Wednesday 13 October 2010

மீள வாசிக்கப்படும் வாசிக்கப்படாத மொழி..!

தூசு படர்ந்து
பரணில் கிடக்கும் வயலினும்
மீட்கப்படாத வீணையும்
தங்களுக்குள் என்ன பேசிக்கொள்ளலாம்
காலங் காலமாய் தம்மேல்
வாசிக்கப்படாத மொழியால்;
ஆனால்
நான் உங்களுடன் பேசிக் கொண்டிருக்கிறேன்
அதே மொழியால்

யன்னலை அடுத்த மரத்தின்
வெளிறிய இலை ஊர்ந்து
மீதிப் பச்சையம் தின்றது
வெள்ளைப் புழு;
தேவதைகளால் சபிக்கப்பட்ட மரங்கள்
உதிர்த்துக் கொண்டிருந்தன
கிறிஸ்துமஸ் மரத்தின் கோட்பாட்டின் படி

முத்தமிடுதலை ஒத்திவைத்துவிட்டு
ஊடிக் கொண்டிருந்தன
என் பெயரறியா - நான்
பெயரறியா இரு பறவைகள்
வானில் மேலுமிரண்டு
குளிர் கால இடம்பெயரலில்
துணை மாறி

தார் வீதியின் வெம்மையை
அமர்த்தி வீசியது
குளிர் காற்று
வெக்கை மணம்
அவற்றின் சிறகில் படிந்தது

தேயிலை படிந்த கோப்பையின் ஓரத்தில்
கசந்து
காய்ந்து கிடந்தன
கடைசி மிடறு துளியும்
கடைசிக் கணமும்

மேலெழுந்தவாரியாய்
நாட்காட்டியைக் கிழித்தது போக
கணங்களை சாப்பிட்டிருந்தேன்
அது போதாது
இன்னும் பசித்தது

உதிர்ந்த தலை முடியை
விரலில் சுற்றி
காற்றைக் கிழித்தேன்
வளிப் படலங்களினிடை
நீள விழுந்தது கோடு
அத்தோடு
மெல்ல மூர்ச்சித்து
நான் நாளை பற்றி சொல்லப் போகிறேன்
இதையே மீண்டும்
ஆனால்
கொஞ்சம் தண்ணீர் வேண்டும்....!!

6 comments:

  1. //முத்தமிடுதலை ஒத்திவைத்துவிட்டு
    ஊடிக் கொண்டிருந்தன
    என் பெயரறியா - நான்
    பெயரறியா இரு பறவைகள்
    வானில் மேலுமிரண்டு
    குளிர் கால இடம்பெயரலில்
    துணை மாறி //

    அழகான வரிகள்...

    ReplyDelete
  2. "கடைசி மிரடு துளியும் "
    "மிரடு" என்ன பொருள் நதி?

    ReplyDelete
  3. மிரடு என்பது தேநீரை அல்லது தண்ணீரை குடிக்கும் போது எம் வாய் கொள்ளும் அளவுக்கு சிறிதாய் அருந்துவது..! எங்கள் ஊர்ப் பேச்சு வழக்கு..!

    கருத்திற்கு நன்றி sankavi..!

    ReplyDelete
  4. புதிய தளத்தில் அழகு கவிதை!! வாழ்த்துக்கள்!! ஒருமுறை வந்துப் பாருங்கள் என் வலைப்பூ nathikkarail.blogspot.com க்கு!!

    ReplyDelete
  5. மிடறு என்பதன் மருவுதல்தான் மிரடோ ?

    ReplyDelete
  6. ஆமாம், நேசமித்திரன் அவர்களே..உண்மையில் மிடறு என்பதே சரி. பேச்சு வழக்கில் திரிந்ததை அப்படியே கவிதையில் இட்டது குழப்பங்களுக்குக் காரணமாகிவிட்டது..மாற்றி அமைத்திருக்கிறேன். தெரியப்படுத்தியமைக்கு மிக்க நன்றி... சின்னப்பயல் உங்களிற்கும் தான்..!

    ReplyDelete