Wednesday 26 January 2011

பனியில் விளையும் உடற் பொருக்குகள்..! விற்க; வாங்க..!

வெறுமை அலையும்
மத்தியானத் தெருவொன்றை
அதற்குரிய தனிமையுடன்
தொலைத்துவிட்டிருக்கிறேன் நான்
நீ கண்டாயா என்ன?
தாமரை பூக்கா கொடியொன்றில் மலர்ந்து
நீராடித் திரிந்த
என் உடலின் பிரதியொன்றை
பூமியில் இருந்துமில்லாது போன ஊரின்
எந்தப் பற்றை பதுக்கி வைத்திருக்கும்
எதையாவது சந்தேகிக்கிறாயா நீ?
கிளைத்த தெருவொன்றுக்குள் நுழைந்து
பனிக்குள் உறையும் உடல் மேல்
படிந்தது காயும் பொருக்குகளை
சுரண்டிக்கொண்டிருக்கிறேன்
கழிவுகள் போக எஞ்சும்
இரவு எனப்படுவதை
மூன்று டொலர்களுக்கு விற்கத்
தீர்மானித்திருக்கிறேன்
முத்தங்களுக்கு இதை விட
நல்ல விலை கிடைக்கும்
பனிச் சகதிக்குள் உறையும் என்னுடல்
எந்த நூற்றாண்டின்
எத்தனையாவது கூர்ப்பின் சான்றாகும்?
உனக்குத் தெரியாதென்கிறாயா?
தொலைத்த தெருவும்
தொலைத்த மண்ணும்
எனக்கே தெரியாது போனபின்
தொலைந்து கொண்டிருக்கும்
உயிரின் சாறு
என்ன நிறத்தில் இருந்தால்
எனக்கென்ன?
இரவுகளை ஒரு கோப்பை
கறுப்புக் கோப்பிக்கும்
கனவுகளை சுவையூட்டிகளுக்குமாக
விற்றுவிட்டுப் போகலாம்
என்றிருக்கிறேன் நான்
ஆமாம், இதே பகலைப் போல..!

4 comments:

  1. ///இரவுகளை ஒரு கோப்பை
    கறுப்புக் கோப்பிக்கும்
    கனவுகளை சுவையூட்டிகளுக்குமாக
    விற்றுவிட்டுப் போகலாம்
    என்றிருக்கிறேன் நான்
    ஆமாம், இதே பகலைப் போல..! ///

    ம்ம்ம்ம். Like Button இல்லையா?

    ReplyDelete
  2. தொலைத்த தெருவும்
    தொலைத்த மண்ணும்
    எனக்கே தெரியாது போனபின்
    தொலைந்து கொண்டிருக்கும்
    உயிரின் சாறு
    என்ன நிறத்தில் இருந்தால்
    எனக்கென்ன?//


    கவிதையை ரசித்தேன் என்று கூறுவதை விட லயித்தேன் என்பதே பொருத்தமானதாக இருக்கும். பனிப் பொழிவின் கதகதப்பின் பின்னே இருக்கும் வாழ்வியலை தத்ரூபமாகச் சுட்டியுள்ளீர்கள்.கவிதை மனித மனங்களைச் சாட்டையால் அடிப்பது போன்று உள்ளது.

    ReplyDelete
  3. வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஒரு ஈட்டிபோல
    நேராக இதயத்தைதாக்கும்படியாக இருக்கிறது.
    நிறைவு தந்த கவிதை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி கிருத்திகன், நிருபன், மற்றும் ரமணி.

    ReplyDelete