Sunday 16 May 2010

என்ன தலைப்பு வைக்க வேண்டும்?

ஒரு பேரழிவின் இறுதியில் நின்று நாம் எழுதப் பழகிக்கொண்டோம்.
மௌனிக்க வைக்கப்பட்ட உணர்ச்சிகளின் மொழிகள் ஊமையின் கனவுகளாக இருக்கின்றன. அவற்றை அவன் சார்பாகக் கொட்டிவிடும் அவசரத்தில் அந்த வலிகளைத் தொடுவது போலத் தொட்டுவிட்டு இது போதுமா என்று திரும்பிப் பார்க்கிறோம். அவன் ஆமாம் என்றாலுமென்ன; இல்லை என்றாலுமென்ன; ஊமைகள் சாட்சி சொல்ல வரவா போகிறார்கள்!


நாம் யாருக்காக எழுதுகிறோமோ அவர்களுக்கு எம்மைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்கள் தெரிந்து கொள்ள விரும்புவார்களா என்பதும் தெரியவில்லை! ஏன் அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா என்பதும் நிச்சயமில்லை! இந்தப் பந்தியை முடிக்க முன்னமே கற்பழிப்பு, கொலை, கொலைக்கான மிரட்டல், பெண் பலாத்காரம், பட்டினி மரணம் இப்படி ஏதோ ஒன்று நடந்து முடிந்திருக்கும். இல்லாவிட்டால் நடப்பதற்கான ஆயத்தத்தில் இருக்கும். ஆனால் நான் அதைப் பற்றி கவலைப்படப் போவதில்லை! எனக்கு ஏதாவது எழுத வேண்டும்! எனக்குள்ளும் உணர்ச்சி இருக்கிறது என்று காட்ட இதை விட்டால் வேறு சந்தர்ப்பம் கிடைக்காது. அதற்கு இன்னும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் குறைந்தது கார்த்திகை வரையாவது காத்திருக்க நேரிடும். சில கவிதைகளை இப்போதே தயார் செய்து வைத்துவிட்டால் எடுத்துப் போட்டுவிட்டுப் போய்க் கொண்டே இருக்கலாம். எல்லாவற்றையும் விட இப்போது நான் எழுதுவது தான் எனக்கு முக்கியம்.


இந்த மாதம் கடந்த வருடத்திலும் ஒரு முறை வந்து போனது. இப்போது எப்படி வந்ததோ அப்படி வந்தது. இது அடுத்த முறையும் வரும். அதைப் பற்றி பிறகு யோசிக்கலாம் என்றிருக்கிறேன். கடந்த வருடம் இது வந்த போது நான் என்ன செய்தேன் என்பதைப் பற்றித் தான் இப்போது எழுதப் போகிறேன். எனக்கு மூளைக் குழப்பமோ, மன நிலை பிறழ்தலோ நேர்ந்திருக்கவில்லையாதலால் நான் நானாகத் தான் இருந்தேன். நான் மரணப் படுக்கையில் இருக்கவில்லை. சகல செளபாக்கியங்களும் பெற்றுப் பெரு வாழ்வு வாழ்ந்து கொண்டிருந்தேன். என்னைப் போல் தான் எல்லோரும். சிலர் என்னைவிட மேல். அவர்கள் அதிஸ்டம் செய்தவர்கள். அவர்களுக்குத் தங்கள் மொழி தமிழ் என்பது மட்டும் தான் தெரிந்திருந்தது. உங்கள் சொந்த இடம் என்ன என்று கேட்டால், "எனக்குத் தெரியாது, அம்மாட்ட கேட்கணும், ஆனால் நான் பிறந்தது இங்கே தான்" என்று சொல்லிக் கொண்டும், தமிழை மிக சிரமப்பட்டுக் கதைத்துக் கொண்டும், தமிழில் கதைப்பதை முடிந்தவரை தவிர்த்துக் கொண்டும் சந்தோசமாக இருந்தார்கள். சே...எனக்கும் இப்படி இருக்கும் மன நிலை ஏற்பட்டிருக்கலாம். இல்லாவிட்டால் இப்படி ஒரு பதிவைப் போட்டு உங்களைத் துன்பப்படுத்தும் பாவம் எனக்கு சேர்ந்திருக்காது. இனி என்ன செய்வது, நீங்கள் தொடர்ந்து வாசிக்கத் தான் வேண்டும்!


இந்த நிலையில் தான், இன அழிப்பின் உச்சத்தில் நின்று அவர்கள் என்னை நோக்கித் தங்கள் கரங்களை நீட்டி இருந்தார்கள். என்னிடம் தங்களைக் காப்பாற்றும் படி யாசித்திருந்தார்கள். முதலில் அது எனக்கு அவ்வளவாகக் கேட்கவில்லை கேட்கத் தொடங்கியபோது குடும்பங் குடும்பமாக, கொத்துக் கொத்தாகத் தாங்கள் கொல்லப் படுவதைப் பற்றி தீனக் குரலில் அலறினார்கள். வானத்தின் முகில் பனியாய் எப்படி மாறிப் பூவாய்க் கொட்டுகிறதென்று வியந்து பார்த்து ரசித்த எனக்கு, அதே வானம் பிளந்து உயிர் எடுப்பதைப் பற்றி விபரித்தார்கள். உண்ண ஒரு சோற்றுப் பருக்கை இன்றித் தங்கள் குழந்தைகள் கண் முன்னே சாவதையும், தண்ணீருக்காய் தவமிருக்கும் பிஞ்சுகளைப் பற்றியும் கதை கதையாய்க் கூறினார்கள். இடம் பெயரும் அவலத்தில் நடக்க இயலா முதியவர்களை வீட்டில் விட்டு விட்டு வந்த கொடூரத்தையும், பாதியில் அவர்களாகவே சனக் கூட்டத்தில் தொலைந்த அவலத்தையும் சொல்லி முடிக்கும் வரை நான் கேட்டுக் கொண்டு தான் இருந்தேன். எனக்கு அடுத்த கவிதைக்கு கருப்பொருள் கிடைக்காது போனால் என்று கொஞ்சமாய்க் குறிப்பும் எடுத்தேன். படங்கள் ஆயிரக்கணக்கில் அனுப்பி வைத்தார்கள். நான் அதை என் வலைத்தளங்களில் போட்டு பேரழிவென்று தலைப்பிட்டு வைத்தேன். அதற்குப் பொருத்தமாக இரண்டு மூன்று கவிதைகள், ஒரு சில கட்டுரைகள் எழுதி வைத்தேன்


வெட்ட வெளிகளில் நடக்கும் போது குண்டுகள் துளைக்க, தாய் சாக அங்கேயே புதைத்து விட்டு வந்த மகனையும், மகன் சாக உடலை அங்கேயே போட்டு விட்டு வந்த தாயையும், குடும்பமே அழியப் பார்த்திருந்த பிஞ்சையும், உடல் அவயவங்கள் இழந்து குருதியோடியே மரித்த உறவுகளையும் பற்றியும் கதைகள் வாசித்திருந்தேன். எனக்கு இவை பற்றி மேலதிகத் தகவல்கள் கிடைத்திருந்தன. எப்படி என்கிறீர்களா, நான் இப்படிப்பட்ட இழவுகளை புலம் பெயர்ந்து இங்கிருக்கும் அவர்களின் உறவுகள் நினைவு கூர்ந்த போது, அவர்களின் மாலை போட்ட படத்தைப் பார்த்தும், அதற்கு முன்னால் லட்சக் கணக்கான சாவிற்கும் தானும் ஒரு காரணம் என்பது போல எரிந்து தன்னையே அழிக்கும் தீபத்தைப் பார்த்தும் எனக்கு சுரணை வராததால், அங்கு தரப்படும் தேநீரைக் குடித்து விட்டு அந்த வீட்டுக்காரரின் மகளோ, மகனோ ஜோடி நம்பர் 1 பற்றிக் கதைத்தால் அதைப் பற்றி சூடாக விவாதித்துவிட்டு, போய் வருகிறேன் சொல்லி வந்ததால் எனக்கு அதிகம் இதைப் பற்றித் தெரிய வந்தது.


தன் தாய் மரணித்ததை அறியாத ஒரு பிஞ்சு, அவளின் மார் மோதி தன் பசி தீர்க்க எத்தனித்த அவலத்தைப் படம் விபரித்த போது நான் அடுத்த வார இறுதியை எப்படிக் கழிப்பது, எந்தப் படம் பார்ப்பது என்று தோழிகளுடன் விவாதித்துக் கொண்டிருந்தேன். இதைவிட இன அழிப்பென்றால் இப்படித் தான் இருக்க வேண்டுமென்று, போர்க்குற்ற வரலாற்றுகளிலேயே முதல் முதலாக, இதுவரை யாரும் செய்திருக்க முடியா (இதை நீங்கள் சன் தொலைக்காட்சியின் பட அறிவிப்புத் தொனியில் வாசிக்க வேண்டும். ஏனென்றால் அதைப் பார்த்துக் கொண்டு, விளம்பர இடைவேளையில் எம் மக்களை நினைத்த பற்றாளர்கள் அல்லவா நாங்கள்) கர்ப்பத்தில் இருந்த சிசுவைக் குண்டு துளைத்து, அதன் உயிர் கலைத்து, கெக்கலித்து சிரித்த போதும் உணர்ச்சி வந்ததா எனக்கு. இல்லையே, இல்லவே இல்லை.


ஒரு வேளைச் சாப்பாடுக்கு வழி செய்யுங்களேன் என்று பிச்சை கேட்டார்கள். கண் முன்னே மடிந்த சொந்தங்களை எண்ணி எண்ணி தினம் தினம் இவர்கள் மரித்தார்கள். தொலைந்து போன உறவுகளைத் தேடித் தாருங்கள் என்று விண்ணுக்கும் கேட்க அழுதார்கள். காணாமல் போனதால் உயிரோடு இருப்பவர்களுக்கும் சேர்த்து மரணச் சடங்கு செய்த அவலமும் என் தேசத்தில் நடந்தேறியது. சிதைந்த வள்ளம் ஏறிக் கள்ளத் தோணி என்று பட்டமும் சுமந்து கடலில் பயணப்பட்டார்கள். பாதி வழியில் மூழ்கிய படகுடன் என் குலத்தின் உறவுகள் மாண்டு போனார்கள். இடையில் மணல் திட்டில் இறக்கி விடப்பட்டு, வானும், கடல் மீனும், சுட்டெரிக்கும் சூரியனும் மட்டுமே துணைக்கிருக்க, நாட்கணக்கில், கிழமைக்கணக்கில் தன தொப்புள் கோடி உறவுக்காய்க் காத்திருந்த உறவுகளைப் பற்றியும் நான் கேள்விப்பட்டிருந்தேன். ஆறாத உடற் காயங்கள், இல்லாத உடல் அவயவங்கள், பிரசவ மரணம், பட்டினி மரணம் என்று எண்ணில்லாத் துயரங்கள் அத்தனையும் ஒரு சேர அனுபவித்துக் கொண்டே தங்கள் விழிகளின் ஓரம் துளி நம்பிக்கையைத் தேக்கி வைத்திருந்தார்கள். ஆம், அவர்கள் என்னை நம்பினார்கள். என்னைத் தான் நம்பினார்கள். (நான் உங்களைச் சொல்லவில்லை, என்னைத் தான் சொல்கிறேன்).


இரவிரவாய்க் காடுகள் பதுங்கி, மேடுகள் திரிந்து, இல்லாப் பதுங்கு குழிகளுக்காய் எங்கெங்கோ அலைந்தும் அவர்கள் என்னை நம்பினார்கள். புலம் பெயர் உறவுகளையும், ஆறு கோடி தமிழர்களையும் (கூடவோ? சரி விடுங்கள், ஆறு என்று தான் ஒரு பாடல் சொல்கிறது. நாங்கள் யார், ஆத்திசூடியையே ரீமிக்ஸ் செய்தவர்கள்) துணைக்கழைத்து ஓவென்று கதறினார்கள். எங்களுக்கு ஒரு வழி சொல்லுங்கள் என்று கெஞ்சினார்கள். எங்களை மீட்டெடுங்கள் என்று மண்டாடினார்கள். காலம் காலமாய்த் தான் ஆண்ட மண், தன் தாய் மண் தங்களிடமிருந்து வலுக்கட்டாயமாக, கள்ளக் கூட்டாளிகளின் துணையுடன் பிடுங்கப் படுவதைக் கையாலாகாத தனத்துடன் பார்த்துக் கொண்டிருந்து புத்தி பேதலித்தார்கள். அதற்கு தாம் என்ன செய்வதென்று இரு கைகளையும் விரித்துக் கேள்வி கேட்டார்கள். தங்களை வழி நடத்தி, தங்களுக்கொரு விடிவைத் தாருங்கள் என்று மண்டியிட்டார்கள்.


கல்வியில், அறிவில், வீரத்தில், செல்வத்தில், பண்பாட்டில், தான் சார்ந்த கலாசாரத்தில் என்று எதிலும் சற்றும் தளும்பாத ஒப்பற்ற தமிழ் இனம் எல்லோர் காலிலும் வீழ்ந்தது. ஒரு இனம் அந்த இனத்தாலேயே புறக்கணிக்கப் படுவதையும், அதன் அழிவுக்குத் துணை போவதையும் வரலாறு முதல் முதலில் பதிவு செய்தது. மரண சத வீதம், பிறப்பிலும் உயர்ந்ததையும், ஈழத் தமிழினம் தவிர்க்க முடியாப் பேரழிவை நோக்கித் தள்ளப் பட்டுக் கொண்டிருப்பதையும் அதே வரலாறுகள் தம் பக்கத்தைத் தரவுகளுடனும், செயற்கைக் கோள்களின் படங்களின் உதவியுடனும் நிரப்பிக் கொண்டிருந்தன. புலம் பெயர்ந்து தம் சுயம் அழிந்து மௌனித்த தமிழ் இனமோ செய்வதறியாது தவித்திருந்தது.


இப்படி எல்லாம் கேள்விப்பட்டுப், பார்த்தும், கேட்டும், அனுமானித்தும் கொண்டிருந்து நான் என்ன செய்தேன் என்று தானே கேட்கிறீர்கள். அதைத்தான் சொல்ல வருகிறேன். நான் எவ்வளவோ செய்தேன். தெருவில் இறங்கினேன். கொடிகளைப் பிடித்தேன். நூறு இருநூறு கோஷங்கள் போட்டேன். சில ஆயிரம் கதவுகளைத் தட்டினேன். கொட்டும் பனியில், உறையும் குளிரில் தூதரங்களின் வாசலில் தவமிருந்தேன். போக முடியாதென்று தோன்றினால், வேலைக்கு விடுப்புக் கிடைக்கவில்லை என்று சொல்லி என் தாய் நாட்டுப் பற்றை நிலை நாட்டினேன். நண்பிகள் வந்தால் சேர்ந்து போனேன். இல்லாவிட்டால் போகாது நின்றேன். அலைபேசியில் கதைத்துக் கொண்டே, அவர்கள் சொன்ன கோஷத்தை வழிமொழிந்தேன். கறுப்பு ஆடை போட்டுக் கொண்டு எல்லோரும் வருவதால் நிகழ்ச்சிக்கு நேரத்தோடு போய்க் கடையில் கறுப்பு உடுப்பு வாங்கிப் போட்டுக் கொண்டு போனதும் நடந்தது. இதை விட இன்னும் சிறப்பாய் மெழுகுதிரியைக் கொளுத்திக் கையில் பிடித்துக் கொண்டும், அது உருகி விரலில் பட, "அம்மா, it hurts alot" என்று சொல்லிக் கொண்டும் முகத்தில் அந்த வலியைக் கூடத் தாங்காத சிவப்பு ரேகையை வலுக்கட்டாயமாக இழுத்து வைத்துக் கொண்டு அங்கே மரண வழியைத் தாங்கிக் கொண்டிருக்கும் என் இனத்துக்காகப் பூங்காவில் நின்றேன். அப்பப்பா...இப்படி நானும் ஆயிரம் செய்தேன்.


சரி! இப்போது நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்று கேட்கிறீர்களா? ஒரு முக்கியமான வேலை. என் நாட்டுப் பற்றை வெளிப்படுத்த சில கவிதைகள், சில கட்டுரைகள், சில படங்கள். இந்த மாதம் போனால் பிறகு அடுத்த மாதம் ஒன்றுமில்லை. ஒரு தேசமே அடிமைப்படுத்தப்பட்டு, முகாம்கள் என்ற பெயரில் முட்கம்பிகளின் இடையில் சிறைப்படுத்தப்பட்டு அழிந்து கொண்டிருப்பதைப் பற்றி நான் கவலை கொள்ள வேண்டுமா என்று எனக்குத் தெரியவில்லை. என் இனத்தின் நாளைய சந்ததி, உண்ண உணவின்றி, உடுக்கத் துணியின்றி, கல்வியின்றி நடுத் தெருவில் நிற்கிறதே; அதைப் பற்றி நான் சிந்திக்க வேண்டுமா என்றும் எனக்குத் தெரியவில்லை. இடம் பெயர்வின் காரணமாக, பாடசாலைகள் இல்லாது போய், சிங்கள மொழியில் கல்வி கற்கும் ஈன நிலையில் இருக்கும் அந்தப் பிஞ்சுகளை எண்ணுவதா; அதுவும் புரியவில்லை.தினமும் அதிகரிக்கும் கடத்தல்களும், கற்பழிப்புக்களும், கப்பங் கோரல்களும் என் இனத்தை, என் குலத்தை வேரோடு கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக் கொண்டிருக்கிறதே அதைப் பற்றி நான் நினைத்துப் பார்க்க வேண்டுமா என்பதும் எனக்கு விளங்கவில்லை. கலாசார ஊடுருவல்களைப் புரியாது மாய மயக்கத்தில் சிக்கித் தடுமாறி, எதைப் பின்பற்றுவதேன்றே புரியாது நிற்கும் என் குல இளைய தலைமுறைகளை நோக்கி அறைகூவல் விடுக்க வேண்டுமா; அதுவும் சந்தேகம்.


ஆக; நினைக்கவோ, செய்யவோ ஒன்றுமில்லை என் புலம் பெயர்ந்த சகோதர சகோதரிகளே. வாருங்கள் நாங்கள் மெழுகுதிரி கொளுத்துவோம். அதன் சூடு கைகளில் படமால் இருக்க கீழே தட்டு வைப்போம். சனி இரவு நண்பர்களுடன் ஊர் சுற்றுவோம். இந்த மாதம், இன்ன திகதி இது நடந்தது என்று பத்திரிகைகள் எழுதும். முகப் புத்தகம் ஒரு அதிர்வில் இருக்கும். அப்போது சுதாகரிப்போம். நாமும் எம் பங்குக்கு கொஞ்சம் எழுதுவோம். எங்கள் நாட்டுப் பற்றை, தமிழ் மீது இருக்கும் எங்கள் காதலை ஆங்கிலத்தில் எழுதிப் போடுவோம். கவிதை, கட்டுரை எழுதுவோம். படங்களை கூகுள் ஆண்டவரிடம் மன்ற்றாட்டமில்லாது வாங்கிப் போட்டு அந்த அதிர்வைப் பேணுவோம். கறுப்பு ஆடைகள் அணிவோம். துக்கம் அனுஷ்டிப்போம். வாருங்கள் என் சகோதர சகோதரிகளே. நாம் இதையாவது செய்வோம்!

9 comments:

  1. தாள இயலாத்தாய் இருக்கிறது மனோ

    வலியை மீட்டெழுப்பி விட்டது இந்த இடுகை

    தலை தாழ்கிறது

    ReplyDelete
  2. வணங்குகிறேன்.

    ReplyDelete
  3. கடைசிப் பாரா மிகுந்த வேதனை தருகிறது. இதைத் தாண்டி வேறெதுவும் செய்ய இயலாத நிதர்சனம் முகத்திலறைகிறது.

    ReplyDelete
  4. வலிக்கிறது நதி.

    ReplyDelete
  5. இயலாமை. விரக்தி. கோபம். இவைகளை மட்டுமே வைத்துக்கொண்டு உள்ளுக்குள் வதை படுவதே... நமக்கு பழகிப்போச்சு.

    ReplyDelete
  6. "எங்கள் நாட்டுப் பற்றை, தமிழ் மீது இருக்கும் எங்கள் காதலை ஆங்கிலத்தில் எழுதிப் போடுவோம்."

    ReplyDelete
  7. மனது வலிக்கிறது.வெட்கத்தால் தலை குனிகிறேன்

    ReplyDelete
  8. வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி..!

    ReplyDelete
  9. தன் தாய் மரணித்ததை அறியாத ஒரு பிஞ்சு, அவளின் மார் மோதி தன் பசி தீர்க்க எத்தனித்த அவலத்தைப் படம் விபரித்த போது நான் அடுத்த வார இறுதியை எப்படிக் கழிப்பது, எந்தப் படம் பார்ப்பது என்று தோழிகளுடன் விவாதித்துக் கொண்டிருந்தேன்

    ReplyDelete