Thursday 24 February 2011

உடலில் மாறும் பருவங்கள்

வசந்தகாலத்தின் நுழைவாயிலில்
உதிர்த்துக் கொண்டிருக்கின்றன
முகிழ்த்த பனியிலை மரங்கள்
மார்பு புதைந்து மடி சாயும்
குழந்தையின் கடைவாயில் எச்சிலும்
அகன்ற கண்களில் விரியும்
ஆயிரம் கனவுகளும் குழைத்து
கட்டிக்கொண்டிருக்கிறேன்
வரும் கோடைக்கான எனக்கென்ற ஒரு வீட்டை
அதற்கு முன்னதாய்
விட்டு விட்டுப் பெய்வதான மழையை
என் உதடுகள் ஏந்தக் கூடும்
சேறு நிறைந்த இதயத்தில்
கொட்டிச் சேர்ந்துவிடப் போகும்
மழைகாலத்தின் தவளைகளைத் தேடி
கழுத்தளவு தண்ணீருக்குள்
முக்கி எழும்புவதை
கனவுகள் நினைவு படுத்துகின்றன
கத்தி சாகப் போகும் மாண்டாந் தவளையை
கொலை செய்வதான வெறியை
ஏனின்னும் நிறுத்தி வைக்கிறேன்?
எல்லோர் பொருட்டுமாய்
நில்லாது நீளும் தேவதைகளுக்கான வேண்டுதல்களில்
சேர்க்கப்படுகின்றது
இன்னொரு தேவதைக்கான அவசியம்
பாவ மன்னிப்பைக் கோரி
தேய்ந்தொலிக்கும் ஆலய மணியை
எதிர்பாராத தும்மலை
சகுனங்களாய்ச் சொல்லி
விலக்கி வைக்கிறேன்
மரணத்துக்கான ஒத்திகையை
கையில் பளபளக்கும் வாளின்
ரேகைகள் பதிந்த அதன் பிடியில்
ஒளித்து வைக்கிறேன்
ஒரு சாவிற்கான ஒப்பாரியை
அதன் முனையில் குமியும்
என்னைத் துளைத்து
என் கோடை வீட்டில் வளர்த்துவேன்
முன்னதாய்
அந்தி மாலை பெய்யும் மழையை
என் உதடுகள் ஏந்தட்டும்

5 comments:

  1. சிறப்பானதொரு கவிதை.

    ReplyDelete
  2. இந்தக் கவிதையில் எந்த வரியினை மேற்கோளிட்டு விமர்சிப்பதென்றே புரியவில்லை. காரணம் எல்லா வரிகளுமே கருத்தாளம் மிக்கனவாய் கவிநயம் பேசி நிற்கின்றன. உடலில் மாறும் பருவங்களினூடாக இயற்கையின், அன்றாட வாழ்வியல் சூழலின் வரணனைப் பாடுகளை உள்ளடக்கிய, மழைக்கால தவளையின் ஓசையினை நினைவுபடுத்திய கவிதை வார்த்தைகளினூடாக நர்த்தனமாடுகிறது. அருமை அருமை.

    ReplyDelete
  3. நல்ல கவிதை அழகு தமிழில்

    ReplyDelete
  4. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.!

    ReplyDelete
  5. கவிதை நன்றாக இருக்கிறது :))

    ReplyDelete