Friday 26 August 2011

"மூன்றாம் சிலுவை" - உமா வரதராஜன்

வாசிப்புக்களின் வழிநடத்துதல்கள் பிரபஞ்சத்தின் மூலை முடுக்குகளை மடிப்பு விலக்கி அதன் இறுக்குகள் தோறும் வாசிப்பவரைத் தாமதிக்க வைத்துப் பின் வாசிப்பவருக்கென்ற ஒரு உலகைப் படைக்க செய்து அதற்குள் உறைந்துகொண்டே வெளியில் உற்று நோக்கும் மாய நிகழ்வை தொடர்ச்சியாக நிகழ்த்துகின்றன. எழுத்தின் வழி படைக்கப்பட்ட உலகத்துக்குள்ளே ஒன்றித்துப் பயணித்து வெளிவரும் வாசகர் அந்த வாசிப்பின் முடிவிலே ஏதோ ஒரு உலகத்துக்கு சொந்தமாகிவிடுகிறார். அந்த உலகம் எழுத்தாளரின் படைப்பு விரித்துப் போகும் மாயக் கரங்களுக்குள் பொதிந்து அவ்வவ்ப்போது விலகி நகர்வதும், மீள சேர்வதுமாய் தோற்றம் காட்டுவதையும் செய்கிறது. எந்தவொரு வாசிப்பும் வாசகர் சார்ந்த ஒரு உலகத்தையும் படைப்பாளி சார்ந்த ஒரு உலகத்தையும் அவரவர் அனுபவங்கள், நியாயங்கள் சார்ந்த தளத்துடன் உருவாக்கித் தருகிறது.

உமா வரதராஜன் அவர்களினால் எழுதப்பட்டிருக்கும் "மூன்றாம் சிலுவை" எனும் நாவல் உருவாக்கிவிட்டு நகரும் வாசகருக்கான உலகமென்பது, உலக நியதி என்றழைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சில பலவற்றை தளர்த்தி நியாயம் கேட்கும் பாவனையுடன் ஒலிக்கும் சில கேள்விகளைக் கொண்டு அமையப் பெற்றிருக்கிறது. உமாவின் முதலாவது நாவலாக இது அமைந்தாலும் அவரது எழுத்தின் செறிவிற்கு சான்று சொல்லிப் போகும் "மூன்றாம் சிலுவை" நின்று பேசும் தளம் "காதல்". நாவலுக்கான முன்னுரையில் எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் குறிப்பிட்டு சொல்வது போல் ஒரு நாவலை ஒரு குறித்த பிரிவுக்குள் அடக்கிவிடுதல் விமர்சன சௌகரியம் அன்றி வேறல்லவே. ஆனால் "மூன்றாம் சிலுவை" பேசித் தீர்க்கும் இல்லை பேசித் தீர்ப்பதாக படைப்பாளியால் சொல்லப்படும் தளம் காதல் சார்ந்தே ஒலிக்கிறது. காதலின் அடிநாதமாகிய நம்பிக்கையின் மையத்தை நோக்கி கேள்வி எழுப்பும் எழுத்தாளர் அதன் பின்னான விளைவுகளின் பேரால் தண்டனையை வாசிப்பவர் கரங்களில் விட்டு செல்கிறார்.

வயதில் தன்னைவிட இருபத்தியிரண்டு வருடங்கள் குறைந்தவளாகிய ஜூலியின் பால் ஏற்படும் காதலில் சாய்ந்து விழும் ராகவன் ஜூலியின் பிரிவால் மரணத்தின் விளிம்புவரை சென்று வருவதாக விரிகிறது கதைப் புலம். அலுவலகமொன்றின் உயரதிகாரியான ராகவனிடம் வேலை கேட்டு வரும் அபலைப் பெண்ணான ஜூலி வெகு சீக்கிரமே அவருடன் காதல் வயப்பட்டுவிடுகிறாள். எட்டு வருட தொடர்பின் பின் அவள் இன்னொரு திருமணத்துக்கு தயாராகி ராகவனை விட்டுப் பிரிந்து போகிறாள். இந்தக் காதலின் நம்பிக்கை துரோகிக்கப்பட தனித்து வீழ்கிறார் ராகவன். அவர் ஜூலியின் திட்டமிட்ட பிரிவை வாசகரிடம் முன்வைத்து தனக்கான நியாயத்தையும், அவளுக்கான தண்டனையையும் வாசகரின் தீர்மானத்துக்கே விட்டகல்கிறார்.

ஏற்கனவே இருமுறை திருமண பந்தத்தில் இணைந்து இரண்டுமே தோல்வி என்று குறிப்பிடும் ராகவன் மூன்றாவதாத் தொடுக்கும் உறவே ஜூலியின் காதல். ராகவனின் காதல் அவரது ஐம்பதுகளில் ஏற்பட்டிருப்பினும் காதலுக்கு வயது ஒன்றும் தடையில்லை என்ற வகையில் ஏற்புடையதாகிறது. ஓடிப்போன தந்தை, வெளிநாட்டில் தொழில் செய்யப் புறப்பட்டு நொந்து வந்திருக்கும் தாய், திருமண வயதில் தமக்கை, மனநிலை சரியில்லா பாட்டி என்று வாழ்க்கையின் கோரப்பக்கங்களை புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்த ஜூலி வேலை தேடி ராகவனிடம் செல்லும் கையுடன் அவரது அன்பில் வீழ்ந்துவிடுகிறாள். சில வருட உறவின் பின் ஜூலி தனக்கென்ற வாழ்க்கையைத் தீர்மானிக்கும் நோக்கில் இன்னொருவனை வெளிநாட்டில் மணக்க உத்தேசித்து அதன் பொருட்டு ராகவனை விலக்கி உறவில் இருந்து வெளியேறுகிறாள்.

இந்த நிலையில், இந்த நாவல் முன்வைக்கும் சில கேள்விகள் நாவலை வாசித்துக் கொண்டு முன்னேறும் போது தோன்றாமல் இல்லை. காதல் எந்தவொரு வகைக்குள்ளும் அடங்காத போது எதனையும் விமர்சனத்தின் முன் வைப்பது நியாயமாகாது. ஆனால் அடிப்படையான கேள்விகளை, வாசகரின் பார்வையை முன்வைப்பதில் தவறில்லை என்ற அடிப்படையில் ஜூலி செய்தது தவறென்னும் பட்சத்தில் இந்த உறவின் நீட்சியினிடையில் ஜூலி ராகவனிடம் "என்னை என்ன செய்யப் போகிறீர்கள்?" என்றும் கேட்கிறாள். இந்த நாவலில் மூன்று பெண்களை காணமுடிகிறது. ராகவனின் முதல் இரண்டு மனைவிமார் கதையோட்டத்தில் பெரிதாக காட்சிப்படுத்தப்படாவிட்டாலும் அவர்களுடன் சேர்த்து ஜூலியுடன் மூன்று பெண்களின் வாழ்க்கையைப் பார்க்கக்கூடியதாக இருக்கிறது. ஜூலி ராகவனுக்கு செய்தது துரோகமாகப் பார்க்கப்படும் பட்சத்தில் கணவன் என்ற உறவில் இருந்து கொண்டே ராகவன் ஜூலியுடன் கொண்ட உறவு அவரது முதல் மனைவிமார்களால் என்னவகையாகப் பார்க்கப்படும்? ராகவனின் காதல் வயது தாண்டியதாகவும், காலந் தாண்டியதாகவும் காட்சிப்படுத்தப்படும் போது அவர்களது காதலிற்கு என்னவாகிற்று? தன்னை மறுத்தோடும் ஜூலியை சபிக்கும் ராகவனிடம் அவரது மனைவிமாரை, குழந்தைகளை மறுத்தோடும் ராகவனுக்கான சாபங்கள், வேண்டுதல்கள் எங்கே முறையிடப்படும்?

தன்னை மறுத்து விலகிப்போகும் ஜூலியின் குணத்தை, நடத்தையை விமர்சிக்கும் ராகவன் தனது மனைவிகள் பேரில் எத்தகைய எதிர்பார்ப்புக்களை முன்வைத்திருந்தார் என்பது அவரது சில வரிகளில் காணக்கிடைக்கிறது. "என்னைச் சுற்றி இருந்தவர்கள் எல்லோரும் சந்தோசமாக இருந்தார்கள். அவர்கள் கோவிலுக்கு சென்றார்கள்.அவர்கள் கோயில் விழாக்களைத் தவறவிடுவதில்லை. சினிமாக்களை நாடுவார்கள், சுற்றுலாக்கள் போனார்கள். நகைக்கடைகள், புடைவைக் கடைகள் என அலுப்படையாமல் அலைந்தார்கள்.." என்று நீளும் வரிகளில் அவர்களின் உலகத்தை கற்பனை செய்து கொள்ள முடிகிறது. அவர்களுக்கென்ற உலகு அதுதான் என்பதையும் அவர்கள் அதில் சந்தோசித்து உறைகிறார்கள் என்பதையும் தீர்மானித்து கொள்ளும் ராகவன் தனக்கான தேவை தன்னை மட்டுமாய் நேசிக்கக் கூடிய காதலி என்று நகர்ந்து செல்கிறார். ஆனால் ஜூலியை நோக்கி அவள் தன்னை வஞ்சித்து சென்று விட்டாள் என்று விரல்களை நீட்டும் ராகவனை நோக்கி அவரது மிகுதி நான்கு விரல்கள் சுட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. "இதுவரை இந்தக் கிழவன் இனித்தானா" என்று ஜூலியின் கணவனிடம் கோபிக்கும் ராகவனால் ஜூலியின் பிரிவை எதனால் தாங்க முடியவில்லை? தன் மனைவிமார்களுடனான வாழ்க்கை தோல்வியில் முடிந்ததால் ஜூலியை மூன்றாவதாக ஏற்க மறுக்கும் ராகவனால் எதன் பொருட்டு ராகவனுடனான வாழ்வு தோற்றதாக எண்ணி பிரியும் ஜூலியை விலகிச் செல்ல அனுமதிக்க முடியவில்லை? இவ்வளவு நடந்த பின்னும் ராகவனது இதய சத்திரகிச்சையின் போது வைத்தியசாலையில் இணைந்து கொள்ளும் முதல் மனைவியைப் பிரிந்து நகர்வதும், பின் இரண்டாவது மனைவியிடம் இருந்து பிரிந்து ஜூலியை நோக்கி நகர்வதும் இலகுவாக இருந்தபோது, அவர்களுடனான வாழ்க்கை தோல்வியடைந்துவிட்டது என்று குறிப்பிடும் ராகவன் ஜூலியின் நகர்வை ஏற்றுக் கொள்ளாமைக்கு காதல் என்ற ஒன்றை மட்டுமா காரணமாகக் கூற முடியும்? இதனை ராகவனின் மனைவிமார்களில் ஒருவர் செய்ய எண்ணியிருக்கும் பட்சத்தில் ராகவன் என்னவகையான எதிர்வினையை ஆற்றியிருப்பார்? ஆக, ஜூலியின் பிரிவைத் தாங்க முடியாமல் போனதற்கு ஒரு பெண் தன்னை ஏமாற்றி காதல் செய்து கலவி முடித்து, பண உதவி, ஆளுதவி பெற்று சீவித்து விட்டு தூக்கிஎறிந்து விட்டுப் போனாளே என்ற ஆண் மனோபாவமும் காரணமாக இருக்கலாம்.

நாவலின் இடை நடுவே வந்து வந்து போகும் ஜூலியின் அக்காமாரும் சரி, கதையில் சிறு முக்கியத்துவத்தைப் பெற்றுவிடும் ஜூலியின் அம்மாவும் சரி அவரவர் அனுபவங்களின்படி முன் அனுமானிக்கக் கூடிய முடிவொன்றை நாவலுக்கென்று தந்துவிடுகிறார்கள். ஏலவே காதலித்து அவனை விட்டு வேறு ஒருவனைத் திருமணம் செய்து கொள்ளும் அக்காவாகட்டும், கணவனைப் பிரிந்து வெளிநாட்டில் தொழில் செய்யப் புறப்பட்டு அங்கேயே வேறு ஒருவனுடன் வாழ்ந்த பின் தான் தாய் நாட்டுக்கு திரும்பி வரும் தாயாகட்டும் ஜூலி இப்படித்தான் என்ற இயல்புகளை தாங்கள் அறியாமலேயே ஜூலிக்கு வழங்கிவிட்டு நகர்கிறார்கள். இதில் தன் காதலை முழுவதுமாக ஏற்றுக் கொள்ளும் ஜூலியுடனான தொடர்பை சமூகத்துக்கு வெளிப்படுத்த தயங்கும் ராகவன் இன்றும் சமூகத்தில் உறுதியாகக் கட்டி எழுப்பப் பட்டுக் கொண்டிருக்கும் ஆண் என்னவும் செய்யலாம் பெண்ணால் முடியாது என்ற வகையான குணாதிசயங்களை சொல்ல முற்படுகிறாரா என்ற சந்தேகமும் எழாமலில்லை.

எழுத்தாளர் தமிழ் நதியினால் எழுதப்பட்ட "கானல் வரி" குறு நாவல் பேசி நகரும் தளமும் சமூகத்தின் கட்டுப்பாடுகளை விலத்தி ஓட நினைக்கும் மனிதர்களைப் பற்றியதே. ஆனால் அந்த குறு நாவலில் மனைவிக்காக குழந்தைக்காக தனது திருமணத்தின் பின் ஏற்பட்ட காதலின் காதலியை விலத்தி ஓடும் ஒரு "புனிதனின்" கதை பேசப்பட்டிருக்கிறது. கதையின் நீரோட்டத்தில் பெண் நவீன மாதவியாக காட்டப்பட்டிருக்கிறாள். குடும்பத்தை கொண்டிழுக்கும் தேவையும் கடப்பாடும் இருக்கும் பட்சத்தில் மனிதர்களை பிறழ்ந்துவிட வைக்கும் அந்த நொடியை என்ன பெயர் கொண்டு அழைக்க முடியும் என்ற கேள்வியும் எழாமல் இல்லை. காதல் என்ற பெயர் கொண்டு இந்த உறவுகள் கட்டமைக்கப்படும் என்னும் பட்சத்தில் உறவை விட்டு நீங்குதலும், நீங்குவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குதலும் சில வேளைகளில் அவசியமாகிறது. அப்படியான சந்தர்ப்பங்களில் இத்தகைய காதலின் முடிவு பிரிதல்தானா, சாபங்களை ஏற்றுக் கொள்ளுதல் தானா என்றால் இல்லை என்றும் முடிக்கலாம். பிணக்குகளில் முறியும் பந்தங்களும், அந்த வகையான பந்தங்களில் இருந்து முறையாகப் பிரிந்து வேறு துணையுடன் இணையும் மனிதர்களும் இந்த சமூகத்தில் இருக்கிறார்கள். உறுதியான முடிவை எடுத்துவிட முடியா புனிதத்தினதும், தூய்மையினதும் கட்டமைப்புக்களும் அளவுகோல்களும் அவரவர் சௌகரியத்துக்கு ஏற்ப வெவேறு நிலையைப் பெற்று விடுகின்றன. எப்போது பிறரால் அந்த வளையங்கள் தளர்த்தப்பட முயற்சிக்கப்படுகின்றனவோ அப்போது அவர்களுக்கு சில பட்டங்களை வழங்கிவிடவும், அவர்கள் மேல் காறி உமிழ்ந்துவிடவும் இந்த சமுதாயம் தயாராகவே இருக்கிறது. மறுத்தோடிகளின் பக்க நியாயங்கள் எப்போதும் வாதத்துக்கு உகந்தனவாக காலங்காலமாக புறக்கணிக்கப்பட்டு நகர்ந்துவிடப்படுவனவாக காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

"மூன்றாம் சிலுவை" நாவலை ராகவனின் சார்பில் நின்று அவரது உலகின் கண்களோடு பார்க்கையில் வயதை மீறித் தோன்றும் காதலின்பால் அவர் கொண்ட நம்பிக்கைகளும் கனவுகளும் மிகத் தந்திரமாக ஜூலியினால் உடைக்கப்பட்டு சின்னாபின்னமாக்கப்பட்ட ஏமாற்றமும், சினமும் நாவலினூடு வெளிப்படுகிறது என்று சொல்லலாம். நாவலின் தொடக்கத்தில் ராகவனால் எழுதப்பட்டிருக்கும் கவிதைகளை நோக்கின் காதலில் தோற்றுப் போனதன் வலியும், துரோகம் இழைக்கப்பட்டதா என நம்ப மறுக்கும் மனதின் உணர்வும் நிரம்பிக் கிடக்கின்றன. மௌனமாகக் கடக்க முயற்சிக்கும் நாளின் ஒவ்வொரு நொடியும் காதல் நினைவுகளை ஞாபககத்தில் நிறுத்தி கொலை வாள் கொண்டு துரத்துகின்றன.

சரிகளும் பிழைகளும் அவரவருக்கென மாறுதல்கள் கொள்கின்றன. மறுத்ததோடுதலும் அவை பொருட்டு தொடர்கின்றன. உலகில் காதல் என்பது காதல்தான் என்றவாறு அமைகையில் உமா வரதராஜன் அவர்களும் தன்னிலையில் நின்று எழுதியிருக்கும் நாவலும் காதலின் பிரிவின், துரோகத்தின் வலியை பேசுகிறது. துரோகங்கள் யாருக்கு இழைக்கப்பட்டிருப்பினும் தாங்கோனாதவைதான். அந்தத் துரோகம் இந்த நாவலின் வழி பழிவாங்கப்படும் என்றிருப்பின் அதுவும் இன்னொன்றாய் வகையாகிறது. அவரவர் நியாயங்களின்பால் விரியும் படைப்பின் உலகம் வாசிப்பவரை தீர்மானிக்கச் சொல்லி மெல்ல நகர்கிறது இன்னொன்றின் பொருட்டு. முன்னுரையில் எழுத்தாளர் பிரபஞ்சன் சொன்னது போல் இதுவும் "கோடிப்பக்கங்களில் ஒரு புதிய பக்கம்." அவ்வளவுதான்..

No comments:

Post a Comment