Wednesday 2 February 2011

கீறல் விழுந்த சிமினி லாந்தரும், என் தூக்கமும்.!

பனி பொழியும் இரவொன்றின் நிசப்தம் இத்தனை கனமானதா என்ன? மயானத்தில் நடு நிசியில் பிறந்து காலையில் மறையும் மௌனத்தை நினைவு கூர்கிறேன். பகலிலேயே விரவிக் கிடக்கும் அந்த நிசப்தத்தின் போது வீசும் காற்றின் இடையில் உற்று நோக்கவே முடியாதிருப்பதாகத் தோன்றும் அந்த அடர்த்தியை இப்போது என்னைச் சூழக் காண்கிறேன். வெளியில் பனி கொட்டிக் கொண்டிருக்கிறது. பகலிலும் பெய்த நினைவு. பகல் எனப்படும் ஒன்று சூரியனின் பிரசன்னத்தைப் பேசும் என்பதனாலா அது பகல் எனப்படுகிறது? அதை நான் சந்தேகிக்கிறேன். மெல்லிய இருட்டை எப்போதும் போர்த்தியபடி தள்ளாடி நடக்கும் இதனை பகல் என்று ஒத்துக் கொள்வது என்னால் முடியாமல் இருக்கிறது. மண்ணெண்ணெய் இல்லாது குறைத் திரியில் எரியும் கண்ணாடி துடைக்கப்படாத (லாந்தர்) சிமினி விளக்கொன்றை கற்பனை செய்து கொள்கிறேன். அதனுடன் அலைவது எப்போதும் செளகரியப்பட்டதாக எனக்கு நினைவில்லை. மண்ணெண்ணெய் கிடைக்காத, திரியில் மட்டும் எரிந்த சிமினி விளக்குகளைக் கொண்டு வாழ்ந்த காலங்களை நினைவில் கொள்ளப் பார்க்கிறேன். மெல்லிய வெடிப்புக்களுடன், கடதாசி செருகப்பட்ட தாழிகளுடன் எரிந்து கொண்டிருந்த அந்த சிமினிகள் என்னை சீமெந்து கசியும் குளிர் தரையில், பாயில் தூங்கவைத்துவிடப் போதுமான வெளிச்சத்தைத் தந்தன. அப்போதும் இந்த அடர்ந்த காற்று என் வீட்டைச் சுற்றி வீசியதா என்ன?

குளிரேறி கனத்துப் போயிற்று காற்று என்கிறேன் நான். ஆமாம், கனத்துத் தான் போயிற்று. மெல்லிய இருட்டையும், சில்லென்ற குளிரையும், சில பல பனித்துகள்களையும் தன் மேல் சுமக்க முடியாமல் சுமந்து தள்ளாடி வீசும் காற்று நகர முடியாமல் முகத்தில் படிகிறது. படிப்படியாய் உணர்விழந்து சற்றைக்கும் மரத்துவிடும் முகத்தசைகள் இறுகி ஒட்டிக் கொள்கின்றன. ஒரு முத்தமொன்றின் கனவில் வாழ்தலுக்கான ஆசை இருப்பதாக தேவாலயத்தில் பிரார்த்தித்துக் கொண்டிருந்த நண்பி சொன்னதை நினைத்துக் கொள்கிறேன். வாழ்தலுக்கான ஆசை என்பதாவது இன்னும் கொஞ்ச நாட்கள் வாழ வேண்டுமென்று பிரார்த்திப்பது கட்டாயம் என அவளை கேட்டுக் கொள்ள நினைத்திருக்கிறேன். என் தோழியே! பரிசுத்த ஆவியின் பெயரால் எனக்காக ஒரு மன்றாட்டை முன் வை. அது எனக்கான காற்றை அடர்ந்து வீச வைக்காததாகவும், எனக்கான வாழ்தலுக்கான ஆசை உயிர்ப்போடு இருக்க வைப்பதாகவும் பாடக்கூடிய தோஸ்திரப்பாடல் ஒன்றின் மொழி பெயர்ப்பாய் இருக்கட்டும். ஆமென்.

கறுப்புத் தார் மேல் பனிப் புயல் தன்பாட்டுக்கு கீறிப் போகும் சித்திரங்களை என் மனதின் கற்பனைகளுக்குத் தொடர்ந்து தின்னக் கொடுக்கிறேன். நேற்றும், முன்தினமும், அதற்கு முன்னும் என்று சில நாட்கள் அது தொடர்ந்து தின்னும் பாம்புகளும், முதலைகளும், கரடிகளும், வண்ணாத்துப் பூச்சிகளும், தலையில்லா முண்டங்களும், குழந்தைகளின் தொப்பிகளும் இன்னும் பலவும் சமிக்காது பிதுங்கும் போது மனமும் பனிப் புயல் வடிவங் கொள்கிறதோ என்னவோ, அது பனி நிரம்பிக் கிடக்கும் என் உத்தரத்தின் வெள்ளை விரிப்பில் அவற்றைக் கொட்டிப் போகிறது கறுப்பு உருவங்களாய். நிறங்களில் கருப்பையையும் வெள்ளையையும் நான் அதீதமாய் காதலிக்கிறேன். அவை என்னை இருப்பதாகவும், இல்லை என்பதாகவும் ஒரு சேரக் காட்டுகின்றன. பனி கொட்டிக் கொண்டிருக்கிறது வெளியில். இன்னொரு பனிப் புயலை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது நகரம். நான் தின்னப் போகும் உருவங்கள் இன்னும் வித்தியாசப்படட்டும் என்று பிரார்த்திக்க விரும்புகிறேன். என் தோழியே.! மார்கழியில் நீர் ஒழுகும் கூந்தலுடன் அதிகாலை கோவில் புகும் என் சகியே, இதை சொல். ஆதியும் அந்தமுமில்லா அரும் பெரும் சோதியொன்றை யாம் பாடக்..மிகுதி வரிகள் மறந்ததற்கு என்னை மன்னிக்க வேண்டி இருப்பதால், அவரை நாளையும் தார் வீதியில் பனிப்புயல் கொட்டிப் போகட்டும் என்று மட்டும் கேட்டு வை. திருச்சிற்றம்பலம்.

நான் தூங்கலாம் என்று நினைக்கிறேன். என் கோடுகள் விழுந்த சிமினி லாந்தரை திரியைக் குறுக்கி வைத்து, மழை ஈரம் ஊறி, புற் பாயினூடு உடல் தழுவ மெல்லிய போர்வையை போர்த்திக் கொண்டு உடல் குறுக்கி, அம்மாவின் உடலோடு ஒட்டி இரண்டாய் மடிந்து, தூங்கலாம் என்று நினைக்கிறேன். வெளியில் பனி கொட்டிக் கொண்டிருக்கிறது. இன்னும் கொட்டும் என்று நினைத்துக் கொள்கிறேன். கொட்ட வேண்டும் என்றும் நினைத்துக் கொள்கிறேன். பனிக்குவியலின் அடியில் சிக்கிக் கிடக்கும் மேப்பிள் இலையொன்று இப்போது என்ன நிறத்தில் இருக்கும்? அதனை சூழக் கிடக்கும் இந்த நிலத்தில் பனிக்குள் புதைந்து கிடக்கும் வீடுகளும், தெருக்களும், கார்களும், கட்டிடங்களும், எனக்கு ஏன் நிசப்தம் கவிந்து கிடக்கும் மயானத்தின் மூன்று பொழுதுகளையும் ஒரு சேர, சிறு இடைவெளிகளில் நினைவுபடுத்துகின்றன? இவை ஒரு காலத்தில் என்ன நிறம் பெற்றுவிடக் கூடும்? எனக்கு என்ன நிறத்தை வழங்கிவிடக் கூடும். நான் தூங்கலாம் என்று நினைக்கிறேன், கீறல் விழுந்த அந்த சிமினி விளக்கை தலை மாட்டில் வைத்துவிட்டு, அப்படியே..!

5 comments:

  1. வணக்கம் சகோதரி, நினைவு மீட்டலை நிஜங்களை உரைக்கும் தொனியில் பதிவு/ உரை நடை.
    எங்களின் கடந்த கால வாழ்க்கையுடன் உங்களின் பனி பொழியும் மேற்குல வாழ்வையும் ஒப்பிட்டு எழுதியுள்ளீர்கள். அருமை அருமை. உங்கள் உரை நடைத் தமிழ் ஒரு இலக்கியம் படிப்பது போன்ற உணர்வினைத் தருகின்றது. தொடர்ந்தும் நிறையப் பதிவுகளை இதே உரை நடையில் எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  2. பனிபொழியும் இரவொன்றின் நிசப்தத்தின்
    கனம் உண்மையில் என்னுள்..
    படிக்க படிக்க மீண்டும் படிக்கச் சொல்லும்
    சொல்லாட்சி...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. கவித்துவமான மொழியும் மெல்லிய பனிபோல இளகிக் கிடக்கிறது. அருமை!

    ReplyDelete
  4. வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி..!

    ReplyDelete
  5. தீராத பக்கங்களின் முகப்பில் (http://www.mathavaraj.com/) sliderல் இந்தப் பதிவை இணைத்திருக்கிறேன்.

    ReplyDelete