Friday 18 June 2010

ஒரு சூரியனின் தற்கொலை..!

கழற்றிப் போட்ட சட்டையை
மறந்த பாம்பொன்று
நகர்கிறது வெற்றுடலுடன்;

அடர் மரக்காடுகளின்
இடையிடையே கிழித்து
விழுந்தும் குதித்தும்
தற்கொலை முயற்சியில்
இருக்கிறான் சூரியன்;

காற்று வெளியிடையில்
கசியும் ஈரத்தையும்
அந்திமாலை நனைத்த
அரைகுறை மழையின்
மிஞ்சிய சூட்டையும்
உடலெங்கும் அப்பியபடி
நகர்கிறது பாம்பு

எல்லையற்று விரியும்
சாகரத்தின் தொடக்கம்
அதற்கு மறைந்துவிட்டிருந்தது
மறந்துவிட்டிருந்தது

விழுதொன்றைப்பற்றி
விருட்சமொன்று தவழ்ந்து
தன் வழியடைக்கும்
கால இலைகளில் வழுவி
உச்சியில் ஆடுகிறது
உதிரச் சொட்டுக்களில்
கசிகின்றன நினைவுகள்

தூரத் தெரியும்
மூங்கில் காடொன்றின்
மூடிய துளை திறந்து
உள் நுழைவது பற்றி
அது சிந்தித்துக் கொண்ட வேளை
அர்த்தமற்ற நாட்களின்
கீச்சிடும் எதிரொலியில்
நடுங்கியபடி காடு

காரணங்களின் முடிவில்
தொண்டைத் தண்ணீர் வற்றி
கண்ணயர்ந்த பாம்பின்
உடற்பரப்பின் திசுக்கள்
உருமாறி வறண்டு
உடல் உருண்டு...!
அந்த மரத்தில்
தற்கொலை செய்ய முடிந்தது
சூரியனால்...!

4 comments:

  1. காட்டில் ஒரு தற்கொலை.
    அபாரமான வரிகள்.
    வாழ்த்துக்கள் நதி.

    ReplyDelete
  2. nice thozi...

    anbudan
    ursularagav

    ReplyDelete