Sunday 20 March 2011

காதலில்..

பளிங்குக் கற்களாய் மினுமினுக்கிறது
குளிர்காலத்திற்கான நிலம்
சிறகுகளுக்குள் ஒடுங்கும் தீவிரத்துடன்
வானில் பறப்பதும் விழுவதுமாய் இருக்கின்றன
சிறகுமுளைக்கா குஞ்சுகள்
என் காதலனே;
தூறத் தொடங்கியிருக்கும் அந்திவானத்தில்
மாறாதிருக்கிறது செந்நிறம்
மணக்கும் மண்ணை அள்ளி
வாயில் போட்டுக் கொண்ட பால்யத்தின் நினைவில்
பேசவாரம்பிக்கிறேன்
உனக்குக் கேட்கிறதா என்ன?
பொன்னுச்சி உதிர்க்கும் தெருவொன்றில்
சைக்கிளை உருட்டிக் கொண்டு
மண்ணில் கால் புதைய
நடந்து கொண்டிருந்தோம் என்கிறேன் நான்
ஆம்;கனவில்
நீ நம்புவதாய் இல்லை - தவிரவும்
தரைதொடும் கூந்தலில்
இருந்து உன் காதலைப் பிரித்துப் பார்ப்பது
எனக்கு முடிவதாயும் இல்லை
இருந்தும்
அடிக்கடி சொல்லிக் கொள்கிறேன்
நான் காதலிக்கிறேன் என
எனக்கே எனக்காய்
பூவையும்
மழலையையும்
இரவையும்
தனிமையையும்
இன்னும் பல "உம்"களையும்;

3 comments:

  1. ///பூவையும்
    மழலையையும்
    இரவையும்
    தனிமையையும்///

    ReplyDelete
  2. காதலில் நிஜங்களை விட கற்பனைகளுக்கே அதிக மவுசு என்பதனை உம்..கள் எனும் தொக்கி நிற்கும் வார்த்தையின் எடு கோள்கள் மூலம் அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். கொஞ்சம் பந்தி பிரித்து எழுதலாமே?
    படிக்கும் எங்களுக்கு இன்னும் இலகுவாக இருக்கும் சகோதரம்.

    ReplyDelete
  3. நீ நம்புவதாய் இல்லை - தவிரவும்
    தரைதொடும் கூந்தலில்
    இருந்து உன் காதலைப் பிரித்துப் பார்ப்பது
    எனக்கு முடிவதாயும் இல்லை
    இருந்தும்
    அடிக்கடி சொல்லிக் கொள்கிறேன்
    நான் காதலிக்கிறேன் என
    எனக்கே எனக்காய்
    பூவையும்
    மழலையையும்
    இரவையும்
    தனிமையையும்

    ReplyDelete