Thursday 27 May 2010

அந்த "நான்" தேடி...!

பிறழ்ந்தலையும் என்னைப்
பற்றியதான நினைவுகள்
எங்கிருக்கும் என்பது குறித்து
எனக்கு இன்னமும் தெரியவில்லை;

வேண்டுமென்றோ
கட்டாயத்தாலோ
தொலைக்கப்பட்ட என்னைத்
தேடும் பொறுப்பை
என்னிடமே விட்டிருக்கிறாய்;

தோற்கிறேன் என்றறிந்தும்
மௌனமாகக் கண்மூடி
அனிச்சைச் செயல்களுக்கு
புதுக் காரணங்கள்
புனைந்து கொண்டிருக்கிறேன்;

இந்த அவசரத்திலும்
நொடிக்கும் எனக்குமான
முடிவிலிக் காதலின் பின்னான
நினைவுக் குழந்தைகளைக்
கலைத்து விட்டுப்
பறக்கவும் சொல்கிறாய்;

விட்டேத்தியாய்த் திரியும்
உன்னையறிவதைத் தவிர
இங்கு வாழ்வதற்கு
காரணங்களிருப்பதாக
எனக்குப் படவேயில்லை;

ஆனாலும்,
மாயக் கூட்டினுள்
மல்லாந்து கிடக்கும்
பொய் உடம்பில்
ஊறிக் கிடக்கிறது
நேற்றைய கழிவு;
சமூகத்தின் மீதான
விகல்பக் காதல்
இன்னமும் தொடர்கிறது;

இருந்தும்;
உன்னைத் தேடுவதாக
சத்தியம் செய்திருக்கிறேன்;
கங்குல்லின் ஒளி படாத
அடி இருட்டைக் கொண்டு
பெருஞ் சூரியன் கிழிக்க
புறப்படும் ஆயத்தத்தோடு!

5 comments:

  1. புலப்படும் மயூ..!

    ReplyDelete
  2. இறுதி வரிகளில் ஏதோ ஒன்று இடறுகிறது

    :)

    ReplyDelete
  3. உங்கள் வரிகளில் என் முகம் தெரிகின்றது ...
    வாசித்து வாசித்து எனக்கு நானே சொல்லிக் கொண்டேன் உங்கள் வரிகளை ...
    வருகிறேன் தோழர் !

    ReplyDelete
  4. மிகவும் அருமை . பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  5. வாசித்து கற்றுக்கொள்கிறேன்... எழுவதுற்கு அல்ல... தொடர்ந்து வாசிக்க...

    ReplyDelete