Thursday 20 January 2011

பின்னுமாய்...!

ஊடாடி நாள் கொண்டு
ஊடோடி பின்னும்
பிறழ்ந்தோடி நடை பிசகி
தாழ்ந்து
தயை விளைந்து
வாழ்தல் கொஞ்சமாய் - இன்னும்
வாழ்தலின் பொருட்டாயும்
நிற்க

.............

சவம் பொறுக்கி
எரி மூட்டி சுடலை வாழ்ந்து
சாம்பலிடை தணலெரிய
அதையும் பொறுக்கி
எண்ணும் எழுத்தும்
எழுதாத கதை நான்கும்
கடக்க
நின்று பார்த்து
அதை எரித்து
தூசு கொண்டு தடங்கள் கீறி
பின்னும் - ஆசையில்

...............

வீதி வழி நிதானித்து
நின்று தேடி
உலக வழக்கு எனும் பதத்துக்கோர்
அர்த்தம் பார்த்து
வாழ்ந்தேன் என்றும் கொள்
உலகம் உன்னைக் கொள்ளும்
இல்லை பின் கொல்லும்
இதற்கிடையில்
மருவி சிதைந்தோடும்
சுயத்தை
ஒரு கோப்பை
ஒரு துளியில்
குடித்து
பின்னும்
வாழ்தலில் நடந்தால்
நடக்கும்
முன்பொருக்கால்
சுடலையில் நான் எரித்த
எனது சவம்

2 comments:

  1. மிக நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ஒரு தத்துவக் கவிதை படிப்பது போன்ற உணர்வு. மிக மிக எளிமையான முறையில் இலக்கியமெனுன் சந்த நடை கொண்டு கவிதை அமைந்துள்ளது.

    சுயத்தை
    ஒரு கோப்பை
    ஒரு துளியில்
    குடித்து
    பின்னும்
    வாழ்தலில் நடந்தால்
    நடக்கும்
    முன்பொருக்கால்
    சுடலையில் நான் எரித்த
    எனது சவம்//

    இழந்த பின்னும் இருத்தலை நோக்கிப் பயணிக்கும் இல்லாமையைச் சுட்டியுள்ளீர்கள். இது கவிதை என்பதை விட மானிட வாழ்வின் பாடம் எனச் சொல்வதே மேல். பின்னுமாய்: சந்தம் கொண்டு பொருள் உணர்த்தும் கவிதை.

    ReplyDelete
  2. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி..!

    ReplyDelete