Thursday, 16 June 2011

காத்திருப்புக்களின் முடிவுகள் இப்படியும் அமையலாம்...

தொடர் பதிவு "தீராத பக்கங்கள் - மாதவராஜ்" அழைப்பின் பேரில்..


காத்திருத்தல் சுகமானது என்று அதிகம்பேர் சொல்லிக் கொள்கிறார்கள் குறிப்பாக கவிஞர்களும் காதலர்களும். ஏன் நானுந்தான் சொல்லிக் கொண்டிருந்தேன். ஒரு குறிப்பிட்ட ஒன்றுக்கான காத்திருத்தல் என்பது தவிர்த்து பொதுவாகவே காத்திருத்தல் என்பது
நினைவுகளை மட்டுமாய்ப் பரிசளித்து விட்டு உயிரோட்டமுள்ள நிமிடங்களைக் களவாடிச் சென்றுவிடுகிறது என்பதே உண்மை.

"Sorry, லேட் ஆகிப் போச்சு, பஸ் வரேல,.." என்று தான் ஆரம்பிக்கின்றன பல உரையாடல்கள். நான் ஆரம்பிக்கும் பல உரையாடல்கள் இப்படித்தான் மன்னிப்புக் கேட்கும் படலத்தில் தொடங்கும். நண்பர்களைக் காக்க வைப்பதை வேணுமென்று செய்வதில்லை என்று நான் சொன்னால் யாருமே நம்பத் தயாராக இல்லை. நேரத்துடன் போராடுவதும், நேரத்தை எனது கைக்குள் வைத்துக் கொண்டு அலாரம் வைத்துப் பயணிக்கும் வித்தையும் (?) எனக்கு வாய்க்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். எனக்கான நேரத்தில் எனக்குப் பிடித்தவைகளை செய்து கொண்டிருப்பதும், மற்றவர்களுக்கான பொழுதை அவர்களுடன் நாமும் நிரப்ப நேருடும்போது முடிந்தவரை அவர்களது நேரத்தை விரயமாக்காது இருந்துவிடுவதும் போதுமானதாக இருக்கிறது மனதுக்கு.

இப்படித்தான் குறித்த நேரத்துக்கு எப்படி என்னை எதிர்பார்க்க முடியாதோ அதைப் போலவே எதிர்பார்த்து ஏமாந்து போனாய் நீ..! காத்திருத்தல் சுகமானதென்று நீ சொல்லியிருக்கமாட்டாய், ஆனால் காத்திருத்தலில் நம்பிக்கை வைத்திருந்தாய். எனது வருகை நடந்தேறும் என்ற நம்பிக்கையில், பூஞ்சை விழுந்த உன் கண்களை சுருக்கி, விரித்து, எலும்புக் கைகளால் தடவி என் வருகையை உணர்ந்து கொள்ளும் தவிப்பில், உன் சாயம் போன பருத்திச் சேலைகளுக்குள் சாயங் கசிந்து உருகிக் கொண்டிருக்கும் ஒன்றிரண்டு தோடம்பழ இனிப்புகளை எனக்குத் தந்துவிடும் முனைப்பில், நீ காத்திருந்தாய்.
காலையில் பள்ளிக்கூடம் புறப்பட்டுச்சென்று பிற்பகலில் திரும்புகையில் வாசலில் உன்னைக் காணலாம். என்னைப் பார்க்க படலை வரை போகாமல் இருக்கும் அம்மாவை அர்ச்சிப்பதில் தொடங்கும் எனக்கான உன் காத்திருப்பு. பின் மாலையில் கிளம்பி முன்னிரவில் வீடேகும் என்னைத் தேடாதிருப்பதாக நான் புறப்பட்டு சில மணி நேரத்துக்குள்ளாகவே அம்மாவை கேட்கத் தொடங்குவதில் தொடரும். உண்மைதான், நாமிருந்த அந்த நாட்டில் வெளியில் போனால் நொடிக்கொருக்கால் நினைத்துக் கொண்டு நம் பிள்ளை ஒழுங்காக வீட்டிற்கு வந்துவிடுமா என்ற பயம் உன்னை அப்படித் தேடவும், படலைகளில் வீட்டு வாசல்களில் காத்திருக்கவும் வைத்திருந்ததை நான் அறியாமல் இல்லை. ஆனால் வீட்டுக்குள் வந்தவுடன் "கண் தெரியாமல் போகுது, இதுக்குள்ள இந்த இருட்டுக்க படலை மட்டும் வந்து எங்க விழுந்தெழும்பப் போறீங்க" என்று சொல்வதை(?) நானும் நிறுத்தவில்லை.
சொல், காத்திருப்பு சுகமானதா என்ன? எனக்குத் தெரியும் ஆச்சி, உன் காத்திருப்பு நீண்டது, மிக மிக நீண்டது. உயிர்ப்புள்ள நிமிடங்களை களவாடி சென்றது என்று கவித்துமாய் அதை வர்ணிக்க என்னால் முடியவில்லை. தொண்ணூற்றைந்து வயது வரை நீ வாழ்ந்த வாழ்க்கை முழுதுமே காத்திருப்புக்களால் எழுதப்பட்டது. காத்திருப்புக்கள் சுகமானவையா?

.................................................................................................................................................

பேரூந்துப் பயணம் முழுவதும் காத்திருப்புப் பற்றி நினைத்துக் கொண்டே வந்தேன். அப்போது நீ நினைவுக்கு வந்தாய். அன்றிரவு எனக்கு அழ வேண்டும் போல இருந்தது. வாரம் முழுவதும் பல்கலைக்கழகம் வகுப்புகளில் அலைந்த களைப்பு, பகுதிநேர வேலை, சேவை நேர வேலை மற்றும் சொந்த வேலைகள், இடையில் எழுதுவது இப்படி இத்யாதிகளால் மனமும் உடலும் சேர்ந்தே களைப்புற்று விட்டிருந்தன. இந்த நிலையில் உன்னை வேறு நினைத்துத் தொலைத்து விட்டிருந்தேன். அன்றிரவு கண் மணிகளை முட்டிக் கொண்டு வழிய ஆயத்தமாய் இருந்தது கண்ணீர். வலுக்கட்டாயமாய் இமைக்கதவுகளை அடைத்து பிடித்து வைத்திருந்தேன். போதாக்குறைக்கு உன் மரண வீட்டு வீடியோ படத்தில் இறுதியாய் ஒரு பாட்டு ஒலிக்கும். அம்மா உனக்கு கொள்ளி வைக்கிற இடத்தில தொடங்கும் அந்தப் பாடலை எத்தனை தரம் கேட்டேனோ எனக்கே நினைவில்லை, கேட்டுக் கொண்டேயிருந்தேன். அந்த இரவு நீண்டு கொண்டே போனதாச்சி உன் நினைவுகளுடன். என்ன அதிர்ச்சியாய் இருக்குதா? எது அதிர்ச்சியாய் இருக்கிறது? உனக்கு கொள்ளி வைத்தது உன் மகள் என்பதிலா, இல்லை உன் மரண வீட்டை வீடியோ எடுத்துத் தான் நான் பார்த்தேன் என்பதிலா? உண்மைதான் ஆச்சி, உன் மரண வீட்டை நான் வீடியோவில் பார்த்தேன். எடுக்க சொல்லி அம்மாவிடம் சொன்னதே நான் தான். உன் திருமணம் நடக்கும் போது வீடியோ எடுக்கும் வசதி கண்டு பிடிக்கப்பட்டிருக்கவில்லை. நான் உன்னுடன் வசித்த காலத்தில் எப்போதாவது விழாக்களில் வீடியோ எடுக்கும் சமயங்களில் ஒரு நிமிடம், இல்லை இரு நிமிடங்களில் வந்து போவாய். அதே பெரிய விடயமாக மீள மீள ஓட்டிப் பார்ப்போம். ஆனால் இந்த வீடியோவின் கதாநாயகியே நீதான் ஆச்சி. எனக்கு ஓவென்று அழவேண்டும் போல இருக்கிறது. ஆச்சி உன் காத்திருப்பு பற்றிய இந்தக் கதையை நீ வாசிப்பாயா இல்லையா?

உனக்கு நினைவிருக்கிறதா நான் பாலர் பாடசாலை போன கதை. ஊரே சிரிப்பாய் சிரித்தது. என் ஐந்து வயதில் முதன் முதலில் காலையில் விழிக்க வைத்து, அக்கா அண்ணாவுடன் தயார் செய்து அவர்களுடனே என்னையும் கொண்டு போய் விடுவார் அப்பா. அவர்கள் இருவரும் படிக்கும் பாடசாலையிலேயே தான் எனது பாலர் பள்ளிக்கூடமும் இருந்தது. தெருவை குறுக்காகக் கடந்தால் அவர்களின் பாடசாலைக் கட்டிடம் வரும். அக்கா தனது ஐந்தாம் வகுப்பிலும், அண்ணா மூன்றாம் வகுப்பிலும் இருந்தார்கள். அக்காவிற்கு புலமைப்பரிசில் சோதனை இருந்தது அந்த வருடம். விசேச வகுப்பிற்காக அவள் நேரத்திற்கே ஏழு மணியளவில் பாடசாலையில் நிற்கவேண்டும். அவர்களை ஒரு முறையும் என்னை மறுமுறையும் கொண்டு போய் விடுவது வீண் அலைச்சல் என்றபடியால் அப்பா மூன்று பேரையும் ஒன்றாகக் கொண்டு போய் விடுவார். அண்ணாவும் நானும் முன்னால் இருக்க அக்கா பின்னால் அமர அப்பா சைக்கிளில் கொண்டு போகும் வரை நான் அழமாட்டேன். என்னை என் வகுப்பின் முன் விட்டு விட்டு அப்பா திரும்பும் போது உச்சஸ்தாயியில் தொடங்கும் என் அழுகையில் அந்த வளாகமே அதிரும். அப்பா எனக்குத் துணையாய் அண்ணாவை விட்டுவிட்டுப் போவார். அண்ணா பாவம். நான் அழுவதை கையாலாகாத தனத்துடன் பார்த்துக் கொண்டு நிற்பான். அடிக்கடி "அழாதயேன், ஒண்டும் நடக்காது. என் செல்லமெல்லே, குட்டி அழாத" என்பான். அவன் குரலே கேட்காதது போல பாவித்து கத்தும் நான், குரல் அடைத்து காலையில் அம்மாவிடம் குடித்த பால் தந்த சக்தி வற்றி கேவலில் முடிப்பேன். என் வகுப்பறையின் பக்கமே திரும்பிப் பார்க்காமல் அண்ணாவின் காற்சட்டையைப் பிடித்துக் கொண்டு கதறுவேன். மூக்கால் சளி ஓடிக் கொண்டிருக்கும். அண்ணா அலுக்காமல் தன் கை லேஞ்சியால் துடைத்துவிடுவான். அவனுக்கு எட்டு மணிக்குப் போய் விடவேண்டும். எனக்கோ எட்டரைக்குத் தான் வகுப்புத் தொடங்கும். அரை மணித்தியாலம் தனியாக நின்று கத்திக் கொண்டிருப்பேன். விக்கி விக்கி கேவலில் முடிக்கும் என்னை நேரத்துக்கு வரும் சில மாணவர்கள் வேடிக்கை பார்ப்பார்கள். வீட்டில் இருந்து வரும் போதே கேவலுடன் வரும் சிலபேர் என்னைக் கண்டதும் துணை கிடைத்ததாய் நினைத்துக் கத்தத் தொடங்குவர். அந்த இடம் கொலைக்களமாயும், நாமெல்லாம் பலியாடுகள் மாதிரியும் தோற்றம் பெற்றுவிடும். கொஞ்சம் அடங்குவதும் மீண்டும் அலறுவதுமாய் நிற்பேன் நான் தேற்றுவார் யாரும் இன்றி.

வகுப்பறை செங்கல்லால் கட்டப்பட்டு வெள்ளை சுண்ணாம்பு அடிக்கப்பட்டு, அரை சுவர் உயரத்துக்கு கம்பி வலை கட்டப்பட்ட அமைப்பைப் பெற்றிருந்தது. எனக்கென்னவோ அதைப் பார்த்தால் சிறைக்கூடம் போல கற்பனை விரிந்தது. அதன் சுவரில் தொங்கிய சிறுவர்கள் செய்த கைவினைப் பொருட்களோ, அவர்களின் ஆக்கங்களோ மனதில் பதியவில்லை. மாறாக அவை என்னைக் கொல்லக் காத்திருக்கும் ஆயுதங்களாகக் கொண்டேன். வகுப்பைச் சூழ மரங்கள். மரங்கள் என்றால் சிறு கிளை பரப்பி நிற்கும் கெதியால் மரங்கள் இல்லை. அடர்ந்த காடாய் மாயையைத் தோற்றுவிக்கப்பண்ணிய மரங்கள். ஒரு புறம் புளியம் பழ மரம், அதன் அருகில் சற்றுத் தள்ளி புளிப்பு நெல்லி மரம். கொஞ்சம் தள்ளி அவற்றுக்கு எதிராய் சூட்டுக் காய் மரம். அதில் கொன்றை போல சிவப்புப் பூப் பூத்துக் குலுங்கியும், உதிர்ந்து தரையெங்கும் சிதறியும் கிடக்கும். அதற்கு சற்றுத் தள்ளி மஞ்சள் கொன்றை. ஆக சூழ்ந்த மரங்களின் இடையே ஏதோ காட்டில் தனித்திருக்கும் வனக்காவலர் அறை போல இருந்தது என் வகுப்பு. தனியே நிற்கும் போதெல்லாம் அம்மா புளியமரம் பற்றி சொன்ன கதைகளே நினைவிலாடும். ஊரில் புளிய மரத்தில் மதியம் பன்னிரண்டு மணிக்கும், நாடு சாமம் பன்னிரண்டு மணிக்கும் பேயாடும் என்று அம்மா சொல்லியிருந்தாள். நான் தனியாக நின்று வீரிட்டுக் கத்த எங்கே பேய் என்னைக் கொலை செய்துவிடுமோ என்று பயந்திருந்தேன் ஆச்சி. அன்று அது தான் நடந்தது. வழைமை போல அண்ணா எட்டு மணிக்கு தன் வகுப்புக்குப் போகக் கிளம்பிய போது நான் விடவேயில்லை. அவன் காற்சட்டையைப் பிடித்துக் கொண்டு அந்த மரங்களே அதிர்ந்து போகுமளவுக்குக் கத்தினேன். என்னை விட்டுவிட்டுப் போகாதே என்று அலறினேன். அவனால் முடியவில்லை. அத்துடன் பாடசாலைக்குப் போகாமல் அவனால் இருக்கவும் முடியாது. ஆக அவன் என்னை தெருவிற்கு எதிரே இருந்த உன் அக்காவின் மகள் வீட்டில் கொண்டு சேர்த்து விட்டு தன் வகுப்பிற்குப் போனான். அவர்கள் பசும் பால் காய்ச்சி நிறைய சீனி போட்டு தந்தார்கள். அடிநாக்கில் இனிக்க இனிக்க பாணுடன் தொட்டு கௌசி அக்கா தீத்தி விட்டா. சாப்பிட்டு விட்டு அப்படியே உறங்கிப் போய் விட்டேன். பத்து மணிபோல குமார் அண்ணா என்னை ஏற்றிக் கொண்டு எங்கள் வீடு கொண்டு வந்து சேர்த்தான். என்னை அண்ணாவுடன் கண்டதும் அம்மா நிலைகுலைந்ததை நான் பார்த்தேன் ஆச்சி. அம்மாவிற்கு தன் பிள்ளைகள் மேல் அளப்பெரிய நம்பிக்கை இருந்தது. வைத்தியர்களாகவோ, பொறியியலார்களாகவோ வந்து விடுவோம் என்று அம்மா எங்களை வயிற்றில் சுமக்கையிலே கனவு கண்டு கொண்டிருந்தாள் என்பதை அந்த வயதிலும் அக்காவும் அண்ணாவும் படித்த தீவிரத்திலேயே என்னால் உணர முடிந்தது. அம்மா நிலை குலைந்து நின்றது ஐந்து நிமிடங்களே. எனக்கு பள்ளிக்கூடம் விட இன்னும் ஒரு மணித்தியாலமே இருந்த நிலையில் விடுவிடு என்று சேலையைச் சுற்றிக் கொண்டு அடுத்த பத்து நிமிடங்களில் என்னுடன் என் வகுப்பில் நின்றாள் அம்மா. அன்று நான் சந்தோசமாய்ப் படித்தேன். அவளுடன் சேர்ந்து கைவினைப் பொருட்கள் எல்லாம் செய்தேன். வகுப்பாசிரியையை அம்மா நன்கறிந்திருந்தாள். உண்மையில் அந்தக் கிராமத்தில் எல்லோரையும் எல்லோருக்கும் தெரிந்திருந்தது. படிப்பிலே கெட்டிக்காரர் என்று அறியப்பட்ட அக்காவிற்கும் அண்ணாவிற்கும் இப்படியொரு தங்கை இருக்கும் என்பதையே என் ஆசிரியை நம்பத் தயாரில்லை. எங்கே வீட்டில் ஒரு மக்குப் பிள்ளையாகிவிடுவேனோ என்று அம்மா வேறு பயந்துவிட்டிருந்தாள். இந்த இடத்தில் தான் நீ என் வாழ்க்கைக்குள் வந்தாய் ஆச்சி.

எனக்கு என் நான்கு வயதுக்கும், அதற்கு முன்னும் நடந்தவை பற்றி சொல்ல இயலாது. ஆனால் எல்லோரும் சொல்வார்கள் என்னை எப்போதும் உன் இடுப்பில் தூக்கி வைத்திருப்பியாம். மிட்டாய் வாங்கித் தர கொளுத்தும் வெயிலிலும் தூக்கிக் கொண்டு சுடு மணலில் செருப்பும் இல்லாது கடைக்குப் போவாயாம். இவையெல்லாம் சொல்லப்பட்டவை என்றாலும் என்னால் உணர முடியும் நீ உன் பேரக்குழந்தைகளை எப்படி நேசித்தாய் என்று. அந்த நிகழ்வுக்குப் பிறகு அடுத்த நாளில் இருந்து என்னைப் பள்ளிக் கூடம் கொண்டு போய் சேர்ப்பது உன் பொறுப்பென்றானது. என்னை தயார் செய்து காலையில் கூட்டிப் போவாய். பாதித் தூரம் தூக்குவதும், பாதித் தூரம் நடத்தியும் நீ கூட்டிக் கொண்டு போகும் காட்சி எனக்கு இப்போதும் கண்களுக்குள் நிற்கிறது. போகும் வழியிலெல்லாம் கதைகள் சொல்லுவாய். அதிகமான கதைகள் உன் ஊரைப் பற்றியதாக இருக்கும். பார், உன் ஊர் என்கிறேன். அது எனது தாய் மண் தான். நான் என்ன செய்ய, அதை நான் பார்த்ததே இல்லையே. பிறந்து நினைவு தெரிய முதலே யுத்தம் என்னை அப்பாவின் ஊரில் சேர்த்துவிட்டிருந்தது.

உன் கதைகளில் வரும் நான் பிறந்த ஆனால் நினைவில் இழுத்துப்பிடிக்க முடியாத அந்த வீட்டை ஒருவாறு கற்பனை செய்து கொண்டேன். அதனை சுற்றி உன்னால் பின்னப்படும் கதைகள் அத்தனை சுவாரஸ்யமானவை. அவற்றுக்குள் உன் வீட்டின் தென்கிழக்கு மூலையிலிருக்கும் மரத்தடி வைரவரும், பெரிய குளத்தடி ஐயனாரும், முருக மூர்த்தி கோவிலும் தவறாமல் இடம்பெறும். வழி நெடுக தேவாரம் சொல்லிக் கொண்டு வருவாய். கணக்கு வாய்ப்பாடுகளையும், ஒருமை பன்மைகளையும், ஆத்தி சூடியையும் ஏன் பட்டினத்தார் பாடல்களையுங் கூட நீ இப்படி போய் வரும் ஒற்றையடிப் பாதைகள் வழி என்னைக் காவித் திரிந்து சொல்லித்தான் நான் அறிந்து கொண்டேன். எனக்குப் பிடித்த வரிகளை எனக்குள் இறங்கிக் கொண்ட சொற்களைப் போட்டு பூசி மெழுகி ஒப்பித்து சிரிக்கையில் நீயும் சிரிப்பாய். உன் ஞாபகசக்தி அபாரமானது. எனது பதின்மங்களில் கூட நான் உன்னை பாடல்களை சொல்லுமாறு சீண்டும் போது உன்னால் பாடல்களை வரி பிசகாமல் ஒப்புவிக்க முடிவது எனக்கு எப்பவுமே ஆச்சரியத்தைத் தரும். நான் தமிழ்ப் பரீட்சைகளில் பாட்டை எழுதி, கூடவே பொருளையும் எழுத ஆரம்பித்தேன். மத்தியான வெயிலில் சூடடங்கா மண்தெருக்களில் வெறுங் காலுடன் என்னை இடுப்பில் தூக்கிக் கொண்டு குடு குடுவென்று நடந்து கொண்டே நீ எனக்குள் இறக்குவித்த கதை சொல்லி என்னை ஆட்டுவிக்கத் தொடங்கியிருந்தாள்.

வழித்துணையாய், கதை சொல்லியாய் என் வாழ்க்கைக்குள் நுழைந்த உன்னை என் அப்பா அம்மாவுக்கு அதிகமாய் நேசித்தேன் என்பது தான் உண்மை. இந்தப் பயணம் நான் ஒழுங்காக ஆனால் கத்தி அழாமல்(?) பள்ளிக்கூடம் போகத் தொடங்கிய என் ஆறாவது வயது வரை தொடர்ந்தது. முந்திய இரு வருடங்களும் நீ என்னைத் தூக்கி செல்வதும், பாலர் வகுப்புகள் நடக்கும் அந்த மூன்று மணித்தியாலங்களும் புளிப்பு நெல்லி மரத்தின் கீழ் அமர்ந்திருந்து வெற்றிலை போட்டுக் கொண்டிருப்பதும், இடைவேளையின் போது எனக்கு சாப்பாடு தீத்தி விடுவதும், வகுப்பு முடிந்ததும் பள்ளிக்கூடத்தில் தூக்கும் என்னை வீட்டில் கொண்டுவந்து இறக்கிவிடுவதுமாய் நீ இயங்கிக் கொண்டிருந்தாய். ஆயிரமாயிரம் கதைகளையும், சம்பவங்களையும் எனக்கு சொல்வதற்காக வைத்திருந்தாய். பின் வளவு ஈச்சம் மரமும், பறக்கும் பாம்புகளும், நடக்கும் ஐயனாரும், அடிக்கும் வைரவரும், பரந்து விரிந்த மிளகாய்த் தோட்டங்களும், புகையிலைக் காணிகளும் இன்னும் ஏராளம் ஏராளம், எனக்காய்க் காத்திருப்பதாய் நீ சொன்னாய். அவற்றைப் பார்க்க நான் என் மண்ணுக்குப் போக வேண்டும் என்றும் நீ சொல்லிக் கொண்டிருந்தாய். அப்போது எனக்கு அது அந்த அளவுக்கு விளங்கியிருக்கவில்லை ஆச்சி. விளங்கியபோது வெகு தொலைவில் இருந்தேன். இப்போது கண்டங்கள் தாண்டி இருக்கிறேன். அவை எனக்காக காத்திருக்குமா? என் வீட்டை நான்கு சுவர்கள் அடையாளப்படுத்துகின்றன என்று யாரோ சொன்னதாக அம்மா சொல்லிக் கொண்டிருந்தாள். நல்லவேளை, நீ இப்போது இல்லை.

எமக்கான இந்தப் பிணைப்பு இத்துடன் தீரவில்லை. தொடர்ந்தது. பால்யம் தாண்டி பதின்மங்களின் இறுதிவரை நீ என் கூட வந்தாய். எல்லா ஆச்சிமாரும் இப்படித்தான். தம் பிள்ளைகளுக்குக் கொடுக்காத சுதந்திரத்தைப் பாசத்தை அப்படியே பொட்டலங்கட்டி பேரப்பிள்ளைகளுக்குக் கொடுப்பார்கள். நான் செய்யும் எல்லாமே உனக்கு சரியானதாகவும், நியாயமானதாகவுமே இருக்கும். நான் கொலை செய்துவிட்டு வந்தாலும் என்னை கண்மூடித்தனமாய் ஆதரிக்கவும் நீ தயாராகவிருந்தாய். காய்ச்சல் என்றாலோ, இல்லை சிறிதாய் மூக்கை சீறிக் கொண்டு நான் திரிந்தாலோ போதும். உடனே உன் அங்கர் மா, லக்ஸ்பிரே மா பைகளுக்குள் பொதித்து வைத்திருக்கும் வீபுதியை எடுத்து ஏதேதோ சொல்லி நெற்றியில் இடுவாய். பின் கொஞ்சம் வாய்க்குள்ளும். சிறுவயதில் மழை பெய்யத் தொடங்கியதும் நான் வெளியிலோடி மண்ணள்ளி வாய்க்குள் அடைத்துக் கொள்வேன். கலைத்துக் கொண்டு வரும் அம்மாவிடமிருந்து தப்பி உன் பின்னால் ஒளிவேன். அம்மாவைக் கலைத்து பின் என் வாய்க்குள் கை விட்டு மண்ணைக் கிண்டி வெளியில் எறிந்து குடிக்கத் தண்ணீர் தருவாய். பிறகு இப்படி நீ விபூதி போடத் தொடங்கிய பிறகு நான் விபூதியை சாப்பிடத் தொடங்கினேன். சாமி மாடத்தில் விபூதி காணாமல் போகத் தொடங்கியது, கொஞ்சமாய் மேலேறி மேலேறி பரணிலேறி விட்டது. அதன் பிறகு நான் அடிக்கடி மூக்கை சீறுவதும், உன்னிடம் வந்து நிற்பதும் வழக்கமாகிவிட்டது. நீயும் வழக்கத்துக்கு மாறாக கொஞ்சம் அதிகமாகவே விபூதியை வாய்க்குள் போட்டுவிடுவாய். என் பலவீனங்களை நீ அறிந்திருந்தாயா?

பார், உன்னைப் பற்றி உன் காத்திருப்புப் பற்றி சொல்லத் தொடங்கிவிட்டு இப்போது உன்னைப் பற்றி சொல்லிக் கொண்டிருக்கிறேன். நீ ஒரு ஆளுமை. ஒரு உலகம். எனது தொன்மங்களின் அரசி. என் பதின்மங்களின் இறுதியில் குழந்தையாகிவிட்ட உன்னை சுமக்க ஆரம்பித்தேன். அப்படி ஒரு பந்தம் இருந்தது எமக்கிடையில். உன்னை எதன் பொருட்டும், ஒருநாள் கூடவும் நான் பிரிந்திருக்கவில்லை. பாடசாலையில் வரும் சுற்றுலாக்கள் கூட உன் பொருட்டு வேண்டாதனவாகின. எனக்கான உன் காத்திருப்புக்கள் மணித்தியாலங்கள் அளவே நீண்டதாகவிருந்தன. ஆனால் ஒரு காத்திருப்பு நாட்கணக்குகளாகி, மாதங்களாகி, ஆண்டுகளாய் நீண்டது. கண்டங்கள் தாண்டி நான் பயணித்த அந்தப் பொழுதில் உன்னை மீண்டும் வந்து அழைத்துச் செல்வேன் என்ற உறுதி மொழியிலேயே அந்தக் காத்திருப்பை நானாய் உனக்காகத் தொடக்கித் தந்தேன். அந்தக் காத்திருப்பு என்னால் முடிக்கப்படாத, உன்னால் முடித்துவைக்கப்பட்ட காத்திருப்பாயே முடிந்தும் போனது.

உன் காத்திருப்பை முடித்துக் கொள்வதற்கான முடிவு எனக்கான எத்தனை செய்திகளை, கதைகளை, சம்பவங்களை, கனவுகளை முடித்து சென்றிருக்கும் என்பதை என்னால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாதவை. அவற்றின் பாரங்களை நான் பல வேளைகளில் உணர்ந்துகொள்கிறேன். உன்னைப் பற்றிய சிறு நினைவுகள், உன்னை நினைவுபடுத்தும் குழந்தையின் முனைப்புகள் என்று எல்லாவற்றிலும் உன்னை எனக்கு நீ அறிவுறுத்துகிறாய். காத்திருப்புக்களால் மட்டுமே எழுதப்பட்ட உனது வாழ்க்கை நம்பிக்கை நிறைந்தது. உன்னை ஏமாற்றியது நான்தான். உனக்குக் காத்திருப்பில் நம்பிக்கை இருந்தது. காலத்துக்கு இருக்கவில்லை. நானும் காலத்தை நம்பியிருக்கவில்லை.


இந்தத் தொடர்பதிவை தொடர்ந்து செல்ல என் சார்பில் நான் அழைப்பவர்கள்,

நிலா சாயினி - http://urupasi.blogspot.com/

விமலாதித்தன் - http://kaalapperungkalam.blogspot.com/

2 comments:

  1. காலத்தைப் புரட்டிவிடும் இந்த எழுத்துகளிலிருந்து மீள முடியாது. ஆச்சியின் விரல்நுனியிலிருந்து வெளிச்சம் சிந்திக்கொண்டு இருக்கிறது. மழையும் பெய்துகொண்டு இருக்கிறது.
    நாமெல்லாம் நடந்துகொண்டு இருக்கிறோம். அற்புதம்!


    நண்பரே, தாங்களும் இத்தொடர் பதிவு எழுத சில பொருத்தமானவர்களை அழைத்திருக்கலாமே!

    ReplyDelete
  2. நான் பங்கேற்கலாமா நண்பர்களே!

    ReplyDelete