Monday, 4 July 2011

துளசி..!

1.
தேவாலயத்தின் பெரிய மணி மத்தியானம் பன்னிரண்டு மணிக்காக அடித்தோய்ந்தது. கண்களை மெல்லத் திறந்த துளசி நெஞ்சில் பிதா சுதன் பரிசுத்த ஆவியென்று கைகளை நெஞ்சின் குறுக்கே அசைத்து நெற்றியில் தொட்டுக் கொண்டாள். தேவாலயத்துக்குள்ளே மெல்லிய இருட்டு பரவிக் கிடந்தது. கூடவே நிசப்தமும். இரவில் உறிஞ்சிய குளிரை மெல்லக் கசியவிட்டுக் கொண்டிருந்தது சீமெந்து தரை. இந்த நிசப்தமும், இருட்டும், மெல்லிய குளிர்மையும் குறுகிய காலத்தில் துளசிக்கு மெல்ல மெல்லப் பிடித்துப் போய்விட்டிருந்ததன. இப்போது கொஞ்ச காலங்களாகத் தான் அம்மாவுக்குத் தெரியாமல் இப்படி தேவாலயத்துக்கெல்லாம் போகத் தொடங்கியிருக்கிறாள். அம்மாவுக்குத் தெரியாமல் இதுவரை அவள் எதுவும் செய்ததில்லை. செய்ய மனமும் இருந்ததில்லை. இரு கைகளும் விரித்து இங்கே வா, என்னுள்ளே அடைக்கலம் கொள் என்று சொல்வது போல நின்றிருந்த மாதா துளசிக்கு யாரையோ நினைவுக்கு கொண்டு வர முயற்சிப்பதாகத் தோன்றியது. தேவாலயத்தின் ஒரு பக்க முற்றத்தில் அவள் வகுப்புத் தோழிகள் விளையாடிக்கொண்டிருப்பது பெரிய யன்னலூடு தெரிந்தது. அந்தப் பெரிய புளிய மரத்தின் அடியில் விளையாடிக்கொண்டிருக்கும் அவர்களுக்குள் நிஷாந்தியும் அடக்கம். நிஷாந்தியிடம் சொல்லிக் கொண்டு வீட்டை நோக்கி நடக்கலாம் என்ற எண்ணம் தோன்றினாலும், காதில் ஒலித்துக் கொண்டிருந்த நிஷாந்தி சொன்ன வார்த்தைகள் கோபத்தை விட ஒரு வித தோல்வியுணர்வை மனதில் விதைத்துவிட்டிருந்தன. அதனால் மீண்டும் அந்தப் பக்கம் திரும்பிப் பார்த்துக் கொண்டே மெதுவாக மர பெஞ்சில் இருந்து எழும்பினாள். நிஷாந்தியும் தோழிகளும் ஒளித்துப் பிடிக்கும் விளையாட்டில் இருந்து கிளித்தட்டுக்கு மாறிவிட்டிருந்தனர். துளசி மெதுவாக மாதாவை நோக்கி நடந்தாள். பலிபீடத்துக்கு அருகே பெரிய கண்ணாடிக் கூண்டுக்குள் பெரிய சிலுவை சுமந்தவாறு, சொட்டும் குருதித் துளிகளுடன் கண்களை மூடியவாறு வெள்ளைத் துணியால் போர்த்தபடி சாய்ந்து கிடந்தார் இயேசு. மாதாவையும், இயேசுவையும் மாறி மாறிப் பார்த்தவாறு சில கணங்கள் நின்றுவிட்டு தேவாலயத்தின் பிரதான வாயில் நோக்கி நகர்ந்து படிக்கட்டுக்களில் இறங்கினாள்.

தலைக்கு மேல் ஆக்ரோசத்துடன் தீயைக் கக்குவது போல நெருப்புக் குழம்பாய் கொதித்துக் கொண்டிருந்தது மத்தியான வெயில். தேவாலயத்துக்குள் இருந்த அமைதி தன்னிலிருந்த உயிர்ப்பை யாரோ தோலுரித்து எடுத்துவிட்டு மிகுதியை எறிந்துவிட்டுப் போனதுபோல திட்டுத்திட்டாய் எங்கும் பரவி தெருவை வெறிச்சோட வைத்துவிட்டிருந்தது. அதைத் தெருவென்று சொல்வதிலும் பார்க்க கொஞ்சமாகத் தார் ஊற்றப்பட்டுக் கிடக்கும் பிரதான சாலை என்று சொல்லலாம். அதிலிருந்து கிளைத்து ஊர்களுக்குள் நுழைந்து மறையும் மண்தெருக்களும், கிரவல் பாதைகளுமே அதிகம். அந்த சாலை தான் பல குக்கிராமங்களையும், வவுனியா நகரையும் இணைத்து நகர்ந்து கொண்டிருக்கிறது. அந்த சாலையில் நகரை அண்மித்ததாக இருக்கிறது துளசி படிக்கும் கிறிஸ்தவ பெண்கள் கல்லூரி. நகரத்திலேயே மிகவும் பிரசித்தி பெற்ற அந்தப் பாடாசாலையில் அவள் ஐந்தாவது படித்துக் கொண்டிருக்கிறாள். அவளது அண்ணா சற்றுத்தள்ளி இருக்கும் ஆண்கள் பாடசாலையில் எழாவதில் படித்துக்கொண்டிருந்தான். ஐந்தாவது தரத்தில் நடக்கவிருக்கும் அகில இலங்கைப் பரீட்சையில் தேறினால் அரசாங்கம் குறித்த தொகையொன்றை ஏழை மாணவர்களுக்கு வழங்குவது வழக்கம். உதவித்தொகை என்பதிலும் பார்க்க அதில் தங்கள் குழந்தைகள் தேர்ச்சி பெறுவது அதிலும் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவது தங்கள் குடும்ப கௌரவத்தை உயர்த்தும் என்பதால் பெற்றோர்களும் சலிக்காமல் குழந்தைகளின் குழந்தமையுடன் போராடிக்கொண்டிருந்தார். பாடசாலைகள் வேறு தங்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டு எப்படியாவது அதிக மாணவிகளை தேர்ச்சி பெறவைத்து தங்கள் தரத்தினை உயர்த்திக்காட்டும் நோக்கில் வார இறுதியில் விசேஷ வகுப்புக்களை இலவசமாக நடத்திக்கொண்டிருந்தன. பாடசாலை நாட்களில் அண்ணாவுடன் அவன் சைக்கிளில் வந்து, பாடசாலை விட்டதும் வீட்டுக்கு தோழிகளுடன் சேர்ந்து நடந்து போவது வழக்கம். சில சமயங்களில் அண்ணாவுடன் திரும்பிப் போவதும் நடக்கும். ஆனால் இப்படியான விசேஷ வகுப்புக்களின் போது அண்ணா கூட்டிக்கொண்டுவந்து விட்டுவிட்டுப் போவதை மட்டுமே செய்வான். வகுப்பு முடியும் போது நடந்து போகவேண்டும் என்பது கட்டாயம்.

படிகளில் இருந்து தெருவில் ஏறி தார்படாத மண்ணின் மேல் கால் வைத்தவளுக்கு குதிக்காலில் சுடுமண்ணின் வெப்பம் சுள்ளென்று கொதித்தது. காய்ந்து கிடந்த புல்லின் மேல் காலைத் தேய்த்துக் கொண்டாள். தொடர்ந்து பல மாத காலங்களாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் அந்த பாட்டா செருப்பு குதிக்காலின் ஓரத்தில் தேய்ந்து மெல்லியதாகிவிட்டிருந்தது. ஒவ்வொரு அடி வைக்கையிலும் குதிக்காலின் சிறுபகுதி சுடுமண்ணின் வெப்பத்துக்கு ஆளாகுவதைத் தடுக்க முடியவில்லை. இந்த செருப்புடன் இன்னும் ஏழு கிலோமீட்டர் தூரம் நடக்கவேண்டும் என்பது நினைவில் வர தாங்கமுடியாத அயர்ச்சி உடல் முழுதும் பரவி மனதை அழுத்தத்தொடங்கியது. துளசி காலையில் பள்ளிக்கூடம் வந்ததிலிருந்தே மனச் சோர்வுமிக்கவளாக உணர்ந்து கொண்டிருந்தாள். தினமும் வழமையாக வெள்ளை சீருடை, வெள்ளைச் சப்பாத்தில் பள்ளிக்கூடம் செல்வதில் அலுத்துப் போயிருந்த மனது விசேஷ வகுப்பு அன்று எந்த உடையும் போட்டுக்கொண்டு வரலாம் என்ற ஆசிரியையின் அனுமதியில் வானத்துக்கும் பூமிக்குமாய் குதித்துக் கொண்டிருந்தது. முதல் நாளே தன்னிடமிருந்த சிவப்பு நிறத்தில் பெரிய பூப்போட்ட சட்டையை அம்மாவிடம் சொல்லித் தோய்த்து காயப்போட்டிருந்தாள். குட்டையாக வெட்டப்படிருந்த தலைமுடியை சிரமப்பட்டு கூட்டியள்ளி உச்சியில் சிறு ரிப்பனால் பக்கத்து வீட்டு அக்காவைக் கொண்டு கட்டிக்கொண்டு விட்டிருந்தாள். தேவையான புத்தகங்களை மட்டும் அம்மா சாமான் வாங்க உபயோகிக்கும் சிறு சணல் பையில் இட்டு கையில் கொழுவியவாறு அண்ணாவுடன் பள்ளிக்கூடம் வரும் வரையில் மனதின் குதியாட்டம் ஓய்ந்திருக்கவில்லை.

பள்ளிக்கூட முற்றம் எங்கும் கூலாம்பழ மர இலைகள் உதிர்ந்து கிடந்தன. அன்று சனிக்கிழமை ஆதலால் மாணவிகள் யாரும் கூடிப் பெருக்காததால் பாடசாலை எங்கும் மஞ்சள் பழுப்பு இலைகளும், குரங்குகளின் எச்சங்களும் விரவிக்கிடந்தன. வார நாட்களில் ஒன்று இரண்டு குரங்குகளைக் சிறு கூட்டமாகக் காணக்கிடைக்கும். தாய்க் குரங்குகளும், கர்ப்பஞ்சுமக்கும் குரங்குகளுமே அதிகம். முற்றத்தின் நடுமையத்தில் தனித்துத் தடித்து வளர்ந்து எல்லாப்பக்கங்களும் கிளைகளைப்பரப்பி முடிந்த அளவுக்கு வெயிலின் வெம்மையைத் தணித்துக் கொண்டிருக்கும் அந்தக் கூழா மரம் சிறுகுரங்குகளுக்கும் பறவைகளுக்கும் மட்டுமல்லாது துளசி போன்ற சிறுமிகளுக்கும் வேடந்தாங்கல். மதிய இடைவேளையிலும், பாடசாலை விட்டபின்பும் அந்த மரத்தின் கீழ் நின்று விளையாடாமல் என்றைக்குமே விட்டதில்லை. இன்று ஐந்தாம் வகுப்பு மாணவிகள் மட்டுமே வந்ததால் குறைவான சிறுமிகளே மரத்தின் கீழ் ஓடுவதும், மற்றவர்களைத் துரத்துவதும் கீச்சிடுவதாகவும் நின்றிருந்தனர். ஆசிரியை இன்னமும் வந்திருக்கவில்லையாதலால் தானும் அவர்களுடன் சென்று சேர்ந்து விளையாடும் எண்ணத்தில் விரைவாக ஓடிப் போய்த் தன் புத்தகப்பையை மற்றவர்களினதுடன் சேர்த்து வைத்துவிட்டு அந்த சிறு குழாமில் கலந்து கொண்டாள். எல்லோரும் நிற உடுப்பில் வந்திருந்தமையால் வித்தியாசமாகவும் அழகாகவும் வண்ணத்துப்பூச்சிகள் கால் முளைத்து விளையாடிக்கொண்டிருப்பது போன்ற தோற்றத்தையும் அந்த இடம் பெற்றுவிட்டிருந்தது. தங்கள் ஆடைகளை ஒருவருக்கொருவர் காட்டிக்கொண்டும், அவை வாங்கப்பட்ட சந்தர்ப்பங்களையும் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டிருந்தனர். அதிகமான சட்டைகள் பெருநாட்களின் போது பெற்றோர்களால் வாங்கப்படிருந்தன. துளசிக்கு தன் சட்டை எப்போது வாங்கப்பட்டது என்பது நினைவிலில்லை. கடந்த வருடம் செல்வியத்தையின் திருமணத்துக்காக எடுத்த நினைவு. அந்த சட்டையை அவளது அப்பா தெரிவு செய்திருந்தார். பழுப்பு நிறத் துணியில் பெரிய சிவப்பு பூக்கள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. அவளுக்கு அப்பா இறுதியாக வாங்கித் தந்த சட்டை என்பதாலோ, இல்லை இருக்கும் சட்டைகளில் அதுவொன்றுதான் சொல்லிக் கொள்ளும்படி அழகாகவும், அணியக்கூடியதாகவும் இருக்கின்றதாலோ என்னவோ அந்த சட்டையை தோய்த்து தோய்த்து விசேஷ வகுப்புக்கள் அனைத்துக்கும் அணியத் தொடங்கிவிட்டிருந்தாள்.

இன்றுடன் மூன்று வகுப்புக்கள் கழிந்த நிலையிலும் அதே ஒரு சட்டையுடனும், பாட்டா செருப்புடனும் வருவது அவளுக்கு பெருங் கவலையை விதைத்துவிட்டிருந்தது. அம்மாவிடம் பல தடவைகள் சொல்லியும் புதிதாய் கிடைக்காத சட்டையும், செருப்பும் எங்கோ, எதோ ஒரு கடையில் துணியாகவோ, இல்லை சட்டையாகவோ, சாக்கு மூட்டைகளிலோ முடங்கிக் கிடக்கும். அப்பா இருந்தால் இந்த நிலை வந்திருக்காது. அவர் கேட்காமலேயே வாங்கித்தருவார் என்பது துளசியின் எண்ணம். ஈழப்போர் துரத்தித் துரத்திக் கலைத்ததில் ஒரு இடம் விடாமல் இடம்பெயர்ந்து கடைசியில் வவுனியாவில் ஒரு குக்கிராமத்தில் தஞ்சம் புகுந்து விட்டிருந்தனர் துளசியின் குடும்பத்தினர். பால்யத்தின் நினைவுகளில் துளசிக்குக் கண்கள் பனித்தன. தன் சட்டை வாங்கப்பட்ட சந்தர்ப்பத்தையும், அதை அப்பா எப்படித் தேர்ந்தெடுத்தார் என்பதையும் நூறாவது முறை சொல்ல நேர்ந்தாலும் அது குறித்துக் கவலை கொள்ளப் போவதில்லை அவள். இது நிஷாந்திக்கும் தெரியும். தினமொரு அழகான ஆடையிலும், செருப்புடனும் வரும் அவளை அவளது அப்பாதான் மோட்டார் சைக்கிளில் இறக்கிவிடுவார். இருவரது கிராமங்களும் அருகருகே இருந்ததால் வார நாட்களில் பலவேளைகளில் இருவரும் சேர்ந்தே வீடு போவது வழக்கம். ஆனால் வார இறுதிகளில் அவளது அப்பா வந்து கூட்டிப்போவார். தனித்து விடப்படும் துளசி பலதையும் நினைத்தவாறே விறுவிறுவென்று நடக்கத் தொடங்கிவிடுவாள். தோழிகளுடன் பேசியபடி எப்படி சுறுசுறுப்பாகவும், ஒரு இடத்திலும் நிற்காமல் நடந்தாலும் கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலம் எடுத்துவிடும் வீடு சென்று சேர. இப்போது தனியே நடக்கும் போதெல்லாம் நேரம் மிக மெதுவாக செல்வது போலவும், தூரம் கூடிக்கொண்டே போவது போலவும் தோன்றிக்கொண்டிருக்கும். இன்று துளசியின் சட்டை மிக மிக அழகாக இருந்தது. சுருக்குகள் வைத்துத் தைத்த குட்டைப்பாவாடையும், மேலே மஞ்சள் நிறத்தில் சட்டையும் அணிந்திருந்தாள். தோள் வரை நீண்ட தன் கூந்தலை ஒற்றைப்பின்னலிட்டு கீழே மஞ்சள் நிறத்தில் ரிப்பனும் கட்டி இருந்தாள். அந்த சட்டையை அவளது அம்மா அவளின் தங்கையின் பிறந்தநாளுக்காக வாங்கித் தந்ததாக சொல்லியிருந்தாள். துளசிக்கு அந்தப் பாவாடை மிகவும் பிடித்துப் போய்விட்டது. அது போலொன்று வாங்கித் தரச் சொல்லி அம்மாவைக் கேட்கவேன்றுமென்று நினைத்துக் கொண்டாள். அம்மாவிடம் வாங்கித் தரச் சொல்வதற்கென்று ஒரு நீண்ட பட்டியலை வைத்துக்கொண்டிருக்கிறாள். அதில் கலர்கலரான ரிப்பன்களும், பார் வைத்துத் தைத்த புது வகை செருப்பும் அடக்கம். ஆசிரியை வகுப்புத் தொடக்கி வரவு பதியும் வரை தன் பட்டியல் குறித்து நிஷாந்தியிடம் சொல்லிக் கொண்டிருந்தாள். அவள் தான் அந்தப் பட்டியலில் தேவதைப்படம் போட்ட தண்ணீர்ப் போத்தலையும் இணைக்கச் சொன்னாள். வகுப்பு முடிந்ததும் சேர்ந்து நடந்து போகலாமா என்று நிஷாந்தியிடம் கேட்கும் போது மனது முழுவதும் அவள் அப்பா வராதிருக்க வேண்டுமென்ற பிரார்த்தனை ஒலித்துக் கொண்டிருந்தது. பிரார்த்தனையை காலையிலேயே அண்ணாவுடன் வரும்போது சிவன் கோவிலைத் தாண்டி வரும்போது கண்களை மூடி மெல்ல சொல்லிவிட்டிருந்தாள். பின் பாடசாலைக்குள் வரும்போது பாடசாலை மதிற் சுவரின் மேலாகத் தெரிந்த தேவாலயத்தை நோக்கியும் அதே பிரார்த்தனையை முன் வைத்திருந்தாள். ஆனால் நிஷாந்தியோ தான் தனது அப்பாவுடன் போவதாக சொல்லிக் கொண்டுவிட்டாள். "எனக்கு அப்பா இருக்கிறார். அவர் வந்து கூட்டிட்டுப் போவார். போகேக்க ஐஸ் வாங்கித் தாரேன் என்று சொல்லியிருக்கிறார் துளசி. நீ போ, நான் அப்பாவோட தான் வருவேன்" என்று வெகு இலகுவாக சொல்லிவிட்டு மற்றத் தோழிகளுடன் விளையாடத் தொடங்கிவிட்டாள். துளசிக்கு அழ வேண்டும் போல இருந்தது. தனது அப்பா வருவதாகவும் தன்னை அதே பச்சை நிற மோட்டர் சைக்கிளில் வெகு லாவகமாக தூக்கி ஏற்றி வீடு கொண்டுபோவதாகவும், தனக்கும் ஐஸ் வாங்கித் தருவதாகவும் கற்பனை விரிந்தது.

துளசிக்கு தன் அப்பா வெளிநாட்டில் இருக்கிறார் என்பது தெரியும். ஆனால் அந்த நாட்டின் பெயர் வாய்க்குள் இன்னமும் நுழைய மாட்டேன் என்று அடம்பிடித்துக் கொண்டிருந்தது. பேசாமல் தேவாலயத்துக்குள் நுழைந்து அமர்ந்தவள் இப்போதுதான் வீட்டு நினைவில் நடக்கத் தொடங்கியிருக்கிறாள். பன்னிரெண்டரை மணியளவில் சிவன் கோவிலை சேர்ந்துவிட்டால் மதிய பூசை முடிந்ததும் கொடுக்கும் பிரசாதம் வாங்கிச் சாப்பிடலாம். சிவன் கோவில் அவளது வீட்டுக்கும் பாடசாலைக்கும் இடையில் ஏறத்தாழ மத்தியில் இருந்தது. அம்மாவுடன் அடிக்கடி வரும் கோவிலாததால் அங்கிருக்கும் குருக்களுக்கு அவளை நினைவிருக்கும். "வா துளசி, கொஞ்சப் பிரசாதம் சாப்பிடுறியா" என்று கேட்டுக்கொண்டே நெற்றியில் திருநூறை வைத்து விடும் அவரை அவளுக்கு மிகவும் பிடிக்கும். கோவிலுக்குப் போகாமல் வீடு போவதில்லை அவள். ஏனென்றால் கோவிலில் நிற்கும் நாய் தான் காரணம். கோவிலுக்குத் துளசி போகும் நாளில் தனக்குக் கிடைக்கும் பிரசாதத்தில் கொஞ்சத்தை அந்த நாய்க்கும் போடுவாள். அது பெட்டை நாய் என்றபடியால் யாரோ அதை சாக்குமூட்டையில் போடுக் கொண்டுவந்து இங்கே விட்டுவிட்டுப் போய்விட்டார்கள் என்று அம்மா சொல்லியிருந்தாள். அதுவும் துளசியைக் கண்டால் பின்னாகவே ஓடிவந்து வாலை ஆட்டிக் கொண்டும், மெல்ல முனகிக்கொண்டும் தன் அன்பை சொல்லிக் கொள்ளும். துளசிக்கு இப்போது இன்னும் விரைவாக நடக்கவேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற்றது. "கெதியாப் போனால் ஜிம்மிக்கு சாப்பாடு வாங்கிக் கொடுக்கலாம், பாவம் இண்டைக்கு சனிக்கிழமை, கோவிலுக்கு ஆக்கள் வரமாட்டினம், ஏனென்றால் மச்சம் சமைக்கிற நாள் என்று அம்மா சொல்லியிருக்கிறா, அது பாவம் சாப்பாடு கொடுக்க ஆக்கள் இல்லாமல் நிற்கும்" என்று வாய் விட்டு சொல்லிக் கொண்டாள்.

ஜிம்மி என்பது அவள் தன் ஆறாவது வயதில் யாழ்ப்பாணத்தில் இருக்கும் போது வளர்த்த நாயின் பெயர். அந்த நாயை அவளாவது அப்பா ஒரு மிருகவைத்தியரிடம் இருந்து வாங்கிக் கொண்டுவந்திருந்தார். அப்பாவுக்கு பிள்ளைகள் மேல் அதிக பாசம். நாய் வளர்க்கவேண்டும் என்று அண்ணாதான் கரைச்சல் கொடுத்துக்கொண்டிருந்தான். அப்பாவோ நன்றாக நேரம் எடுத்து, விசாரித்து யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் இருந்த மிருக வைத்தியர் பற்றிக் கேள்விப்பட்டு அங்கு போய் அவரது நாய் குட்டி போட முதலே சொல்லி வைத்து ஜிம்மியை வாங்கிக் கொண்டுவந்தவர். தன் சிறுவயதுகளில் அவர்கள் வீட்டில் நாய்க்குட்டி நின்றிருந்தாலும் ஜிம்மி போல் ஒரு குட்டி நாயை வளர்ப்பது இது தான் துளசிக்கு முதல் தடவை. பதினோரு மணிக்கு பாலர் பாடசாலையிலிருந்து வீட்டு வேலைக்கு நின்ற சூசை அண்ணா ஏற்றிக் கொண்டு வந்து வீட்டில் விட்டவுடன் ஆரம்பிக்கும் விளையாட்டு அண்ணா பள்ளிக்கூடம் விட்டு மூன்று மணிக்கு வந்தபின்னும் தொடர்ந்து அப்பா ஒரு அதட்டல் போடும் வரை நீளும். அவளின் ஏழு வயதில் யாழ்ப்பாணத்திலிருந்த எல்லோரும் இடம்பெயருமாறு ஒரு மங்கிய மாலையில் சைக்கிளில் ஸ்பீக்கர் போட்டு சொல்லிக் கொண்டு போனவுடன் அவள் குடும்பமும் இரவோடிரவாய் வெளிக்கிட்டுவிட்டிருந்தது. ஜிம்மியையும் தூக்கிக் கொண்டு வந்திருந்தாலும், நகரே திரண்டு ஒதுங்கிய நல்லூர்க் கோவிலின் நான்கு வாசலில் ஒரு வாசலின் முன் கூட்டத்துக்குள் தொலைந்து விட்டிருந்தது. எவ்வளவு கத்தியும் அது திரும்பி வரவில்லை. மண் போட்டால் மண் கீழே விழாதா அளவுக்கு நெருங்கி வழிந்த அந்த சனத்திரளுக்குள் ஒரு குட்டி நாயைத் தேடுவதும் சாத்தியமில்லை என்பதாலும், ஊர்விட்டு நகரும் சனங்களின் அவலக் குரல்களில் அந்தக் குட்டி நாயின் மெல்லிய குரைப்புச் சத்தம் கேட்காது போனதாலும் அப்பாவும் மௌனமாக இருந்துவிட்டார். அந்த கோவிலில் தொலைத்த ஜிம்மி, இந்தக் கோவிலில் அவளுக்காகக் காத்திருப்பது போன்ற பிரமை அவளை எப்போதும் சூழ்ந்திருந்தது. கோவிலில் செருப்பு விடும் இடமென்று ஒன்றை வைத்திருக்கும் பாட்டியிடம் தன் அம்மாவைக்கொண்டு அடிக்கடி கேட்டுக் கொள்வாள் ஜிம்மிக்கு சாப்பாடு தினமும் கிடைக்குதா என்று.

துளசி பாதித் தூரத்துக்கு வந்துவிட்டிருந்தாள். இன்னும் பத்துப் பதினைந்து நிமிடங்களில் சிவன் கோவில் வந்துவிடும். வயிறு பசித்தது. காலையில் குடித்துவிட்டு வந்த வெறுந் தேத்தண்ணியும், பின் பள்ளியில் சாப்பிட்ட தோடம்பழ இனிப்பும் ஏற்கனவே சமிபாடடைந்துவிட்டிருந்தன. கோவிலில் சாமிக்குப் படைக்கப்பட்டிருக்கும் பஞ்சாமிர்தத்தையும், சக்கரைப்பொங்கலையும் நினைத்துக் கொண்டாள். வயிறு கொஞ்சம் சாந்தமடைவதாகப்பட்டது. "சே, அப்போத இனிப்பு வாங்காமல் இருந்திருக்கலாம், ஒரு ரூபா இருந்திருக்கும், இப்ப ஐஸ் வாங்கிக் குடிச்சிருக்கலாம்" என்று நினைத்துக் கொண்டாள். இருந்ததிலும் விட அதிகமாய் சோர்வு வந்து கவிந்துகொண்டது. அம்மா தேடத்தொடங்கி விடுவார் என்பதிலும் பார்க்க, அவளது ஆச்சி படலையில் வந்து நின்று போவோர் வருவோரிடமெல்லாம் துளசியைப் பார்த்தார்களா என்று கேட்கத் தொடங்கிவிடுவார் என்பது நினைவுக்கு வர விரைந்து நடக்கத் தொடங்கினாள். யுத்தம், அரசியல் போன்றவை விளங்கிக் கொள்ள முடியாத வயதெனிலும், திடீர் திடீர் என்று போடப்படும் அவசரகால சட்டத்தின் வீரியம் அவளுக்குப் புரியாமல் இல்லை. துளசி தான் நடந்துகொண்டிருக்கும் பாலத்தின் இருபக்கமும் பார்த்தாள். தாமரைப் பூக்கள் இல்லாத தாமரை இலைகள் கொடிகளில் செழித்து நீரின் மேல் மிதந்து கொண்டிருந்தன. ஐதரில்லாவும், பாசியும் வளர்ந்து பச்சையாகிக் கிடக்கும் நீர் அதிகமில்லா அந்த குளத்தின் தூரத் தெரிந்த கரைகளில் கொக்குகள் தவமிருந்தன. மெல்ல நடந்து பாலத்தின் மேலாய்க் குளத்தைக் கடந்து சிவன் கோவிலுக்குப் போகும் மண் தெருவில் நுழைந்தாள். தெருவின் ஆரம்பத்தில் பெரிய விஸ்தாரமான ஒரு வீட்டைச் சுற்றி தகரத்தால் பெரிய மதில் கட்டப்பட்டிருந்தது. பெரிய கேட் போட்டு சாத்தப்பட்டிருந்தது. கேட்டின் இருபக்கமும் மண்ணால் கட்டப்பட்ட அரண்களில் சில அண்ணாமார் அமர்ந்திருந்து கதைத்துக் கொண்டிருந்தனர். அந்த அண்ணாமார் என்ன தந்தாலும் வாங்கக்கூடதென்றும், என்ன கேட்டாலும் பதில் சொல்லக் கூடாதென்றும், உள்ளே வரும்படி கூப்பிட்டால் போகக் கூடாதென்றும் அம்மா ஏற்கனவே சொல்லி இருக்கிறார். அவர்கள் கெட்ட அண்ணாமார்கள் என்றும் எங்கள் ஊரில் எங்களுக்காகப் போராடும் அண்ணாமாரின் எதிரிகள் என்றும் நாங்களும் அவர்களை எங்கள் எதிரிகள் போலக் கொள்ளவேண்டும் என்றும் அம்மா சொன்னது நினைவுக்கு வந்தது. அந்தப் பாதையிலேயே துளசிக்கு இரண்டு இடங்களில் தான் பயம் அதிகமாய் எழும்பும். ஒன்று இந்த வீட்டின் பக்கமாய்ப் போகும் பாதையைக் கடக்க நேரிடும் போது மற்றது சிவன் கோவில் தாண்டி தன் ஊருக்குள் போகும் பாதையில் நுழையும் இடத்தில் இருக்கும் இப்படி இன்னொரு வீடைக் கடக்கும் இடத்திலும் தன் கால்கள் நடுங்குவதையும், இதயம் விரைவாக அடித்துக் கொள்வதையும் துளசி உணர்ந்திருக்கிறாள். இப்போதும் விரைவாக நடந்து அந்த வீட்டைக் கடந்து முடித்தபோது நிம்மதியான மூச்சொன்றை இழுத்து விட்டுக் கொண்டாள். நிஷாந்தியுடன் வந்தால் இப்படியெல்லாம் பயம் அதிகமாய் எழாது.

துளசி சிவன் கோவிலுக்குள் நுழைந்தபோது பன்னிரெண்டரைக்கு கொஞ்சம் அதிகமாய் ஆகிவிட்டிருந்தது. ஜிம்மி எங்கோ இருந்து ஓடி வந்து அவளை முகர்ந்து பார்த்து வாலை ஆட்டியது. துளசி அதன் தலையைத் தடவியவாறே, கால் கழுவும் இடத்தை அடைந்தாள். தண்ணீர்க்குழாயைத் திறந்து கொஞ்ச நேரம் நீரை ஓட விட்டுவிட்டு காலைக் கழுவினாள். கொளுத்தும் வெய்யிலில் காய்ந்து உலர்ந்திருந்த பாதத்தைக் குளிர்ந்த நீர்த்திவலைகள் தழுவி ஓடின. மீண்டும் மீண்டும் கால்களை மாற்றி மாற்றிக் கழுவிக் கொண்டாள். கைகளையும் கழுவி, தன் அம்மா செய்வது போல தன் தலையில் சில துளிகளைத் தெளித்துவிட்டு குழாயின் அடியில் உள்ளங்கைகளைக் குழித்துப் பிடித்து வாய் வைத்து தண்ணீர் குடிக்கத் தொடங்கினாள். தாகம் தீரும் சுகத்தையும், குளிர் நீர் தொண்டை வழி நுழைந்து வயிறுள் நுழையும் சுகத்தையும் உணரும் போது கண்கள் தாமாகவே மூடின. தாகம் தீர்ந்ததும் ஜிம்மி குடிக்கவேனவும் கொஞ்சம் தண்ணீரைத் திறந்து விட்டாள். அது குடித்து ஓய்ந்ததும் கோவிலுக்குள் நுழைந்தாள்.

அன்று சனிப்பிரதோஷம் என்று அறிவுப்புப் பலகையில் எழுதப்பட்டிருந்தது. பிரதொசத்துக்கான விசேஷ பூசை இருந்ததால் மதிய பூசை சீக்கிரமாகவே முடிந்து திரைச்சீலை போடப்பட்டுவிட்டிருந்தது. துளசி சுற்றும் முற்றும் பார்த்தாள். அவளைத் தெரிந்த குருக்களைக் காணவில்லை. அவர் வீடு போயிருப்பார் என்று எண்ணிக் கொண்டாள். ஜிம்மியை நினைக்க கவலை கவலையாக வந்தது. செருப்பு வைக்கும் இடத்தில் பாட்டியையும் காணவில்லை. கோவிலில் இருந்து வெளியில் வந்து வெளி வீதியில் இருக்கும் சீமெந்துத் தரையில் அமர்ந்து கொண்டாள். ஜிம்மியும் அருகே வந்து என்ன ஒன்றும் இல்லையா என்று கேட்பது போலப் பார்த்துக் கொண்டு நின்றது. அதன் முகத்தைப் பார்க்க முடியாமல் அண்ணார்ந்து கோவில் மாடத்தைப் பார்த்தாள். கோவிலின் உள்வீதியில் இருக்கும் மாடத்தில் அழகான ஓவியங்கள் கீறப்பட்டு இருந்தன. அந்த ஓவியங்களை காயாவின் அப்பா வரைந்ததாக அம்மா சொல்லியிருக்கிறார். காயாவின் அப்பா நன்றாக சித்திரங்கள் வரைவார். அவர் திறமையான சிலை வடிவமைப்பாளரும் கூட. இதை துளசியே பல நேரங்களில் நேரே கண்டிருக்கிறாள். துளசிக்குத் தேவையான பள்ளிக்கூட ஓவியங்களைக் கூட அவரே வரைந்து தந்தும் இருக்கிறார். ஓவியத்தில் இடப வாகனத்தில் சிவனுடன் அமர்ந்திருக்கும் உமையம்மை சம்பந்தனுக்கு பாற் கிண்ணமொன்றை கொடுத்துக் கொண்டிருந்தார். இதற்குப் பின்னால் இருக்கும் கதையை துளசி ஏற்கனவே இரண்டாம் ஆண்டில் தன் சமய பாடத்தில் படித்து விட்டிருந்தாள். அம்மாவும் அடிக்கடி இந்தக் கதையை சொல்லுவது வழக்கம். துளசிக்கு இந்தக் கோவிலில் அவளது அப்பாவுடன் கடைசியாக வந்த நாள் நினைவுக்கு வந்தது.

அவள் மூன்றாம் வகுப்பின் இறுதித் தவணையில் படித்துக்கொண்டிருந்தாள். அன்று அவளது பள்ளிக்கூடத்தில் தமிழ்த்தினம் கொண்டாடப்படிருந்தது. அந்த விழாவில் தன் வகுப்புத் தோழிகளுடன் ஒரு நாட்டார் பாடலுக்கு விவசாயப்பெண்ணாக நடனமாடும் வேடமிட்டிருந்தாள். அந்த நடனத்துக்கு இரு நாட்கள் இருக்கும் நிலையில் துளசிக்கு கடும் காய்ச்சல் கண்டுவிட்டிருந்தது. துளசியின் ஆச்சியின் வீபுதி போடலுக்கும், அம்மாவின் கை மருந்துக்கும் நிற்காத காய்ச்சல் கடைசியில் கால்களை வேறு வீங்க வைத்துவிட்டது. நடனத்துக்கு ஏற்றபடி எல்லாம் தயார் நிலையில் இருந்த துளசிக்கு இது பெரும் ஏமாற்றத்தை கொடுத்துவிட்டிருந்தது. ஊர்ப்பாடசாலையில் இருந்து மூன்றாம் தரத்தின் இடையில் இடம் பெயர்ந்து இங்கே வந்து இப்படி ஒரு நடனத்தில் பங்கு பெறக் கிடைத்தது அவளுக்கு மிக்க மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் கொடுத்துவிட்டிருந்தது. ஆசிரியைக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை. ஒரு நாளில் இன்னொரு மாணவியைப் பழக்கி ஆட வைப்பது என்பது கடினமான காரியம் என்பதால் துளசியே போக வேண்டியதாகிவிட்டது. கால் வீக்கத்துடனும், சற்றுக் குறைந்த காய்ச்சலுடனும் மேடையேறி இருந்தாலும் தன் பகுதியை இயல்பாகவே சிறப்பாக செய்து முடித்திருந்த துளசியை அப்பா தூக்கிக் கொண்டார். நடனத்துக்குரிய ஆடையுடனேயே சைக்கிளில் ஏற்றி வைத்து நேராக இந்த சிவன் கோவிலுக்குக் கொண்டு வந்தார். அன்று வெள்ளிக்கிழமை இரவாக இருக்க வேண்டும். கோவில் நிறைந்து வழிந்தது. அப்பா துளசியை இறக்காது சிவனைக் கும்பிட்டபடி அவளையும் கும்பிடச் சொன்னார். துளசி நன்றாக ஆடியதற்கு இந்த சிவனிடம் அப்பா வைத்த பிரார்த்தனை தான் காரணம் என்று சொன்னார். துளசிக்கும் அதுவே சரியென்றேபட்டது. அப்பா வீபுதியைத் துளசியின் நெற்றியில் இட்டு, கொஞ்சத்தை வாயில் போட்டுவிட்டார். வீங்கியிருந்த கால்களிலும் தடவி விட்டார். துளசிக்கு நித்திரை வந்தது. அப்பாவின் சைக்கிளில் முன் கரியரில் அமர்ந்து கொண்டே தூங்கிவழியத் தொடங்கினாள்.

"துளசி, தூக்கம் வருதா என்ன?" என்ற அப்பா அவளின் தோள் பற்றித் திருப்பி முகத்தைப் பார்த்தார். கண்கள் கொஞ்சம் சொருகிப் போய் தூக்க கலக்கத்தில் இருந்தவள் கண்களை மெல்லத் திறந்து மூடி அப்பாவைப் பார்த்து சிரித்தாள். தெருவிளக்கில்லா அந்த கிளைப்பாதை கிரவல்களால் ஆனது. சைக்கிளின் டயர் குறுங்கற்களின் மீது மிதிக்கப்படும் போது சர் என்ற ஒலி எழுந்து கொண்டிருந்தது. பத்துமணித் தெருவில் யாரும் இல்லை. வழமையாகவே ஆறு மணிக்கெல்லாம் அடங்கிவிடும் தெரு அது என்பதால் தெரு நாய்களும் வீட்டு நாய்களும் அங்கங்கே குழுமி நின்றன. சைக்கிளின் முன்விளக்கின் வெளிச்சம் குழைத்துப் பூசப்பட்ட இருட்டுப் படைக்குள் நுழைய முற்பட்டுத் தோற்று மங்கிய கீற்றோன்ற்றாக கசிந்து முறிந்தது. பிரதான பாதையை அண்மித்த அந்தப் பகுதியிலேயே இன்னமும் மின்சாரம் வந்துவிட்டிருக்கவில்லை. வெகு சில வீடுகளில் மட்டுமே மின்விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. மற்ற வீடுகளில் சிமினி விளக்குகள் எரியும், துளசி வீட்டிலும் மூன்று சிமினி விளக்குகள் இருக்கின்றன. இந்த இருட்டுக்குள் இன்னும் கடக்கவேண்டிய தூரத்தை நினைத்தவளாக "அப்பா, இவ்வளவு இருட்டா இருக்கே, எப்படி நாம போறது, உங்களுக்குப் பயமாயில்லையா" என்று கேட்டபடி அப்பாவை அண்ணார்ந்து பார்த்தாள். சவரம் செய்யப்படாத முகம் இருட்டில் இன்னமும் கறுத்துத் தெரிந்தது. வியர்வைத் துளிகள் நெற்றியில் அரும்பி காதோரம் வழிந்து கொண்டிருந்தன. அந்த தகரங்களால் மதில் கட்டப்பட்டிருக்கும் பெரியவீட்டடி ஏற்றம் தாண்டிக் அது பார்வையில் இருந்து மறையும் வரை அப்பா பேசமாட்டார் என்பது துளசிக்குத் தெரியும். பலமுறை இப்படி நடந்திருக்கிறது. தன் அப்பா மேல் அவளுக்கு அசாத்திய நம்பிக்கை இருந்தது. கடல்கள் தாண்டி, நகரங்கள் தாண்டி தங்களைத் தூக்கிச் செல்லும் அவர் எப்போதும் சொல்லும் வார்த்தை நீங்களாவது நிம்மதியாக இருக்கவேண்டும் என்பது தான். அந்த வார்த்தைகளின் அர்த்தம் புரியாவிட்டாலும் அவள் அப்பா தங்கள் மீது வைத்திருக்கும் அன்பையும், அதுவும் கடைசிப் பிள்ளை என்றபடியால் தன் மீது அதிகமாய்க் காட்டும் பிரியத்தையும் அறிந்தே வைத்திருந்தாள். ஒன்றும் பேசாமல் சைக்கிளை விரைவாக மிதித்து அந்த வீட்டடியை எட்டிய அப்பா மயான அமைதியைத் தன்னுள் கொண்டு மரங்கள் சூழக் கிடக்கும் அந்த வீட்டைத் திரும்பிப் பார்த்தார். மீண்டும் ஒன்றும் பேசாமல் "என்ன கேட்டாய் துளசி, இருட்டுக்குப் பயமில்லை என்றா? இது என்ன இருட்டு துளசி, நடுச்சாமத்திலும் வேலை என்று வந்தால் வெளிக்கிட்டுப் போயிருக்கிறேன் எல்லா? என்ன இருந்தும் என்ன, எங்கட பூமி எங்களுக்கு இல்லை" என்று தனக்கும் சேர்த்தே சொல்லிக் கொண்டார். துளசிக்குத் அதிகமாய்த் தூக்கம் வந்தது. சைக்கிள் கிரவல் பாதையில் இருந்து இப்போது மண் பாதைக்குள் நுழைந்து விட்டிருந்தது. இரு மருந்குகளும் வளர்ந்திருந்த பற்றைகளும், பெயரறியாக் காட்டுச் செடிகளும் தம்மைச் சுற்றி இருட்டைக் கட்டிப் போட்டுவிட்டிருந்தன. துளசி கண்களை மூடி அப்படியே சாய்ந்து அப்பாவின் வலது மார்புத் தோற்படைக்கும் கைகளுக்கும் இடையில் விழுந்தாள். அப்பா மிக லாவகமாக அவளையும் பொறுத்துக் கொண்டு சைக்கிளை மிதித்தபடி இருந்தார். அது தான் துளசி கடைசியாய் அப்பாவுடன் போன நாள். அதன் பிறகு அப்பாவை ரயில் நிலையத்தில் வழியனுப்பியது நினைவுக்கு வந்தது. அது செல்வியத்தையின் கல்யாணத்துக்கு அடுத்த நாள். அம்மா, அண்ணா, மாமா என்று எல்லோரும் கார் பிடித்துப் போயிருந்தார்கள். அப்பா எங்கே போகிறார் என்று கேட்டதற்கு கொழும்புக்கு போவதாகவும், மூன்று நாட்களில் வந்துவிடுவார் என்றும் அம்மா சொல்லியிருந்தாள். இது வழமையாக நடப்பதுதான். யாழ்ப்பாணத்தில் இருந்த காலத்திலும் அப்பா இப்படிப் போய்விட்டு மூன்று, நான்கு நாட்களில் இனிப்புக்கள், சொக்கிலேட்கள் எல்லாம் வாங்கிக் கொண்டு திரும்பி வருவது வழமை. கடந்தமுறை வந்தபோது துளசிக்குக் காப்பு வாங்கித் தந்திருக்கிறார். இந்த முறை அப்பா திரும்பி வரவேயில்லை. அவள் தனக்கு வாங்கிவர வேண்டுமென்று எழுதிக் கொடுத்த லிஸ்ட்டுக்கு என்ன நடந்ததோ தெரியவில்லை. இரவெல்லாம் அப்பா அந்த லிஸ்டுடன் கடைகடையாய் ஏறி இறங்குவதாய்க் கனவு வந்தது. அப்பாவுக்கு அதைப்பற்றி ஒரு கடிதம் எழுதி, ஒன்றும் தேவையில்லை நீங்க மட்டும் வீட்டுக்கு வாங்கோ என்று சொல்லவேண்டும் என்று இப்போது இரண்டு வருடங்களாக நினைத்துக் கொண்டிருக்கிறாள். அம்மாவிடம் இன்று மீண்டும் சொல்லவேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். அப்பாவிடம் இருந்து வாரந்தோறும் வரும் கடிதத்திலெல்லாம் துளசியை ஒழுங்காகப் படித்துக் கொள்ளவேண்டும் என்றும், குழப்படி செய்யாமல் இருக்கவேண்டும் என்றும் எழுதியிருப்பதாக அம்மா சொல்லுவாள். இதை எழுத மறந்துபோய் விட்டிருக்கவேண்டும். இல்லைஎன்றால் அப்பா இதுவரை திரும்பி வராமல் இருந்திருக்க மாட்டார்.

துளசிக்கு கவலை கவலையாக வந்தது. பசி வேறு மெல்ல மெல்ல அடிவயிற்றில் இருந்து கிளம்பி வயிறு முழுவதும் விரவி நின்றது. பாவம் நாய் வேறு சாப்பிடாமல் இருக்கிறது என்று நினைத்துக்கொண்டாள். நேரம் போய்க்கொண்டிருக்கிறதும், அம்மா தேடுவா என்பதும் அடிக்கடி நினைவுக்கு வந்து போய்க்கொண்டிருந்தன. வெளி வீதி ஏன் இவ்வளவு அமைதியாய் இருக்கிறதென்பதும் அவளுக்குப் புரியவில்லை. ஜிம்மியை விலத்தி வெளியில் வந்து செருப்பைப் போட்டுக் கொண்டாள். மீண்டும் தண்ணீர்குழாயைத் திறந்து கொஞ்சம் ஓடவிட்டுவிட்டு காலைக் கழுவிக்கொண்டாள். இப்படி செருப்புடன் கால் கழுவுவதால் தான் அது அறுந்து போகிறதென்று அம்மா சொல்லியிருக்கிறாள். ஆனால் வெய்யிலில் இதமாய் விழும் குளிர் தண்ணீர் கழுவிக்கொண்டிருக்க சொல்லும். வழமை போல சிறிதாய் வளைந்து, கைகளைக் குழித்துத் தண்ணீர் பருகிக்கொண்டாள். அப்படியே ஜிம்மி குடித்து முடிந்ததும் கோவில் முன்வாசல் முற்றத்தில் இறங்கி வீதி நோக்கி நடக்கத் தொடங்கினாள். ஈராக்காலில் கோவில் முற்றத்து மணல் ஒட்டிக் கொண்டது. ஒவொரு அடியிலும் பாதத்தில் குறுகுறுவென்று உறுத்தத் தொடங்கியது. மணலுக்குள் மெல்லப் புதைந்து போகும் கால்களை மெல்ல உதறிக்கொண்டு நடந்தாள். ஜிம்மியும் கூடவே வந்தது. துளசி அந்தப் பெரிய வீடு தாண்டித் தன் கிராமத்து மன்வீதிக்குள் இறங்கும் வரை ஜிம்மி கூடவே செல்லும். அந்தப் பெரியவீட்டு மூலையில் தான் வழமையாக மற்ற நாய்களுடன் நிற்கும் இடம் வரும்வரை வந்து அதிலே நின்றுகொண்டு, தெருவென்று சொல்லப்படும் இருமருங்குகளும் காட்டுச் செடிகள் வளர்ந்திருக்கும் அந்த வழிக்குள் அவள் தொலைந்து போகும் வரை நிற்கும். துளசியும் தன் பார்வையில் இருந்து ஜிம்மி மறையும் வரை அதை அடிக்கடி திரும்பிப் பார்த்துக் கொள்வாள். இருவரும் மெதுவாக ரோட்டைக் கடந்து கிரவல் ரோட்டில் ஏறினார்கள். ஜிம்மி அவளுக்குக் காவல் போல ஒட்டிக் கொண்டு நடப்பதும், பின் கொஞ்சம் முன்னே போய் அவளைத்திரும்பிப் பார்ப்பதாகவுமாய் கூடவே வந்தது. கொஞ்ச தூரத்தில் அந்தப் பெரியவீடு தெரிந்தது. அந்த வீட்டில் இருந்து வெறிச்சோடிப்போயிருந்த தெருவைக் கிழித்துக் கொண்டு ஆட்டோக்களும், சில கார்களும் புறப்பட்டுக்கொண்டிருந்தன. இப்படி சிலவேளைகளில் நடப்பது வழக்கம் என்றதால் துளசி கொஞ்சப் பயத்தையும் மறைத்துக் கொண்டு தன் தெரு நோக்கி முன்னேறத்தொடங்கினாள். சிவன் கோவிலுக்கு பள்ளியில் இருந்து வரும் வழியில் இருக்கும் பெரிய வீடும், இந்தப் பெரிய வீடும் தங்களுக்குள் எப்போதும் சண்டை போட்டுக் கொள்வதும், இப்படி திடீரென்று வாகனங்களில் கிளம்பிப் போவதும் வழமை என்று அம்மா சொல்லியிருக்கிறாள். இது துளசிக்கும் தெரியும். சில சமயங்களில் இப்படியான சந்தர்ப்பங்களில் அந்தவீட்டை எப்படியாவது ஓடிக் கடந்து தெருவுக்குள் நுழைந்துவிட வேண்டுமென்றும், அதன் பின்னும் பயமாக இருந்தால் தெருவின் ஆரம்பத்தில் இருக்கும் ஜான்சி அக்காவின் வீட்டுக்குப் போய் கொஞ்ச நேரம் இருந்துவிட்டு வீட்டு வரலாம் என்றும் அம்மா சொல்லிக் கொடுத்திருக்கிறாள். துளசிக்கு இப்போது அந்த வீட்டைக் கடந்து தெருவுக்குள் இறங்குவதுதான் மனதில் வியாபித்திருந்தது. அதைத்தாண்டினால் ஜான்சி அக்காவின் வீட்டுக்குள் நுழைந்துவிடலாம். தன் சனல் பையை இழுத்து நன்றாகத் தோளின் வழுக்காது இட்டுக்கொண்டு தன் நடையை விரைவுபடுத்தத் தொடங்கினாள். ஜிம்மியும் சூழ்நிலையின் தன்மையை மோப்பம் பிடித்ததாலோ என்னவோ குறைக்கத் தொடங்கிவிட்டிருந்தது. "ஜிம்மி பேசாமல் வா, சத்தம் போடாதே" என்று சொல்லிக் கொண்டே கைகளை விரித்து என்னிடம் வா என்று அழைக்கும் மாதாவையும், திரைச்சீலையில் ஓவியமாய் குடும்ப சமேதராய் நின்ற சிவனையும் நினைத்துக் கொண்டாள். "இண்டைக்கு அம்மாட்ட சொல்லி அப்பாவுக்குக் கடிதம் எழுத வைக்க வேணும், அப்பா எனக்கு ஒன்றும் வாங்கத் தேவையில்லை. நீங்க மட்டும் வாங்கோ, என்னால இப்படி நடக்கப் பயம் பயமா வருது, நீங்கள் என்னைக் கூடிக் கொண்டு போய் விடேக்க இருக்கிற சந்தோசம் இப்ப இல்ல, அதால நீங்க மட்டும் வந்தால் போதும். நான் அது வேணும் இது வேணும் எண்டு கேட்டு இனிக் கரைச்சல் கொடுக்க மாட்டன், நீங்க மட்டும் வாங்கப்பா என்று எழுத வைக்க வேண்டும்" என்று நினைத்துக் கொண்டாள். அப்பா தைரியமாய் வளரவேண்டும் என்று அடிக்கடி சொல்வது காதுக்குள் ஒலித்தது. அப்பாவின் கைக்குள் தூங்கி விழுந்து கிடந்தபடி இந்தத் தெருவைக் கடக்கும் போது தன்னைச் சுற்றி வியாபித்திருக்கும் பாதுக்காப்புணர்வு இப்போது எங்கே போயிற்று, அப்பா ஏன் விட்டிட்டுப் போனார் என்றெல்லாம் நினைத்தபடியே ஜிம்மி நீ போ என்று சொல்லிக்கொண்டு பெரியவீட்டை நெருங்கும் அந்தக் கிரவல் பாதையைக் கடந்தாள். வழமைக்கு மாறாய் இன்று ஜிம்மியும் தான் வழமையாக நிற்கும் இடத்தை விட்டு அவளுடன் நடந்தது. துளசிக்கும் அது வருவது பிடித்திருந்ததால் ஒன்றும் சொல்லாமல் விரைந்து நடந்தாள். ஜிம்மி பெரிய வீட்டு வாசலின் அருகில் நின்று குரைத்துக் கொண்டும், அங்குமிங்கும் நடந்து கொண்டுமிருந்தது. இனிப்பெரியவீட்டை விலத்தி தெருவுக்குள் இறங்குவதுதான் மிச்சம். இறங்கிவிட்டால் பயமில்லை. பெரியவீட்டுக் கேட்டின் முன்னால் கன அண்ணாமார் கூடிநின்றனர். கலவரமாய் தங்களுக்குள் பேசியபடி நின்றிருந்த சிலர் கைகளிலும், தோளிலுமாய்த் துப்பாக்கி தொங்கிக் கொண்டிருந்தது. துளசி அவர்களை மருண்ட விழிகளால் அடிக்கடி பார்த்துக் கொண்டே மெல்ல மெல்ல தன் மண்தெருவை நெருங்கினாள். அப்போதுதான் வீட்டின் எதிர்ப்புறத்தில் இருந்து விரைவாக ஓட்டப்பட்டு வந்த ஆட்டோ ஓன்று மண்தெருவுக்குள் நுழைந்தது. ஏக காலத்தில் அத்தனை துவக்குகளும் அந்த ஆட்டோவைக் குறிபார்த்து சன்னங்களைக் கக்கின. என்ன நடக்குதென்று ஊகித்துக் கொள்ளமுதலே ஆட்டோ நிலைதடுமாறி பற்றைகளின் மேலாகப் பிரண்டு உருள, அதற்குள்ளிருந்து இரண்டு மூன்று அண்ணாமார் தட்டுத்தடுமாறி வெளியில் வந்தனர். வந்தவர்களும் தங்கள் துவக்குகளை இயக்கிச் சுட ஜிம்மி அவர்கள் மேல் பாய்ந்து பயங்கரமாய்க் குரைத்தபடி கடிக்க முற்பட்டது. துளசி ஜிம்மி என்று கத்தியபடியே அதை நோக்கிப் பாய்ந்தாள். பெரிய வீட்டினடியில் இருந்து பாய்ந்து வந்த சன்னமொன்று அவளின் பின் மண்டையைத் துளைத்து உள்நுழைந்து வெளிவந்தது. துளசி சனல் பை கீழே நழுவ ஜிம்மி என்று முனகிக் கொண்டே அதை நோக்கி சரிந்து மடிந்து வீழ்ந்தாள் . இப்போது பெரிய வீட்டில் இருந்து மட்டுமே சன்னங்கள் விடாது பொழிந்து கொண்டிருந்தன. கொஞ்ச நேரத்தில் அங்கு வந்து சேர்ந்த சனக் கூட்டத்துக்குள் ஜிம்மியும் இருந்தது. நல்லூர்க் கோவிலில் தொலைந்து நசிபட்டு மரித்த ஜிம்மியாய் அரூபத்தில் துளசியின் இரத்தத்தில் பிரண்டு எழுந்தது.  நன்றி கோணங்கி; "கல்குதிரை" - வேனில் இலக்கிய இதழ் - 2011 இல் வெளியானது..

1 comment:

  1. நல்ல கதை.
    உங்கள் எழுத்து நடை, அழகு தமிழ் நன்றாக இருக்கிறது.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete