருக்கிறது.

சரவணனின் கவிதைகளில் மழை நிகழ்த்திப் போகும் அழகியல் உணர்வு மிகவும் நெகிழ்ச்சியாக மனதைப் பற்றிப் படர்கிறது. மழையை தோழியாய், காதலியாய், நட்பாய், பெயரற்ற அன்பாய், இன்னும் அழகழகாய் உருவகிக்கிறார் கவிஞர். அவரது ஒரு கவிதையில்,

அசைந்து
நடந்து - பின்
களம் புகும்
கம்பீர யானையை
பெய்கிறது மழை.
சாரலாய்
தூறலாய்
பெரு மழையாய்

குடையை மறந்து போய்விட நேரிடும் பொழுதுகளில், கடைக்குள் ஒதுங்கி, கண்ணாடியூடோ, இல்லை ஒண்டிக்கொண்டு நிற்கும் வாசலினூடோ மழையைப் பார்க்கும் அந்தப் பொழுதை நினைத்துக் கொள்கிறேன். முகத்தில் அடிக்கும் சாரலும், பின் துளிகளும் பின் பெரிதாய் மழையாயும், அழகாக மாறி மாறிப் பூக்கின்றன நினைவுகள் மனதுக்குள். உண்மைதான், ஆடி அசைந்து களம்புகும் யானைதான் மழை.

அந்தி மந்தாரை
பூத்த நேரம்
பவள மல்லியின்
வாசனையோடு
சாலையில்
நடந்து சென்றது
மழை...

செம்மஞ்சள் வானத்தின் முடிபில் தொடங்கி மெலிதாய், மிக மெல்லியதாய் பெலத்துப் பின் பெய்யும் மழை சாலையில் நடப்பதாய் நம்பத் தொடங்குகிறது மனது. மண்ணைத் தழுவி, அனைத்து, ஆவேசத்துடன் முத்தமிட்டுப் பின் ஊடாடி வெள்ளமாய்ப் பாய்ந்து ஆருடன் கலந்து அருவியில் வீழ்ந்து கடலுடன் இணையும் மழை எல்லாச் சாலைகளிலும் நடக்கும் விதம் எம்மாத்திரம். ஆமாம், சாலையில் நடக்கும் மழை அழகுதான். அதிலும் அந்திமாலையில் மனம் மயங்கி, உருக வீறாப்பாய் நடக்கும் மழை இன்னும் அழகு.

யாருமில்லாமல்
தொடங்கிய பயணத்தில்
அந்த அழகிய ஊரில்
பெய்யத் தொடங்கிய மழை
வீடு வரை வந்தது

என்னும் கவிதையில் பால்யத்தில் மழையில் நனைந்து கொண்டே வீடு வந்த நினைவுகளும், மழை துணைக்கு வருவதை மனது விரும்பி அதில் லயித்த பொழுதுகளும் கண்முன்னே ஆடுகின்றன. இன்னும்,

மேகங்கள்
கடந்து போன பின்பும்
இலைகளைப் போலவே
மழைப்பாட்டை
பாடிக் கொண்டிருக்கிறது
மனசு

என்று இன்னொரு கவிதையில் கவிஞர் சொல்வது போல, மழை தந்த அனுபவங்களை, நினைவுகளை மனதின் ஆழத்தில் போட்டு, பின்னோர் நாள் இன்னொரு மழை பெய்கையில் வீட்டில் அமர்ந்திருந்து அவற்றை மீள நினைவில் அமர்த்தி அதன் பொருட்டு காதல் கொள்ளவைக்கும் சாமர்த்தியத்தை மழை கற்று வைத்திருக்கிறது. மழை ஒவொரு முறையும் பெய்துவிட்டோ, அடித்தூற்றிப் போய்விட்டோ சென்ற பின், அது குறித்து நினைத்துப் பார்க்க, பேசிக் கொள்ள, இல்லை புன்னகைக்க என்று ஏதோ ஒரு நிகழ்வை தந்துவிட்டுப் போவதை அழகாக செய்கிறது. எல்லோருக்கும் அவரவர் வாழ்நாளில் ஒரு மழை நாள் ஒரு அனுபவத்தை பரிசளித்து விட்டுத்தான் போயிருக்கும்.

நிறம் இழந்த வானம்
நீராய்
நிலம் புகுந்தது

அற்புதமாக இருக்கிறது மழை இப்போது. துளியாய் மாறி மண்ணோடு சேரும் அந்த மழையின் காதல், சூழலுக்கேற்ப மென்மையாய், அழகானதாய், ஆவேசமானதாய் இருக்கிறது. இப்படியான உணர்வுகளை கலந்து கொட்டி விதைத்துப் போகும் மழை மனிதர்களை தன் உணர்ச்சிக் குவியலுக்குள் புதைத்து தத்தளிக்க வைத்தும் விடுகிறது கவிஞர் இந்தக் கவிதையின் இறுதியில் சொன்னது போல்,

மீண்டும்
அவனும் அவளும்
பார்த்த கணத்தில்
பெய்யத் தொடங்கியது
காதல் மழை

ஆமாம், காதலைப் போல.

"யாழ் மீட்டிய மழையின் இசை, காடுகள் நிறைந்த மனம், ரசனை, மழைப் பாட்டு" போன்ற கவிதைகள் அடங்கலாக அறுபத்தியேழு கவிதைகளைத் தாங்கி வந்திருக்கும் "முகில் பூக்கள்" தொகுப்பு தகித்தா பதிப்பகத்தின் வெளியீடாக வந்திருக்கிறது. குட்டிக் குட்டிக் கவிதைகள் மழையை மட்டுமே பாடுபொருளாகக் கொண்டு இயற்றப்பட்டிருக்கின்றன. மனதில் படிந்துபோகும் இயல்பான தமிழ் நடையில் பிரசவிக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு கவிதையின் முடிவிலும், அந்தக் கவிதை தொடர்பை நினைத்துப் பார்க்க எமது நினைவுத் தொட்டியில் ஏதோவொரு அனுபவம் காத்திருக்கிறது.

வசந்தகாலத்தின் தொடக்கத்தில், "முகில் பூக்கள்" தொகுப்பை வாசித்து முடித்ததும் மழை அழகாய், இன்னுமின்னும் அழகாய்ப் பெய்யத் தொடங்கியிருந்தது வெளியில். இன்னுமொரு பொழுதில் மழை பற்றி எழுதும் பாத்தியத்தை என் வார்த்தைகளே எனக்குக் கொடுங்கள் என்ற வேண்டுதல்களுடன் எனக்குப் பிடித்த மழையை கவிதைகளாய் மீட்டிப் பார்க்க வைத்த சரவணனுக்கு வாழ்த்துக்களும்.

P.G சரவணனின் நட்பை கவிதைகள் ஏற்படுத்தித்தந்தன. முகப்புத்தகத்தில்கவிதைகளைப் பகிர்வதும், அவற்றைப் பொறுமையுடன் வாசித்துகருத்துக்களைப் பரிமாறுவதுமாக ஏற்பட்ட கவித் தோழமை இன்று அவரதுமுதலாவது தொகுப்பை கைகளில் வைத்துப் பிரித்துப் பார்க்கும் போதுபெருமையடைந்தது என்றே சொல்லவேண்டும். அதனை அனுப்பித் தந்த அவரது அன்புக்கு நன்றி சொல்லி, அவரது கவிப்பயணம் இன்னும் சிறப்பாகத் தொடர வாழ்த்தி,

தோழமையுடன்,
மயூ..!

2 comments:

 1. வணக்கம் சகோதரி, உங்கள் விமர்சனத்தைப் படித்த பின் எனக்கும் இந்தச் சரவணனின் கவிதை நூலைப் படிக்க வேண்டும் எனும் ஆவல் எழுதுகிறது. நடு நிலமையாக குறை, நிறைகள், மொழி நடை, பாடு பொருள் முதலியவற்றை அலசி ஆராய்ந்து எழுதியுள்ளீர்கள்.

  உங்களின் உரை நடை வித்தை, இவ் விமர்சனத்திலும் செழித்திருக்கிறது. இப் பகிர்விற்காக நன்றிகள்.

  ReplyDelete
 2. வணக்கம்..
  உங்கள் விமர்சனம் படித்தேன்.
  நன்றாக இருந்தது.
  வாழ்த்துக்கள்.
  இதே தொகுப்பிற்கான எனது விமர்சனம்
  படியுங்கள்.
  சரவணன்,மழை போல் கொண்டாடப் படவேண்டியவரே

  ReplyDelete