Saturday 16 January 2010

பெயர்

என் பெயர் இப்படி
இருந்திருக்க வேண்டாம்

பெயர்
இயல்புகளின் கலவை
இருப்பின் அடையாளம்
உருவ அருவங்களின் திரட்டு
என்றோ அழியும் உடலின்
அழியாத முகவரி
உலகம் என்னைச் சுட்ட
நானே வெட்டிக் கொடுத்த விரல்
நானே மறந்த சுயம்

இது எப்படி?
எங்கிருந்து இயங்குகிறது?
உச்சரிப்புக்குத் திரும்புவது
மனமா? உடலா?
நச்சரிப்புக்க்ளின் தீர்ப்பில்
தவணை முறை முடிவானதா?
இயங்க மறுக்கும் இரண்டுக்கும்
ஏன் ஒரே தலைப்பு?

இப்போது திரும்பியது
ஏதாவதாக இருந்திருக்கலாம்
ஒன்றாக
நிமிர்ந்து பார்ப்பதில்லை
என்று தலையும்
நினைவில் வைப்பதில்லை
என்று மனதும்
என் உலகின் பிரசன்னம்
விளங்காமல் போனதற்கும்
இதற்கும் சம்பந்தம் இருக்கும்

என்னையே படித்திராதது
என்னைப் பிரதிபலிப்பது
அபத்தம்
உங்கள் நினைவுகளில்
என்னை மறந்திடுங்கள்
அது நானில்லை
என் பெயர்

பெயர்
ஒரு பொய்
உண்மையில்லாத உண்மை
நீயில்லாத நீ
உன்னைப் பற்றிய
இயல்புகளைத் தாண்டி
கற்பனைகள் செல்லாத தீவு
அது உதவாது

நான் ஒளி
உங்களைப் போல
நீங்கள் என்னில்
ஒளிர்வதைப் போல
நான் பெயர்களை
நினைவுபடுத்துவதில்லை
அது தேவையில்லை
நான் உன்னை அறிய

என் பெயர்
இப்படி இருந்திருக்க வேண்டாம்
இருக்கவும் வேண்டாம்
உனதும் அப்படியே

2 comments:

  1. அருமையான கருத்து.... என்னுடைய சிந்தனையும் பல நேரம் இப்படியே இருக்கும்...

    கவிதை மூலம் உன்னுள் என்னைப் பார்க்கின்றேன்..
    உனக்கு பெயர் தேவையில்லை நதியானவள் ஒளியானவள் நீ..

    ReplyDelete
  2. மயூரா,

    “ நான் என்ற பொய்யை இயக்கும் நான்” என்ற பாரதியின் வரிகள் எண்ணத்தில் வந்து மின்னின.

    உனது சரளமான சொற்பிரளயம் தான் என்னை எப்போதும் திகைக்க வைக்கிறது.

    ReplyDelete