Sunday 7 November 2010

ஆச்சிக் கிழவி..!!!

பரிச்சயப்படாத தெருக்களில்
பெயரறியா மரங்கள்
இலையுதிர்க்கின்றன
இறகொன்று விழுவதையறியா
குளிர் காலப் பறவை
தாழப் பறக்கிறது தலை மேவி
அதன் எச்சத்தை துடைத்த அயர்ச்சியில்
இமைகள் மூடிக் கிடக்கிறேன்
கறுப்புப் பருத்தித் துணிக்குள் உடல் மறைத்து
பெரிய மார்பு ஒளிக்கும்
சூனியக்காரியை இன்னும் காணவில்லை
அவளை முச்சந்தொன்றில் காணாமலாக்கியிருந்தேன்
நடுச்சாம கும்மிருட்டில்
விளக்கின்றி அவள் பின்னே நடந்தபோதும்
பழமொன்றின் சாயலற்ற கறுப்புப் பழத்தை
அவள் தின்ன தந்த போதும்
சாணியின் சாம்பலில்
காய்ச்சல் கழிக்கப் பண்ணியபோதும்
மந்திரக் கோல் கொண்ட பராசக்தியாய்
அவளைச் சொல்லியிருந்தேன்
அவளுக்குப் புரிந்திருக்காது
முந்தானையில் முடிந்து
நிறம் கசிந்து வழியும் மிட்டாய்
எனக்காக காத்திருந்தது
ஆறிய பச்சரிசி கஞ்சியும்
மிச்சமிருந்த வெல்லக்கட்டியும்
தலை மாட்டில் இன்னும் எனக்காக;
அங்கர் மாப் பை சரசரக்க
செல்லாக்காசு என்றறியாமல்
பவித்திரமாய் எடுத்து தந்தபோதும்
வியர்வையும் கஞ்சியும் சவர்க்கார உப்பும்
குழைந்து கசியும் சேலையின் மணத்தை
முகர்ந்து மோகித்து
அவள் பீத்தல் பாய் விரிப்பில்
ஒட்டித் தூங்கியபோதும்
அவளை எங்கே தொலைப்பதென்று
தீர்மானித்திருக்கவில்லை
முள்ளந்தண்டுடைந்த குழந்தையாய்
மலம் காய்ந்து
அதே பாயில் அவளைக் காணும் வரை;
அலறிய தொலைபேசியின் மறுமுனையில்
நீ பேச்சற்று கிடந்தாய்
ஏனோ தோன்றியது
கொலை செய்திருந்திருக்கலாம்;
யாருக்கோ சொல்லி முடித்திருந்தேன் கிழவி
உன்னை அதிகமாய் நேசி(த்த)ப்பதாய்
சரி நீ சொல்லு
என்னை மன்னித்தாயா இல்லையா?

3 comments:

  1. சிலம்பை காற்றில் சுழற்றுகையில் இருந்தும் இல்லாத வட்டம் ஒன்று வருமே காற்றும் கிழியும் சப்தத்துடன்

    அப்படி ஓர் இசைத்தன்மையும் மாயப் படிமமுமாக கிழைவியும் கவிதையில் இருக்கும் சுயமும்

    வாழ்த்துகள்

    ReplyDelete