Wednesday 19 October 2011

வௌவாலின் குரல் கொண்டு..

இலைகள் உதிர்க்கும் பெருமரங்களின் கீழ்
வெறிச்சோடிக் கிடக்கின்றன தெருக்கள்

உச்சி மோர்ந்து
உயிர் உறைய அணைக்கிறது
குளிர்

சுவர்கள் மோதி
கூரையில் எதிரொலித்து வீழும்
வௌவால் குஞ்சுகளின் குரலாய்
மனச்சுவர்களுக்குள் அடங்குகிறது
எனது குரல்

பதுங்கு குழிக்குள் ஒடுங்கும் தீவிரத்துடன்
அலைபாய்ந்து ஓய்கின்றன
என் கண்கள்

பேரன்பு கொண்டவர்களே
என் மேலான பிரியத்தின் பேரால்
கூறுங்கள்
எனக்கான ஒரு பதிலை

எனக்குச் சற்றும் பொருந்தாத
இந்தக் குளிர் நிலத்தில்
நான் என்னதான் செய்து கொண்டிருக்கிறேன்

3 comments:

  1. வாழ முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள்...
    இதை எழுதியதால் என்றும் வாழப் போகிறீர்கள்..

    ReplyDelete
  2. லண்டன் ஜூ'வில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு ஒட்டகத்தாயிடம் அதன் குட்டி கேட்டதாக உள்ள கதையை ஞாபகப்படுத்துகிறது உங்கள் கவிதை.// அருமை.

    ReplyDelete
  3. கொடுங் குளிரின் தாக்குதலில் வீடு பதுங்குகுழியாய்த் தெரிகிறது கவிஞருக்கு. உண்மைதான் மயூ. பதுங்கு குழி மரணத்துக்கும் உயிர்வாழ்தலுக்கும் இடையில் அசையும் ஒரு கூடு. குளிர் எம்மை அப்படி ஆக்கிவிடுவதில்லை என்றபோதும் எவரும் கவிதையை இந்த முறையால் அணுகவேகூடாது. குளிர்pன் தாக்கம் அப்படி என்பதையே கவிதை சொல்லவருகிறது. தடித்த வரிகள் அவை.

    அதேபோல் //நான் என்னதான் செய்துகொண்டிருக்கிறேன்// என்ற உங்கள் கேள்வி எம்மைப் பின்தொடரும் நிழல்போல ஆகிவிட்டது. சொந்த மண்ணிலிருந்து பெயர்த்தெடுக்கப்பட்ட வேர்கள் புகலிடத்தில் குருத்துவிட்டு பரவாமல் அந்தரப்படுகிறது. நாம் பெயர்த்து வந்த வேர்களின் குழிக்குள் பணத்தைத் தேடுகிறவர்கள் கூட்டம் அதிகம் என்கிறபோது 'இங்கு இருந்துவிட்டுப் போவம்' என்ற மனநிலைதான் எஞ்சுகிறது. உங்கள் கவிதை வாசிப்ப முடிந்து பல நிமிடங்களாகிவிட்டது. இன்னமும் அதனுடன் பேசியபடி...
    -ரவி

    ReplyDelete