Sunday 21 November 2010

அந்தரங்கம்

நிரம்பி வழியும் கோப்பிக் கோப்பையின்
விளிம்பில்
உதடு வைத்து
உறிஞ்சித் தீர்க்கிறது பால்யத்தின் அவா
மாத விலக்கின் கிழமை நெருங்க
கட்டிக் கொண்ட மார்பின் காம்புகள் வழி
குருதி வழிவதை
பாலாய்ப் பருகுகிறது
கத்தி ஓய்ந்த குழந்தை
குப்பைத் தொட்டியின் எச்சிலையின்
ஒரு பருக்கை சோறும்
சில துளி எச்சில்களும்
பச்சையத்தில் படிந்த ரேகைகளும்
அள்ளித் தின்ற அசதியில் களைத்தும்
பின்னிரவில் புணர்ந்ததை
கசங்கிக் கறுப்பாய்
கலவி மணம் வீசும் மல்லிகை
கதை கதையாய் சொல்கிறது
காலையில்
உணர்ச்சிகள் தெறித்து
பீச்சியடித்த சுவரின்
பச்சை வாசனையையும்
வெடித்துக் கிளம்பிய சிரிப்பை
அடக்கிக் களைத்து
மயங்கிக் கிடந்த உடலைத் தழுவி
வியர்வையை அள்ளிக் குடித்தும்
அடர்ந்து வீசும் காற்று
ஓயாது பேசுகிறது
அந்தரங்கம் பற்றி
தன் அறுக்கப்பட்ட நாவால்
உச்சரிக்கவே முடியாத ஒரு மொழியில்

5 comments:

  1. மிரட்டல் கவிதை இது மனோ ..!

    ஒரு சிறு நடுக்கம் பரவுகிறது உக்கிரத்தில்

    ReplyDelete
  2. அந்தரங்கத்தைப் பேசும்
    உங்கள் மொழி
    புதிது நதி.

    ReplyDelete
  3. வருகைக்கும், கருத்துக்களிற்கும் மனமார்ந்த நன்றி நேசமித்திரன், மற்றும் சந்தானகிருஷ்ணன்,

    ReplyDelete
  4. உணர்வின் அடர்த்தி வரிகளாக...

    ReplyDelete