Thursday 25 February 2010

நிதானிக்கும் பால்யம்

பரட்டைத் தலையுடன்
படலைகளில் காய்ந்ததிலும்
எச்சில் மிட்டாய்களுக்காய்
ஏவல்கள் செய்ததிலும்
சட்டையின் பூக்கள் நிறம்
ஒட்டியிருக்கும் ஊஞ்சலிலும்

மண் சோறு தின்ன வந்த
அணில்களும் புலுனிகளும்
தீரத் தீரப் பேசிப் பின்னும்
எஞ்சியிருந்த பொழுதுகளிலும்
மாம்பூக்கள் ஆசிர்வதித்த
மஞ்சள் மாலைகளிலும்

நிதானமான நிமிடங்களுடன்
நீட்சித்துக் கிடந்தன
பால்யத்தின் நாட்கள்
தெருவின் புழுதிக்குள்
கொலுசின் மணிகளோடு
கழன்றனவாகின கனவுகள்
நான் படிப்பிக்காததால்
தோற்றிருந்தது நித்யகல்யாணி
தேற்றியபடி நாய்க்குட்டி

பனிகளுக்குள் பூத்திருந்தது
வாடாமல்லி வாசமற்று
ஈச்சம் பழத்தின் நிறம்
மறந்துவிட்டிருந்தது
இன்று காலையில்
நிதானித்தே போயிருந்தன
பால்யத்தின் நாட்கள்

20 comments:

  1. உண்மைதான் தோழி...பால்யத்தின் நினைவுகளில் இன்னும் மாம்பூக்கள் ஆசிர்வதித்த மஞ்சள் மாலைகளை நினைத்துப் பார்க்கிறேன்..

    அது ஒரு நிலாக் காலம்...

    ReplyDelete
  2. ஜீவநதி மன ஆழத்தில் ஓடிக்கொண்டிருக்கும் உனது பாய்ச்சலில் சிதறிப்போன துளிகளுக்குள் ஓராயிரம் குட்டிக் கவிகள்

    ReplyDelete
  3. அருமை பால்யத்தின் நாட்கள் மயோ

    ReplyDelete
  4. படலைகளில் காய்ந்ததிலும்//

    அணில்களும் புலுனிகளும்//

    இந்த இடம் புறிய வில்லை ... மற்றபடி பால்யநாட்கள்..மிக நேர்த்திங்க.

    ReplyDelete
  5. யதார்த்தமா கண்ணில் பட்டது உங்க வலைப்பூ....
    என்ன அழகா எழுதியிருக்கீங்க‌!!
    அதே பால்யத்தில் சாப்பிட்ட தித்திக்கிற தேன்மிட்டாயையும், கடலை உருண்டையையும், ஸ்கூல்கள் அருகில் இருக்கும் கடைகளில் இப்போ வாங்கி சாப்பிட்ட உணர்வு மிஞ்சியது...
    கவனிக்கப் பட வேண்டிய கவிதை இது.... இனிமையான வார்த்தைப் பிரயோகம்..

    //நிதானமான நிமிடங்களுடன்
    நீட்சித்துக் கிடந்தன
    பால்யத்தின் நாட்கள்//

    எல்லாருமே கண்மூடி கண் திறப்பதற்குள் மறைந்துபோனது பால்யப் பருவம் என்று அங்கலாய்க்கும் போது நிதான நிமிடங்களுடன் நீட்சித்துக் கிடந்தன எனக் கவிதை பாடுவது... எவ்ளோ நிதானமா அந்த நிமிடங்களை அனுபவிச்சிட்டு இருக்கீங்கன்னு புரியுது.. ரொம்ப பாஸிட்டிவ்!!

    தொடர்ந்து நிறைய எழுந்துங்க.... மனமார்ந்த வாழ்த்துக்கள்... :)

    ReplyDelete
  6. கவிதை அருமை.அடர்த்தி

    ReplyDelete
  7. நேர்த்தியான படைப்பு.. பால்யத்தின் நாட்களை கண் முன்னே ஒரு கணம் நிறுத்திச் சென்றது உங்கள் வரிகள்... :)

    ReplyDelete
  8. நன்றி ஊர்சுத்தி...

    ReplyDelete
  9. சி. கருணாகரசு -
    தோழர்கள், தோழிகள் வரும்வரை, வீட்டு முற்றத்தில் காத்திருப்போம், (gate - அதை படலை என்போம், எங்கள் பேச்சு வழக்கில்), புலுனி என்பது ஒருவகை சிட்டுக் குருவி, எங்கள் ஊரில் அரிசிக் குருவி என்போம், வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி,

    ReplyDelete
  10. பிரபு . எம் -

    வலைப்பூவிற்கு வரவேற்கிறேன். கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றிகள்..

    ReplyDelete
  11. நன்றி கதிர்பாரதி,

    ReplyDelete
  12. நன்றி நாளைபோவான்...

    ReplyDelete