Friday 11 June 2010

வழுவிய கவிதை

பிரபஞ்சத்தின் தீரா
உயிர்ப்பின் உச்சத்தில்
மீள மீளப்
பிறப்பதென்றானது

மார்கழிப் பனிக்குடத்தை
தாங்கியும் தாங்காதும்
நாணல் படும் அவஸ்தையை
அள்ளிக் கொண்டது மனது

மார்புக்குள் அயரும்
மழலையாய் மாறி
நிம்மதிச் சன்னிதானத்திற்கு
குடிபெயர்ந்தது உயிர்

இயல்பிருத்தலுக்கு முயன்று
தோற்பதும் வெல்வதுமாய்
மயங்கி சாய்கிறது
இன்றைய பொழுது

மண்ணைத் தொட்டு
முத்தமிடும் அவசரத்தில்
வருகையைத் தெரிவிக்காது
துமித்துப் போகிறது முகில்

தனக்கான இலக்கணத்தின் பால்
நிற்காது வழுவி
பிரசவிக்கப்பட்டிருக்கிறது
ஒரு கவிதை
காதலாய்..!

8 comments:

  1. - வழுவிய கவிதை -
    ரொம்ப நல்லா வந்திருக்குங்க...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. "துமித்துப் போகிறது முகில்"
    புரியவில்லை...கொஞ்சம் விளக்குவீர்களா ?

    ReplyDelete
  3. ///மண்ணைத் தொட்டு
    முத்தமிடும் அவசரத்தில்
    வருகையைத் தெரிவிக்காது
    துமித்துப் போகிறது முகில் ///

    துமித்துப் போகிறது முகில்... அடடா என்ன வார்த்தைகள்.
    கம்பனுக்கு வந்துதித்த வார்த்தை அல்லவா "துமி'.
    நல்ல கவிதைகள் தோழி. உங்களின் இலக்கிய ரசனை வியத்தக்க ஒன்றாக உள்ளது. வாழ்த்துகள்

    ReplyDelete
  4. மார்கழிப் பனிக்குடத்தை
    தாங்கியும் தாங்காதும்
    நாணல் படும் அவஸ்தையை //

    அருமையான வார்த்தைடா மயோ

    ReplyDelete
  5. கம்பனின் தன் பாட்டில் எழுதிய "துமி" (துளி) என்னும் சொல் இலக்கணப் பிழை அற்றது என்பதை சரஸ்வதியே பூவுலகு வந்து முத்தேவர்க்கும் அன்னையாகி நிருபித்ததாக காவியம் சொல்கிறது..! துமி மெல்லிய தூறல் என்று பொருள் படும்..! இதை இலங்கைத் தமிழ்ப் பேச்சுவழக்கில் இன்றும் காணலாம்..!

    வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி..!

    ReplyDelete
  6. மனசிலிருந்து வழுவாக் கவிதை.

    ReplyDelete
  7. "விளக்கத்திற்கு நன்றி,,"
    கவிதையைப் பற்றி சொல்ல
    வார்த்தைகளே இல்லை..!

    ReplyDelete